நீட் தேர்வு தேவையா?



-ஜெ.சதீஷ்

நீட் தேர்வில் விலக்களிக்க கோரி, தமிழக அரசு இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி மத்திய அரசிடம் கொடுத்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அகில இந்திய மருத்துவப் படிப்பில் உள்ள 15 சதவீத இடங்களை நிரப்புவதற்காக நீட் தேர்வை இந்தியா முழுவதும் நடத்தியது மத்திய அரசு. இந்திய அளவில் 52,715 இடங்களுக்கு 85 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தமிழகத்தின் பல்வேறு எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற நீட் தேர்வில், மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட முறையற்ற சோதனைகள், ஒவ்வொரு  மொழிக்கும் வேறுபட்ட வினாத்தாள் என பல சிக்கல்கள். இவை குறித்து பல்வேறு அமைப்புகளும் கல்வியாளர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வு குறித்து பல்வேறு பார்வைகள் உங்கள் முன்...

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
‘‘இந்தியா முழுவதும் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின் அடிப்படையில் 15 சதவீத இடங்களுக்கான நீட் தேர்வு மட்டுமே தற்போது நடந்திருக்கிறது. அரசு கல்லூரிகளுக்கு நீட் தேர்வு கட்டாயமா என்பது கேள்விக்குறிதான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டமன்றத்தில் மருத்துவ பட்டப் படிப்பிற்கு ஒரு மசோதாவும், மருத்துவ மேற்படிப்புக்கு ஒரு மசோதாவையும் இயற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளது மாநில அரசு.

குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக பரிசீலனையில் இருக்கின்றன மாநில அரசின் மசோதாக்கள். மேலும் தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு இன்னும் நடைபெறவில்லை. மருத்துவ கலந்தாய்வு நடைபெறுவதற்கு முன்பாக குடியரசு தலைவருடைய ஒப்புதல் கிடைத்து விட்டது என்றால் நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்திருந்தாலும், விண்ணப்பிக்காவிட்டாலும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரப்பப்படும்.

தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் என்பது இல்லை, மருத்துவப் படிப்பிற்கு அது முற்றுப்புள்ளியும் அல்ல. தற்போது நடத்தப்பட்ட சாதாரண தேர்வாகத்தான் பார்க்க வேண்டும். அதுதான் அரசு கல்லூரிகளுக்கும் என்று நாம் எண்ணக்கூடாது. மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிரான எதிர்ப்பு தமிழகத்தில் தொடரும். நீட் தேர்வு குறித்து நீதியரசர் பிரபாகரன் அவர்கள், ‘நீட் தேர்வை ஏன் தமிழக மக்கள் வெறுக்கிறார்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கான காரணத்தை தற்போது தேர்வு நடைபெற்ற அநாகரிக நிகழ்வுகள் உணர்த்தும் என்று நம்புகிறேன். அருவெறுக்கத்தக்க நிலையில் ஒரு குழந்தையை நடத்தினால் அந்தக் குழந்தை எப்படி தேர்வை எழுதும், இப்படிப்பட்ட தேர்வு அவர்களுக்கு தேவையா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் நடைபெறுகின்ற எந்தத் தேர்விலும் இம்மாதிரியான கெடுபிடிகளும் உளவியல்ரீதியாக மாணவர்களை பாதிப்படையச் செய்யும் சோதனைகள் நடத்தப்பட்டது இல்லை.

இது போன்ற துன்புறுத்தல்களால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு வெறும் கனவாகவே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எண்ணுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று. ஆனால் நரேந்திர மோடிக்கு நீட் தேர்வு தேவைப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவை ஒரு விற்பனைக் கூடமாகவும், விற்பனைக்கூடத்தின் தலைவராகவும் தன்னை கருதிக்கொள்கிறார்.

அவருடைய அமைச்சரவையில் இருக்கக்கூடிய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிற உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார். இதில் கல்வியிலும் மருத்துவத்திலும் சந்தையை அனுமதிப்பதற்கு எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேள்வி எழும். அதற்கான முயற்சியில்தான் ஆளுகின்ற மத்திய அரசு முயன்று வருகிறது.

