என் கதைகள் சம்பவங்களை அடிப்படையாக கொண்டவைதமயந்தி

‘நீ எப்படி வாழ விரும்புகிறாய்?’ என என் சிறு வயதில் யாராவது என்னிடம் கேட்டிருந்தால் ‘சிறந்த ஒரு புத்தக  அலமாரி இருக்கும் வீட்டில் வாழவே விரும்புகிறேன்’ என்று தான் கண்டிப்பாகச் சொல்லி இருப்பேன் என்று வாசிப்பின்'  மீதான தன் ஆர்வத்தை வெளிப்படுத்தும் சிறுகதை எழுத்தாளர் தமயந்தி, இன்றைய கதையுலகில் கவனிக்கப்பட  வேண்டியவர். கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முக அடையாளம் கொண்டவர். தற்போது திரைப்பட  இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் நமக்களித்த நேர்காணல்…

“சொந்த ஊர் திருநெல்வேலி. வீட்டிற்கு ஒரே பொண்ணு. அப்பா பேராசிரியர், அம்மா ஆசிரியர். அம்மாவிற்கு வாசிக்கும்  பழக்கம் இருந்தது. நிறைய வாசிக்கிற குடும்பங்கள் கொண்ட சிநேகிதிகள் எனக்கு இருந்தாங்க. என்னுடைய குழந்தைப்  பருவம் தனிமையால் நிறைந்திருந்த படியால் நானும் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த தனிமை எனக்குள்ளே ஓர்  உரையாடலை உருவாக்கியது. இந்த உரையாடல் தான் வாசிப்பின் மூலமா எழுத்தாகியது. என் தோழி தங்கம்  என்பவளின் அத்தை ஒருவர் தன் வீட்டில் புத்தக அலமாரி வைத்திருப்பார்.

அதில் நிறைய புத்தகங்கள் இருக்கும்.  பார்க்கும் போதே படிக்கும் ஆவல் வரும் வகையில் அழகாக அடுக்கி வைத்திருப்பார். ஒரு சமயம் ‘நான் வாசிக்க  புத்தகம் தர்றீங்களா?’ என அவரிடம் கேட்டேன். அவர் நா. பார்த்தசாரதியோட ‘குறிஞ்சி மலர்’ புத்தகத்தை எனக்கு  வாசிக்கக் கொடுத்தார். அதை வாசிச்சேன். அதன் கதாநாயகன் அரவிந்தின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  அப்படியாக என் வாசிப்பு ஆர்வம் அதிகரித்தது. எங்கள் ஊரில் சுழலும் படிப்பகம் இருந்தது. வீடு தேடி வரும்  புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன்.

வாசிப்பு அதிகரிக்க அதிகரிக்க எழுதும் ஆர்வமும் கூடவே வந்தது. இளம் வயதில் பெரிதாக எழுதுவதற்குச் சாதகமான  சூழ்நிலை எல்லாம் இல்லை. ஆனால் ஆர்வம் காரணமாக, ஏழாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளியில் ஓய்வு  நேரங்களில் சிறு சிறு கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அதை என் தோழிகளும் உற்சாகப்படுத்த மேலும் மேலும்  எழுதினேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தேன். பகிர்தலின் ஒரு வழியாகத் தான் கதைகள்  எழுத ஆரம்பித்தேன்.

என் தோழி அமுதா தமிழ் ‘நீ உன் கதைகளை ஆனந்த விகடன், சாவி, கல்கி, இதயம் பேசுகிறது போன்ற  பத்திரிகைகளுக்கு அனுப்பு’ என வலியுறுத்திக்கொண்டே இருந்தாள். அந்த சமயம் ‘மாறுதலா’ என்ற கையெழுத்துப்  பத்திரிகை ஒன்றை நண்பர்கள் இணைந்து நடத்தி வந்தோம். கதை எப்படி அனுப்புவது என்று கூட அப்போது தெரியாது.  சென்னையிலிருந்த என் அத்தை வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக வந்திருந்த போது அப்பாவுடன் சென்று இரண்டு  கதைகளை ஆனந்த விகடன் அலுவலகத்தில் கொடுத்தேன். இரட்டை சடையோடும், தாவணியோடும் அங்கே போனது  இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.

