ஸ்டெர்லைட் உயிர் குடித்த அரசு! : பங்கேற்ற பெண்களின் நேரடி சாட்சியம்மே 22 தமிழகத்தின் கருப்பு நாள். இந்த இதழ் அச்சேறும்வரை அரசு தந்த அறிக்கையின்படி மூன்று பெண்கள் உட்பட 13  பேர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரம்  நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலைகளை கண்டித்து இந்தியா  மட்டுமல்லாமல் வெளிநாடு வாழ் தமிழர்களும் வீதிக்கு வந்து போராடி வருகிறார்கள். துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி  “டிவியில் பார்த்துதான் நானே தெரிந்துகொண்டேன்” என்று முதல்வர் சொல்வது நியாயம்தானா? துப்பாக்கிச் சூடு  நடத்துவதற்கான தேவை அங்கு இருந்ததா? 13 பேர் இறப்பதற்கு என்ன காரணம் என்பது பற்றி தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்த கிட்டி கேரள குமாரியிடம் பேசினேன்.

“ இந்த  ஸ்டெர்லைட்  ஆலை அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனேக வீடுகளில் புற்றுநோயால்  பாதிக்கப்பட்ட ஒருவரை நாம் பார்க்க முடியும். இப்படி இந்த மக்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது  இந்த ஸ்டெர்லைட் ஆலைதான். இந்த ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு 100  நாட்கள் அறவழி போராட்டத்தை நடத்தினோம். இதற்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல போராட்டங்கள்  நடந்திருக்கின்றன. ஆனால் இவ்வளவு வீரியமாக நடந்ததில்லை. காரணம் மக்களுக்கு அப்போது போதிய விழிப்புணர்வு  ஏற்படவில்லை. ஆனால் இப்போது மக்கள் நேரடியாகவே இந்த ஆலையால் பாதிக்கப்படும் போது போராட்டக்களத்திற்கு  வருகிறார்கள். அப்படித்  தான் இந்த போராட்டம் தொடங்கியது.

மக்கள் பாதிக்கப்பட்டதால் தன்னெழுச்சியாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். 100 நாட்களும் மக்கள் அறவழி  போராட்டத்தைதான் நடத்தி வந்தனர். இத்தனை நாட்கள் போராட்டம் நடந்தும் அரசு சார்பாக யாரும் வந்து  உங்களுடைய கோரிக்கை என்னவென்று கேட்கவில்லை. கடைசி நாளான மே 22 அன்று மாவட்ட ஆட்சியரை நேரில்  சந்தித்து அவரிடம் மனு அளிக்கச் சென்றோம். 144 தடை உத்தரவு இருக்கிறது என்று மக்களுக்கு காவல் துறை  தெரிவித்திருக்க வேண்டும். அது காவல்துறையின் கடமை. ஆனால் எந்த வித அறிவிப்பும்  வரவில்லை. நாங்கள்  தொடர்ந்து பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்தோம். எங்களோடு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும்  இரண்டு குழுவாக முன்னேறிச் சென்றுகொண்டிருந்தனர்.

அனைவரும் பொறுமையாக, அமைதியாக சென்று கொண்டிருந்தோம். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் திடீரென  வெடிச் சத்தம் கேட்டது. ஒரு 50 வயது மதிக்கத்தக்க நபரை காயத்தோடு மூச்சு பேச்சே இல்லாத நிலையில்  தூக்கிச்சென்றனர். அப்போதுதான் எனக்கு தெரிந்தது காவல் துறையினர் தாக்குகிறார்கள் என்று. அந்த நபர் என்னவானார்  என்று இதுவரை தெரியவில்லை. கண்ணீர்ப் புகை குண்டுகள் கூட்டத்தை நோக்கி வீசப்பட்டன. சில பெண்களோடு  நிழலான இடத்தில் நான் நின்று  விட்டேன். அமைதியான  பேரணியில் எதற்கு திடீரென காவல்துறை தாக்குதல்  நடத்துகிறது என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் திரளாக நின்று கொண்டிருக்கின்றனர். அலுவலகத்தில் இருந்து புகை மட்டும்  வந்துகொண்டே இருக்கிறது. சிறிது நேரத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. மக்கள் அனைவரும் சிதறி ஓடினார்கள்.  நண்பர் ஒருவர் "விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்,  நீங்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு போங்க" என்று சொன்னார். சிலர் குண்டடிப்பட்டு இறந்துவிட்டார்கள் என்று மக்கள்  அலறிய சத்தம் இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த இடத்தில் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்கும் என்று  நாங்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கலவரம் செய்ய வேண்டும் என்றால் என்னை போன்ற வயதானவர்கள்  ஏன் வரவேண்டும். எப்படி அவர்கள் வரமுடியும். மக்களின் நோக்கம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  கோரிக்கையை சொல்ல வேண்டும் என்பதுதானே தவிர வேறொன்றும் இல்லை.

