கனவு இல்லம் அமைப்போமா?



ஒரு ஐடியா உங்கள் வீட்டை மாற்றிடுமே!

-வித்யா குருமூர்த்தி

‘கல்யாணம் பண்ணிப் பார்... வீட்டைக் கட்டிப் பார்...’ என்ற சொற்றொடருடன், ‘இருக்கும் வீட்டைப் புதுப்பித்துப் பார்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்!



வீட்டைப் பராமரிப்பது ஒரு கலை. சாதாரணமாகப் பராமரிப்பதற்கும், அழகாகப் பராமரிப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. தினம் வீட்டைப் பெருக்கி, மெழுகி, கிச்சன், சிங்க், வாஷ் பேசின் ஆகியவற்றைக் கழுவி, பாத்திரங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, வாரம் ஒரு முறை டி.வி., கணினி, மின்விசிறி, ஷோகேஸ் இன்ன பிறவற்றைத் துடைத்து, மாதம் ஒரு முறை ஒட்டடை அடித்து, அழுக்குகள் சேராமல் தூய்மையாக பார்த்துக் கொள்வதே பராமரிப்பு.

‘அழகாகப் பராமரிப்பது’ என்பது, நம் ரசனையுடன் சம்பந்தப்பட்டது. ஆங்கிலத்தில் aesthetic sense என்பார்கள் இதை. ரசனையுடன் இயைந்த ஓர் அழகுஉணர்ச்சியைப் புகுத்தும்போது, இல்லம் உயிரோட்டம் பெற்றதாக விளங்குகிறது. இப்போது இருக்கும் வீட்டையே சில சிறிய அல்லது (பட்ஜெட் தாராளமாக இருந்தால்) சற்றே பெரிய மாற்றங்கள் செய்வதால், முற்றிலும் புதிய பொலிவு கிடைக்கும்.

நாம் ஒவ்வொருவரும், வீடு புதுப்பித்தலுக்கு, ஆர்க்கிடெக்ட் அல்லது இன்டீரியர் டிசைனர் என்று அழைத்து, டிசைன் கன்ஸல்ட் செய்வது சாத்தியம் இல்லாத ஒன்று. நம் வீட்டின் அளவு (Space), இட சேமிப்பு (Storage) மற்றும் பயன்பாடு (Usability) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாமே ஒரு ப்ளான் உருவாக்கிக் கொள்ளலாம். அதுவே புதுப்பித்தல் வேலை நடக்க ஆரம்பித்த உடன் (When Renovation Actually Takes Place) தொழில்முறை ஆட்களை வைத்து செய்யலாம். 



ஏனெனில், ‘ப்ரொபஷனல்’ என்ற அந்தத் துறை சார்ந்த வல்லுனர்களை வைத்து செய்யும்போது, நாம் விரும்பிய வகையில் அழகிய ஃபினிஷிங் மற்றும் தரமான வேலைப்பாடுடன் கூடிய வொர்க்மேன்ஷிப் கிடைக்கும். சிறிய வேலை என்று கை வைத்தாலும், இழுத்துக்கொண்டே போகும் வீடு புதுப்பித்தலுக்கான சில எளிய ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ்...

தேவை இல்லாதவற்றை அகற்றுங்கள்
வீடு புதுப்பித்தலின் முதல் மற்றும் முக்கியமான பார்ட் இதுதான். தேவை இல்லாத பழைய உடைந்த கட்டில்கள், அலமாரிகள், பொம்மைகள், பழைய தட்டுமுட்டு சாமான்கள், பழைய படுக்கைகள், ரஜாய்கள், தலையணைகள், புத்தகங்கள், என்றாவது உபயோகப்படுமோ என்று நினைத்து வைத்திருக்கும் பழம்பொருட்களை தூக்கி எறிவதே பாதி கிணறு கடந்தாற்போல் ஆகும். தூக்கி எறிய மனசு இல்லை எனில், சற்று மராமத்து செய்து, யாருக்கேனும் கொடுத்து விடுங்கள்.

