பனைமரக் காடே.!! பறவைகள் கூடே.!!



‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழி யானைக்கு மட்டுமல்ல  பனைமரத்துக்கும் பொருந்தித்தான் போகிறது. எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் பனைமரங்கள் குறைந்தது 60  வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை.  இதனாலேயே கேட்டதைக் கொடுக்கும் கற்பகத்தருவோடு ஒப்பிட்டு ‘பூலோகத்து கற்பகத்தரு' என்கின்றனர் நம்  முன்னோர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிக்கும் குறைவாகத்தான் உள்ளது. அந்த மரங்களும் அழிவின் விளிம்பில் நிற்கின்றன.

வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் இந்த பனைமரங்கள் எனலாம். பனை  உடலுக்கு ஊட்டத்தை அளித்து, குளிர்ச்சி தருவது.  நுங்கு, பதநீர், பனம்பழம், பனைவெல்லம், பனங்கற்கண்டு,  பனங்கிழங்கு, மட்டை, ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் என பனையில் இருந்து கிடைக்கும்  அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. அவ்வளவு ஏன்? தமிழ் மொழியின்   எழுத்துகள் முதன்  முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பனைமரம் தான் தமிழரின் அடையாளம்.  தமிழகம், மலேசியா,  இலங்கை, மொரீசியஸ் தீவு, தென்னாப்பிரிக்கா என தமிழர் வாழ்ந்த இடங்களில்  எல்லாம் பனைமரமும் வளர்ந்தது.  மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கையான அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம், கால்வாய்கள்,  ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர்.

நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம்.  இதை வற்றாத புதையல் என்றே கூறலாம். ஒரு  பனை குறைந்தது 30 அடி உயரத்திற்கு வளர்வதோடு, பல உயிரினங்களுக்கு இருப்பிடமாக, கூடுகளை அமைத்து  தங்களது இனத்தை விருத்தி செய்யவும், எதிரிகளிடமிருந்து காக்க உதவும் அரணாகவும் இருக்கிறது. அணில்களும்  எலிகளும் பனைமரத்தில் கூடு அமைத்து வாழ்கின்றன. உயரத்தில் பறக்கும் பறவைகளான பருந்துகளும் வானம்பாடிப்  பறவைகளுக்கும் இருப்பிடமாகவும் பனை இருக்கின்றது. பனை ஓலையின் நுனியில்தான் தூக்கணாங்குருவிகள்  தங்களின் அழகான கூடுகளை வடிவமைத்து கூட்டாக  வாழ்கின்றன. பனைமரங்களில் வாழும் இந்தப் பறவைகள்தான்  பகல் பொழுதில் வயல்களில் இருக்கின்ற பூச்சிகளையும், கூட்டுப்புழுக்களையும் உண்டு விவசாயத்திற்கு பல  நன்மைகளைச் செய்கின்றன.

பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பாட்டில் உள்ளது. பனைமரத்திலிருந்து 834 விதமான  பொருட்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கின்றன. பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருட்கள் எளிதில் கெட்டுப்  போகாது. பிளாஸ்டிக் பொருட்களின் வருகைக்கு முன்னர் பனை ஓலைகளைக் கொண்டுதான் கூடைகள், சாப்பிட   உதவும் தொன்னைகள், தட்டுகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள்   போன்றவற்றை நம் முன்னோர் செய்து  பயன்படுத்தினர்.  முளைத்து கிழங்கு விட்ட பனை விதை மிகச் சிறந்த சிற்றுணவாக பயன்படுகிறது. பனங் கிழங்கிற்கு  உடல் குளிர்ச்சியை தரும் தன்மையும் உண்டு. பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறுவதுடன், உடல்  அழகும் கூடும்.

கோடை வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி மக்களை வாட்டி வதைத்துவரும் நிலையில், தாங்கள் வெயிலால்  பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல், கொதிக்கும் வெயிலிலும், சாலையோர  வெட்டவெளிகளிலும், நம் தாகத்தை தணிக்க நுங்கோடும், பதநீரோடும் விற்பனையில் இறங்கி நிற்பவர்களின் உழைப்பு  அத்தனை சுலபமில்லை. மிக உயர்ந்த பனை மரங்களின் மீது தங்கள் உயிரைப் பணையம் வைத்து, ஏறி, பனை தரும்  அத்தனை பலன்களையும் நமக்காக கொண்டு வந்து சேர்க்கும் இந்த உழைப்பாளிகளிடம் பேரம் பேசாமல் வாங்கிச்  செல்வதே சிறந்தது. ஏனெனில் பனைத்தொழிலில் ஈடுபடுவோரின் உழைப்பு மிகவும் அதிகம். ஆனால் அவர்களின்  வருமானமோ மிகமிகக் குறைவு.

