எம்.எஸ்.சுப்புலட்சுமி சானியா மிர்ஸா வரை



-பி.கமலா தவநிதி

மூக்கு குத்துதல் என்பது இந்தியப் பெண்களின் பாரம்பரியமாகவும் முக்கிய விருப்பமாகவும் இருந்தது. அழகுக்காக மூக்குத்தி அணிவதோடு, ஆயுர்வேத குறிப்பின் அடிப்படையில் அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்வோம்.

சரியான முறையில், நல்ல கைதேர்ந்தவர்களிடம் மட்டும் மூக்கு குத்திக்கொள்ளவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மூக்கு குத்துவதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறைகிறது. நம் மூக்கின் இடது புறத்தில் உள்ள நரம்புகள் இனப்பெருக்க மண்டலத்தோடு தொடர்புடையது.

ஆதலால், இடது புறம் மூக்கு குத்துவதால் குழந்தை பிறப்பில் உதவியாக இருப்பதோடு ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஊக்குவிப்பதாக இருக்கிறது. இப்போதெல்லாம் அனைவரும் மூக்கு குத்துவது இல்லை. இருந்தாலும் இளைய தலைமுறையினர் ஃபேஷனுக்காக மூக்கு குத்திக் கொள்கிறார்கள்.

ஒவ்வொருவரின் முக வடிவத்திற்கு ஏற்றவாறு மூக்குத்திகள் வடிவமைக்கப்படுகின்றன. மூக்கு குத்தாமலே அணிவதற்கான வகையிலும் தற்போது கிடைக்கிறது. அதாவது, சிம்பிள் ஹூப்ஸ், பாளி, பீடட் பாளி, ஸ்டட், ஃப்ளோரல் ஸ்டட், டைமண்ட் ஸ்டட் போன்ற வெவ்வேறு வகைகளில் செய்யப்பட்டு அழகிய வடிவுகளும், வகைகளும் வந்துவிட்டது. இதில் வைர மூக்குத்தி மட்டும் அனைத்து பெண்களுக்கும் அழகை அள்ளித் தருவதாக இருக்கிறது.

அகலமான மூக்கு உள்ள பெண்கள் சற்றே பெரிய கற்கள் கொண்ட மூக்குத்தி அணிவதால் எடுப்பாக தெரியும். நீளமான மற்றும் கூர்மையான மூக்குள்ள பெண்கள் வளையம் போன்ற மூக்குத்தி அணியலாம். சிறிய கூர்மையான மூக்குள்ள பெண்கள் முத்து வைத்த மூக்குத்தி அணிவது அதிகப்படியாக அவர்களை அழகூட்டுகிறது. ஃபிளவர் ஸ்டட் என்று சொல்லப்படும் பூ போன்ற மூக்குத்தி பெரிய மூக்குள்ள பெண்களின் மூக்கை சிறியதாக காட்டும்.

மூக்குத்தி அணிந்த பெண்கள் பொதுவாகவே அதிக மன உறுதி உள்ளவர்கள் என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்ட உண்மை. மேலும் இவர்களிடத்தில் எந்த வித ஹிப்னாடிசமோ மெஸ்மரிசமோ செல்லுபடியாகாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  தங்கத்தில் மூக்குத்தி அணிவதே சிறந்தது. மற்ற உலோகங்களில் அணிவதை அழகை மெருகேற்றினாலும் சில சமயங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.