எவரும் அனாதை அல்ல! : ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா



இந்த தேசத்தில் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, பிழைப்பு தேடி சென்னை நோக்கி வந்தவர்கள், பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட பெற்றோர்கள், ஏதோ ஒரு காரணத்தால் வீட்டைவிட்டு  வெளியேற்றப்பட்டவர்கள் சென்னை போன்ற நகரங்களில் வீடு வாசல் இன்றி அனாதைகளாக சாலையில் திரிவதை   பார்க்க முடிகிறது. அவர்களில் சிலர் உடல் நலக்குறைவாலோ  விபத்து காரணமாகவோ குடிப்பழக்கத்தாலோ இறந்து  அனாதை பிணங்களாக கிடக்கும் பல சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லது கண்டிருப்போம்...அப்படியான அனாதை பிணங்களை தத்தெடுக்கும் தாயாக இருந்து எல்லா சடங்குகளையும் செய்து அடக்கம் செய்வதில் தன் வாழ்நாளை செலவிட்டு வரும் ஆனந்தி அம்மாவை சந்தித்தேன்.“சாதாரண‌ குடும்பத்தில் பிறந்தேன். வசதியான குடும்பத்தில் வாக்கப்பட்டேன். இருந்தபோதும் எனக்கு குழந்தை இல்லை  என்ற காரணத்தால் குடும்பத்தாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டேன்...” என்ற மெல்லிய குரலோடு  பேசத்தொடங்கினார்.

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் உசிலம்பட்டி கிராமம்தான். என்னுடைய அம்மாவிற்கு 9 பெண் குழந்தைகள், 3 ஆண் பிள்ளைகள். நான் அதில்  எட்டாவ‌து பெண்ணாகப் பிறந்தேன். அந்த காலகட்டங்களில் எங்கள் பகுதியில் பெண் சிசு கொலைகள் அதிகம்.  மனிதாபிமான அடிப்படையில் தன் பிள்ளைகளை எல்லாம்,  சமூகத்தில் சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்று  என் அம்மா நினைத்ததால் நான் இன்று உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் நானும்  கள்ளிப்பாலுக்கு இரையாகி இருப்பேன். இந்த சமுதாயத்தை எதிர்த்து எங்களை அன்பாக ஏற்றுக்கொண்டார். அதற்காக அவர் பட்ட அவமானங்கள் ஏராளம்.  அன்றைய சூழலில் குழந்தை இல்லாதவர்களையும், கணவனை இழந்தவர்களையும்  சமூகம் ஓரளவுக்கு   ஏற்றுக்கொண்டது. ஆனால் பெண் குழந்தைகளை பெற்ற பெண் ஒருவர் எதிரில் வந்தால் வீட்டிற்குள் ஓடி ஒளியும்  தீண்டாமை  எங்கள் பகுதியில் அப்போது இருந்தது. இதை எல்லாம் எதிர்த்துதான் எங்களை வளர்த்தனர் எனது  பெற்றோர்கள்.

என்னுடைய அப்பா என்னிடம் அடிக்கடி காமராஜர் பற்றியே அதிகம் பேசுவார். இன்னொரு காமராஜர் இந்த சமூகத்தில்  உருவாக முடியாது என்பார். நான் அப்போது திருமணத்திற்கு பிறகு என்னுடைய பிள்ளையை காமராஜர் போல் வளர்க்க  வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பேன். என்னுடைய 16 வயதில் வசதியான ஒரு குடும்பத்தில் சென்னையில்  திருமணம் செய்து கொடுத்தனர். ஒவ்வொரு நாளும் ‘எனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும், அந்த குழந்தையை  காமராஜர் போல் வளர்க்க வேண்டும்’ என்கிற எண்ண‌ம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. திருமணம் ஆகி 10 ஆண்டுகள்  ஆகியும்  குழந்தை பிறக்கவில்லை. இதற்காக பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று தோல்வி அடைந்தேன். ஒரு  கட்டத்தில் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