பல நாட்கள் ஆகியும் அந்த கதைகள் வெளிவரவில்லை. பின்னர் சாவி இதழுக்கும் கதை அனுப்பினேன். சாவி இதழுக்கு  நான் அனுப்பிய கதை அடுத்த வாரமே திரும்பி வந்தது. உடன் ஒரு கடிதமும் வந்திருந்தது. ‘இந்த கதையில் என்ன  இல்லை என்று சொல்லத் தெரியவில்லை.  ஆனால் இந்த கதையைத் திருப்பி அனுப்புவதன் மூலம் கண்டிப்பாக ஓர்  எழுத்தாளர் பிற்காலத்தில் சிறப்பாக வருவார். வார்த்தைகள் அப்படி இருக்கு, மேலும் நிறைய எழுதுங்க’ என்று எழுதி  இருந்தார் சாவியின் உதவி ஆசிரியர் சதீஷ் வைத்தியநாதன். மேலும் அவர் எனக்கு எழுதுவதற்கான உத்வேகம்  கொடுத்துக்கொண்டே இருந்தார். நன்றாக இருக்கிறதோ இல்லையோ தினமும் கதை எழுத பயிற்சி அளித்து வந்தார்.  நானும் பெரும்பாலும் தினமும் கதை எழுதி அனுப்புவேன். அனுப்பும் எல்லாக் கதைகளுமே திரும்பி வந்துவிடும். அந்த  சமயத்தில் ஒரு நாள் சாவி இதழின் ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.

சென்றிருந்தேன். என்னை பார்த்ததும் இவ்வளவு சின்னப் பெண்ணாக இருக்கிறாயே என வியந்து ‘உன் கதைகள்  எல்லாமே விருந்து மாதிரி இருக்கிறது. சாம்பார், 7 வகை கூட்டு, பாயசம், அப்பளம், வடை என எல்லாமே இருக்கிறது.  நல்ல ருசியாகவும் இருக்கிறது, ஆனால் சோறு இல்லையே’ என்றார். அதாவது கதைகள் எல்லாமே சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தன, கதை என்று எதுவும் இல்லை என்றார். சோறு இருந்தால் நன்றாக  இருந்திருக்கும் என்றார். ஆனால் இன்று வரையிலும் நான் அப்படிப்பட்ட கதைகளைத் தான் எழுதுகிறேன். சம்பவம்  என்பது கதையின் முதல் பகுதியாக இருக்கலாம். மத்திய பகுதியாக இருக்கலாம். ஆனால் சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு தான் இன்று வரை கதைகளை எழுதுகிறேன். எனது கதைகள் சொற்சித்திரங்களால் ஆனவை.  ஆனால் அதன் பிறகு யாரும் சோறு இல்லை என்று சொல்வதில்லை’சிரிக்கிறார்.

அந்த சமயம் திடீரென ஒருநாள் முதன் முதலில் ஆனந்த விகடனில் நான் கொடுத்துவிட்டு வந்த இரு கதைகளும்  ஜாக்பாட் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தகவல் போஸ்ட்கார்டில் வந்தது. நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்  போது எனது அந்த முதல் கதை வெளியாகியது. அதன் பிறகு நிறைய கதைகள் எழுதினேன். தாய் பத்திரிகையில்  நிறைய கதைகள் வெளியாகின. பழனிபாரதி அப்போது அங்கு உதவி ஆசிரியராக இருந்தார். அந்த சமயத்தில்  அறிமுகமான ஜெகன் என்பவர் பா.சிங்காரத்தின் ‘புயலில் ஒரு தோணி’ என்ற புத்தகத்தை வாசிக்கக்கொடுத்தார். அதன்  பிறகு எனது வாசிப்பு தளம் மாறியது. வளர்ச்சி அடைந்தது என்றும் சொல்லாம்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் வீட்டில் என்னை மருத்துவம் படிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள் நான் மறுத்தேன். என்  உறவினர் களான மாமாவும் சித்தப்பாவும் இலக்கியம் படித்தவர்களாக இருந்தனர். அவர்களுடைய பேச்சு மற்றவர்களின்  பேச்சை விட சுவாரஸ்யமாக இருக்கும். கருத்தியல் ரீதியாகவும் வித்தியாசமாக இருக்கும். அதனால் எனக்கும்  இலக்கியத்தின் மீது ஈர்ப்பு வந்தது. ஆனால் என் பெற்றோருக்கு நான் இலக்கியம் படித்துவிட்டு வாழ்க்கையில் எப்படி  முன்னுக்கு வரப்போகிறேன், பொருளாதார ரீதியாக எப்படி இருக்கப்போகிறேன் என்ற கவலை இருந்தது. முதன்  முறையாக அப்பாவை எதிர்த்து நின்று போராடி ஜெயித்தேன். ஆங்கில இலக்கியம் படிக்க ஆரம்பித்தேன்.