ஏற்கனவே இந்தியா முழுவதும் ஆரம்பக் கல்வியில் தனியார்மயத்தை அனுமதித்துவிட்டோம். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் வலுவாக இருக்கின்றன. கிராமங்கள் வரை தனியார் நிறுவன மருத்துவமனைகளை கொண்டுச்செல்ல வேண்டும் என்றால், வலுவாக இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளை அழிக்க வேண்டும் என்று, நீட் தேர்வு மூலமாக சமூக மனப்பான்மை கொண்ட ஏழை எளிய மாணவர்களை மருத்துவம் படிக்காமல் செய்வதற்கு முழு முயற்சியில் மத்திய அரசு இயங்குகிறது.

செலவே இல்லாமல் மருத்துவம் பார்க்கக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் இருக்கிறது. அரசு மருத்துவர்கள் இல்லை என்றால் அரசு மருத்துவமனைகள் இயங்காது. ஆகவே ஏழை மாணவர்களை அரசு மருத்துவர்களாக ஆக விடாமல் தடுக்க நீட் தேர்வை பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள் பணம் ஈட்டுவதற்கும், பணம் கொடுத்து சிகிச்சை பெறக்கூடிய சூழலை தமிழகத்தில் உருவாக்க முயல்கிறது மத்திய அரசு.

நீட் தேர்வுக்காக லட்சக்கணக்கான பணம் கொடுத்து தேர்வு எழுதி மருத்துவப்படிப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்த சம்பளத்திற்கு சேவை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தனியார் மருத்துவமனைகளை நோக்கி மாணவர்கள் சென்றால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைந்து அரசு மருத்துவமனைகள் மூடப்படும். தனியார் மருத்துவமனைகள் தமிழகத்தில் வருவதற்கான வாய்ப்புகளை பாரதிய ஜனதா அரசு செய்து கொடுக்க முற்படுகிறது.

மேலும் மருத்துவ பட்டப்படிப்பைத் தொடர்ந்து மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள் சர்வீஸ் கோட்டாவில் கிடைக்கக்கூடிய மேற்படிப்பையும் நீட் தேர்வு விலக்கு கொடுத்து அவர்களின் உரிமைகளை பறித்துவிடும் நிலையை தமிழகத்தில் நீட் தேர்வு உருவாக்கிவிடும். தேசிய அளவில் ஒற்றைக் கல்வி முறையை திணிக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது மத்திய அரசு. மத்திய அரசினுடைய மக்களுக்கும், மாணவர்களுக்கும் எதிரான இம்மாதிரியான முயற்சிகள் கண்டிக்கத்தக்க ஒன்று.”

மருத்துவர் எழிலன்
‘‘தமிழக அரசு சார்பாக கொடுக்கப்பட்ட இரண்டு மசோதாக்கள் மத்திய அரசிடம் வந்து சேரவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது.  முறையான அணுகுமுறை இல்லாமல் தமிழக சட்டமன்றம் இயற்றிய இரண்டு மசோதாக்கள் என்னவாயிற்று என்று தெரியாத அரசாக இருக்கிறது தமிழக அரசு. தற்போது நடந்து கொண்டிருக்கும் மாநில அரசின் அலட்சியப் போக்கால் நீட் தேர்வு தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது.

தற்போது மத்தியில் ஆளும் மோடி அரசு பதவியேற்றபோது கூட்டாட்சி தத்துவத்தில் ஆட்சி செய்வோம் என்று கூறியது. ஆனால்  மோடி அரசு அந்த தத்துவத்திற்கு எதிராகவே தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. வலுவான ஆளும் கட்சியாக இருப்பதால் மாநிலங்களில் கவனம் செலுத்தாமல் செயல்பட்டுகொண்டிருக்கிறது மத்திய அரசு.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிகத் தெளிவாக அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றினார். ராணுவம், நீர்வளம், நிதிநிலை போன்றவற்றை மத்திய அரசிடமும், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை மாநில அரசின் பொறுப்பிலும் விடும்படி சட்டங்கள் இயற்றினார். இவர்கள் அவசர காலச் சட்டத்தின் மூலம் கல்வியையும், சுகாதாரத்தையும் தன்வசப்படுத்தி பொதுப் பட்டியலில் வைத்துள்ளனர். அவசர காலம் முடிந்தும் அதை மாநில அரசிடம் ஒப்படைக்காமல் இருக்கின்றனர்.