அதிலும் எனக்கு தோல்விதான். அந்த  நேரத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் திருச்சியை சேர்ந்த வயதான பெண் ஒருவர் தெரு ஓரத்தில் தங்கி இருந்தார். அவர்  தன்னுடைய பிள்ளைகளால் விரட்டி அடிக்கப்பட்டு இங்கு மக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து  வந்தார். ஒருநாள் நோய்வாய்ப்பட்டு அவர் இறந்து போனார். எனக்கு மிகவும் வருத்தம் அவருடைய முகவரி எங்களுக்கு  தெரியாது. தினமும் நாம் கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு அங்கேயும் இங்கேயுமாக அமர்ந்துகொண்டிருந்தவர்  இன்று இல்லை என்பது வெகுவாக பாதித்தது. அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்து அங்கு இருந்த இளைஞர்கள் சிலரிடம் பணம் கொடுத்து அவரை கொண்டு  செல்லும்படி சொன்னேன்.

அதன் பிறகு 1991ம் ஆண்டில்  வீட்டிற்கு தெரியாமல் கோயிலுக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு முதியோர்  இல்லங்களுக்கு சென்று அங்கு இருக்கும் முதியவர்களை முடிவெட்டி, சவரம் செய்து, அவர்களை குளிப்பாட்டி  விடுவேன். என்னுடைய கைப்பையில் ஷாம்பூ, சோப்பு, முடி வெட்டும் கத்தரிக்கோல், நகவெட்டி வைத்துக்கொண்டு  சுற்றித் திரிந்த காலம். என்னைப் பார்த்ததும் ‘ஆனந்தி அம்மா வந்தாச்சு’ என்று உற்சாகமடைந்து விடுவார்கள். வெறும்  ஆனந்தியாக இருந்த நான் அப்போதிலிருந்து ஆனந்தி அம்மாவாக மாறினேன். அவர்கள் என்னை அப்படி அழைக்கும்  போது நான் தாயானதாகவே உணர்ந்தேன். 2000ம் ஆண்டு வரை நான் அந்தப் பணிகளைதான் செய்துகொண்டிருந்தேன்”  என்று பேசிக்கொண்டிருந்தவருக்கு ஒரு போன் கால் வந்தது. ‘நான்கு அனாதை பிணங்களை அடக்கம் செய்ய  வேண்டும். அதை முடித்து விட்டு நாம் பேசுவோம்’ என்றார். அவர் செய்யும் பணிகளை காண அவரை  பின்தொடர்ந்தோம்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் போகும் வழியிலே மீ்ண்டும் பேசத்துவங்கினார். “இப்படித்தான் தினமும் பல  போன் கால்கள் வரும். நாளொன்றுக்கு 10 பிணங்களைக்  கூட அடக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இன்று  நான்கு பிணங்கள் இருப்பதாக என்னை அழைத்துள்ளனர். எந்த இடத்தில் அனாதை பிணங்கள் இருந்தாலும் மக்கள்  என்னை தொடர்பு கொண்டு செய்தியைக் கூறுவார்கள். நான் அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுப்பேன். அவர்கள்  மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவர்களை பற்றிய தகவல் ஏதேனும் கிடைக்குமா என்று காவல் துறை  விசாரணை நடத்துவார்கள். அதிகபட்சம் 1 வாரம் அந்தப் பிணம் பிணவறையில் வைக்கப்பட்டு விசாரணை முடிந்ததும்  என்னை அழைப்பார்கள். நான் சடலத்தைப் பெற்று முறைப்படி அடக்கம் செய்வேன். போதிய பொருளாதார வசதி  இல்லாததால் அவ்வப்போது சிரமம் ஏற்படும். பொருளாதார சிக்கல் இல்லை என்றால் நான் தடையில்லாமல் நாள்  முழுவதும் இந்த வேலையை செய்து கொண்டிருப்பேன்.

