செல்லுலாய்ட் பெண்கள்



பா.ஜீவசுந்தரி-38

சொந்த உழைப்பில் முன்னேறி சாதித்துக் காட்டியவர் தாம்பரம் லலிதா


நீள் வட்ட முகம், கள்ளமற்ற அழகான சிரிப்பு, அற்புதமான நடனத்திறன், தெளிவான தமிழ் உச்சரிப்பு, மெலிந்த தேகம்  என அந்தக் கால நடிகைக்குத் தேவையான அத்தனை திறன்களும் ஒருங்கே அமைந்ததுடன் ஊரின் பெயரை  முன்னொட்டுப் பெயராகவும் கொண்ட நடிகை தாம்பரம் லலிதா. நாடகங்களில் நடித்த அனுபவம் திரைப்பட  வாய்ப்புகளைப் பெற்று முன்னேற உதவியது. திரைப்படங்களில் நடித்ததுடன் மட்டும் திருப்தியடைந்து விடாமல்,  சொந்தமாக நாடகக்குழு, நாட்டியக்குழு போன்றவற்றையும் நடத்தியவர். ‘கதாநாயகியாகவும் பிரதானமான  பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்ற பிடிவாதமெல்லாம் இல்லை. அதனாலேயே இளம் வயதிலேயே வயதுக்கு  மீறிய முதிய அம்மா, மாமியார் பாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தயங்காதவர். அப்போதைய அனைத்து முன்னணி  நடிகர்களுடனும் இணைந்து நடித்தவர். அவர் நடிகை தாம்பரம் லலிதா. பின் நாட்களில் நடிக்க வந்த நடிகை நவ்யா  நாயரிடம் இவரது சாயல் துளியளவு எட்டிப் பார்த்தது.

அரங்கநாதன் பூமியில் ஜனித்தவர். பெயரில் தாம்பரம் இருந்தாலும் லலிதாவின் பூர்வீகம் ஸ்ரீ ரங்கம். அங்குதான் அவர் பிறந்தார். தந்தையார் கோபாலய்யர்,  தாயார் காமாட்சி அம்மாள். சம்பிரதாயங்களிலிருந்து சற்றும் வழுவாமல், பழமையான பழக்க வழக்கங்களைக்  கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் பின்பற்றும் வைதீகக் குடும்பம். லலிதாவும் அவரது மூத்த சகோதரியுமாக இரு  பெண் குழந்தைகள் என அளவான குடும்பம். லலிதா இளையவர். கோபாலய்யருக்கு காவல் துறையில் பணி. பணி  நேரம் போக மற்ற நேரங்களில் ஸ்ரீ ரங்கநாதனுக்கு சேவை செய்வது மட்டுமே தன் வாழ்க்கையின் லட்சியம் என  வாழ்ந்தவர். அது எந்த அளவுக்கு என்றால், கோபாலய்யரை அவ்வூர்க்காரர்களும் கோயில் வட்டாரமும்  கோபாலய்யங்கார் என அழைக்கும் அளவுக்கு வைணவ சம்பிரதாயங்களில் ஊறித் திளைத்து, தீவிரப் பற்று கொண்டு  செயல்பட்டவர்.

உத்தியோகமும் கோயில் பணியுமாக அமைதியாகப் போய்க் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தின்  தலையில் இடி விழுந்தது. ஆம், கோபாலய்யர் மனைவி, மகள்களை விட்டு விட்டு மாரடைப்பால் அகால  மரணமடைந்தார். பெண் குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்குப் பயணமானார் தாயார் காமாட்சி.  மகள்களைப் படிக்க வைத்துக்கொண்டே மற்றவர்களுக்கு சங்கீதம் கற்றுத் தருவது போன்றவற்றிலும் கவனம்  செலுத்தினார்.

