யூரோகைனகாலஜி தெரியுமா ?



-லஷ்மி

அடிக்கடி இப்போதெல்லாம் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ சிகிச்சைகள் குறித்த கட்டுரைகளை வாசிக்கும்போதோ மருத்துவர்களிடம் பேசும்போதோ யூரோகைனகாலஜி என்கிற சொல்லை பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். அதென்ன யூரோகைனகாலஜி. இது குறித்து மேலும் விளக்கங்களை அறிய அப்பல்லோ மருத்துவமனையில் ரோபாட்டிக் சர்ஜரி மற்றும் யூரோகைனகாலஜிஸ்டாக பணியாற்றும் டாக்டர் மீரா ராகவன் அளிக்கும் விளக்கம்.

யூரோகைனகாலஜி என்றால் என்ன?
பெண்களுக்கென்றே பிரத்யேகமாக வரக்கூடிய சிறுநீர்த்தொற்று (infection), கற்கள், சிறுநீர்க் கசிவு (incontinence), சிறுநீர்ப்பை மற்றும் கர்ப்பப்பை இறங்குதல் (prostate), இறுதி மாதவிடாய் காலங்களில், அதாவது மெனோபாஸ் சமயத்தில் ஏற்படக்கூடிய பிறப்புறுப்பு உபாதைகளுக்கு சிறப்பு சிகிச்சை முறை அளிப்பதே யூரோகைனகாலஜி.

எந்த மாதிரியான உபாதைகளுக்கு யூரோகைனகாலஜிஸ்டை சந்திக்க வேண்டும்?
பெரும்பாலான பெண்கள் தனக்கு ஏற்பட்டுள்ள பிறப்புறுப்பு சுகாதாரச் சீர்கேடு மற்றும் சிறுநீர்க் கசிவு உபாதைகள் போன்ற அந்தரங்க உறுப்பு தொடர்பான குறைபாடுகளை வெளிப்படையாக சொல்வதை தவிர்க்கின்றனர். ஒருவித தயக்கம், நமது குடும்ப அமைப்பு முறை மற்றும் வயதான பெண்களுக்கு உடல் ரீதியாக இது இயல்பான மாற்றம்தான் என்கிற தவறான கருத்து போன்றவை காரணமாக உள்ளது. இத்தகைய உடல்நல சீர்கேட்டைப் பகிர்ந்து கொள்ள நினைத்தாலும், யாரிடம் எங்கே ஆலோசனை பெற வேண்டும் என்ற குழப்ப நிலையும் உண்டாகிறது. இதற்கு தீர்வு காண நினைக்கும் பெண்கள் யூரோகைனகாலஜிஸ்டை அணுகினால் நல்லது.

ரோபாட்டிக் சர்ஜரி என்றால் என்ன? இதைச் செய்வதால் ஏற்படும் நன்மைகள்?
ரோபாட்டிக் சர்ஜரி என்பது அறுவை சிகிச்சையின் அடுத்தகட்ட முன்னேற்றம். நுண்துளை அறுவை சிகிச்சை (minimally invasive surgery or micro surgery) என்பது லேப்ராஸ்கோப்பி சிகிச்சைக்கு நிகராகவும் அதைவிட ஒருபடி மேலாகவும் இருக்கும். சென்னையில் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை வசதி உள்ளது.

யூரோகைனகாலஜி அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, வயிற்றின் ஆழ் மற்றும் அடிப் பகுதிகளில் ஏற்படும் கட்டிகள், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு இந்த ரோபாட்டிக் அறுவை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமான அறுவை சிகிச்சை முறையை விட ரோபாட்டிக் அறுவை சிகிச்சையில் வலி குறைவாகவும், சிகிச்சைக்குப் பின் ஏற்படும் விளைவுகள் குறைவாகவும், உடல் நலம் தேறி வர குறைவான காலமும் எடுப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.