இவ்வளவு தூரம் எங்களை காவல்துறை அனுமதித்துவிட்டு ஆட்சியர் அலுவலகம் அருகில் வந்த பிறகு மக்களை  கண்மூடித்தனமாக தாக்குவதும், துப்பாக்கியால் சுடுவதும் எந்த விதத்தில் நியாயம். அந்த சம்பவத்தை தொடர்ந்து  தூத்துக்குடி பகுதி முழுவதும் ஒரே ஓலம்தான் கேட்டுக்கொண்டிருந்தது.  இத்தனை உயிரிழப்புகள் நடந்தும் கூட  இறந்தவர்களின் உறவினர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடினால்தான் உடலை வாங்குவோம் என்று சொல்வதும் இந்த  மக்கள் எந்த அளவிற்கு அந்த ஆலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும்.  17வயது மாணவி துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து இருக்கிறார். கண்மூடித்தனமாக இந்தத் தாக்குதல்  நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கொடூரத்துக்குப் பின் பல நாட்களாக நாங்கள் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல்  துன்பத்தில் இருந்தோம்"  என்றார்.

போராட்டத்தில் பங்கெடுத்த சென்னையைச் சேர்ந்த ரோசி மதுவிடம் பேசினேன்.“மே 22ந்தேதி நடைபெற்ற அமைதி  பேரணியில் பங்கெடுத்தது பெரும்பாலும் பெண்கள். கை குழந்தைகளோடு இந்த பேரணியில் பங்கெடுத்தனர்.  அமைதியான முறையில் நாங்கள் ஒரு தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தோம். வரும் வழியில்  மக்கள் திரளாக பங்கெடுத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வதற்கு சிறிது தூரத்திற்கு முன்பே காவல்  துறையினர் எங்களை தடுத்தனர். அதுவரை எந்த சிக்கலும் அங்கு இல்லை. நாங்கள் தொடர்ந்து முன்னேறிச்  சென்றோம். அமைதிபோராட்டத்தை கலவரமாக மாற்றியதும், தடியடி, துப்பாக்கி சூடு எல்லாம் திட்டமிட்டே  நடத்தப்பட்டது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அங்கு நடந்த நிகழ்வுகள் அதை  உறுதிப்படுத்தின. அவ்வளவு  தூரம் நாங்கள் நடந்து வந்தபோது இல்லாத எதிர்ப்பு ஆட்சியர் அலுவலகம் அருகில் வந்த போது ஒரு சலசலப்பை ஏன்  காவல் துறையினர் ஏற்படுத்த வேண்டும்?
 
அன்று போராட்டத்தில் பங்கெடுத்தவர்களிடம் எந்த கற்களும் ஆயுதமும் இல்லை. சரியாக மூன்று வழி சாலை ஒன்றின்  அருகில் வரும்போது காவல் துறையினர் மறைந்திருந்து கற்களைக் கொண்டு எங்களைத் தாக்கினார்கள். கண்ணீர்ப்  புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அந்தக் கற்களை எடுத்துதான் மக்கள் எதிர்வினை ஆற்றினார்கள். சிறிது நேரத்தில்  காவல் துறையினர் அமைதியாகினர். காவல் துறை நினைத்திருந்தால் அங்கேயே மக்களை தடுத்து நிறுத்தியிருக்க  முடியும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. எங்களுக்கு முன்னால் ஒரு குழு சென்று கொண்டிருந்தது. மக்கள்  ஆட்சியர் அலுவலகம் செல்வதற்கு முன்பே அங்கு வாகனங்கள் எரிந்து கொண்டு இருந்தன. அதைப் பற்ற வைத்தது  யார்? அதைக் காரணம் காட்டி மக்கள் மீது திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பலர் குண்டடிப்பட்டு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். இந்த நேரத்திலும் பெண்கள், “நாம் வீட்டிற்கு சென்றாலும் சாகத்
தான் போகிறோம்.