நாட்டியப் பயிற்சியால் மாறிய வாழ்க்கை

பள்ளிப் படிப்பைக் காட்டிலும் லலிதாவுக்கு நடனத்தின் மீதுதான் அலாதி ப்ரியமும் காதலும் இருந்தது. அத்துடன்  வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரது உறவினர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் ‘சரஸ்வதி கான  நிலையம்’ என்ற நாட்டியப் பள்ளியை நடத்தி வந்தார்கள். தன் மகளையும் அங்கு சேர்த்து நாட்டியம் பயில்வதற்கான  ஏற்பாடுகள் செய்தார் தாயார் காமாட்சி. லலிதாவுடன் நடனம் பயின்றவர்களில் முக்கியமானவர், பின்னாளில் திரைப்பட  நடிகையாகவும் புகழ் பெற்ற ராஜ சுலோசனா. இருவரும் இளம் பருவத்திலேயே நடன வகுப்பில் உற்ற தோழிகளாகவும்  விளங்கியவர்கள். பின்னாளில் லலிதா சொந்த நடனக்குழுவை நடத்தியபோது, ஒருமுறை நாட்டிய நாடகம் ஒன்றுக்கு  ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியன்று ஆட வேண்டிய ஒரு பெண் உடல்நலக் குறைவால் வர முடியாமல் போனபோது,  அந்த நெருக்கடியான நேரத்தில் வந்து ஆடிக் கொடுத்து பேருதவி செய்தவர் ராஜ சுலோசனா. அந்த இருவரும்  நெருக்கமான தோழிகள்.

தோளில் ஏற்றப்பட்ட குடும்ப பாரம்


மிக இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்புகள் என்னும் சுமையைத் தன் தோள்களின் மீது ஏற்றுச் சுமந்தவர். அதனால்  நாடகங்களில் நடிப்பதைத் தொழிலாக்கிக் கொண்டார். அங்கிருந்து அக்கால வழக்கம்போல் திரையுலகிலும் நுழைந்தவர்.  அக்காவுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். நாடகம், திரைப்படம் என தன்  வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் பார்ப்பனப் பின்புலம் கொண்ட அவரின் உறவினர்களால் சாதி விலக்கம்  செய்யப்பட்டார். 1930களிலேயே பார்ப்பனக் குடும்பங்களிலிருந்து வந்து நடித்து பேரும் புகழும் பெற்ற நடிகைகள்  மத்தியில் 1950 களில் நடிக்க வந்த லலிதாவுக்கு நேர்ந்த அனுபவங்கள் வேதனை மிக்கவை.

அந்த அளவு சாதியப் பற்றுதல் மிக்கவர்களாக இருந்த உறவுகளின் பிடியிலிருந்து முற்றிலும் விலகி, விட்டு  விடுதலையானவராக தன் கலை வாழ்க்கையை விடாமல் பற்றிக் கொண்டார். தந்தை உயிருடன் இல்லாத நிலையில்,  பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்பதற்கு சம்பாதிப்பது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு  அவசியமானது என்பதையும் அவர் நன்கு உணர்ந்திருந்ததாலேயே அனைத்து வேடங்களையும் ஏற்று நடித்தார். இவர்  மட்டுமல்ல, பெரும்பாலான நடிகையரின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தோம் என்றால், இந்த நிலையில் எந்த  மாற்றமும் இல்லை என்பதை உணர முடியும். வழக்கமாகத் திரைப்பட நட்சத்திரங்கள் கோடம்பாக்கம், தியாகராய நகர்,  தேனாம்பேட்டை என்று தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக்கொண்டபோது நகரை விட்டு விலகி புற நகரான  தாம்பரத்திலேயே வாழ்ந்தார். சொந்தமாக ஒரு வீட்டையும் தனக்கெனக் கட்டிக் கொண்டார்.  
 
விரும்பி ஏற்ற வாழ்க்கையின் நிலையற்ற தன்மை


நாடகங்களிலும் திரைப்படங்களிலும் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் நம்பிராஜனை விரும்பி அவருடன் சேர்ந்து  வாழ்ந்தார். இவர் வில்லனாக, நகைச்சுவை நடிகராகப் பல படங்களில் நடித்தவர். நடிகர் குமரி முத்துவின் மூத்த  சகோதரர். ஆனால், அந்த வாழ்க்கையும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. இருவரும் பரஸ்பரம் பிரிந்து போயினர்.  அதனால் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டையும் அவர் இழக்க நேர்ந்தது. இதே கவலையில் அவரது தாயாரும்  மரணமடைய உடன் பிறந்த அக்கா குடும்பத்தின் ஆதரவு மட்டுமே லலிதாவுக்குக் கிடைத்த ஒரே ஆறுதல்.  பிற்காலத்தில் சில உறவுகள் தங்கள் இல்ல விழாக்களுக்கு வருமாறு அவரை விரும்பி அழைத்தபோதும்கூட ஒரு  புன்சிரிப்புடன் மறுத்து எங்கும் செல்ல விரும்பாமல் அதைக் கடந்தவர்.

