டைல்ஸ்



எது ரைட் சாய்ஸ்?

ஒரு முழுமையான பர்ச்சேஸ் வழிகாட்டி!

-கிர்த்திகா தரன்

ஒரு ஆர்கிடெக்ட் நண்பரோடு இயற்கை, செயற்கை கற்கள் பற்றி விவாதம் வந்தது. ‘இயற்கை கற்களே நல்லது’ என்றார் அவர். என்னைப் பொறுத்த வரை செயற்கை என்பது எல்லாமே இயற்கையில் இருந்து வரும் பொருட்களே. நிஜமான இயற்கை என்றால் குகைதானே? அது சாத்தியப்படுமா!



நண்பர் கூறியதில் முக்கியமான விஷயம்... ‘ஊருக்கு அருகில் கிடைக்கும் கற்களே மிக நல்லது’ என்பது. வட இந்திய அதிகபட்ச தட்பவெப்பத்துக்கு ஏற்றவாறு மார்பிள் கற்களில் போரஸ் எனப்படும் துளைகள் அதிகம். அது கொஞ்சம் குளிர்ச்சியை கொடுக்கும். நம் ஊர்பக்கம் கிரானைட் அதிகம். ஆக, எதுவாக இருந்தாலும் அருகில் கிடைப்பவையே பொருத்தம் என்றார் அவர். இத்தாலி மார்பிள்கள் பார்க்க அழகாக இருக்கும். ஆனால், விலையேற்றி விற்பதற்காக எபாக்சி எனப்படும் கோட்டிங் கொடுப்பது உண்டு. அந்த அளவுக்குத் தரம் கண்டறிவது கடினம்.
டைல்ஸில் பல வகைகள்...

மொசைக், செராமிக், போர்சலின், டெரகோட்டா, வாசலில் போடும் பேவ்மன்ட் கற்கள்... இவை தவிர வேர்டிஃபைட், முப்பரிபாணம், டிஜிட்டல், கிளாசிக் மற்றும் சுவருக்குப் போடுவது, தரைக்கு என ஏராளம். இன்று நேற்றல்ல... பல நூற்றாண்டுகளுக்கு முன்பே டைல்ஸ் புழக்கத்துக்கு வந்துவிட்டது. முக்கியமாக கிளாஸ் டைல்ஸ்... பழங்காலக் கட்டிடங்களில் பல  வண்ணங்களில் காணலாம். கண்ணாடியை துண்டுகளாக வெட்டி, மணல், சுண்ணாம்பு, களிமண் போன்று அடியில் கலவை சேர்த்து, மேலே அழுத்தத்தில் பதிப்பது. இது இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது.



சீனாவில் போர்சிலின் பொருட்கள் வந்தபிறகு அந்த தரை அமைப்பும் வந்துவிட்டது. மேலே வண்ணம் பூசப்பட்ட மொசைக் தரைகளுக்கும் வரலாற்றில் இடமுண்டு. கலைவேலைப்பாடுடன் சிறுதுண்டுகளாகச் சேர்த்துக் கோர்த்து அமைக்கப்படும் சுவர் டைல்ஸ் - அதாவது, ஓடு வில்லைகள் வடிவைமைப்பு அலங்காரம் பிரபலம். இப்போது முயுரல்ஸ் என்கிறோம். சுவரில் இடம்பெறும் மொசைக் மற்றும் டைல்ஸ் முயுரல்ஸ் ஒரு கலையாகவே இருக்கிறது. மிகப்பெரிய கட்டிடங்களில் உள் அழகுப்படுத்தலில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.

போர்சலின் டைல்ஸ் எனப்படும் வகை மணல் மற்றும் பாறைப் பொடிகளால்  தயாரிக்கப்படும். அதிகபட்ச நெருப்பில் சுட்டு பல படிகளில் தயார்படுத்தப்படுவதால் கடினமாக இருக்கும். முழுக்கவே - அதாவது, அடி வரையிலும் ஒன்று போல இருக்கும். மேலே மட்டும் ஒரு கோட்டிங் வடிவமைப்பாக  இல்லாமல் முழுக்கவே அப்படி இருக்கும். இவை மிகக் கடினம், அதிக அழுத்தத்தை சமாளிக்கும் திறன் எல்லாம் பெற்று இருந்தாலும் பதிக்கப்படுவது - அதாவது, லேயிங் கொஞ்சம் சிரமம்.



வண்ணம் கொடுத்த கண்ணாடித் துண்டுகளை வெட்டி, ஒன்றாக்கி, களிமண், மற்ற பொருட்கள் மூலம் அழுத்தி, சூடுபடுத்தி தயாரிப்பது. இது முழுக்கக் கண்ணாடியால் ஆனதால், தரையை விட சுவருக்குப் பொருத்தமாக இருக்கும். உள் அலங்காரத்தில் அழகூட்டவும் கிளாஸ் டைல்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

மொசைக்...
கீழே பல வண்ணக் கலவைகளை மோல்டில் கொட்டி, அதற்குள் கண்ணாடி  அல்லது நிறமுள்ள கற்கள் தூவி, புதுப் புது வடிவமைப்புகள், நிறங்களில் தயாரித்து, அதன் மேல் களிமண் மற்றும் வேதிப்பொருட்கள் கலவையை கொட்டி அழுத்தத்தில் தயாரிக்கப்படுகிறது. வேர்டிஃபைட் வரும்முன் பெரும் பாலும் புழக்கத்தில் இருந்தவை மொசைக் ஓடுகள்தான். கடந்த 10 ஆண்டுகளாகத்தான் செராமிக் ஓடுகள் தரைக்குப் பிரபலமடைந்து வருகின்றன.