1968ல் அமைக்கப்பட்டகோத்தாரி கமிஷன், எக்காரணத்தைக் கொண்டும் கல்வியையும் சுகாதாரத்தையும் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றக்கூடாது என்று கூறியது. அவ்வாறு மாற்றினால் மத்திய அரசுக்கும்  மாநிலங்களுக்கும் இடையே குழப்பம் ஏற்படும் என்றது. மத்திய மெடிக்கல் கவுன்சில் மாநிலங்களின் தேவைக்கேற்ப பாடத்திட்டத்தை அமைப்பது குறித்து வழிகாட்டவேண்டுமே தவிர மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.

உலகமயமாதல் கொள்கை வந்த பிறகு தனியார் நிறுவனங்களின் கையில் கல்வி வியாபாரமாக்கப்பட்டுவிட்டது. நீட் தேர்வு என்பது மத்திய அரசு பாடத்திட்டத்தில் இருக்கிறது. ஆகையால் நீட்தேர்வு கட்டாயமானால் மாநில பாடத்திட்டத்திலிருந்து மத்திய அரசு பாடத் திட்டத்திற்கு அனைவரும் மாறவேண்டிய சூழல் ஏற்படும். மத்திய அரசு பாடத்திட்டத்தில் இந்தியை கட்டாயமாக்கி இந்தித் திணிப்பையும் எளிதாக்கிக்கொள்ள முடியும் என்கிற நோக்கத்தோடு செயல்படுகிறது மத்திய அரசு.

மாநிலத்தின் இடஒதுக்கீட்டில் மத்திய அரசு தலையீடு இருக்காது என்று சொல்லிவிட்டு, மத்திய அரசே நீட் தேர்வை நடத்துவதில் எவ்வித நியாயமும் இல்லை. எய்ம்ஸ், ஜிப்மர், பிஜய் சண்டிகர் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு விலக்கு உண்டு என்றால் தமிழகத்துக்கு விலக்கு அளிக்காமல் உள்நோக்கத்தில் செயல்படுகிறது ஆளும் மத்திய அரசு.

கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கிறது நீட் தேர்வு. மாவட்டந்தோறும் மருத்துவமனைகளை அமைத்து தேவையான வசதிகளை மாநில அரசு செய்து வைத்தால், மத்தியில் இருந்து வந்து எளிதாக தன்வசப்படுத்திக்கொள்ள நினைப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. தமிழகத்தில் மட்டும் 26 அரசு கல்லூரிகளும், 26 தனியார் மருத்துவ கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. சுமார் 6500 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் இருக்கின்றன.

இதில் 3500 அரசு இடங்கள் இருக்கின்றன. மேலும் பட்ட மேற்படிப்புக்கு 1600 இடங்களை தமிழக அரசு கொடுக்கிறது. வட மாநிலங்களில் இது போன்ற எந்த வித முன்னேற்றத்தையும் செய்ய முடியாத மத்திய அரசு தமிழகத்தை சுரண்டுவது கண்டிக்கத்தக்க ஒன்று. தமிழகத்தில் தற்போது இருக்கும் ஆளும் அரசு தன்னுடைய கல்வி உரிமையைக்கூட பாதுகாத்துக்கொள்ள முடியாத போது, மாநிலத்தை எப்படி வழிநடத்தும் என்று தெரியவில்லை. மத்திய அரசு ஒற்றை ஆட்சி முறை, ஒற்றை மொழி, ஒற்றை கலாசாரத்தை இந்தியா முழுவதும் திணிக்கும் முயற்சியின் ஒரு அங்கமாகத்தான் நீட் தேர்வு இருக்கிறது.’’

