கிடங்கா உங்கள் அறை?



வயதான மனிதர்களை யாரும் பெரிதாக மதிப்பதில்லை என பெரியவர்கள் அலுத்துக் கொள்வது சகஜம். மனிதர்களுக்கு மட்டும்தானா அந்த வயசு, மதிப்பு,  அவர்கள் வாங்கிய பொருட்களையும் யாரும் மதிப்பதுமில்லை உபயோகிப்பதுமில்லை என சுவாரஸ்யமாக ஒருசில  விசயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் பெங்களூரில் வசிக்கும் ராதா நரசிம்மன்.‘‘2014ல் வாங்கிய 29 இன்ச் அளவு அருமையான பெரிய ஸ்கிரீன் டிவி. இடத்தை அடச்சிட்டு இருக்கு, மார்க்கெட்லே  சூப்பர் டிவியெல்லாம் வந்திருக்கு தெரியுமா என பிள்ளைகள் நச்சரித்ததால் சரி வாங்கி மூணு வருடமாகிறதே எனக்  கடைக்காரரிடம் எடுத்துக்கொண்டு போனால்... மேடம், பழைய மாடல் இது.
ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக்கிறேன்.  ஆனால் இங்கு டிவி வாங்கினால் மட்டுமே இந்த ஆஃபர் என்றதும்,   என்னது?  ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து  வாங்கிய டிவி, வெறும் ஆயிரம் ரூபாய்க்கா? நல்லாத்தானே இருக்கு ‘அது பாட்டுக்கு ரூமில் இருக்கட்டும்பா’  என்றேன். பிள்ளையின் முறைப்பை அலட்சியப்படுத்தி எங்கள் ரூமில் அடைக்கலமானது அந்தப் பழைய டிவி.எண்பதாயிரம் ரூபாயில் வாங்கிய புது ‘வால் மௌன்ட்’ டிவி ஹாலில் அட்டகாசமாய் தொங்கியது. ரூமிலிருக்கும்  டிவிக்கு ‘கேபிள் பில்’ கட்டணும் என்பதால் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்தோம்.

ஃப்ரிட்ஜ் நன்றாகத்தான் வேலை செய்தது. ஆனால் அதுவும்  ஓல்டாம். முப்பதாயிரம் கொடுத்து வாங்கிய ஃப்ரிட்ஜை  பெரிய மனசு வைத்து வெறும் 500 ரூபாய்க்கு எடுத்துக்கொண்டான் கடைக்காரன். 45 ஆயிரத்தில் வீட்டிற்குள் வந்த   டபுள் டோர் ஃப்ரிட்ஜ் கண் சிமிட்டியபடி கம்பீரமாய் நின்றது.பழைய ஃப்ரிட்ஜை கடைக்காரர் எடுத்துப்போக இத்தனை  வருஷம் உழைத்த எனக்கு  இவ்வளவுதான் மதிப்பா? என அது கேட்பதுபோல், பார்க்க பாவமாகப்பட்டது எனக்கு.பதினெட்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய விசிஆரில் வெறும் 10 படம் பார்த்திருப்போம். நல்ல கண்டிஷனில்  உள்ளது. ஆனால் யாரும் வாங்க மறுத்ததால், ‘ஸ்கரப்’பில் போட மனமில்லாததால், அதுவும் என் ரூமில் பெருமூச்சு  விட்டபடி உட்கார்ந்தது.

போனில், லேப்டாப்பில், டேப்பில் என எங்கும் எங்கெங்கும் கேமராதான்... போட்டோ, செல்ஃபி கலாச்சாரம்தான் எங்கும்.  இதில் இவ்வளவு பெரிய கேமராவை எடுத்துப்போய் யார்மா படம் பிடிப்பது? ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய  வீடியோ கேமரா  “அதர பழசு” என பட்டம் வாங்கி, கவரில் கண்மூடி என் ரூமில் பத்திரமாய் தூங்குகிறது.அம்மா, யார்மா இப்போதெல்லாம் “டெக்” யூஸ் பண்றா? “வால் மௌன்ட் டிவி” பக்கம் ‘‘டெக் ஸ்பீக்கர்” ரெண்டு  அசிங்கமா இருக்கு. அதில் நாம் பாட்டும் கேட்பதில்லை, போடுவதுமில்லை. சும்மா ‘டஸ்ட்’ அடைச்சிக்கிட்டு என  முணுமுணுத்தபடி… “OLX”ல் போட  டெக்கை பையன் போட்டோ பிடிக்க நான் குறுக்கே நின்றேன். டேய்,  நாற்பதாயிரம் ரூபாய்டா, ‘லோன்' போட்டு உங்கப்பா எனக்கு ஆசையாய் ‘கிஃப்ட்’ செய்த டெக்குடா… இப்போ பாட்டு  கேக்காட்டி என்ன, என்னிக்காவது யூஸ் ஆகும்.  ஞாபகமா இருக்கும்  எனக் கூறியதில், “என்னமோ செய்” எனக்  கோபமாக கூறி இரண்டு பெரிய ஸ்பீக்கருடன் கூடிய ‘டெக்’கை அட்டைப் பெட்டியில் போட்டு என் ரூமில்  வைத்துவிட்டுப் போனான் பிள்ளை.

