கோடை காலத்தையும் ரசிக்கலாம்!



“கோடை காலத்தை எப்போதுமே பொதுவான அச்சத்துடன்தான் அணுகுகிறோம். கோடை நோய்கள், உடல்  நலக்குறைவுகள் என ஒரு பட்டியலை வைத்துக்கொண்டு நாமாக நமக்குள் பயமேற்படுத்திக் கொள்கிறோம்.பருவ காலங்களையும் உடல் பராமரிப்பையும் சரியாக தெரிந்து கொண்டு கோடையை புரிந்துகொள்கையில் பயம்  தேவையில்லை. உண்மையில் கோடையும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு காலம்தான்.பிரபஞ்சமும், நமது உடலும்  அமைப்பிலும், செயல்பாட்டிலும் ஒரே தன்மையுடையதுதான். வெப்பம் உலக உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு  மட்டுமல்ல ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் அடிப்படையானதாகும். இயந்திரங்கள் ஆனாலும் உடலானாலும் வெப்ப  உருவாக்கமே செயற்பாட்டின் துவக்கம் ஆகும்.ஆக, அடிப்படையில் வெப்பம் நமது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை  என்ற அடிப்படை புரிதல் அவசியமானது'' என்கிறார் அக்குஹீலர் மருத்துவர் இல.சண்முக சுந்தரம்.

“வெப்பம் அதிகமாகையில் அதை எதிர்கொண்டு உடலை சம நிலைப்படுத்தும் சக்தி இயல்பில் உடலின் அடிப்படைத்  திறன்களில்  ஒன்று.  வியர்வை என்பது உடலை குளிர்ச்சிப்படுத்தும் இயற்கையான ஒரு செயல். ஆனால், நாம்  வியர்வையைக் கண்டு எரிச்சல் படும் மனநிலைக்கும், அதனை அருவெறுப்பான ஒரு விஷயமாக உணரும்  நிலைக்கும்தான் தள்ளப்பட்டுள்ளோம்.உடலில் வெப்பம் அதிகமாகி உடலின் சமநிலை மாறும்போது, உடல் தனக்குள்  உள்ள நீரைக்கொண்டு உடலின் வெப்பத்தையும் உடலில் உள்ள கழிவுகளையும் வியர்வை வழியாக வெளியேற்றுகிறது.  ஆக, வியர்வையை அனுமதிப்பதே கோடையை சமாளிக்கும் வழிமுறைகளில் ஒன்றுதான். அடுத்து கோடை காலத்தில்  உடலின் முக்கியத் தேவை நீரும், நீர் சார்ந்த ஆகாரங்களும்தான். அதென்ன, நீர் மற்றும் நீராகாரம்.

