ரோந்து பணியில் பெண் காவலர்கள் !



ஐதராபாத்தில் சமீபகாலமாக காவலர்கள் சீருடை அணிந்த சிலர் பைக்குகளில் விரைந்து செல்வதை காணமுடிகிறது. சற்று உற்று நோக்கினால் தான் அது பெண் காவலர்கள் என்பதை அறியமுடிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து இளம்பெண்களை பாதுகாக்க தெலுங்கானா அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் பெண் போலீசாரை ரோந்து பணியில் முதல் முறையாக ஈடுபட வைத்துள்ளது தெலுங்கானா அரசு.

ஆண்டாண்டு காலமாக ரோந்து பணியில் ஆண் காவலர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐதராபாத் நகர குற்றவியல் கூடுதல் போலீஸ் கமிஷனர் சிகா கோயல் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள 17 மண்டலங்கள் 20 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் செயல்பட்டு வரும் பெண் போலீசார்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த இரவு நேரத்தில் பெண்களை ஈவ் டீசிங், பாலியல் வன்முறை என அத்துமீறும் ஆண்களை முட்டிக்கு முட்டி தட்டி தண்டனை வழங்கவும் தவறுவதில்லை.  

‘உமன் ஆன் வீல்ஸ்' என்னும் இந்த திட்டத்தின் கீழ் தான் பெண் காவலர்கள் ஐதராபாத்தின் நகர சாலைகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘காவல்துறையில் சேரும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளில் பணி செய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளோம். இந்த பயிற்சி தொடரும் போது பெண் காவலர்கள் ஆண் காவலர்களுக்கு இணையாக பணியில் அமர்த்தப்படுவார்கள். தினமும் தொலைபேசி அழைப்புகள் மூலம் புகார்கள் வருகிறது.

உடனே அந்த இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்கிறோம். இதற்காக 2 மாதம் வாகனம் ஓட்டும் பயிற்சி மற்றும் ஆயுதங்களை கையாளும் சிறப்பு பயிற்சியும் எங்களுக்கு அளிக்கப்படுகிறது’’ என்கிறார் ரோந்து பைக்கின் ஆக்சிலேட்டரை திருகியபடி பெண் போலீசார் ஒருவர்.
சாலைகளில் பெண் காவலர்கள் ரோந்து பணிகளில் ஈடுபடுவது இந்தியாவில் இதுவே முதல் முறை.

பா.கோமதி