கிடுகிடுவென உயரும் பெட்ரோல் விலை... நெருக்கடியில் மக்கள்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு சாதாரண மக்களுக்கு பொருளாதார நெருக்கடியை கொடுத்து வருகிறது. 24/05/2018 நிலவரப்படி 80 ரூபாய் 11 காசுகள் உயர்ந்திருந்தது. மேலும் விலை உயரும் என்று கூறப்படுகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பொருளாதாரத்தை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்தப் பிரச்சனை குறித்து சிலரிடம் பேசினேன்...
அமலா, தனியார் பள்ளி ஆசிரியர்
“இத்தனை ஆண்டுகளில், இந்த அளவிற்கு பெட்ரோல், டீசல் உயர்வை யாரும் பார்த்ததில்லை. குறிப்பாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில்தான் இவ்வளவு விலை உயர்வை இந்த நாடு சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு என்பது 50 பைசா, 1 ரூபாய் என்ற அடிப்படையில் கட்டண உயர்வு இருந்ததை நாம் பார்த்திருப்போம். ஆனால் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்தது என்பது, இன்று தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வின் சாதனைகளில் ஒன்று என்றே சொல்லலாம். பேருந்து கட்டணம்தான் உயர்ந்து விட்டது என நினைக்க முடியாத நிலையில், வாகனம் வாங்கியவர்களுக்கும், ஏற்கனவே வாகனம் வைத்திருந்தவர்களுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் போக்குவரத்து செலவிற்கென்று 1000 ரூபாய் ஒதுக்கி மீதம் உள்ள பணம் வீட்டு செலவுக்கு என்று கணக்கு பார்த்து தன்னுடைய வாழ்நாளை கடக்கும் சாதாரண குடும்பத்திற்கு, இன்றைய நிலவரப்படி போக்குவரத்து செலவிற்கு மட்டுமே 2000க்கு மேலாவது ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தனி மனித வருமானத்தை மட்டும் பாதிக்கவில்லை. நாம் தினமும் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பருப்பு வகைகள் என உணவுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களுமே வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்துதான் பெறவேண்டியிருக்கிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மாதம் ஒரு முறை என்ற விகிதத்தில் இருந்த பெட்ரோல் விலை நிர்ணயத்தை தினசரி பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு, மக்கள் தலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பாறாங்கல்லை தூக்கி வைத்துள்ளது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு 11 முறைக்கு மேலாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி, தினமும் பெட்ரோல், டீசல்விலையை உயர்த்திக்கொள்ளலாம்என்று அனுமதித்தது. அதன் பலனை நாம் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மத்திய அரசின் பகல் கொள்ளை என்றுதான் சொல்ல வேண்டும்” என்கிறார்.
கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
“பி.ஜே.பி அரசு ஜி,எஸ்.டியை கொண்டு வரும் போது ஒரே நாடு, ஒரே வரி இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். காங்கிரஸ் அரசு அதிகபட்சமாக 18 சதவீதம் வரிவிதிப்பை அறிமுகப்படுத்தினார்கள்.இவர்கள் அதை 28 சதவீதமாக கொண்டு சென்றதை நாம் அறிவோம். மறைமுக வரிவிதிப்பின் மூலமாக மிக அதிமான பணத்தை சாதாரண மக்களிடமிருந்து பறிப்பது என்பது இப்போது இருக்கக்கூடிய நடைமுறை.
பி.ஜே.பி எப்போதும் தான் சொல்வதை செய்வது கிடையாது. 1/04/2002 ல் வாஜ்பாய் பிரதமராகவும், யஸ்வந்த் சின்ஹா நிதித்துறை அமைச்சராகவும், ராம் நாயக் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த போது பெட்ரோலிய விலையை நிர்ணயிக்கும் உரிமையை அரசு கைவிட்டது. அப்போது அவர்கள் சர்வதேச சந்தையில் விலை இறக்கம் ஏற்படும் போதெல்லாம் இங்கு விலை இறங்கும் என்று சொன்னார்கள். ஆனால் அதன் பிறகு விலை குறையாமல் பார்த்துக்கொண்டனர்.