ஏன் இப்படி இரண்டாகப் பிரித்துச் சொல்ல வேண்டும்?முதலில் நீர் குறித்து பார்ப்போம். நீர் என்பது தாகத்தைத் தணிப்பது. அது பசியைத் தணிப்பதல்ல. ஆனால், பொதுவாக  நாம் அப்படி புரிந்துகொள்வதில்லை.சாப்பிடும் போது மட்டுமே நீர் குடிப்பவர்கள் தான் இன்று அதிகம். கோடை  காலத்தில் மட்டும் இவர்கள் மாறிவிடுவார்களா என்ன?இன்னொரு வகையினரும் உண்டு. அதாவது, தாகம் எடுக்கையில்  பாட்டில் குளிர்பானங்கள், பழரசம், மோர் என அருந்துவார்கள். அதாவது, நீருக்குப் பதிலாக நீராகாரம் அருந்துபவர்கள்.  இங்குதான் சிக்கலே எழுகிறது.நீருக்கு மாற்றாக வேறு எந்த நீராகாரத்தையும் முன் வைக்க முடியாது என்ற  அடிப்படையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தாகத்தை நீரால் மட்டுமே தணிக்க முடியும். உதடு வெடித்து நீர் எனக் கேட்கிறதே, ஏன்?
நீர் என்பது சிறுநீரகத்தின் செயற்பாட்டிற்கான அடிப்படைத் தேவை. உடலின் கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம் தனது  செயல்பாட்டிற்குத் தேவையான நீர், பற்றாக்குறையாய் இருக்கும்போது உதட்டுக்கு முதலில் தெரியப்படுத்துகிறது. தாகம்  என்ற உணர்வை நாக்கின் மூலம் உணர்த்துகிறது.தாகம் ஏற்பட்ட பின்பும் அதை உணராமல் நீரை உடலுக்குத் தராமல்   அதற்கு பதிலாக வேறு ஏதோ ஒன்றைக்கொண்டு அதனை சமன்படுத்தும் போது, நீரின் அவசர அவசியத்தை உணர்த்த  உடல் உதட்டை காயவைத்து நீர் வேண்டும் எனக்கேட்கிறது. அப்போது, பாட்டில் பானத்தைப் பருகினால் என்னாகும்?  உடலின் வெப்ப நிலை குறையுமா? தாகம் தணியுமா? சிறுநீரகம் சீரான இயக்கம் பெறுமா?கோடைகால உடல்  தொல்லைகளின் துவக்கம் இவ்விடம் தான்.

அதாவது உடலின் அதிகப்படியான வெப்பத்தை முறையாய் வெளியேற்றாததே அத்தனை விதமான வியாதிகளுக்கும்  அடிப்படையாகும். நீராகாரம்  எனப் படுபவை நீர்த்தன்மையுள்ள ஆகாரங்கள் தான். பசியையும், உடல் வெப்பத்தையும்  ஒரே நேரத்தில் தணிக்கும் இரட்டைப் பயன்பாடு இதில் உண்டு. ஆனால், இது தாகத்தைத் தணிக்காது. நீராகாரம் என்பது  நீருக்கு மாற்றல்ல. உதடு கேட்பது நீர் மட்டுமே ஆகும். பசிக்கும் நேரங்களில் நீராகாரம் எடுத்துக் கொள்ளலாம். அதே  சமயம் உடலுக்குத் தேவையான நீரையும் நாம் குடிக்க வேண்டியது மிக அவசியமான ஒரு விஷயம்.வேர்க்குரு என்பது  அதிகமான அளவில் உடலில் உள்ள வெப்பம் மற்றும் இதர கழிவுகளின் வெளியேற்றம் தான். இதுவும் இயற்கையான  ஒரு செயலே. இதில் அச்சப்படவோ அல்லது ஆரவாரிக்கவோ ஒன்றுமில்லை. தேவையான அளவு குடிநீர், நீராகாரம்,  பசி ஏற்பட்ட பின் தேவைக்கு ஏற்ப பசியின் அளவுக்கு ஏற்ப சாப்பிடுவது போன்ற பழக்கம் இருந்தால் போதும் எல்லாம்  சரியாகிவிடும்.

மற்றபடி கோடையில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தைத் தணிக்க பருத்தி உடை பொதுவான நல்ல ஆலோசனை  தான் என்றாலும் சிக்கலின் துவக்கம் கோடையின் வெப்பத்திற்கு ஏற்ப உடலின் தேவையை உணர்ந்து நீர் அருந்தாதது  தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு லிட்டர், ஆறு லிட்டர் என கணக்கிட்டு  அருந்துவதிலும் சிக்கல்கள் உண்டு. அதென்ன சிக்கல்கள் என்கிறீர்களா?எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதே  அதில் உள்ள முக்கிய அம்சமாகும்.பாட்டிலோ, செம்போ, வீடோ, பொது இடமோ இன்று நம்மில் பலரும் எப்படி தண்ணீர்  குடிக்கிறோம்?பாத்திரத்தில் எடுத்து அண்ணாந்து மேலே பார்த்து மடக் மடக்கென்று குடிக்கிறோமே, அங்குதான்  பிரச்னையே எழுகிறது.

