ட்ரக்கிங் போகலாமா?



-பி.கமலா தவநிதி

பரபரப்பான மாசுபட்ட சூழல். கிரீன் சிக்னல் விழுந்ததும் ரேஸுக்குப் போவது போல விரைந்து ஓடும் மக்கள். பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லை. என்றாலும் எந்திர வாழ்க்கையில் கொஞ்சமும் இடைவெளியே இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும் சென்னை வாசிகள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். டே அண்ட் நைட் ஷிஃப்ட் என இயற்கைக்கு மாறாக வேலை பார்க்கும் அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது குறைவே.

இந்த மக்கள் தங்களின் ஃபிட்னெஸ்ஸை எந்த அளவிற்கு பேணி வருகிறார்கள் என்று முதலில் அவர்களுக்கு உணர்த்தவே ஒவ்வொரு மாதமும் சென்னை ட்ரக்கிங் கிளப், ஃபிட்னெஸ் டெஸ்ட் ஒன்றை நடத்தி வருகிறது. “இது நாங்கள் நடத்தும் ஃபிட்னெஸ் டெஸ்ட் என்று சொல்வதை விட இதில் பங்குபெற வருபவர்கள் தங்களுக்கு தாங்களாகவே நடத்தும் சுய பரிசோதனை என்றுதான் சொல்ல வேண்டும்” என்கிறார்கள் சென்னை ட்ரக்கிங் கிளப் உறுப்பினர்களான நிலேஷ் மற்றும் ராஜசேகர்.

நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கிவரும் சென்னை ட்ரக்கிங் கிளப் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். ‘‘மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். இதற்காக நாங்கள் தினமும் காலையிலும், வாராவாரம் விடுமுறை நாட்களில் பல வெளிப்புற விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வுகளை நிகழ்த்தி வருகிறோம்” என்கிறார்கள்.

கடந்த 9 வருடங்களாக தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது இந்த சென்னை ட்ரக்கிங் கிளப். ”மக்களை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஊக்குவிப்பதே எங்கள் மோட்டோ. அதற்காக நாங்கள் பல சுவாரசியமான விஷயங்களாக ட்ரக்கிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஓடுதல், புகைப்பட மற்றும் கல்வி பட்டறைகள் நடத்திவருகிறோம். உதவிகளும் செய்திருக்கிறோம். இதில் குழந்தைகள், பெண்கள் மற்றும் குடும்பமாக கலந்துகொள்ளும் பயிற்சிகளும் உண்டு.

ஈஸி, மாடரேட், டிஃபிகல்ட் என பல்வகை ட்ரக்கிங் உண்டு. இதற்காக நாங்கள் எந்த வித கட்டணமும் வசூலிப்பதில்லை. எங்களை பொறுத்தவரை அனைவரும் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இது போன்ற விஷயங்களில் ஒவ்வொரு முறையும் நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்துகொள்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் தொடர்ந்து தவறாது கலந்து கொள்பவர்களும் உண்டு.

இவை உடலுக்கு பயிற்சியாகவும் இருக்கும், நம்மால் இயன்ற வரை சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவியது போலும் இருக்கும். இதை உணர்ந்து பலரும் ஆர்வமாக வருகிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நாங்கள் புதுப் புது சுவாரஸ்யங்களையும், சவால்களையும் அவர்களுக்கு அளித்துக்கொண்டே இருக்கிறோம் என்று மனநிறைவுடன நெகிழ்ந்தவர்கள், நாங்கள் நடத்திய அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்று இன்று எங்கள் ஒரு உறுப்பினராக மாறியவர் பிரஷாந்தி.

தற்போது அவர் தன சொந்த முயற்சியில் இமயமலை வரை தனித்தே சென்றுள்ளார் என்பது எங்களுக்கு பெருமையான ஒன்று” என்கிறார். இதுபற்றி நாம் பிரஷாந்தியிடம் பேசியபோது... ‘‘காலேஜ் முடிச்சிட்டு வேலைக்காக சென்னை வந்த புதுசு. கார்ப்பரேட் என்பதால் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள்ல ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பீச், சினிமா, ஊருக்குனு கிளம்பி போய்டுவாங்க.