நம்முடைய கோரிக்கையை ஆட்சியரிடம் கொடுத்தே ஆக வேண்டும்” என்று துப்பாக்கிச்சூடு நடந்து முடிந்தும் பெண்கள்  சிலர் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் காத்துக் கொண்டிருந்தனர். திட்டமிட்டு தேடி சென்று ஒருவரைத் தாக்குவதும்  துப்பாக்கியால் சுடுவதும் தற்செயலாக நடப்பதாகத் தெரியவில்லை. இது திட்டமிட்டு நடைபெற்ற தாக்குதல். இந்த  தாக்குதலுக்கு முக்கிய காரணம் ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் தான்.முதல்வர் சொல்கிறார் துப்பாக்கிச்  சூடு சம்பவத்தை நான் டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று. அவருக்கு தெரியாமல் காவல்துறையை இந்த  வேதாந்தா நிறுவனம் இயக்குகிறது என்கிற சந்தேகத்தை அவர் உறுதிப்படுத்துகிறார். அதை நான் எப்படி பார்க்கிறேன்  என்றால் மத்திய அரசு சொல்வதை காவல்துறை செய்யட்டும். அதனால் ஏற்படும் பிரச்சனையை நாங்கள் பார்த்துக்  கொள்கிறோம் என்று மாநில அரசு முடிவெடுத் திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். வேதாந்தா நிறுவனம் பல  கோடிகளை இந்த மண்ணில் முதலீடு செய்திருக்கிறது.

அதனால் இந்த மண்ணின் மக்களை இங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையை இந்த அரசு செய்துவருகிறது. மக்கள்  இந்த நிறுவனத்தால் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். தானாகவே போராட்டத்தை நடத்துகிறார்கள். அரசியல் கட்சிகள்,  அமைப்புகள் போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு பிரச்சனை இல்லை. அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும்  இல்லை. ஆனால் மக்கள் தன்னெழுச்சியாக போராடும்போது அதைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர்களுக்கு  பதில் சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஆகவேதான் இங்கு இரண்டு விஷயங்களை  நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. ஒன்று இனி மத்திய அரசு செயல்படுத்தும் எந்தத் திட்டத்திற்கு எதிராகவும் மக்கள்  போராடக் கூடாது என்கிற அச்சத்தை மக்களிடம் உருவாக்க இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவது  அமைதியாக இந்த போராட்டம் நடந்தால் இதற்கு முடிவு காண முடியாது என்று வன்முறை மூலம் இதை  நிறுத்திவிடலாம் என்று அரசு நினைக்கிறது. உயிர் பலியாலும், வன்முறையாலும் மக்களின் நியாயமான போராட்டத்தை  ஒடுக்கி விடமுடியாது” என்றார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குண்டடிப்பட்டு இறந்த மதுரை மாவட்டம், ஆரியப்பட்டி கிராமத்தில்  வசித்து வந்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த ஜெயராமனின் மகள் நந்தினியிடம் பேசினேன்.“அப்பா எங்கு மக்கள்  போராட்டம் நடந்தாலும் சென்றுவிடுவார். அப்பாவோடு நாங்கள் நிறைய போராட்டங்களுக்கு சென்றிருக்கிறோம். 22ம்  தேதி அதிகாலையே தூத்துக்குடி போராட்டத்திற்கு சென்று வருகிறேன் என்று சென்றவர் வீடு திரும்பவே இல்லை. 1  மணியளவில் டிவியில் அப்பாவிற்கு காயம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.  மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு அப்பா இறந்துவிட்டார் என்று சொன்னார்கள். அதே மருத்துவமனையில் பலர்  உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். காட்டுமிராண்டித்தனமாக மக்களை தாக்கியுள்ளனர். அந்த ஆலை மிகவும்  ஆபத்தானது. அதை மூடவேண்டும் என்று அப்பா அடிக்கடி என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். இறுதியில்  அதற்காகவே உயிரை விட்டிருக்கிறார். திட்டமிட்டு இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. நாங்கள் இதற்கு முன்பு பல  போராட்டங்களுக்கு சென்றிருக்கிறோம். அங்கு கைது செய்வார்கள். இப்படி அமைதியாக போராடியவர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தியது கிடையாது. வேண்டுமென்றே திட்டமிட்டு சிலரை மட்டும் குறிவைத்து காவல்துறை  சுட்டிருக்கின்றனர். இதற்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்  நந்தினி.    l

