இது தேவதை கதை அல்ல..
பெண் மைய சினிமா
சில குழந்தைகளுக்கு மட்டுமே தேவதை கதைகளை போல வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்துவிடுகிறது. பல குழந்தைகள் சிறு வயதிலிருந்தே வாழ்க்கையின் வறண்ட, கரடுமுரடான, இருண்ட பக்கங்களையே அறிந்தவர்களாக இருப்பார்கள்.வீட்டுக்குள், பள்ளியில், தெருவில் பார்க்கின்ற, கேட்கின்ற ஒவ்வொன்றும் குழந்தைகளை பாதிக்கிறது. அக்குழந்தை சூழலின் மொழியை பேசுகிறது. அதன் நடத்தைகளை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் கூடுதலாகவோ கொஞ்சமாகவோ களங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் மாசற்ற குழந்தைகளை பார்ப்பது அரிதாகிவிட்டது.
- கோர்ச்சாக்
நம் பார்வைக்குப் புலப்படாத விளிம்பு நிலை பெண்களின் வாழ்வினூடாக, சூழலும் வளர்ப்பும் குழந்தைகளின் அக உலகை எப்படி கட்டமைக்கிறது என்பதை அம்மாவுக்கும் மகளுக்கும் இடையேயான உறவின் வழியாக சித்தரிக்கிறது ‘தி ஃப்ளோரிடா ப்ராஜெக்ட்’.வெதுவெதுப்பான ஒரு கோடைகாலம். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உயர்ந்துநிற்கும் வால்ட் டிஸ்னி வேர்ல்டு தீம் பார்க். வருடத்துக்கு 5 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரியும் ஓர் உல்லாச உலகம். அதன் நிழலில் இளைப்பாறும் தங்கும் விடுதிகள். அதில் ஒன்றில் தன் அம்மா ஹேலியுடன் வசித்து வருகிறாள் மோனி.
ஆறு வயதான மோனிக்கு தந்தை யார் என்று தெரியாது. தந்தையை பற்றி அவள் வாய் திறப்பதே இல்லை. அவளின் அம்மாவிற்கு இருபத்தைந்து வயது இருக்கலாம். ‘ஒரு குழந்தைக்குத் தாய்’ என்ற எந்தப் பொறுப்பும் இல்லாமல், யாரையும் மதிக்காமல், விருப்பம்போல விட்டேத்தியாக வாழ்ந்து வருகிறாள். ஹேலியின் பாதிப்பில் வளர்கின்ற மோனி, அம்மாவைப் போலவே தன் இஷ்டத்துக்கு வேண்டியதை எல்லாம் செய்கிறாள். கடைகளில் திருடுகிறாள். சுற்றுலாப் பயணிகளிடம் அடாவடியாக நடந்துகொள்கிறாள். அவளுக்கு உறுதுணையாக ஸ்கூட்டி, டிக்கி என்ற இரு நண்பர்கள் வேறு.
ஸ்கூட்டியும் மோனியைப் போல தாயின் அரவணைப்பில் வளர்கிறான். ஸ்கூட்டியின் அம்மா ஆஸ்லே. ஹேலிக்கும், ஆஸ்லேவுக்கும் நட்பைத் தாண்டி நெருங்கிய பந்தம் இருக்கிறது. ஆஸ்லே விடுதிக்குப் பக்கத்திலிருக்கும் ஓர் உணவகத்தில் சர்வராக வேலை செய்கிறாள். அங்கேயிருந்து உணவைத் திருடி மோனியின் குடும்பத்துக்கு யாருக்கும் தெரியாமல் மறைமுகமாகக் கொடுக்கிறாள். அதுவே அவர்களின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.ஸ்கூட்டி, மோனி, டிக்கி மூவரும் சேர்ந்து ஒரு காரின் மீது எச்சிலை துப்பி விளையாடும்போது கையும் களவுமாக மாட்டிக்கொள்கிறார்கள். இந்த விஷயம் டிக்கியின் தந்தைக்குத் தெரியவர, டிக்கியை மோனியுடன் விளையாடக்கூடாது என்று தடுத்துவிடுகிறார். மோனியும், ஸ்கூட்டியும் சேர்ந்து காரை சுத்தம் செய்யும்போது அவர்களுக்கு ஜான்சி அறிமுகமாகிறாள்.
ஜான்சி பக்கத்தில் இருக்கும் இன்னொரு விடுதியில் பாட்டியுடன் தங்கியிருக்கிறாள். அவள் பிறந்தபோது அவளது அம்மாவுக்கு வயது 15. ஜான்சியை பாட்டியின் பராமரிப்பில் விட்டுவிட்டு அம்மா எங்கேயோ சென்றுவிட்டாள்.விரைவிலேயே ஜான்சியும் மோனியும் இணைபிரியாத நண்பர்களாகி விடுகிறார்கள். இருவரும் ஜாலியாக சுற்றித்திரிகிறார்கள். ஒன்றாகவே விளையாடுகிறார்கள். யாரும் அவர்களை ஏனென்று கேட்பதில்லை. ஆனால், விடுதியின் மேனேஜரான பாபி மட்டும் எல்லாவற்றையும் ஈடுபாட்டுடன் கவனித்து வருகிறார். குறிப்பாக தங்கும் விடுதியில் வசிக்கின்ற குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார். அதனால் தான் குழந்தைகள் எங்கே சுற்றித்திரிந்தாலும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் டிக்கியின் குடும்பம் விடுதியை காலி செய்துவிட்டு வேறு ஊருக்குச் செல்கிறது. மோனி, ஸ்கூட்டி, ஜான்சி என்று புதிய கூட்டணி உருவாகிறது. இந்த மூவரும் சேர்ந்து அருகிலிருக்கும் பழைய கட்டடத்துக்குச் செல்கிறார்கள். அங்கே தீப்பற்றி விளையாடும்போது அந்த கட்டடமே எரிந்துவிடுகிறது. ஆனால், ‘தங்களுக்கும் தீ பிடித்ததற்கும் எந்த சம்பந்தமுமில்லை’ என்பதுபோல மூவரும் தங்களுடைய இருப்பிடத்துக்கு வந்து ஒளிந்து கொள்கிறார்கள். இந்த விஷயம் ஆஸ்லேவுக்குத் தெரியவர, அவள் ஸ்கூட்டியை வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளே அடைத்துவைக்கிறாள். ‘மோனியுடன் சேர வேண்டாம்’ என்று தடுக்கிறாள். ஸ்கூட்டியைத் தேடி வரும் மோனியும், ஜான்சியும் ஏமாந்து போகிறார்கள். இது ஆஸ்லேவுக்கும் ஹேலிக்கும் இடையே சிறு பிளவை உண்டாக்குகிறது.