ஹால் ‘பளிச்’ என்றிருந்தது. என் ரூம் அட்டைப் பெட்டிகளுடன் அடப்பாகிக் கிடந்தது. அது மட்டுமா? ஏசியும், ஃபேனும்  இருக்கும்பட்சத்தில் கிஃப்டாக வந்த ஒரு ‘பெடல்சல் ஃபேன்’, ஒரு டேபிள் ஃபேனும் பேரீச்சம் பழத்திற்கும்  லாயக்கில்லாமல் என் ரூமில் ‘தேமே’னென்று ஆடாமல் அசையாமல் நின்றது.டிவி, டெக், விசிஆர், கேமரா மட்டுமா  வெளிநடப்பு செய்தது? டெஸ்க்டாப்… அதுவும் டேபிளுடன் கார் டிரைவருக்கு    இலவசமாய்ப் போயிற்று. என்னிடம்  சொல்லவுமில்லை, (சொன்னால் அதுவும் என் ரூமில் அடைக்கலமாகுமே என்கிற எண்ணம்) ரூமில் இடமுமில்லை. புது  லேப் டாப்பும், டேப்பும் வீட்டில் குடிபுகுந்தன.

கட்டிலில் ஏறி படுக்கமுடியாமல், இடமில்லாமல், ரூமைச்சுற்றி டிவியும், ஃபேனும், டெக்கும், அட்டைப்பெட்டிகளாக  இருந்ததால், கடுப்பாகிவிட்டார் என் கணவர். அவரின் கோபத்திற்கும் முறைப்பிற்கும் ஆளாவானேன். என்ன  செய்யலாம்? இத்தனை அருமையான பொருட்களை ஐநூறு, ஆயிரம் ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்குக் கொடுப்பதை  விட்டு, நம் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்குக் கொடுத்தால் என்ன எனத் தோன்றியது. "செல்வி... இந்த டிவி,  டெக், ஃபேன் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி ஐட்டம், உனக்கு வேணும்னா எடுத்துப்போய் ஜாக்கிரதையா வெச்சு யூஸ்  பண்ணு" என ஜாடையாய் சொன்னேன்.

“துட்டுக்காம்மா” எனக் கேட்டுவிட்டு “அம்மா சும்மா கொடுத்தாக்கூட வேண்டாம்மா” எனக் கூறி சிரிக்க,“நான் என்ன  பணமா கேட்டேன்?  என்ன சிரிப்பு… இதெல்லாம் நல்லா வேலை செய்யும் அருமையான பொருள் தெரிஞ்சுக்கோ"  என்றேன் சற்று கோபமாக.“அம்மா அதுக்கில்லைமா எங்க வீட்டில் இரண்டு டிவி இருக்கு, எங்க வீட்டுக்காரர்  தவணைமுறையில் சுவத்துல தொங்குற டிவி வாங்கினார். கிருஷ்ணகிரியில் உள்ள எங்க அம்மா வீட்டில் எலெக் ஷன்  சமயத்தில் வந்த இரண்டு டிவியில் ஒன்றை எனக்கு கொடுத்துட்டாங்க. என் வீடும் சின்னது,

அதில் நீ கொடுக்கும்  இம்மாம் பெரிய டிவியை எங்கு வைப்பது? வேண்டாம்மா கடையில் போட்டா நானூறோ, ஐநூறோ கொடுப்பாங்க.  பழசானா இந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கு விலையில்லைம்மா" எனக் கூற எனக்கு பொசுக்கென்றாகிவிட்டது.எனக்கு இன்டிமென்ட்டான, சென்டிமென்ட்டான இந்த விஷயம், யாருக்கும் புரியலையே, சிரிப்பா இருக்கே என  வருத்தமாக இருந்தது. எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமா மாறியது. கிச்சனில்… தேங்காய் துருவல் எங்குப் போச்சு  என்றே தெரியலை ( தேங்காய் பயன்படுத்தாதபோது துருவல் எதற்கு?).

ஸ்டீல் காபி, ஃபில்டர் போய் காபி மேக்கர் வந்தது. இப்போ அந்த ரெண்டும் இருக்கும் இடம் தெரியலை… ஒன்லி க்ரீன் டீ தான். வெட்கிரைண்டர், இட்லி, தோசைக்கு அரைக்க யூஸ் ஆனது. இப்போ அந்த “டில்டிங்”கிற்கும்  வேலையில்லை. காலையும் நானே, மாலையும் நானே என சப்பாத்தி. அதுவும் “சுக்கா”தான்.  அல்லது ரெடிமேட் மாவு  இருக்கவே இருக்கிறது. சமையலறையில் சுத்திச்சுத்தி வருது.புட்டுக்குழாய், தளி வடாம் ஸ்டேண்ட், சாம்பார் வைக்கும்  பெரிய கெட்டி பாத்திரம், ரசம் வைக்கும் ஈயச்சொம்பு, சேவை அல்லது முறுக்கு சுற்றும் கருவி, வெண்கலப்பானை  இன்னும் பலப்பல பொருட்கள்… (எல்லாமே,...செல்வியும், கடைக்காரரும் வேண்டாம் எனச் சொல்லியது)  எல்லாமே  பரண் இல்லாததால்என் கட்டிலுக்கடியில் சாக்கு மூட்டையில்  தூங்குகின்றன.சென்டிமென்ட்டாகவும், வாஞ்சை யாகவும்   அவைகளை  பார்த்து, ஆசையாய் துடைத்து, போர்த்தி வைக்கிறேன்.  அன்று நம்கூட இருந்து வேலை செய்து நம்மை  மகிழ்வித்தவைதானே இவை அனைத்தும்… ஹும்… இன்று “வேலையில்லா பட்டதாரிகள்” ஆகிவிட்டன. பாவம்…’’  என்கிறார் நகைச்சுவையாக.ஆனால் ஜப்பானில் இப்படி எதையும் சேர்த்து வைக்க மாட்டார்கள். பழையதான  எந்தப்பொருளும் வீட்டில் இருக்காது. இதுதான் ஜப்பானுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு.

- தோ.திருத்துவராஜ்