மொசைக்கை பொறுத்த வரை எத்தனை முறை வேண்டுமானாலும பாலீஷ் போடலாம். ஆனால், கடின கறைகள் பட்டால் நீக்குவது கடினம். பராமரிக்கும் போது ஆசிட் போன்றவை பட்டால் நிறமிழப்பதோடு, ‘சிப்பிங்’ எனப்படும் சிறு துளைகள் உருவாகவும் கூடும்.



இருப்பினும், பாலீஷ் போட்டு நீண்ட காலம் பயன்படுத்தலாம். நூறாண்டு தாண்டிய மொசைக் தரைகளை இன்றும் பழங்காலக் கட்டிடங்களில் காணலாம். பட்ஜெட்டை பொறுத்த வரை மொசைக் குறைவான செலவே. முன்பெல்லாம் நடுத்தர குடும்பங்களின் சாய்ஸ் இதுதான். பாலீஷ் செய்ய கூலி அதிகமாகி விட்டதால், இப்போது பலர் டைல்ஸுக்கு மாறிவிடுகின்றனர்.

செராமிக் டைல்ஸ்...
இன்று நாம் பரவலாகப் பார்ப்பது செராமிக் டைல்ஸ். இவை மண் மற்றும் பல வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு சுடப்பட்டு டைல்ஸ் ஆக மாறுகிறது. மேலே கிளாஸ் போல தோற்றமளிக்க சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் பெரிய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் வெப்பப் பிரச்னை இல்லை. நீர் அதிகம் உட்புகாது. பராமரிப்பது எளிது. அதிக வழவழப்பு இருக்கும் வேர்டிஃபைட் ஓடுகள் வழுக்கும் தன்மையோடு இருக்கும். அதைக் கவனிக்க வேண்டும். செராமிக் டைல்ஸ் அப்படி இருக்காது. 

டிஜிட்டல் டைல்ஸ்...
பல விதங்களில் இவ்வகை டைல்ஸ் வருவதைப் பார்க்கலாம். நம் முகத்தை பிரின்ட் செய்து தர சொன்னால் கூட, அதைச் செய்யும் வசதிகள் வந்துவிட்டன. எந்த வடிவமைப்பில் வேண்டும் என்றாலும் டிஜிட்டலில்  வாய்ப்பு உண்டு... விலைக்கு ஏற்றவாறு!

3D
இப்போது பிரபலமாகி வருபவை 3D  ஓடுகள். மிக நல்ல வடிவமைப்பில் வேண்டும் என்றால், ஆரம்பகட்ட விலையே அடிக்கு 350 ரூபாய். சில நேரங்களில் வடிவங்கள் ஒரே செட்டாக வரும். வாங்கி அப்படியே பதிக்கலாம். கவனமாக வாங்க வேண்டும். கொஞ்ச நாளில் அலுக்காத டிசைனாகவும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்.
 


எம்போசிங்
இயற்கை கற்கள் போல எம்போஸ் செய்யப்பட்டு, சிறு கட்டங்கள், வட்டங்கள் என்று பல விதங்களில் வருகின்றன. இதிலும் வடிவமைப்பு செய்யலாம். அலங்காரம் என்றால் இது ஒகே. மற்றபடி, தினப்படி புழங்கும் இடங்களுக்கு பராமரிக்க எளிதாக இருக்கும் வகைகளே நல்லது.

ஆன்டி ஸ்கிட்
மாடிப்படி, குளியல் அறை, வயதானவர் வசிக்கும் அறை  போன்ற இடங்களில் ஆன்டி ஸ்கிட் டைல்ஸ் பதிக்கலாம். சிலர் வீடுகளில் சமையல் அறையில் தண்ணீர் அதிகம் புழங்கக்கூடும். அங்கும் இதைப் பதிப்பது நல்லது. வெளிப்பக்கம், செடிகள் வைக்கும் இடங்கள், நீர் புழங்கும் இடங்கள், நீச்சல் குளம் அருகில், போர்டிகோ போன்ற இடங்களிலும் இவை பொருத்தமாக
இருக்கும். மழைநீர் பொழியும் இடங்களில் இதை பதிக்கலாம்.