ஆளுர் ஷா நவாஸ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
‘‘நீட் தேர்வு தகுதி அறியும் தேர்வு என்று கூறுகிறார்கள். மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிற இந்தத் தேர்வு எந்த விதத்திலும் தமிழகத்துக்கு ஏற்புடையது அல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு பாடத்திட்டம் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல் தவிர்த்து விட்டு மத்திய பாடத்திட்டத்தின் கீழ் நடத்துவது என்பது அநீதியானது.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் பல மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. குஜராத் முன்னேறிய மாநிலம் என்று கூறுகிறவர்கள் கடந்த ஆண்டுகளில் எத்தனை மருத்துவமனைகளை அங்கு உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பின்தங்கி இருக்கக்கூடிய மாநிலங்களோடு சேர்த்து தமிழ்நாட்டிலும் தகுதித் தேர்வு நடத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இடஒதுக்கீடு பாரம்பரியத்துக்கு எதிரானது நீட்.

120 கோடி மக்கள் வாழக்கூடிய இந்தியா போன்ற நாடுகளில் கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை உலக வர்த்தக நிறுவனம் இலவசமாகக் கொடுக்க வேண்டாம் என்று கொள்கை முடிவாக வைத்துள்ளது. அதைப் பின்பற்றி தற்போது கிராமங்களில் கூட தனியார் பள்ளிகள் வந்துவிட்டன. படிப்படியாக மக்களின் அடிப்படைத் தேவைகளை தனியார்மயமாக்க முயற்சித்து வருகிறது மத்திய அரசு.

அரசு கட்டமைப்பில் அம்பேத்கர் சட்டம் இயற்றி பெரியார் போன்றோர் போராடி பெற்ற இடஒதுக்கீட்டை தனியார்மயமாதலின் மூலம் மக்களின் உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இயங்குகின்ற மத்திய அரசு, இந்தியாவை சந்தை நாடாக பார்க்கிறது. நீட் தேர்வு என்பது மருத்துவத்தை சந்தையாக மாற்றக்கூடிய ஒரு கருவி.

இன்று அனைவரும் தேர்வு நடைபெற்ற இடங்களில் நடத்தப்பட்ட அராஜகத்தை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம், நீட் தேர்வே அராஜகமான ஒன்றுதான். நீட் தேர்வு மூலம் பறிக்கப்படக்கூடிய சமூக நீதி, இடஒதுக்கீடு, மாநில உரிமைகள் பற்றி யாரும் பேசுவது இல்லை. இன்று இட ஒதுக்கீடு அடிப்படையில் படிக்கக்கூடிய ஏழை எளிய மாணவர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறது மத்திய அரசு. நடத்தப்பட்ட தேர்வு மாணவர்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.’’

கே.புருஷோத்தமன், மாணவர்
‘‘கிராமங்களில் படிக்கக்கூடிய நாங்கள் டாக்டர் ஆகவே முடியாது என்ற நிலையில் இருந்தது நீட் தேர்வு. வினாத் தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்டிருந்தார்கள். நாங்கள் படித்தது அரசுப் பள்ளியில், எங்களுக்கு தேர்வு கடினமாக இருந்தது. நீட் தேர்வுக்காக படிக்க டியூஷன் கட்டணம் 40 ஆயிரம் கேட்கிறார்கள்.

என்னுடைய தாய், தந்தை இருவருமே தினக்கூலி என்பதால் அவ்வளவு தொகை கொடுத்து படிப்பதற்கு எங்களிடம் வசதி இல்லை. தேர்வு எழுதுவதற்கு எந்த வித விதிமுறைகளையும் முறையாக எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. நான் பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வு எழுதுவது போலதான் சென்றேன்.

தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன்பு முழுக்கை சட்டையை கிழித்து, எங்களை தீவிரவாதிகளை போல் பாவித்து சோதனை செய்தனர். மன உளைச்சலோடும் பயத்தோடும்தான் தேர்வு எழுதிவிட்டு வந்தேன். நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை. மதிப்பெண் அடிப்படையில் எங்களுக்கு இடங்களை கொடுத்தாலே போதும்.’’