கொஞ்ச நாள் நானும் இப்படித்தான் இருந்தேன். ஆனா எனக்கு ஏத்தது இது இல்லன்ற நெனப்பு இருந்துட்டே இருக்கும். அப்புறம் தான் சென்னை ட்ரக்கிங் கிளப்ல சேர்ந்தேன். என் லைஃப்பே மாறிடுச்சு. 2012ல் ஆரம்பிச்சேன். இப்போ வரை 80 க்கும் மேற்பட்ட ட்ரக்கிங் முடித்து விட்டேன். ஒவ்வொரு மாதமும் 2 ட்ரக் போய்டுவேன். அதேபோல் வருடம் ஒருமுறை இமயமலை போவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

இதுவரை நக்லா, மூணார், போடி, கொடைக்கானல், நகரி, குமரா, பர்வதா, குதுரேமுக், அதும்பே, ஜோக் ஃபால்ஸ் போன்ற மலைகளில் ட்ரக் செய்துவிட்டேன். முதன்முதலில் சென்னை ட்ரக்கிங் கிளப்போடு இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டேன். மிகவும் மனநிறைவாக இருந்தது. அங்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ஏதோ நாட்டையே சுத்தம் செய்துவிட்டது போல் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.

புதிய நம்பிக்கை பிறந்தது. அதன் பிறகு எந்தக் கடற்கரைக்கு சென்றாலும், ஆங்காங்கு குப்பைகள் கிடந்தால் அவற்றை எடுத்து அதற்குரிய இடத்தில் போடுவது வழக்கம். கடற்கரைகளில் கிடைப்பதை சாப்பிட்டு குப்பைகள் போடுவதை நான் தவிர்த்து விட்டேன். என் நண்பர்களுக்கு இதனை வலியுறுத்துவேன். அப்படியான விழிப்புணர்வையும், சமூக பொறுப்பையும் மனதில் விதைத்தது சென்னை ட்ரக்கிங் கிளப் தான்.

பிறகு அடுத்தடுத்து எங்கு கூட்டி சென்றாலும் தவறாமல் போய்விடுவேன். மாதம் ஒருமுறை பிட்னெஸ் டெஸ்ட் நடக்கும். அதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் கலந்து கொள்வார்கள். குடும்பமாக கலந்து கொள்பவர்களும் உண்டு. அப்படி விளையாட்டு தனமாக ஆரம்பித்தது தான் இந்த ட்ரக். அதிலே நம்மை கணித்து விடுவார்கள்.

அதில் தேர்வாகி விட்டால் அடுத்தடுத்த ட்ரக்கிற்கு அழைத்து செல்வார்கள். ட்ரக் மூன்று நிலையில் நடக்கும். ஈஸி, மாடரேட், டிஃபிகல்ட். தேர்வானவர்கள் அடுத்த நிலைக்குச் செல்லலாம். அப்படி சென்றது தான் என் வாழ்வில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. நிறைய புதுப் புது விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு பயணமும் நமக்கு பல பசுமையான ஞாபகங்களை தரும்.

இந்த வருடம், இமயமலை மற்றும் லே லடாக் சென்று மௌண்டைன் சைக்கிளிங் செய்தேன். மறக்கமுடியாத நாட்கள் அவை. மௌண்டைன் ரைடிங் பைக் வாங்கியதுதான் நான் சேர்த்த ஒரே சொத்து. வாங்கும் சம்பளத்தை சேர்த்து வைக்குறதும், இப்படியாக புதுமையான இடங்களை தேடி செல்வதும் தான் எனக்கான நிம்மதியையும், மனநிறைவையும் தருகிறது.