முக்கியமாக பனை மரத்திலிருந்து கிடைக்கும்   நுங்கும் பதநீரும் கோடையில் நமக்கு அள்ளித் தரும் நன்மைகள்  ஏராளம்!கோடை காலத்திற்காக இயற்கை நமக்கு அளித்த கொடை பனை நுங்கு. தித்திக்கும் சுவையுடைய ஜெல்லி  போன்ற நுங்கின் சுளை வெயில் காலத்திற்கேற்ற சிறந்த அருமருந்து மட்டுமல்ல, மிகச் சிறந்த குளிர்பானமாகும்.  நுங்கின் சுளை சுவையாக இருப்பது மட்டுமின்றி, எண்ணற்ற நன்மைகளைக் கொண்டது. நுங்கு எல்லா வயதினருக்கும்  ஏற்ற சிறந்த சத்து மிக்க உணவு.

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை  சாப்பிட்டால், தாகம் சற்றென அடங்கிவிடும். கோடை காலத்திற்கேற்ற நீர்ச்சத்துக்களை அதிகம் உள்ளடக்கியுள்ள  நுங்கில் தாதுக்கள், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,  தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

கொழுப்பைக் கட்டுப் படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம் இதில் உள்ளது. உடல் எடையைக் குறைக்க  நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை  நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாக செயல்படுகிறது.   உடலில் உள்ள கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைப்பதுடன், ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் விரைந்து ரத்தசோகை நோய் குணமாகி உடல் சுறுசுறுப்பை பெறும். இதில் பொட்டாசியம் அதிகம்  நிறைந்துள்ளதால் கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள  பேருதவியாக இருக்கிறது. நுங்குவில் ஆந்தோசையனின் என்னும் பைட்டோ கெமிக்கல் உள்ளது. இவை மார்பகப்  புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும் சக்தியினை தன்னகத்தே கொண்டவை.

நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை கொப்புளங்கள் நீங்கும். தோலுடன் நுங்கை  சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நோய் நீங்கும். நுங்கின் நீரை வேர்க்குருவில் தடவ அது குணமடையும். அதிகமான வெப்பம்  காரணமாக கோடை காலத்தில் சின்னம்மை போன்ற நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் ஏற்படும். வெயில் காலத்தில்  அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வல்லமை பெற்றது நுங்கு.  வெயில்  காலத்தில் நுங்கை அதிகம் சாப்பிடுவதால், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன்  வைத்துக் கொள்ளலாம்.

பதநீர் வெப்பத்தைத் தணிப்பதுடன், துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை கொண்டது. பனையிலிருந்து கிடைக்கப்பெறும்  பதநீர் கோடை வெயிலுக்கேற்ற மிகச் சிறந்த குளிர்ச்சியினைத் தரக்கூடிய ஒரு பானமாகும். உடல் சூட்டைத் தணித்து,  நம் உடலினை குளிரவைக்கும் தன்மை கொண்டது. நமது உடல் வெயில் காலத்தில் சந்திக்கும் அனைத்து  பிரச்சனைகளில் இருந்தும் நம்மைக் காக்கும் நுண்சத்துக்கள் பதநீரில் அதிகம் இடம்பெற்றுள்ளன. பனைமரத்தின் பதநீரை  சுவையில் மிஞ்ச முடியாது. இந்த பதநீரில் சோறு, பொங்கல், கொழுக்கட்டை, அவி அரிசி தயாரிக்கலாம்.பதநீர் மேக நோயை தீர்க்கும் அருமருந்து. ரத்த சோகையைப் போக்குவதுடன், ரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம்,  பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது. தலையில் பேன் தொல்லை  இருப்பவர்கள், பதநீரைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இதனால் சருமமும் உடலும் சேர்ந்தே பொலிவடையும்.எல்லா நன்மைகளையும் உள்ளடக்கிய பனை மரம், பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும்  நமக்கு பயன் தருகிறது.

- மகேஸ்வரி

*    நுங்கை பதநீர் மற்றும் இளநீருடன் இணைத்து ஜூஸாக அருந்தலாம்.
*    நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும்  பளபளப்பாகும்.
*     நுங்கை அரைத்து, தேங்காய்ப்பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.
*    மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் நுங்கு சாப்பிட்டால், மலச்சிக்கல்  பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
*    கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற  பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்..