இந்த வேலையில் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன். நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை சில  பிள்ளைகள் தவறான முகவரியை கொடுத்துவிட்டு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சென்று விடுகிறார்கள். அந்த சடலங்களை நான் அடக்கம் செய்திருக்கிறேன். குடிபோதையால் மதுக் கடைகளுக்கு எதிரே இறந்து கிடந்தவர்களை எடுத்து அடக்கம் செய்திருக்கிறேன். தற்கொலை செய்து  கொண்டவர்களின் சடலமும் வரும். இப்படியாக தினமும் பல பிணங்களைப் பார்த்தாயிற்று.  மனித நேயம் என்பது  இந்த சமூகத்தில் எப்படி இருக்கிறது என்று யோசித்து பார்க்கிறேன்” என்றார். அரசு மருத்துவமனையின் பிணவறைக்குச் சென்றோம்.  அங்கு சில காவல்துறையினரும், பணியாளர்களும் ‘ஆனந்தி  அம்மாள் வந்துவிட்டார்’ என்று பணிவோடு வரவேற்றனர். அங்கு இருந்த நான்கு சடலங்களையும் அமரர் ஊர்தியில்  ஏற்றிக்கொண்டு ஒரு பூக்கடையை நோக்கி புறப்பட்டார். அந்த சடலங்களுக்கு மாலை, இன்னும் பல சடங்குகள்  செய்ய  தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு கல்லறைக்கு சென்றார். அங்கு இடுகாட்டு பணியாளர்கள் ஏற்கனவே  குழிதோண்டி வைத்திருந்தனர். இடுகாட்டு அதிகாரியை சந்தித்து இறந்தவர்களின் இறப்பு சான்றிதழை கொடுத்து அனுமதி  வாங்கிக்கொண்டார்.

“அனாதை பிணங்களை அடக்கம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.  மருத்துவமனை, காவல் துறையினர், அரசு அதிகாரிகள் என அனைவரின் பங்களிப்பும் தேவை. இல்லையென்றால் இதை  செய்ய முடியாது. இவர்களின் பார்வைக்கு அப்பால் செய்வது சட்டப்படி குற்றம். நான் இந்த விஷயத்தில் மிக கவனமாக  செயல்படுகிறேன்” என்றவர் இடுகாட்டு பணியாளர்களோடு இணைந்து சடலங்களை குழிதோண்டிய இடத்திற்கு கொண்டு சென்றார். அவர்களுக்காக வாங்கி வந்த சடங்கு பொருட்களைக் கொண்டு அவர்களுக்கு மூன்று விதமான  சடங்குகளை செய்தார். “இறந்தவர் எந்த மதமென்று தெரியாது. அவருடைய குடும்ப உறுப்பினர் இருந்தால்  என்னவெல்லாம் செய்வார்களோ அதை நான் செய்கிறேன். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ முறைப்படி சடங்கு செய்தேன்.  இது எனக்கு மன நிறைவை தருகிறது. இந்த பணிக்காக என்னை அர்ப்பணிப்பதில் எனக்கு உள்ளபடியே ஆத்மதிருப்தி. ஒருவர் அனாதையாக இந்த உலகத்தைவிட்டு போகவில்லை  என்கிற ஆறுதல்   கிடைக்கிறது” என்றவர் அனைத்து காரியங்களையும் அவர் முடித்த பின் மீண்டும் அவரது  அலுவலகம் நோக்கி பயணித்தோம்.

“ நான் முதியோர் இல்லங்களுக்கு சென்று பணிவிடை செய்து கொண்டிருந்த விஷயம் வீட்டிற்கு தெரியவந்ததால்  பெரும் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு மலடியை இனியும் எங்கள் வீட்டில் வைத்துக்கொள்ள முடியாது என்று கணவர்  வீட்டினரால் வெளியேற்றப்பட்டேன். சென்னையில் இருந்து அம்மா வீட்டிற்கு சென்ற எனக்கு பெரிய அதிர்ச்சி  காத்திருந்தது. என்னுடைய குடும்பத்தாரும் நீ வீட்டில் இருப்பது நல்லது அல்ல என்று அவர்கள் வழியனுப்பிய இடம்  அனாதை விடுதி. நான் மீண்டும் சென்னைக்கு வந்தேன். அப்போதுதான் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்த அந்தோணி  ஐயாவின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர் இந்த பகுதியில் அனாதை பிணங்களை கண்டெடுத்து அடக்கம் செய்யும்  வேலையை செய்து வந்தார். நான் இன்று இந்த  பணியை செய்வதற்கும் அவர்தான் காரணம். அவரோடு இனைந்து  நானும் சமூகப் பணியில் ஈடுபட்டேன். இருவரும் சேர்ந்து ‘காக்கும் கைகள்’ அறக்கட்டளையை உருவாக்கினோம்.  இப்போது அவர் நம்மிடையே இல்லை.  இந்த அற‌க்கட்டளையை இப்போது நான் நடத்தி வருகிறேன்.  

