ஃபயர் ஆஃப் பாகுபலி-2



-மகேஸ்வரி

நவீன தொழில்நுட்பம் பாகுபலி-2ல் வழங்கி இருக்கும் பரவசமூட்டும் காட்சிகள் ஏராளம். படைப்பாளனுக்குள் இருக்கும் கற்பனையினை தொழில்நுட்பத்தின் உதவியோடு, காட்சிகளை மிகப் பிரமாண்டப்படுத்தி, பார்ப்பவர்களை பரவசமூட்டியிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. ரம்யா கிருஷ்ணனுக்கும் அனுஷ்காவுக்கும் தரப்பட்டுள்ள முக்கியத்துவமும், அவர்கள் இருவருக்குமான வசனங்களும் அனைவரையும் கடைசிவரை படத்தோடு ஒன்ற வைக்கிறது.

பல வழிகளில் சினிமா ரசிகர்களின் பேசுபொருளாகிவிட்ட பாகுபலி பெண்களின் லேட்டஸ்ட் டிரெண்ட் ஆகிவிட்டது. பாகுபலி சேலை, பாகுபலி நகைகள் என இணையதளங்களில் வலம் வருகின்றன. ஏற்கனவே பாகுபலி சேலை ஒன்று சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. பாகுபலி படத்தில் பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் சேர்ந்து வில்-அம்புடன் கூடிய சண்டைக் காட்சியில் கலக்கி இருப்பார்கள்.

வில்லில் இருந்து அம்புவை எய்வதற்கு பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் தயாராகும் அந்த ஸ்டில் மிகவும் பிரபலமாகிவிட்டது. இவர்களின் படம் பொறித்த பாகுபலி சேலைகள் விற்பனைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சேலைகளை வாங்க பெண்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாகியுள்ளது. பெண்கள் சிலர் பாகுபலி படத்தில் வரும் காட்சிகள் பதித்த சேலையுடன் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கின்றனர்..

பாகுபலி-2 படத்திற்கு அணிகலன்களை செய்து கொடுத்த ஹைதராபாத்தில் இயங்கும் ஜூவல்லரி ஒன்று பெண்களின் விருப்பம் அறிந்து, தற்போது பாகுபலி நகைகளை பிரமிக்கத்தக்க வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 1500 வகையான நகைகளில், 1000 வகை நகைகள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நகைகள் அனைத்தும் கைகளால் உருவாக்கப்பட்டவை. தங்க முலாம் பூசப்பட்ட சில்வர் மெட்டலில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ரூபாய் 600 ல் இருந்து 58,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பாகுபலி-2 திரைப்படம் இந்திய சினிமா பார்த்திராத ஒரு வியாபாரம் என திரை உலகத்தினரால் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் 45 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 127 கோடியும், கேரளாவில் 10.5 கோடி, கர்நாடகாவில் 36 கோடி, வெளிநாடுகளில் 45 கோடியும், சேட்டிலைட் உரிமத்திற்கென தமிழ், தெலுங்கு, கர்நாடகம், ஹிந்தி எனச் சேர்த்து 90 கோடி, ஹிந்தி சேட்டிலைட் 56 கோடி என மொத்தம் 444 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் 6500 திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் 2500 திரை அரங்குகளிலும் என உலகம் முழுவதும் மொத்தம் 9000 திரை அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாகுபலி-2 படம் இந்தியாவில் வெளியான முதல் 3 நாட்களில் 415 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 125 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. வெளியான ஒரே வாரத்தில் 1000 கோடி ரூபாயினை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.