- ஜெ.சதீஷ்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாகனங்களுக்கும் ஸ்டெர்லைட் குடியிருப்புக்கும் தீ வைக்கப்பட்டதால்தான்  துப்பாக்கிச்சூட்டில் இறங்கியதாக ஒரு  பக்கம் காவல்துறை சொன்னாலும்  தூத்துக்குடியிலிருந்து வந்த தகவல்கள் வேறு  மாதிரி இருக்கின்றன. இறந்ததாக அரசு அறிவித்தோரில் ஒருவரின் மரணம் போராட்டக் களத்தில் நடைபெறவில்லை.  அவரை அவருடைய வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்து வாசலில் வைத்து சுட்டுக் கொன்றதாக பார்த்தவர்கள்  கூறுகிறார்கள். இது என்ன மாதிரியான மனநிலை? இது எப்படி தற்செயலாகும்? ஆக இவை அனைத்துமே திட்டமிட்ட  படுகொலைகள்தான் என தூத்துக்குடியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடந்தபின் உலகெங்கிலுமிருந்து கண்டனக்குரல்கள் எழுந்த நிலையிலும், மறுநாளே அரசு மருத்துவமனை  வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல்துறை. தெருவில் ரகு என்கிற காளியப்பன் என்கிற இளைஞரை  சுட்டுக்கொன்றுவிட்டு 'நடிக்காதேடா' என்று இறந்த உடலின் காலை தூக்கிப் பார்க்கும் காவல்துறையின் வீடியோ  வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல் காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கும்  வீடியோவும் வெளியாகிவிட, அரசு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையத்துக்கு  தடை உத்தரவு போட்டது. தமிழ்நாட்டில் இப்படி தடை உத்தரவு போடப்படுவது இதுவே முதன்முறை. இதை எதிர்த்து  வழக்குகள் போடப்பட்டு படிப்படியாக இணைய சேவை பின் வழங்கப்பட்டது.

கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை அரசு கூறும் எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறித்த சந்தேகத்திற்கும், காணாமல் போனவர்களின் கதி என்னவானது என கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் இல்லாததும் தமிழக  மக்களின் ஐயங்களை அதிகப்படுத்தி இருக்கின்றன. சென்னை பெரு வெள்ளத்தின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை  இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மக்கள் அத்தோடு மறந்தே போனார்கள். அதுபோலவே தூத்துக்குடி  துப்பாக்கிச் சூட்டையும் மக்கள் மறந்து விடுவார்கள் என அரசு நினைத்தால் அதைவிட முட்டாள்தனம்  வேறெதுவுமில்லை.  

தமிழக மக்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் கொதித்தெழுந்து தன்னெழுச்சியாக ஆங்காங்கே போராட்டங்களும்  கடையடைப்புகளும் நடத்தியதில் தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளும் போர்க்களம்  ஆகின. பொதுமக்களின் அனைத்துத் தரப்பு மக்களின் கோபத்தையும் எதிர்கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள்  வரும் தேர்தலில் இந்தத் துப்பாக்கிச் சூட்டின் பாதிப்பை புரிந்துகொள்ளவேண்டி வரும். அதுவரை அதிகார போதையில்  ஆடலாம். வேதாந்தா நிறுவனத்தின் மால்கோ நிறுவனம் இருக்கும் மேட்டூரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  நோய்த்தாக்குதல் இருப்பதால் அதையும் மூடவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
 
இந்த இதழ் அச்சேறுகையில் வந்த செய்தியின்படி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு  அரசாணை பிறப்பித்திருக்கிறது. இதை அடுத்து உடனடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் இந்த அரசாணையால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியுமா என சந்தேகம் எழுப்பியுள்ள சட்ட  வல்லுநர்கள், தமிழக சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்றுவதே சிறந்த தீர்வு என  தெரிவித்திருக்கின்றனர்.  

- கவின் மலர்