நடிகையர் திலகம்தொழில்நுட்ப வளர்ச்சி எதுவும் அற்ற காலகட்டத்தில், சினிமா தோன்றிய வரலாறும், அது வளர்ந்த விதமும் ரொம்பவே பிரமிப்பானது. நடிப்பு என்பது அப்போதெல்லாம் அவ்வளவு எளிதான விசயமே இல்லை. நடிப்போடு சொந்தக் குரலில்  பாடவும், ஆடவும், நீண்ட வசனங்களை தடையின்றி பேசவும் தெரிந்தால் மட்டுமே சாத்தியம். அதுவும் பெண்கள்  அதிகமாக வெளியில் வராத காலகட்டத்தில், ஆணாதிக்கம் நிறைந்த ஒரு துறையில், பல ஆண்களுக்கு நடுவே, சுற்றி  இருக்கும் மிகப் பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில், கேமராவுக்கு முன், பலர் பாராட்ட பெண்கள் நடிப்பதென்பது  எளிதான காரியமா என்ன? ஆனாலும் நடிகைகள் தங்கள் திறமைகளை மட்டுமே நம்பி, சினிமாத் துறைக்குள்  கால்பதித்து கொடிகட்டி பறந்த பல அதிசயங்களும் நடந்தே இருக்கிறது. அதில் ஒரு அதிசயம்தான் நடிகையர் திலகம்  சாவித்திரி.

நடிகையர் திலகம் திரைப்படம் பல்வேறு திறமைகள் கொண்ட ஒரு நடிகை உச்சத்தை அடைந்ததும், பின் அந்த வாழ்வு  அவராலே கெட்டு தானாகவே வீழ்ந்ததுமான கதை. தனது 46 வயதிற்குள் வாழ்வின் அத்தனை அனுபவங்களையும்  அதன் ஆழம் வரை சென்று பார்த்தவர் சாவித்திரி என்னும் மகா நடிகை. அவரது வாழ்வில் நிகழ்ந்த பரமபத  விளையாட்டில், அவரின் திறமையால் மட்டுமே மேலேறி, உச்சத்தை தொட்ட நிலையில், எதிர்பாராமல் மடமடவென  சரிந்ததும் அவர் வாழ்வில் மிகப் பெரும் துயரம். படம் முழுவதும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரியாக  அப்படியே வாழ்ந்திருக்கிறார். கீர்த்தியின் நடிப்பும், துள்ளலும், சிரிப்பும், அழுகையும், துயரமும் அப்படியே மகா நடிகை  சாவித்திரியாகவே நம்மை ஆட்கொள்கிறது.

அவரிடம் எந்தவொரு மிகையான நடிப்பும் சுத்தமாக இல்லை.
கீர்த்திக்கு பதில் சாவித்திரியே அங்கு தெரிகிறார். துவக்கத்தில் 14 வயது சின்னப் பெண்ணாக விஜயா வாஹினி  ஸ்டூடியோவிற்குள் மிகவும் சாதாரணமாக நுழைவதில் துவங்கி, நடிகையர் திலகமாக அவர் நடிப்பில் விஸ்வரூபம்  காட்டுவதாகட்டும், நடுத்தர வயதிற்குரிய உப்பிய கன்னங்களுடன், சற்றே பூசிய உடம்புடன் இயல்பான  கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதாகட்டும், எதிர்பாராத சம்பவங்கள், இழப்புக்களால் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி  தான்பெற்ற பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு, தேடிய வாழ்க்கை அனைத்தையும் இழப்பதில் துவங்கி, உடல் மெலிந்து,  காலைச் சாப்பாடு உண்ணாமல் ரிக்சாவில் படப் பிடிப்பிற்குச் செல்வதென எதைச் சொல்வது, எதை விடுப்பது.  அப்படியே மகா நடிகை சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்திரியின் 45 வருட  வயது வித்தியாசத்தை அனாயசமாக கையாண்டு அசத்தி இருக்கிறார்.