உயர்வு தந்த திரையுலக வாழ்க்கையின் பக்கங்கள்

சின்ன வேடம், பெரிய வேடம் என ஏறக்குறைய நூறு படங்களில் அவர் நடித்திருந்தபோதும், முதன்மையான நாயகியாக  அவர் நடிக்கவேயில்லை என்பதுதான் உண்மை. இரண்டாவது நாயகியாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து  இருக்கவே இருக்கிறது வில்லி வேடங்கள். தாம்பரம் லலிதா என்று சொல்லும்போது முகம் நினைவுக்கு வரும் அளவு  பெரிய நட்சத்திரமாகவே திரையுலகில் வலம் வந்தவர். தாம்பரம் லலிதாவின் திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவையாக  அமுதவல்லி, சிவகங்கைச் சீமை, மீண்ட சொர்க்கம், தலை கொடுத்தான் தம்பி, பாகப்பிரிவினை, போர்ட்டர் கந்தன்,  தெய்வப்பிறவி பின்னாட்களில் பசி, கோழி கூவுது போன்ற படங்களைக் குறிப்பிடலாம்.

கணவனை இழந்த இளம் பெண்ணாக…

‘போர்ட்டர் கந்தன்’ படத்தில் கணவனை இழந்த இளம் பெண்ணான லலிதா மகளுடன் ரயிலில் பயணிக்கும்போது,  அந்த ரயிலுக்கு ஒரு கும்பல் குண்டு வைக்க முனைகிறது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக போர்ட்டர் கந்தனின்  மகனான சிறுவன், அந்த ரயிலை நிறுத்தி அதில் பயணம் செய்பவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறான். ரயிலை விட்டுக்  கீழிறங்கும் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு நன்றி கூறுகிறார்கள். அப்போது தன் மகளுடன் வரும்  லலிதாவும் அவனுக்கு நன்றி கூறுகிறார். லலிதாவின் மகளான சிறுமியோ, யாரும் எதிர்பாராத அந்த நேரத்தில் ரயில்  விபத்திலிருந்து தங்களைக் காத்த சிறுவனுக்குத் தன் கழுத்தில் அணிந்திருக்கும் விலை உயர்ந்த தங்க நெக்லஸை  அம்மாவின் அனுமதியுடன் பரிசாக வழங்குகிறாள். ஆனால், சிறுமியின் தாத்தாவான ரயில்வே உயர் அதிகாரி கெடுபிடி  மிக்கவர். இயல்பான மனித உணர்வுகள் ஏதுமற்ற கொடூரமான குணம் படைத்தவர். ஒரு சந்தர்ப்பத்தில் நெக்லஸை  அந்தச் சிறுவனே திருடி விட்டதாகக் கதை நகரும். ஆனால், இறுதியில் வழக்கம் போல் சுபம்தான். இந்த விதவைப்  பெண் கதாபாத்திரத்தில் தாம்பரம் லலிதா நடித்திருப்பார். இந்தப் படமே அவருக்கு முதல் படமாகவும் இருக்கலாம்.  அவ்வளவு மெலிந்த தோற்றம். படத்தின் டைட்டிலிலும் தாம்பரம் என்ற முன்னொட்டுப் பெயர் குறிப்பிடப்படாமல்,  ஆர்.லலிதா என்று மட்டுமே திரையில் தோன்றும்.

ஆடை கட்டி வந்த நிலவு அமுதவல்லியா? லலிதாவா?