அற‌க்கட்டளை மூலம் கண்பார்வை அற்ற பெண்பிள்ளைகளுக்கு கல்வி கண் கொடுக்க வேண்டும் என்று படிக்கவைத்து  வருகிறேன். இது வரை 48 பிள்ளைகளை மேற்படிப்பு படிக்க வைத்திருக்கிறேன். இந்த சமூக‌ம் புறக்கணிக்கும் நபர்களை  கையில் எடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். நான் புறக்கணிக்கப்பட்டு வெளியில் வந்த  போது எவ்வளவு மன வேதனை அடைந்தேனோ அந்தக் கொடுமையை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதுதான்  என்னுடைய நோக்கமாக இருக்கிறது. இவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய உண்டியல் செய்து மக்களை சந்தித்து  அவர்கள் கொடுக்கும் பணத்தில் உதவி செய்து வருகிறேன். மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தேன். மதுவால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள்  அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த சமூகத்தில் மனித நேயம் என்பது மிகக்குறைவாக இருக்கிறது. பெற்றோர்கள்  தன் பிள்ளைகளை மனிதநேயத்தோடு வளர்க்க வேண்டும். மனித நேயம் இருந்தால் அனாதை பிணங்கள் வருவதற்கு  வாய்ப்பு இருக்காது என்று நான் நம்புகிறேன்.  ஒரு பெண் வேலைக்கு சென்ற கணவரை ஒரு வாரமாக காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.

காவல் நிலையத்தில் ஒரு பட்டியலை எடுத்து இந்த படத்தில் உங்கள் கணவர் இருக்கிறாரா என்று பாருங்கள்  என்கிறார்கள். அதில் அவருடைய கணவர் புகைப்படம்  இருக்கிறது. அவர் இறந்து விட்டார்  என்று காவலர்கள்  சொல்கிறார்கள். உடலை நீண்ட நாட்கள் வைத்திருந்து யாரும் வராத காரணத்தால் அடக்கம் செய்துவிட்டோம் என்றனர். அந்த பெண் மனமுடைந்து அவரை புதைத்த இடத்தை நான் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார். காவலர்கள் இடுகாட்டிற்கு அழைத்து  வருகின்றனர். அன்று நான் ஒரு பிணத்தை அடக்கம் செய்து கொண்டிருந்தேன். அதை பார்த்த அந்தப் பெண் “என்  கணவர் இறந்து விட்டார்.

அவரை அனாதை பிணமாக கொண்டு வந்து புதைத்திருப்பார்கள் என்று நான் மிகவும்  கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். அவருக்கு ஒரு தாயாக இருந்து எல்லாம் செய்து இருக்கிறீர்கள்” என்று என்  கைகளை பிடித்து அந்த பெண் அழுதாள். இன்னமும் என்னால் அந்த நினைவில்  இருந்து மீள முடியவில்லை.  அப்போது தான் நான் ஒரு மகத்தான பணியை செய்கிறேன் என்று எனக்கு தெரிந்தது. என்னுடைய இத்தனை  ஆண்டுகளில் 3500க்கும் மேற்பட்ட சடலங்களை எடுத்து புதைத்திருப்பேன்.  அனைத்து அனுபவங்களையும் புத்தகமாக  பதிவு செய்ய விரும்புகிறேன். என்னுடைய அன்றாட அனுபவங்களுக்கு நான் எழுத்து வடிவம் கொடுக்க விரும்புகிறேன்.  அது அடுத்த தலைமுறைகளுக்கு மனித நேயத்தை உருவாக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் மனித நேயத்தோடு  வாழ வழி செய்வதுதான் இந்த சமூகம் செய்யவேண்டிய முதல் கடமை” என்று முடித்தார்.

- ஜெ.சதீஷ்
படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்