15 வயது சாவித்திரிக்கும் 32 வயது ஜெமினிக்கும் இடையே தோன்றும் அந்தக் காதல் நம்மை அப்படியே  கிறங்கடிக்கிறது. சிறு வயதில் தந்தையை இழந்து அவரது ஒரு புகைப் படமாவது கிடைக்காதா எனத் தவிக்கும்  சாவித்திரி, எந்த அப்பாவை குழந்தையோடு பார்த்தாலும், அந்த உறவில் தன் அப்பாவை தேடி ஏங்குவதும், சாவித்திரி  (கீர்த்தி) ஜெமினியிடம்(துல்ஹர்) “என் அப்பா இருந்திருந்தால் என்னை உப்பு மூட்டை தூக்கி விளையாடிருப்பாரா”  எனக் கேட்பதும், உடனே ஜெமினி (துல்ஹர்) “அம்மாடி எழுந்து நில், எனச் சொல்லி, உப்புமூட்டை தூக்கிக்கொண்டு  சாவித்திரியோடு(கீர்த்தி) ஓடுவதுமாக”, தந்தையின் உருவத்தைத் தேடிய சாவித்திரியின் இளம் வயதில் ஜெமினி  நுழைவது, அவர் திருமணமானவர் எனத் தெரிந்து சாவித்திரி விலக நினைத்து முடியாமல் தவிப்பது என சாவித்திரியின்  காதல் வாழ்க்கை பார்வையாளர்களுக்கு மிகவும் அழகாகக் கடத்தப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாடுவதும்.

கார் ரேசில் பங்கேற்று கோப்பை பெறுவதும். அசால்டாக மரம் ஏறி மாங்காய் பறிப்பது. தன்னை தேடி வருபவர்களுக்கு  இரக்கத்துடன் தன்னிடம் இருக்கும் பணம் நகைகளை அள்ளிக் கொடுப்பது, பிரதம மந்திரி நிதிக்காக தான்  அணிந்திருக்கும் ஆபரணங்களை சென்ற இடத்திலேயே கழட்டிக் கொடுப்பது, பெண் இயக்குநராய் நின்று படங்களை  இயக்குவதுமாக ஒரு பெண்ணாய் சாவித்திரியின் பல்வேறு ஆளுமைகளை வெளிக்காட்டுவதில் கீர்த்தி நம்மை  ரொம்பவே அசத்தி இருக்கிறார். அந்தக்கால நடிப்பின் பாவனைகள், நடனம், உடல் மொழி என அத்தனையையும், தனது  கடுமையான உழைப்பில் நிறைவேற்றி அட்டகாசமாய் ஜெயித்து நிற்கிறார் கீர்த்தி. திரைக்கதையின் கடைசி காட்சியில்  கையில் மதுவுடன் அமர்ந்து ஜெமினியுடனான தன் காதலை, தன் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும் காட்சியில்,  உட்கார்ந்திருப்பது கீர்த்தி சுரேஷ் என்பதை மறந்து சாவித்திரியாகவே நமக்கு நினைக்கத் தோன்றுகிறது தன் மனைவி  தன்னைவிட செல்வாக்கு மிக்கவராக இருப்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்வது கடினம்தான்.

காதலரும் கணவருமான ஜெமினி கணேசன், நடிகை சாவித்திரியை மெல்லிய உணர்வோடு, அன்பெனும் ஆயுதத்தை  காட்டியே, காதலால் ஆட்கொண்டு, அம்மாடி.. என்ற ஒற்றை வார்த்தை பிரயோகத்தால், அவரை கிரங்கடித்து, சாவித்திரி  என்ற ஆளுமையோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்பவராக சற்றே ஒதுக்க ஆரம்பிப்பதுமாக ஜெமினியாக துல்ஹர் தன்  பங்கிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, ஜெமினி கணேசனை மீண்டும் நினைவூட்டி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.பத்திரிக்கையாளராக வரும் நடிகை சமந்தா சாவித்திரியின் வாழ்க்கையை தேடி செல்வதுபோன்ற கதையில், நடிகை  சாவித்திரியின் இயல்பில் ஆட்கொண்டு, தன் குடும்பத் தடைகளைத் தாண்டி கிறித்துவ நண்பரை மணக்க  முடிவெடுப்பதெனதன் பங்கிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“உன் அளவுக்கு நான் வேற யாரையும் காதலிக்கலன்னாலும், என் பலவீனம் அப்பவே உனக்கு தெரியாதா? ஏதோ  இப்போ தான் தெரிஞ்ச மாதிரி பேசற?'' "அப்போ நான் சாவித்திரி; இப்போ சாவித்திரி கணேசன்" போன்ற மதன்  கார்க்கியின் வசனங்கள் ஒவ்வொன்றும் நச்சென படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.சாவித்திரி, ஜெமினி  கணேசனுக்கான உடை, மேக்கப் மற்றும் ஆர்ட் டைரக்ஷன் என எல்லாவற்றிலும் உழைப்பு நிறைந்திருக்கிறது. நடிகை  சாவித்திரி காலகட்டத்தில் அவர் அணிந்த புடவைகள், அணிகலன்கள், சாவித்திரியின் டிரேட் மார்க்   திலகப் பொட்டு,  புருவங்கள் என அனைத்தும் மிகவும் தத்ரூபமாகவே இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் கையாளப்பட்ட கேமராக்கள்,  ஃபர்னிச்சர்கள், கார்கள், டெலிபோன்கள் என அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள்.கதாபாத்திரங்களின் தேர்வு, நாக் அஸ்வினின் இயக்கம், டேனி சஞ்சேஷ் லோபேஷின் ஒளிப்பதிவு, மிக்கி ஜே மேயரின்  இசை, கோத்த கிரி வெங்கடேஸ்வர ராவின் எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு கூடுதல் சிறப்பினைச்  சேர்த்திருக்கிறது.