 
‘அமுதவல்லி’ என்றொரு படம். ஆனால், இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு ஏராளம் பொறுமை வேண்டும். ராஜா ராணி  கதை என்பதால் நிறைய ஃபாண்டஸி காட்சிகள் உண்டு. டி.ஆர்.மகாலிங்கம், எம்.என் ராஜம் நாயகனும் நாயகியுமாக  நடித்திருப்பார்கள். லலிதாவுக்கு இரண்டாவது நாயகி வேடம். நாகலோகத்து நாகக் கன்னிகை. ஆனால் மிகவும் நல்ல  குணம் படைத்தவள். இன்றளவும் இந்தப் படம் நினைவில் கொள்ளப்படுவதற்கு விசுவநாதன் ராமமூர்த்தியின் இசையும்  டி.ஆர்.மகாலிங்கமும் லலிதாவும் இணைந்து பாடும் ஒரு டூயட் பாடல் காட்சியும் ஒரு முக்கிய காரணம்.  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய அந்தப் பாடல் வெகு பிரபலம். ‘ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில்  மேடை கட்டி வாழும் குயிலோ’ எவர்க்ரீன் பாடலாக இன்று வரை சின்னத்திரையில் கோலோச்சிக்கொண்டிருக்கிறது.  அதனால் லலிதாவும் மறந்து போகாமல் மக்கள் நினைவில் நின்று கொண்டிருக்கிறார். அதேபோல சரித்திரக் கதைகளை  எழுதிக் குவித்த எழுத்தாளர் சாண்டில்யன் இப்படத்தின் வசனகர்த்தா என்பதும் ஆச்சரியம். ‘சந்திரலேகா’ போன்ற  ஜெமினியின் படங்களுக்கு செட் நிர்மாணிப்பதில் பெயர் பெற்ற ஏ.கே.சேகர் இப்படத்துக்கு செட் அமைத்ததுடன்  மட்டுமல்லாமல், படத்தை இயக்கியும் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்.
 
காதலால் பராரி வாழ்க்கைக்கு மாறும் அரசகுமாரி


‘தலை கொடுத்தான் தம்பி’ இது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து அதன் அதிபர் டி.ஆர்.சுந்தரம் இயக்கிய படம்.  அந்நிறுவனத்தின் ஆஸ்தான நாயகனான ஆர்.எஸ்.மனோகர் இப்படத்தின் ஆரம் பத்தில் நாயகனாகத் தோன்றுவார்.  அவருக்கு இணையாக தாம்பரம் லலிதா. அரச குமாரி சாந்தவல்லியான அவர், வேற்று நாட்டிலிருந்து கப்பலில்  வந்திறங்கும் இளைஞரான அவரை காதலிப்பார். சாமானியன் ஒருவனை தன் மகள் காதலிப்பதை ஏற்றுக் கொள்ளாத  மன்னன் தன் மகளைக் கடிந்து கொள்ள, அவளோ பெற்றவரையும் சொந்த நாட்டையும் துறந்து காதலனுடன்  உடன்போக்காக நாட்டை விட்டு வெளியேறுகிறாள்.

படத்தின் ஆரம்பத்திலேயே அற்புதமான ஒரு டூயட் பாடல்  இருவருக்கும் உண்டு. ‘துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல துண்டு துண்டாய் எழுந்து அது எங்கே  செல்லுது?’ என்று இருவரும் கடலலைகளில் ஆடிப் பாடித் திரிவதுமாக அந்தக் காட்சியும் இனிய பாடலும் மனதைக்  கொள்ளை கொள்பவை. இலங்கை வானொலியில் ஏ.எம்.ராஜா, பி.சுசீலாவின் இனிய குரல்களில் இந்தப் பாடல்  ஒலிக்காத நாளில்லை. அந்தக் கொஞ்ச நேரம் மட்டுமே லலிதாவை இளமைத் துள்ளல் மிக்க ராஜகுமாரியாகப் பார்க்க  முடியும். அதன் பின் ஏழ்மையிலும், வறுமையிலும் அடிபட்டுக் கணவனும் பிரிந்து செல்ல தன் மகனுடன் வாழ்க்கைப்  பயணத்தைத் துன்பப் பாதையில் கடக்கும் பாத்திரம். இளமைத் துள்ளல் மிக்க அரச குமாரியாகவும், அதன் பின் எளிய  வாழ்க்கையை மேற்கொள்ளும் பொறுப்புள்ள பெண்ணாக, தாயாக அரை மணி நேர இடைவெளியில் அவர் மாறுவது  அவரின் தேர்ந்த நடிப்புக்கு அளிக்கப்பட்ட கௌரவம்.