நாட்கள் நகர்கின்றன. ஹேலியால் வாடகை கொடுக்க முடிவதில்லை. மோனியும், ஹேலியும் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு வாசனை திரவியங்களை விற்பனை செய்கிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. அதனால் டிஸ்னி வேர்ல்டு நுழைவுச்சீட்டை திருடி விற்கிறார்கள். இறுதியில் வேறு வழியில்லாமல் ஹேலி பாலியல் தொழிலில் ஈடுபட ஆரம்பிக்கிறாள். இந்த விஷயம் ஆஸ்லேவுக்குத் தெரியவர, ஹேலியை அவள் முற்றிலும் வெறுத்து ஒதுக்கிவிடுகிறாள். இதைக் கேள்விப்படும் பாபி அவளை விடுதியில் இருந்து காலி செய்யச் சொல்கிறார். இன்னொரு பக்கம் மோனியை ஃப்ளோரிடோ குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்க முயற்சி நடக்கிறது.
இந்த களேபரங்களுக்கு இடையில் கடைசியாக தனது தோழி ஜான்சியை சந்திக்கச் செல்கிறாள் மோனி. அதுவரைக்கும் சேகரித்து வைத்திருந்த கண்ணீரை ஜான்சியின் முன்பு கொட்டுகிறாள். அவள் அழுவது அதுவே முதல்முறை. அப்பொழுது ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்கிற தொனியில் மோனியின் கரத்தை இறுக்கமாகப் பற்றுகிறாள் ஜான்சி. சூழலை மறந்து இருவரும் வால்ட் டிஸ்னி வேர்ல்டில் இருக்கும் மேஜிக் கிங்டம் தீம் பார்க்கை நோக்கி ஓடுவதோடு படம் நிறைவடைகிறது.
வீடற்றவர்கள், மற்ற இடங்களில் அதிக வாடகை கொடுத்து தங்க முடியாதவர்கள், சமூகத்தால் கைவிடப்பட்டவர்கள் தான் அந்த விடுதியில் மாதக்கணக்காக தங்கியிருக்கிறார்கள். அங்கே வசிப்பவர்களுக்குத் தேவையான சில உதவிகளை என்.ஜி.ஓக்கள் செய்கின்றன. அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில் இப்படியும் ஒரு சமூகம் வாழ்ந்து வருவதை ரகசியமாகவே படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சீன் பேக்கர்.
குறிப்பாக விடுதியில் தங்கியிருக்கும் பெரும்பாலான இளம் பெண்கள் காதலன்/கணவன்களை பிரிந்து வாழ்கிறார்கள். திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அந்த குழந்தைகளின் அப்பாக்கள் யார் என்று கூட நமக்குக் காட்டப்படுவதில்லை. இக்கட்டான சூழலிலும் ஒற்றை அம்மாவாக தங்களின் குழந்தையை அவர்கள் வளர்த்தெடுக்கிறார்கள். இதுமட்டுமல்ல, ஹேலியும், ஆஸ்லேயும் ஒற்றை அம்மாக்களாக இருந்தபோதிலும் அவர்கள் வாழத் தேர்ந்தெடுத்த பாதை வெவ்வேறானவை. அந்தப் பாதையே அவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஹேலியின் பாலியல் தொழில் அவளை மகளிடமிருந்து பிரிக்கிறது. வீட்டைவிட்டு துரத்தியடிக்கிறது. மகளும் பொறுப்பில்லாமல் வளர துணைபோகிறது. ஹேலியின் சூழலில் இருக்கும் ஆஸ்லே செய்கின்ற வேலையால் அவளின் வாழ்க்கை சுமுகமாகச் செல்கிறது.
தான் செய்வது சரியா? தவறா? என்று அறியாத மோனி தனது சுட்டித்தனத்தால் பார்வையாளர்களின் இதயத்தைக் கொள்ளையடிக்கிறாள். என்றென்றும் மறக்க முடியாதபடி நம் மனதுக்குள் பதிந்துவிடுகிறாள்.அம்மாவை தேடி வாடிக்கையாளர்கள் அறைக்கு வரும்போதெல்லாம் மோனி குளியலறைக்குள் அடைத்து வைக்கப்படுகிறாள். அறையில் அரங்கேறும் விஷயம் தெரியாமல் அவளின் முகத்தில் வெளிப்படுகிற குழந்தைமை நம்மை கலங்கடிக்கிறது. மோனியாக, ஹேலியாக, பாபியாக நடித்தவர்களின் நடிப்பு அசாதாரணம். டிஸ்னிவேர்ல்டுக்கு அருகில் வாழ்ந்தாலும் அதற்குள் நுழையக்கூட பணமில்லாத மனிதர்களின் இருண்ட வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்தப் படம்.
- த.சக்திவேல்
|