சரியாகச் சொல்வதென்றால் கீர்த்தி கூடு விட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.மாபெரும் நடிகையாக கொடிகட்டிப் பறந்தபோதும், மனிதாபிமானம் மிக்கவராக, கொடைக்குணம் மிக்கவராக சாவித்திரி  திகழ்ந்ததை படம் மிக அற்புதமாகக் காட்டியிருக்கிறது.  அவரது கொடைக்குணமும், ஆரம்பகால அப்பாவித்தனமும்,  குழந்தைப் பருவத்து சுட்டித்தனமும்,  பின்னாளின் பிடிவாத குணமும் அப்படியே நம் கண்முன் காட்சிகளாக  விரிகின்றன. ‘மாயா பஜார்' திரைப்படத்தில் எஸ்.வி.ரங்காராவைப் போல நடித்துக் காட்டும் காட்சி அத்தனை தத்ரூபம்.   பழைய திரைப்படங்களின் காட்சிகளை அப்படியே மீண்டும் படமாக்குவதென்பது சாதாரணமான விஷயம் அல்ல.  எடுத்துக்காட்டாக, ‘பாசமலர்' படத்தில் வரும் ‘மலர்ந்தும் மலராத' பாடலின்போது பின்னணியில் இருக்கும் அண்ணன்  சிவாஜியின் பிரம்மாண்ட ஓவியம் போல எத்தனையோ விஷயங்களை அந்தக் காட்சிக்குத் தகுந்தவாறு மீண்டும்  உருவாக்கியிருக்கிறார்கள்.

தமிழ் பார்வையாளர்களுக்கென்று சில காட்சிகளையாவது வைத்திருக்கலாம் என்கிற ஆதங்கம் எழாமல் இல்லை.   சாவித்திரியை முற்றிலும் ஆந்திராவுக்கும் தெலங்கானாவுக்கும் விட்டுக்கொடுத்துவிட முடியாத தமிழ் மனது ஏக்கம்  கொள்கிறதுதான். ஜெமினிக்கு சாவித்திரி மீதிருந்த காதல், சாவித்திரிக்கும் இருந்த அதீத காதல், அதன் விளைவான  பொசஸிவ்நெஸ்  என எல்லாவற்றையும் விவரிக்கிறது படம். சாவித்திரி என்கிற  ஒரு சிறந்த நடிகை, அவர் குடித்தார்,  கோமாவில் இருந்து இறந்தார் என்பதைத் தாண்டி ஏதுமறியா புதிய இளைய தலைமுறைக்கு சாவித்திரி குறித்த முழு  சித்திரத்தை இப்படம் தருகிறது. தவிரவும், மீண்டும் அவருடைய திரைப்படங்களைக் காணவேண்டும் என்கிற ஆவலை  முதியவர்களிடமும்,  தேடித்தேடியாவது சாவித்திரி நடித்த படங்களைப் பார்த்துவிடவேண்டும் என்கிற எண்ணத்தை  இளைய தலைமுறையிடமும் விதைத்திருக்கிறது.                                l

- மகேஸ்வரி