கல்லூரியில் படிக்கும் காலக்கட்டத்தில் 1989ல் எனது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘தமயந்தியின் சிறுகதைகள்’  வெளியானது. அதனை வெளியிட்டவர் எழுத்தாளர் பிரபஞ்சன். ‘தாய்’ பத்திரிகையில் வெளியான அவரது சந்தியா  எனும் படைப்பு என்னை பாதித்த ஒன்று. அப்படியான ஒரு கேரக்டராக வாழ நினைத்தேன். ஆனால் வாழ்க்கை நாம்  நினைத்தபடி அமைவதில்லை. அது அதன் போக்கிற்குச் செல்கிறது. புத்தக வெளியீட்டு சமயத்தில் பிரபஞ்சன் அவர்கள்   என்னிடம் பேசுகையில் ஆனந்த விகடனில் ஜாக்பாட் பரிசு பெற்ற இருகதைகளையும் தானே தேர்ந்தெடுத்ததாக  சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.

நம் வீட்டு கடைக்குட்டி சிறிய பரிசு வாங்கினால் கூட எல்லாருமே பாராட்டி மகிழ்வோமே அது போல தான் அந்த  சமயத்தில் எழுத்தாளர்கள் என்னை நடத்தினர். திருநெல்வேலி மாதிரியான ஒரு இடத்தில் இருந்து ஒரு பெண் அந்த  காலக்கட்டத்தில் எழுத வருவது எவ்வளவு சிரமம் என்பது அவங்களுக்குத் தெரியும்.எம்.ஏ ஆங்கில இலக்கியம்  முடித்தேன். திருமண வாழ்வு சொல்லிக் கொள்ளும் படி இல்லை. விவாகரத்து ஆனது. பத்து வருடங்கள் எதுவும்  எழுதாமலே வீணாகிப்போனது.இலக்கியச் சூழலில் இருந்த நண்பர்கள் எனக்குக் கிடைச்சாங்க. ஒருவிதத்தில் நான்  தப்பிச்சதுக்குக் காரணம் அவர்கள் தான். இல்லையென்றால் திசை தெரியாமல் வாழ்க்கை எங்கெல்லாமோ  சென்றிருக்கும். இன்று வரை நண்பர்கள் தான் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்.

அதன் பிறகு திருநெல்வேலியில் சூரியன் எஃப் எம்மில் ஆர்.ஜேவாக பணியாற்றினேன். அதன் பிறகு மீடியா விலும்  பணியாற்றினேன். அப்படியே கதைகளும் எழுதிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பின் 2002ல் எனது  இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘அக்கக்கா குருவிகள்’ வெளியாகிப் பரவலாகப் பேசப்பட்டது. இதுவரை மொத்தம்  12க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. அடிப்படையில் நான் சிறுகதை எழுத்தாளராக இருந்த  போதும் ஒரு கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது. 2016 ல் ‘பாதங்களில் படரும் கடல் வெளியானது’.  மேலும் இரு கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன.

வாழ்வில் நான் பல அவமானங்களையும் சந்தித்திருக்கிறேன். நம் இலக்கியச் சூழலைப் பொறுத்தமட்டில்  இரண்டுவிதமாக எழுதுபவர்களை அணுகுவார்கள். ஒன்று அப்படி ஒருத்தர் இருப்பதையே உணராதவர்கள் போல்  இருப்பார்கள். கார்னர் செய்வார்கள். இல்லையென்றால் ஆஹா ஓஹோ என்று தேவையில்லாமல் புகழ்வார்கள்.  நடுநிலையாக நடந்து கொள்பவர்கள் இங்கே குறைவு என்றே சொல்லலாம். உண்மையான விமர்சனங்கள் இங்கே  குறைவு. அதனால் மற்றவர்களின் விமர்சனங்களை விடவும் 20 வருடங்களாக எழுதி வருவதால் எனக்கே எது சிறந்தது  எது அர்த்தமற்றது என்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பாராட்டு, விருது  இவற்றைப்பொறுத்து ஒரு படைப்பைச் சிறந்தது என்று சொல்லி விட முடியாது. இங்கே லாபி அதிகம். பாரதியாரின்  ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ பாடல் ஒரு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது என்று சொல்வார்கள். அந்த  போட்டியில் முதல் பரிசு பெற்ற பாடல் எது என்று கேட்டால் இன்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த பாடல்  காலத்தை வென்று நிற்கிறது. காலத்தை வென்று நிற்கும் படைப்புகள் தான் என்னைப்பொறுத்தை வரை சிறந்தது என்று  சொல்வேன்.

விருதுகள் மீதெல்லாம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஆனந்த விகடனில் வெளிவந்த ‘தடயம்’ என்ற  எனது சிறுகதை நல்ல வரவேற்பை பெற்றது. அதைப் படித்துவிட்டு ஒரு வாசகி தன் காதலரை சென்று சந்தித்து  வந்ததாகச் சொன்னார். அந்த கதை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த கதையை படமாக்க அனுமதி கேட்டு  இரண்டு மூன்று பேர் என்னை தொடர்பு கொண்டனர். மக்கள் மனதில் கதை ஏற்படுத்தும் பாதிப்புதான் வெற்றி என்று  சொல்ல வேண்டும்.

