மகளிர் எழுச்சி



-மகேஸ்வரி

“சமுதாயத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை வைத்து, அந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்தை துல்லியமாக அளவிட முடியும்!”
- காரல் மார்க்ஸ்

“என் குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை” - சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த இந்த வார்த்தைகளுக்கு உரியவர் ஜென்னி. செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, தன் காதலுக்காக, தான் பெற்ற பிள்ளைகளுக்கு பால்கொடுக்க முடியாமல் ரத்தத்தைக் கொடுக்க வேண்டிய கொடுமைக்கு ஆளான ஜென்னி யின் கணவர்தான் உலகையே உலுக்கிய மாமேதை, கம்யூனிஸ்ட்களின் பேராசான் காரல் மார்க்ஸ்.

தொழிலாளியின் உழைப்பு, அதற்கு கொடுக்கும் விலை, அது செல்லும் பாதை, அதனால் சமுதாயத்தில் எப்படியான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதையெல்லாம் தம் வறுமையையும் பொருட்படுத்தாது ஆராய்ந்து ‘மார்க்சியம்’ எனும் தத்துவத்துக்கு மூலவேராக ‘மூலதனம்’ எனும் பெருநூலைக் கொடுத்தவர் மாமேதை காரல்மார்க்ஸ். இவருக்குள் இச்சிந்தனை தோன்ற அடித்தளமாக இருந்தவர் அவரின் மனைவி ஜென்னி.

தன் வீட்டுப் பொருளாதாரம் ஒன்றுமில்லாமல் போன நிலையில் உலகத் தொழிலாளர்களின் உரிமைப் புரட்சிக்கு வழிவகுத்தவர். அவரது வழியில், மகளிர் விடுதலை பெறவும், முழுமையான அதிகாரங்களை பெறவும் பெண்களை திரட்டுகின்ற வகையிலும், அவர்களுக்கு உறுதுணையாய் இருப்பவர்களை ஒன்றிணைக்கும் நோக்குடனும், பெண்கள் பெற்றிருக்கும் மகத்தான உரிமைகளையும், சாதி, மதம் போன்ற சீரழிவு களிலிருந்து விடுபட்டு, பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகச் சூழ்நிலையில் நிலவி வரும் முரண்பாடுகளை களைந்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் சமத்துவம் பெறவும், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் கருத்துப் பட்டறையாக ‘மகளிர் எழுச்சி’ எனும் மாத இதழை இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தில் தமிழ் மாநிலக்குழு வெளியிடுகிறது.

இது முற்றிலும் பெண்களுக்கான மாத இதழ். பாலினச் சமத்துவம், நீதி, அரசியல் அமைப்பு வழங்கிய அனைத்து உரிமைகளையும் கோரி வலுவான போராட்டங்களையும் இயக்கங்களையும் பெண்கள் நடத்தி வரும் நிலையில், இனிவரும் இளம் தலைமுறையினருக்கு இந்தச் செய்திகளை எடுத்துச் சென்று பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இது அமைய வேண்டும்.

பெண்ணுரிமை, அரசியல், பொருளாதாரம், இலக்கியம், விளையாட்டு என பன்முகத்தன்மையுடன் பெண்களை சென்றடைவதற்கும் பெண் படைப்பாளிகளின் எழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்குமான ஒரு களமாக நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது ‘மகளிர் எழுச்சி’ இதழ்.