பயணங்கள் எனக்கு நிறைய கற்றுத்தந்திருக்கின்றன. லே மற்றும் இமாலயா சென்று வந்தேன் என்று சொன்னால், நிறைய செலவாகுமே என்று கேட்பார்கள். ஆனால் இல்லை. நான் பெரிய ஹோட்டல்களில் தங்கியது கிடையாது. அங்கு அவ்வப்போது இளைப்பாற டென்ட் போட்டுக்கொள்வேன். அங்கு கிடைப்பதை சாப்பிட்டு கொள்வேன். தொடர்ச்சியாக ட்ரக் போவதால் என் உடலில் நல்ல எதிர்ப்பு சக்தி வந்து விட்டதை போல் உணர்கிறேன். எந்த ஊரிலும் எப்படியான உணவும், நீரும் எனக்கு எந்த பாதிப்பும் செய்ததில்லை.

நண்பர்களுடன் சேர்ந்து தினமும் காலையில் 5 மணி முதல் 7 மணிவரை ரன்னிங் செல்வேன். தினமும் 10 கிலோமீட்டர் ஓடுவேன். வாரம் 3 நாள் ரன்னிங், 2 நாள் ஸ்விம்மிங், மீதி நாட்களில் சைக்கிளிங் என்று அட்டவணை போட்டு ஃபிட்னெஸ் மெயின்டன் செய்கிறேன். 60 கிலோமீட்டர் சைக்கிளிங் செய்வேன். விடுமுறை நாட்களில் 25 முதல் 30 கிலோமீட்டர் வரை ட்ரக் செய்வேன்.

இதுவரை கூர்க், இடுக்கி, ஜவ்வாது, கல்ராயன், கொடைக்கானல், மூணார் போன்ற மலைகளில் சைக்கிளிங் செய்தது உண்டு. சென்னை ட்ரக்கிங் கிளப் நிறுவனர் பீட்டர் சார்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அவர் 100 கிலோமீட்டர் ஓடுவார், கடுமையான வொர்க்கவுட் செய்வார்” என்று கூறியவர் மேலும், இவ்வாறான ஃபிட்னெஸ் விஷயங்கள் தனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.

தினமும் காலை 4 மணிக்கு எழுந்து இரவு 9 மணிக்கு தூங்கிவிடுவதாகவும் கூறினார். முன்பை விட நல்ல ஞாபக திறன், நேர மேலாண்மை, கவனக்குவிப்பு, ஆளுமை வளர்ச்சி போன்றவை மேம்பட்டுள்ளது என்றார். ஏரிகள், ஆறுகள், குட்டைகள் போன்ற நீர்நிலைகளை தூய்மைப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டது. பலமுறை கடற்கரையை சுத்தம் செய்திருக்கிறோம்.

ஆர்வமாக வருபவர்களை வைத்து தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவது ஆங்காங்கு இதுபோன்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். மேலும் சென்னையில் வெள்ளம், புயல், சுனாமி போன்ற சீற்றங்களில் பாதிக்கப்பட்டோர்க்கு உதவியாக நிவாரண பொருட்கள் வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமின்றி அழிந்து வரும் இயற்கையை காக்கவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, வீட்டுத் தோட்டம், கரிம வேளாண்மை போன்றவைப்பற்றி தெளிவான மற்றும் செயல் முறை விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

பலன்கள்

* ட்ரக்கிங் செல்வதால் சுத்தமான காற்று கிடைக்கப்பெற்று நம் நுரையீரலுக்கு அதிகளவில் ஆக்சிஜன் சென்று நுரையீரல் சுத்திகரிக்கப்படுகிறது. இதயம் வலுப்பெறுகிறது. தசைகளுக்கும் மூளைக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. 

* உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு எடை குறையும். வயிற்றுப்பகுதி, தொடை, கை, தோள்பட்டை தசைகள் இறுகும். உடலுக்கு நல்ல வளைவுத்தன்மை கிடைக்கும். எலும்புகள் உறுதிபெறும். 

* மேலும் இயற்கையின் நிறமும், நறுமணமும் மனதை சாந்தப்படுத்தி, சிறந்த கவனத்தை மேம்படுத்துகிறது. மனச்சோர்வை அகற்றி உற்சாகமளிக்கிறது.