சேதுபதி பூமியிலே… சிவகங்கைச் சீமையிலே…


‘சிவகங்கைச் சீமை’ படத்தில் சின்ன மருதுவின் மனைவியாக சிவகங்கை மண்ணின் சின்ன ராணியாகத்  தோன்றுவார். இந்தப் படத்திலும் ஒரு அற்புதமான பாடல் இவருக்கு உண்டு. பெரிய மருதுவின் மனைவி பெரிய  ராணியான எஸ்.வரலட்சுமியுடன் இணைந்து பாடும் ஒரு தாலாட்டுப் பாடல். கவிஞர் கண்ணதாசனின் சொந்தப் படம்  வேறு, அவரது கவிதை வரிகளுக்குக் கேட்க வேண்டுமா? ‘தென்றல் வந்து வீசாதோ, தென்பாங்கு பாடாதோ’ என்று  இரவின் இருளைக் கிழித்துக்கொண்டு வரும் ஒளியாக இரு பெண்களின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் மென்மையாக  மனதை வருடிச் செல்லக் கூடியது மட்டுமல்ல, வெள்ளையரால் போர்ச்சூழலை எதிர்கொள்ளவிருக்கும் தங்கள் நாட்டின்  நிலையைத் தங்கள் எதிர்காலம் இனி என்னவாகுமோ என்ற ஆழ்ந்த கவலையைத் தங்கள் வாரிசுகளுக்குத் தாலாட்டின்  வழியாகச் சொல்வதாகவும் அமைந்த பாடல்.

தாம்பரம் லலிதா படங்களில் இடம் பெற்ற பாடல் காட்சிகளும் பாடல்களும் ஏதோ ஒரு வகையில் புகழ் பெற்றவையாக  விளங்குவதால், அந்தப் பாடல்கள் காட்சிகளாக இடம்பெறும்போதெல்லாம் லலிதாவும் நம் மனங்களில் சிரஞ்சீவியாகவே  வாழ்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பாகப்பிரிவினை படத்தில் எம்.ஆர்.ராதாவின் தங்கையாக பட்டணத்து நவ  நாகரிகப் பெண்ணாக கிராமத்துக்கு வந்து சேர்பவர், நம்பியாரைக் காதலித்து மணந்து கொண்டு அந்தக் குடும்பத்தின்  சின்ன மருமகளாக வலம் வருவார்.  இந்தப் பாத்திரத்தை வில்லி என்று சேர்க்க முடியாது. பெரிய மாமியார்  சி.கே.சரஸ்வதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு குடும்பத்தில் மற்றவர்களை மதிக்காமல் முரண்டு பிடித்தாலும், பின்  யதார்த்த நிலையை உணர்ந்து கொள்பவர்.

சின்னத்திரை வில்லிகளின் முன்னோடி பெரிய திரை வில்லி


வில்லி என்றால் ‘தெய்வப்பிறவி’ படத்தில் வரும் பாத்திரத்தைச் சொல்லலாம். அம்மாவும் மகளுமாக சித்தாள்  வேலைக்கு வந்து சேர்பவர்கள், மேஸ்திரி சிவாஜியின் தயவாலும் கருணையாலும் வீட்டு மனிதர்களாக மாறுவார்கள்.  தன் தந்தை செய்த தவறுக்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்ளும் சிவாஜி பாத்திரம், அவர்கள் யாரென்பதை வெளியில்  சொல்லாமல் மறைப்பதால் குடும்பத்துக்குள் நிகழும் பூகம்பத்தை நிகழ்த்துபவர்களாக தாய் சுந்தரிபாயும் மகள்  லலிதாவும் மாறுவார்கள். நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுக்கும் குடிகேடிகளாக இருவரும் ஆட்டி வைப்பார்கள்.  தாம்பரம் லலிதா அதைக் கனகச்சிதமாகச் செய்வார். இன்றைய சின்னத்திரை வில்லிகளுக்கு முன்மாதிரியான பெரிய  திரை வில்லி.