தற்போது இருக்கக்கூடிய மத்திய அரசாங்கத்தால் புதிய தொழில்கள் வரவில்லை. அரசாங்கத்தின் வருமானம் உயரவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பெறப்படும் வரியை நிறுத்தி விட்டனர்.அதன் பிறகு புதிதாக வந்த தொழிற்சாலைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது.உதாரணமாக நோக்கியா நிறுவனம் இங்கிருந்து போகும் வரை எந்த வரியும் அரசிற்கு கட்டவில்லை. இப்படியாக கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பெறப்படும் நேரடி வரி வசூலை நிறுத்தி அல்லது குறைத்துக் கொண்ட காரணத்தினால் ஏற்பட்ட இழப்புகளை, சாதாரண மக்களின் பாக்கெட்டில் இருந்து திருடுவதற்கான ஏற்பாடுதான் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு.
மாநில அரசிற்கு நெருக்கடி ஏற்பட்டால் வரிவிதிப்பதற்கான அதிகாரம் கடந்த காலத்தில் இருந்தது. ஆனால் புதிதாக கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி மூலம் ஒரு மாநில அரசாங்கம் வரிவிதிக்க வேண்டுமென்றால் மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும். அந்த அனுமதியும் கூடுதல் நெருக்கடி உள்ள நேரங்களில்தான் கேட்க வேண்டும்.எனவே எந்த ஒரு மாநில அரசாங்கமும் தன்னிச்சையாக தன்னுடைய அதிகாரத்தில் வரி விதிக்க முடியாது.அரசினுடைய நிதி நிலையை மேம்படுத்த முடியாது. இந்த சூழலில் முழுக்க முழுக்க மாநில அரசுகள் மத்திய அரசாங்கத்தை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இயல்பாகவே மாநில அரசாங்கங்கள் இந்த முறையை கைவிட சொல்லுவதற்கு பதிலாக தங்களுக்கு இருக்கக்கூடிய குறைந்தபட்ச அதிகாரமும் போய்விடக் கூடாது என்று நினைக்கிறது.
ஒவ்வொரு முறையும் விலையை கூட்டும் போதும் எல்லா மாநில அரசுகளுக்கும் இதிலிருந்து ஒரு பகுதி வருமானம் கிடைக் கிறது என்பதால் மாநில அரசுகள் இயல்பாக மக்களிடம் இந்த பிரச்சனை குறித்து பேசுவது கிடையாது. மாநில அரசுகளின் வருவாய் குறைந்து இருப்பது மத்திய அரசின் இதே செயல்பாடுகளினால்தான் என்று மாநில அரசுகள் புரிந்துகொள்வதில்லை.பி.ஜே.பி ஆட்சிக்கு வரும் போது 56 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டு வந்தது.
இப்போது 11 ஆயிரம் கிலோ லிட்டர்தான் தமிழ்நாட்டிற்கு கொடுக்கிறது. மாநில அரசுகளுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. இன்னொரு பக்கம் அரசு வங்கிகளில் தனியார் நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் எல்லாம் அந்த நிறுவனங்களை நெருக்கடியில் தள்ளியிருக்கின்றன. அந்த வங்கிகளை மீட்டெடுப்பதற்கு அனைத்து வங்கிகளையும் ஒன்றிணைக்க வேண்டுமென்றோ அல்லது அரசாங்கம் பணம் கொடுக்க வேண்டுமென்றோதான் அரசாங்கம் பணம் கொடுக்க யோசிக்கிறது.அரசாங்கத்திடம் இருந்து பணம் கொடுக்க வேண்டும் என்றால் இப்படி விலை உயர்வை அதிகரித்து அதில் வரும் வருமானத்தை பயன்படுத்த திட்டமிடுகிறது. இந்தியாவில் வசதியற்றவர்களிடம் அதிக வரி வசூலித்து வசதி படைத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்து வருகிறது. வருமான வரியும், கார்ப்பரேட் வரியும்தான் அனேகமாக ஒரு தனி மனிதன் நேரடியாக செலுத்தக்கூடிய வரியாக இருக்கிறது. மற்றவை எல்லாம் மறைமுக வரிகள். உலகில் பெரும்பாலான நாடுகள் நேர்முக வரியை அதிகப்படுத்தி செயல்படுகிறது.இந்தியாவில் மறைமுக வரியை அதிகப்படுத்தி மக்களை நெருக்கடியில் தள்ளுகிறது அரசு. l
-ஜெ.சதீஷ்
|