எதற்காக தண்ணீர் குடிக்கிறோம்?தாகம் தணிக்கத் தண்ணீர் குடிக்கிறோம். ஆனால், நீர் கொடு என்று உங்களிடம் கேட்ட அந்த காய்ந்த உதட்டில் படாமல்,  நாக்கில் கூட சிறிது விநாடி நிறுத்தாமல் நேராக வயிற்றுக்கே செல்லும்படியாக மடக்கென கடக்கென சத்தம் எழுப்பிக்  குடிக்கிறோமே, இதனால் உடலுக்கு எந்த நன்மையும் இல்லையே? உதட்டில் பட்டு நனைத்து நாக்கை மூழ்கச்செய்து,  அங்கு சில விநாடிகள் நின்று உமிழ்நீரை சுரக்கச்செய்து அதனுடன் கலந்து உள்செல்கிறதே அதுதான் தாகத்தைத்  தணிப்பதாகும்.

ஆக, எப்படி அருந்துவது என்றே தெரியாமல் எப்போதெல்லாம் அருந்த வேண்டும் என்றே புரியாமல் ஐந்து லிட்டர்  குடித்தாலும் சரி அல்லது வாட்டர் பிளஸ் குடித்தாலும் சரி தாகம் தணியப்போவதில்லை எனும்போது கோடையைப்  பார்த்து பயம் வருவதும், உடல் பல தொல்லைகள் தருவதும் சகஜம் தான்.நுங்கு, கிர்ணிப்பழம், தர்பூசணி போன்ற  நீர்த்தன்மை மிகுந்த பழங்கள் கிடைக்கப் பெறும் காலம் கோடை காலம் மட்டுமே என்பது கோடையின் சிறப்பு  மட்டுமல்ல, இயற்கையின் அற்புதமும் அதுதான். கோடைக்குத் தேவையான ஒரு விஷயத்தை இயற்கையே  வழங்கியுள்ளது.

அதன் பின்னரும் கோடையை கண்டு ஏன் அச்சம்?சுட்டெரிக்கும் இந்த வெயிலும், அதிகரிக்கும் அந்த வெப்பமும் இயற்கையின் காரணத்தால் நடப்பதல்ல. இயற்கையைச்  சீரழிக்கும் மனிதன் தான் இதற்குக் காரணம்.முன்பிருந்த அதே சூரியன் தான் அதே பூமிதான் ஆனாலும் வெப்பம்  அதிகமாவதேன்?சிறு கடையாய் இருந்தாலும் சரி பிரம்மாண்டமான மால்களாக இருந்தாலும் சரி ஏசிதான் எங்கும்  இருக்கிறது. எல்லா கார்களும் இப்போது ஏசிதான். அரசு அலுவலகமாக இருந்தாலும் சரி தனியார் நிறுவனமாக  இருந்தாலும் சரி எங்கெங்கும் ஏசி தான் காணப்படுகிறது.

காரணம் கேட்டால், கோடையின் வெப்பத்தை சமாளிக்க என்று சொல்லிவிடுகிறோம். ஆனால் உண்மையில் வெப்பம்  அதிகரிக்க காரணம் எதுவெனக் கேட்டால் இந்த செயற்கை தயாரிப்புகள் தான்.கோடையை விரட்டவோ ஒதுக்கவோ  நம்மால் ஒருபோதும் இயலாது. கோடையை எப்படி சமாளிப்பதென அதிக சிரத்தை எடுக்கவும் வேண்டாம்.கோடையும் ஒரு பருவ காலமே. காலையைப் போல், இரவைப்போல், வசந்த காலம் போல், பனிக்காலம் போல்  அதுவும் ஓர் பருவகாலம் மட்டுமே. அதை மேலும் மேலும் சிக்கலாக்குவது மனிதகுலமே ஆகும். தீர்வு மிக எளிது.  கோடையை புரிதலே ஒரே தீர்வு.

- ஸ்ரீதேவி மோகன்