வாசகர் பகுதி



துக்கம் விசாரிக்காமல் இருக்கலாம்

என் மகன் திடீரென்று மாரடைப்பால் இறந்துவிட்டான். தாங்க முடியாத வேதனையில் குடும்பமே துடித்துக்கொண்டிருந்தது. அப்போது என் உறவுக்காரப் பெண் ஒருத்தி துக்கம் விசாரிக்க வந்திருந்தாள். அந்தப் பெண் என்னிடம் ‘‘உங்கள் வீட்டில் வேறு யாராவது இறந்திருக்கலாமே, இவன் இறந்துவிட்டானே” என்று கூறியபோது என் மனம் என்ன பாடுபட்டது என்பதை விளக்க வேண்டுமா?

துக்கம் விசாரிக்காமல் இருக்கலாம். துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உறவுகள் மனம் புண்படும்படி பேசாமல் இருப்பதுதான் நல்லது. ஆறுதல் தராவிட்டாலும் ஆறாத வடுவை உண்டு பண்ணக்கூடாது. உணர்வார்களா?
- லட்சுமி மோகன், நாகர்கோவில்-2.

‘ஆரோக்கிய' நாட்காட்டி

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தாலே நகைக்கடையிலிருந்து துணிக்கடை, பாத்திரக்கடை, மளிகைக்கடை, பியூட்டி பார்லர் என்று அனைவரும் கஸ்டமர்களுக்கு காலண்டர் தருவார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் என் மகளுக்காக புத்தகங்கள் வாங்கும்போது அங்கும் சிறிய காலண்டர் கொடுத்தார்கள். வழக்கமானது தானே என்று வாங்கிக்கொண்டேன்.

அதில் ஒவ்வொரு மாதத்திற்கு பின்புறமும் பலவிதமான ‘ஆரோக்கிய’ குறிப்புகள் இருந்தன. கீரை வகைகளின் மருத்துவ பயன்கள் மற்றும் பல நோய்களுக்கும் எளிய நாட்டு மருத்துவக் குறிப்புகளும் இருந்தன. பயன்தரக்கூடிய இத்தகைய காலண்டர் போல தகவல்கள் அடங்கிய காலண்டரை தரலாமே பிற நிறுவனங்களும்?
- எம்.என்.சித்ரா குருமூர்த்தி, புதுச்சேரி.

சுற்றுலாவை அனுபவியுங்கள்

நாங்கள் குடும்பத்துடன் சென்ற மாதம் மூணார் சுற்றுலா சென்றிருந்தோம். அது பேக்கேஜ் டூர் என்பதால் எங்களுடன் அந்தப் பேருந்தில் மேலும் சில குடும்பங்களும் வந்திருந்தன. அதில் 12 வயது சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் பேருந்திலும் சரி, வேடிக்கை பார்க்கும் இடங்களிலும் சரி, எந்நேரமும் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருப்பாள்.

பல இடங்களில் பல அரிய இயற்கைக் காட்சிகளைகூட பார்க்காமல் எந்நேரமும் விளையாடிக் கொண்டிருந்தாள். கைக்கு அருகில் நகர்ந்து சென்ற மேகத்தைக்கூட அவள் பார்க்கவில்லை. அவளுடைய இந்த செய்கை எனக்கு வருத்தமளித்தது. மூணாரில் புகழ் பெற்ற இடமான இறைவிகுளத்தில் வரையாடு பார்ப்பதற்காக வரிசையில் நின்றிருந்தபோது ஐஸ்கிரீம் வாங்கச் சென்றாள்.

மொபைல் பார்த்துக்கொண்டே சென்றதால் படிக்கட்டில் தடுக்கி விழுந்தாள். காலில் பெரிய எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. வலியால் துடித்தாள். எல்லாருக்கும் கஷ்டமாகி விட்டது. எவ்வளவோ செலவழித்து வெளியிடம் செல்கிறோம். அந்த அழகிய இடங்களைக்கூட பார்க்காமல் மொபைலில் விளையாடி நேரத்தை வீணடித்தால் நமக்குத்தானே நஷ்டம்?

நம் வீட்டில் இருக்கும்போது விளையாடலாம். வெளியிடம் செல்லும்போது அந்த இடத்தை ரசிக்க வேண்டும். கவனமாகவும் இருக்க வேண்டும். போகிற இடத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டால் எல்லோருக்கும் கஷ்டம்தானே?
- சக்தி, ஆர்.ஏ.புரம், சென்னை-28.

இடம் பொருள் ஏவல்

தோழியின் மகளுக்கு வளைகாப்பு நடந்த சமயத்தில் செல்ல முடியாததால், அவள் வீட்டிற்கு சென்று பரிசு கொடுத்து வரச் சென்றிருந்தேன். பொதுவாக விசாரித்து முடிந்து ஹாலுக்கு வந்தமர்ந்த போது, தோழியின் கணவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். மதிய நேர சீரியல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அந்த சீரியலில் பிரசவ வலியில் துடிக்கும் பெண், அவள் பிரச்னைகளை பேசும் மருத்துவமனை, உறவுகள் என காட்சி இருந்தது.

‘நஞ்சுக்கொடி குழந்தையை சுத்திக்கிட்டிருக்கு, ஆபரேஷன்தான் பண்ணி தாய், குழந்தையை பிரிக்கணும். ஒரு உயிரைதான் காப்பாத்த முடியும்’ என டி.வி. ஸ்பெஷல் வசனங்கள் சூழ, தோழியின் மகள் நெளிய ஆரம்பித்தாள். நான் அவளை உள்ளே சென்று ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு, என் தோழியிடம், “வீட்டில் ஏறத்தாழ அந்த நிலையிலுள்ள பெண்ணை வைத்துக் கொண்டு, இத்தனை நெகடிவ் எண்ணங்கள் தரக்கூடிய சீரியல்களை பார்ப்பது தவறு. அது பல விபரீதங்களுக்கு வழி வகுக்கும்” என எடுத்துரைத்தேன். பெற்றோர்தான் கவனமாய் இருக்க வேண்டும். பிள்ளைகள் மன ஆரோக்கியத்தை பேண வேண்டும்.
- மல்லிகா குரு, சென்னை.

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)