பிற்கால யதார்த்தப் படங்களிலும் சோடை போகாதவர்

ஏழு பிள்ளைகள் பெற்ற மகராசிக்கு சோற்றுக்குத்தான் பஞ்சம். ‘பசி’ படத்தில் ரிக் ஷாக்காரன் முனியன் சம்சாரம்  வள்ளியம்மாவாக ஒப்பனையின்றி நடித்து, மெட்ராஸ் பாஷை பேசி அசத்தியிருப்பார். மூன்று ரூபாய் மட்டுமே தினமும்  கொடுக்கும் கணவனிடம் மல்லுக்கு நிற்பதும், பெற்ற பிள்ளைகளே மதிக்காமல் கிடைத்த ரூபாயை ஆளுக்குக் கொஞ்சம்  பங்கிட்டு மிச்சமிருக்கும் இரண்டு ரூபாயில் எப்படி கஞ்சி காய்ச்சி ஊற்றுவது என்று அங்கலாய்ப்பதில் தொடங்கி அவர்  தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாகவே செய்திருப்பார். மகள் கெட்டுப் போய்விட்டாள் என்று தெரிந்ததும்  ரயில் தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கவரிமான் சாதி. நீண்ட நாட்களுக்குப் பின்  அவர் ஏற்ற பாத்திரம் அது. பசி படத்தின் அனைத்துப் பாத்திரங்களும் பேசப்பட்டன. அதில் வள்ளியம்மாவும் மறக்க  முடியாதவள்.

‘கோழி கூவுது’ படத்தின் வில்லியை மறந்து விட முடியுமா? காது கேட்காத பஞ்சாயத்துத் தலைவரின் மனைவியாக,  ஒன்றுக்குப் பத்தாக வட்டி வாங்கிக்கொண்டு ஊராரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்பவராக அசத்தியிருப்பார்.  படத்தில் நாயகன் பிரபுவுக்கு வில்லன் என யாருமில்லாக் குறையை வில்லி தாம்பரம் லலிதாவே போக்கிவிடுவார்.  யதார்த்தமான நடிப்பின் வழியாக ஒரு கிராமத்துப் பெரிய மனிதரின் மனைவியாக, அட்டகாசம் செய்திருப்பார். படத்தின்  ஒவ்வொரு திருப்புமுனையும் அவராலேயே நிகழும். ஆனால், இதுவே அவருக்கு இறுதியாகப் பேர் சொல்லும்  படமாகவும் அமைந்து போனது. 82ல் இப்படம் வெளியானது. அடுத்த ஆண்டிலேயே அவர் மறைந்து போகிறார்.

முற்றிலும் கைவிடப்பட்டவராக…

தன் அக்காளின் குடும்பத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர், சகோதரி கணவர் மரணத்துக்குப் பின் அக்காள்  குழந்தைகளையும் வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கியுள்ளார். அக்காளின் மரணத்துக்குப் பின் அக்காள் குழந்தைகளும்  கைவிட்ட நிலையில் தனித்தே வாழ்ந்தார். நாடகங்கள், திரைப்படங்களில் சின்னச் சின்ன வேடங்கள் என இருந்தவர்,  ஒரு கட்டத்தில் எங்கிருக்கிறார் என்பதே தெரியாத நிலைக்கு ஆளானார். புற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகி  யாருமற்ற நிலையில் கைவிடப்பட்டவராக நிராதரவாக சென்னை பொது மருத்துவமனையில் 1983ல் காலமானார்.  உறவினர்களில் ஒருவர் அவரை அடையாளம் காட்டிய பின்னரே, இறந்து போனவர் ஒரு முன்னாள் திரைப்பட நடிகை  என்பதே பலருக்கும் தெரிய வந்தது. தன்னலமற்று பிறருக்காக வாழ்ந்த அவர் தனிமையிலேயே கரைந்து போனார்.

(ரசிப்போம்!)
- ஸ்டில்ஸ் ஞானம்