என்னுடைய கதைகள் பெரும்பாலும் பெண்களின் வலியை பிரதிபலிக்கின்றன. நமக்கு முன் கோடான கோடி பெண்கள்  இருந்திருக்கிறார்கள். அவர்களின் உலகம் எப்படி இருந்தது என்பதை பெண்நோக்கில் வெளிப்படுத்திய இலக்கியங்கள்  குறைவு தான். பெண்ணுலகத்தை வெளிப்படுத்தியவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்தனர். பெண்களுக்கு  நிகழ்ந்த தவறுகள் இனி நிகழாமல் செய்யணும். வாழ்வியல் சூழல் மறு சீரமைப்புச் செய்யப்படணும்னு நினைக்கிறேன். வளரும் எழுத்தாளர்களும் விமர்சனங்களை தாண்டி தான் எழுத வந்ததை எழுத வேண்டும். எழுத்து என்பது ஒரு  ஆயுதம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். எழுத்தைப் பொறுத்தவரை சாதி, பாலினம் இதெல்லாம்  இருக்கக்கூடாது என்றே நினைக்கிறேன்.

இங்கே மனித வாழ்க்கையை ஆழந்து நோக்கி மறு சீரமைப்புச் செய்யும் அவகாசம் யாருக்குமில்லை. அது ஆணோ  பெண்ணோ கட்டமைப்பு நிர்பந்தத்தின் காரணமாக யார் யாரை கையகப்படுத்துவது என்ற போட்டியில் வாழ்ந்து  சாகிறோம். பெண்களிடமும் சில சமயம் வெளிப்படும் மேல் ஈகோவும் ஒரு காரணம். ஆனால் அதை உடைத்து நம்மிடம்  இருக்கும் தீயவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் நம்மிடையே ஏற்பட வேண்டும். எழுத்தைத் தாண்டி  சமீபமாக திரையுலகை நோக்கி எனது பயணம் ஆரம்பித்திருக்கிறது.

சிறு வயதில் இருந்தே இருந்து வரும் இசையின் மீதான தீராத காதல் என்னை திரைப்பாடல் எழுத கூட்டி வந்தது  என்றே சொல்ல வேண்டும். இதுவரை கிட்டத்தட்ட 12 சினிமாப்பாடல்கள் எழுதி இருக்கிறேன். ‘கண்ணாடி மழையில்’  என்ற ஆல்பத்தில் நான் எழுதிய பாடல்கள் சினிமாவுக்கு வர எண்ட்ரியாக இருந்தன. மீரா கதிரவன் தனது ‘விழித்திரு’  படத்தில் எனக்கான முதல் பாடல் எழுதும் வாய்ப்பை தந்தார்.

கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆவணப்படங்கள் இயக்கி இருக்கும் அனுபவமுள்ள நான் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்  சினிமாத் துறைக்குள் நுழைந்தேன். கவிஞர் குட்டி ரேவதியுடன் இணைந்து சில படங்களுக்கு திரைக்கதை எழுதினேன்.  தற்போது ‘தடயம்’ கதையை நாமே ஏன் படமாக்கக்கூடாது என நினைத்து அந்த படத்தை நானே இயக்கி வருகிறேன்.  எனக்கு ஒரு நல்ல குழுவும் அமைந்திருக்கிறது. இப்படி பணிபுரிவது எனர்ஜிட்டிக்காகவும், கிரியேட்டிவ்வாகவும் இருப்பது  நன்றாக இருக்கிறது'' என்று சிரித்தவரின் திரைப்படம் வெற்றிப்பெற வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.           

-ஸ்ரீதேவி மோகன்
படங்கள் :ஆர். கோபால்


படைப்புகள்


12க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள்
ஒரு கவிதைத் தொகுப்பு
கட்டுரைத் தொகுப்புகள் இரண்டு.
(‘இந்த நதி நனைவதிற்கில்லை’
அரசியல் சார்ந்த பெண்கள் பற்றியவை மற்றும் பெண்களின் வாழ்க்கையில் வெளிவராத வாழ்க்கைப் பேருண்மைகள்   பற்றியக் கட்டுரைத்தொகுப்பு.
‘முட்களின் மேல் சில பட்டாம் பூச்சிகள் ’
சமூகத்தில் நேரும் அவலங்களுக்கு எதிர் குரலாக ஒலிக்கும் மனிதர்களின் நீண்ட நெடிய பேட்டிகளின் தொகுப்பு.)

விருதுகள்

இலக்கியச் சிந்தனை விருது
பாரதி விருது.