ஓங்கி ஒலிக்கும் குரல் தேவசேனா



-மகேஸ்வரி

நாயகனின் பிம்பத்தை முன்னிறுத்தும் படம் என்றாலும் பெண்களை வீரத்துடனும் விவேகத்துடனும் சித்தரித்ததில் பாகுபலி-2  முதல் பாகத்திலிருந்து வேறுபட்டுள்ளது. அனுஷ்காவின் பாத்திரம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரி எனலாம். அமரேந்த பாகுபலியின் மகிழ்மதியும், தேவசேனாவின் குந்தள நாடும் காட்சிகளில் பிரமாண்டம் காட்டுகின்றன. நாயகன் பிரபாஸ் நாயகி அனுஷ்காவை சந்திக்கும் அந்த முதல் பார்வை வீரம் நிறைந்தது.

நாயகியின் பிம்பம் என்பது இங்கு அழகு சார்ந்ததாக மட்டுமல்லாமல் வீரம் நிறைந்ததாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. வசனங்களை பொளேர் என பொட்டில் அடித்தாற்போல் எழுதியிருக்கும் மதன் கார்க்கியின் வசனங்கள் படம் முழுவதும் பெண்ணின் சுயமரியாதையை தூக்கிப் பிடிக்கின்றன. பாகுபலியின் அழகிய கலை கம்பீரம் தேவசேனாதான்.

அழகு, அறிவோடு, துணிச்சலை வெளிப்படுத்தும் நாயகியாக படம் முழுவதும் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார் அனுஷ்கா. மகிழ்மதியில் தனக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்களை அனுஷ்கா எதிர்கொள்ளும் விதம் அந்தப் பாத்திரத்தின் மீது மதிப்பைக் கூட்டுகிறது.

“பொன், பொருள் கொடுத்து அடைவதற்கு நான் ஒன்றும் பொருள் அல்ல, பெண்’’ என நெஞ்சை நிமிர்த்தி கம்பீரம் காட்டுவது, மகிழ்மதி சாம்ராஜ்ய ராஜமாதா சிவகாமி தேவிக்கு, குந்தளதேச யுவராணி தேவசேனை எழுதுவது என, ராஜமாதா சிவகாமிக்கு பதில் அனுப்பி சவால் விடுவது, “உமது வீரத்திற்கு கட்டுப்பட்டு உங்கள் பணிப்பெண்ணாக வேண்டும் என்றாலும் வருவேன், காதலை காரணமாக்கி என்னால் கைதியாக ஒரு அடிகூட வைக்க முடியாது” என தன்மானத்துடன் தீர்க்கம் காட்டுவதும்... “சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பம் என்னவென்பதை தெரிந்துகொள்ளாமல் அவள் வாழ்க்கையை தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை, உங்களுக்கும் இல்லை’’ என சீறி நிற்பது, “கயவன் ஒருவனின் குற்றத்தைக் காட்டிலும், நல்லவன் ஒருவனின் மௌனம் கொடியது என உங்களுக்குத் தெரியாதா’’ என கோபத்தை வெளிப்படுத்துவது, “வானை முட்டும் கோட்டைகளில், மலையென நிற்கும் சிற்பங்களில் அளப்பது புகழல்ல.

பறந்து விரிந்த மனங்களில் அளப்பதே புகழ்” என பதட்டமின்றி பேசுவது, அரண்மனை விசாரணையில் கம்பீரமாய் நின்று “பெண்களை தடவினான் விரல்களை வெட்டினேன்” எனவும் “நீங்கள் நியாயம் தவறுகிறீர்கள் ராஜமாதா” என்று எச்சரிப்பதும் என வீரதீரம் காட்டி விழிகள் விரிய வியக்க வைக்கிறது தேவசேனாவின் பாத்திரம். அனுஷ்கா தன் அழகாலும் கம்பீரத்தாலும் அப்பாத்திரத்தை கச்சிதமாக்கியிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணனுக்கும் அனுஷ்காவுக்கும் தரப்பட்டுள்ள முக்கியத்துவமும், அவர்களிருவருக்குமான வசனங்களும் அனைவரையும் கடைசிவரை படத்தோடு ஒன்ற வைக்கிறது. எவ்வளவு பெரிய இளவரசியாக இருந்தாலும், அவள் வீரத்திலும் அறிவிலும் சிறந்தவளாக இருந்தாலும் ஒரு காட்சியிலாவது சற்று கவர்ச்சியை நுழைத்தால்தான் இயக்குனர்களுக்கு திருப்தி வரும். படத்தின் இறுதிவரை யுவராணி தேவசேனாவை அழகோடு அறிவும், சுயமரியாதையுடன் கூடிய வீரமும், துடிப்பும் ஆற்றலும் மிக்க பெண்ணாகக் காட்டியதில் இயக்குனர் பெண்கள் மனதில் நிற்கிறார்.

தேவசேனாவும் பாகுபலியும் வேட்டைக்குப் போகும் காட்சியில் கீழே விழப்போகும் தேவசேனாவை பாகுபலி அவளின் இடையை பிடித்து கீழே விழாமல் தடுக்கிறான். நாம் காலங்காலமாகப் பார்த்துவந்த சினிமாக்களில் அந்த இடத்தில் உடனே பெண் காதல் வசப்படுவதாகவே காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அக்காட்சியில் தேவசேனா பாகுபலியிடம் கேட்கிறாள், “இக்கைகள் ஒரு வீரனின் கைகள். வீரனின் கைகள் எப்படி இருக்கும் சாமான்யனின் கைகள் எப்படியிருக்குமென நானறிவேன். நீ யார்?” என்கிறாள். இந்தக் காட்சி வசீகரிக்கிறது.

சிவகாமி தேவசேனாவை பெண் கேட்டது பல்வாள் தேவனுக்காகத்தான் என்பதை அறிந்து சினங்கொள்ளும் பாகுபலி, “என் மனதில் என்ன இருக்கிறது எனத் தெரியாமல் எப்படி பல்வாள்தேவனுக்கு வாக்களிக்கலாம்?” என்று பாகுபலி கேட்பான் என்று எதிர்பார்க்கையில் அவனோ “ஒரு பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நீங்கள் வாக்களித்தது தவறு” என்கிறான்.

நாயக பிம்பத் திரைப்படம்தான் இது என்றாலும் இப்படியொரு வசனத்தை நாயகன் பேசுவது இனிய அதிர்ச்சிதான். மொத்தத்தில் பாகுபலி-1ல் பெண்களை காட்டிய விதத்தால் விமர்சனத்துக்குள்ளான இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இந்த முறை அதை சரி செய்திருக்கிறார்.