வித்தியாசம்
சுவரில், தரையில் பதிக்கப் போகும் டைல்ஸ்களில் வித்தியாசம் உண்டு. தரைக்குப் போடுவது கொஞ்சம் பலமாக இருக்கும். அதிக வழவழப்பு, வடிவமைப்பு தேவை இல்லை. சுவரையோ எப்படி வேண்டும் என்றாலும் அழகுப்படுத்தலாம். சமையல் அறையோ, குளியல் அறையோ - அங்கு பதிக்கப்பட்டு இருக்கும் ஓடுகளே முதல் பார்வைக்கு அழகாக அமையும். அதனால், மிகக் கவனமாக நிறங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அழுக்குப்படக் கூடாது என்று சிலர் அழுத்தமான நிறங்களை தேர்ந்தெடுப்பர். அவையோ, அறையை இன்னும் சிறிதாகக் காட்டும். கொஞ்சம் இருட்டாகவும் காட்டும்.  அதே நேரத்தில் முழு வெள்ளையும் சரிவராது. பாதி அடர் நிறம், மீதி வெளிர் நிறம் பொருத்தமாகும். இரு நிறங்கள் போட்டு பார்டர் டைல்ஸ் கொடுக்கும் போது இன்னும் அழகாகும். இவற்றை கொஞ்சம் மாற்றி யோசித்து நேர்கோட்டில் கூட பதிக்கலாம்.

சமையல் அறையில்...
மேடை, தரை இரண்டுக்கும் பொருத்தமாக சுவரில் நிறம் பதிக்க வேண்டும். மாடுலர் சமையல் அறை என்றால், மேலே அலமாரிகள் வரும் இடங்களில் பதிக்கும் தேவை இல்லை. மேடைக்கு மேல் அலமாரி இல்லாவிடில் முழுச் சுவருக்கும் பதிப்பது நல்லது. எளிதாகப் பராமரிக்கலாம். சுவருக்கு ஒரு முறை டைல்ஸ்  பதித்துவிட்டால் வாழ்நாள் பராமரிப்பு இலவசம். 

சுவர் வண்ணச் செலவு வருடாவருடம் ஏறுவது ஒரு பயத்தைக் கொடுக்கிறதுதானே? ஆனால், எல்லா இடங்களிலும் பொருத்துவது சரியாக வராது. முக்கியமாக பெரிய கட்டிடங்களில் அதிக மக்கள் புழங்கும் இடங்களில் பதித்து விட்டால் செலவு மிக குறையும். குளியல் அறைக்கு மேலும் உறுதியாக வேண்டும் எனில், பாலீஷ் செய்யப்பட்ட போர்சலின் ஓடுகள் பதிக்கலாம்.

டெரகோட்டா டைல்ஸ்...
வெளிப்புறங்களில் சுவருக்கும் தரைக்கும் இவை பொருத்தமாக இருக்கும். செங்கல் வடிவில் சுவரைக் காட்டக்கூட இவற்றைப் பயன்படுத்துகின்றனர். முன்புறத்தில் கான்கிரீட் சாய்வு கூரைகள் மீதும் இவை பதிக்கப்படுகின்றன. வெறும் ஆங்கிள் வைத்து ஓடு போடும் முறையும் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இப்போது  குளிர்ச்சியாக இருக்கவும்,  இயற்கை அமைப்புக்காகவும், பழமையாக ஒரு ஹெரிடேஜ் லுக் பெறவும் செட்டிநாடு ஓடுகள்  பதிக்கப்படுகின்றன. செட்டிநாடு வீடுகளில் மொசைக் தரைகளும் சிவப்பு  ஓடுகளும் மிகப் பிரபலம்.

தரம்
அடுத்து நீர் புகும் முறைக்கும் உறுதிக்கும் PE தரம் ஒன்றில் இருந்து 5 வரை இருக்கிறது. 5 என்பது பொது இடங்களில் புழக்கம் அதிகம் உள்ள போடும் அளவுக்கு உறுதியாக இருக்கும். நீரும் எளிதில் புகாது. 4 என்பது வீட்டில் உபயோகப்படுத்தலாம். 3 எண் அதிகம் புழக்கம் இல்லாத இடங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடையில் தரத்தின் எண்ணை
கேட்டுக் கொள்ளலாம்.

பிராண்டுகள்
இப்போது இந்தியாவில் பல பிராண்டுகள் வந்துவிட்டன. கஜாரியா, சோமணி, ஜான்சன், சிரா, ஹிந்த்வேர், பெல்  போன்றவை பிரபலமாக இருக்கின்றன. இதுதான் சிறந்தது என்று மற்ற  ஷாப்பிங் சாய்ஸ் போல சொல்ல இயலாது. அவரவருக்கு விருப்பமான நிறத்தில், தரத்தில், விலையில் வடிவமைப்பில் தேர்ந்தெடுக்க ஏராளமான சாய்ஸ் உள்ளது.

நம் முகத்தை டைல்ஸில் பிரின்ட் செய்து தர  சொன்னால் கூட, அதைச் செய்யும் வசதிகள் வந்துவிட்டன. எந்த வடிவமைப்பில் வேண்டும்  என்றாலும் டிஜிட்டலில்  வாய்ப்பு உண்டு!

தரைக்குப் போடுவது கொஞ்சம் பலமாக இருக்கும். அதிக வழவழப்பு, வடிவமைப்பு தேவை இல்லை. சுவரையோ எப்படி வேண்டும் என்றாலும் அழகு படுத்தலாம்.

(திட்டமிடுவோம்!)