ஹோம் வொர்க் செய்யுங்கள்

* வெறும் கிச்சன் மட்டும் அல்லது பாத்ரூம்கள் மட்டும்... இப்படி பகுதிவாரியாக சரி செய்ய வேண்டுமா அல்லது முழு வீடே புதுப்பிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
* என்னென்ன வேலை உள்ளது என்பதைப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.
* புதுப்பித்தல் பற்றிய ப்ளானை ஒரு பேப்பரில், ரப்பாக வரைந்து கொள்ளுங்கள். இது கடைசி நேர வடிவமைப்பு மாறுதல்கள் மற்றும் தேவையற்ற மன அழுத்தம் போன்ற நெருக்கடிகளைத் தவிர்க்கும்.
* செலவு பற்றித் தெள்ளத் தெளிவாக இருங்கள். திட்டவட்டமாக இல்லாவிட்டாலும், ஒரு ரியலிஸ்டிக் பட்ஜெட் போடவும். கண்டிப்பாக அதற்கு மேலேதான் ஆகும் எனினும், செலவு பற்றி ஒரு ஐடியா கிடைக்கும். கடைசி நேரத்தில் கையைப் பிசைந்து கொண்டு இல்லாமல், ஓரளவு பணத்தை தயார் செய்து வைத்துக் கொள்ள இந்த ப்ளான் தேவை.
* மாற்ற வேண்டிய மற்றும் சரிசெய்யக் கூடிய விஷயங்களை முன்பே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கான சர்வீஸ் சார்ஜ் மற்றும் எமர்ஜென்சி செலவுகளும் இதில் அடங்கும். இவை வேலையில் சுணக்கம் வராமல் இருக்க உதவும் (எ.கா: ஷோகேஸின் உடைந்த கிளாஸ் டோர், சிறிய மேக்னடிக் லாக்குகள் போன்றவை).
 
பெயின்டிங்
நான்கு சுவருக்கும் ஏதோ ஒரு நிறத்தில் அடித்து விட்டு, சீலிங்கில் வெள்ளை அடிப்பது என்ற விஷயத்தை விட்டு நகர்ந்து வெகு நாளாயிற்று. வீட்டில் அடிக்கப்படும் வண்ணங்கள் மற்றும் அதன் ஸ்டைல் நம் வாழ்வைப் பிரதிபலிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. விதவிதமான வண்ணக் குழைவுகளில், ஏகப்பட்ட வெரைட்டிகளில் பெயின்டுகள் கிடைக்கின்றன. 3D எஃபெக்ட் கொடுக்கும் டெக்ஸ்சர் பெயின்டுகள், ரோலர் டிசைன் கொண்ட எமல்ஷன் பெயின்டுகள் என வகையாகச் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன.

நமது பட்ஜெட்டுக்கும் விருப்பத்துக்கும் ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நம் தீம்க்கு ஏற்றவாறு, டார்க் கலர்கள் அல்லது லைட் கலர்களில் புகுந்து விளையாடலாம். இரண்டும் கலந்து ஒரு கான்டெம்பரரி / ஸ்டைலிஷ் லுக் கூட அமைக்கலாம். நம் நிறத் தேர்வில் உள்ளது திறமை. 3 சுற்றுச் சுவர்களுக்கு ஒரே நிறமும், அதற்கு கான்ட்ரஸ்டான ஒரு நிறத்தில், ஹாலில் பார்வையாக இருக்கும் நான்காவது சுவருக்கு டெக்ஸ்ச்சர் பெயின்ட் அடித்து எடுப்பாகக் காட்டுவது, இப்போது பரவலாகப் பின்பற்றப்படும் பாணி.

இன்டீரியர்
வீட்டின் இன்டீரியரில் பெரும்பங்கு வகிப்பது ‘அக்ஸெஸரீஸ்’ எனப்படும் ஆங்காங்கு அழகுப்படுத்த வைக்கப்படும் அலங்காரப் பொருட்கள்தான். ஒரு வீட்டின் பொலிவையும் கிராண்ட் லுக்கையும் பெரிதளவில் இவையே தீர்மானிக்கின்றன. பூந்தொட்டிகள், சிறிய நீர்வீழ்ச்சிகள், பழங்கால லுக் கொடுக்கக்கூடிய ஆன்டிக் ஃபினிஷ் தெய்வ விக்ரகங்கள், தஞ்சாவூர் பெயின்டிங் போன்றவை எல்லாம் அக்ஸெஸரீஸ். இவற்றை அமைக்கும்போது, ஹால் / லிவிங் ரூமின் அமைப்புக்கும் வண்ணத்துக்கும் ஏற்றவாறு இன்டீரியர் தீமின் அழகு கெடாதவாறு (logically) அமைப்பது முக்கியம்.

எ.கா: ட்ரெடிஷனல் தீம் எனில், பிரம்பு சோஃபா செட் அல்லது ஓக் ஃபினிஷுடன் கூடிய இருக்கை வசதிகள், வெள்ளை மற்றும் லைட் பிரவுன் கலந்த பெயின்டுகள், இளம் க்ரீன் நிற கார்பெட்டுகள், ஒரு தஞ்சாவூர் பெயின்டிங் போன்ற காம்பினேஷனில் அமைக்கலாம். ஏஷியன் பெயின்ஸில் ‘வால் ஆர்ட்’ ஸ்டென்சில் / ஸ்டிக்கர்கள் கொண்டு, வேண்டிய வடிவத்தை பெயின்ட் செய்து கொள்ளலாம்.

ஹால் மூலையில் ஒரு ஆன்டிக் ஃபினிஷ் விநாயகர் அல்லது குழலூதும் கிருஷ்ணன் அல்லது புத்தர்... இல்லையெனில் ஏதேனும் புகழ்பெற்ற கலை வடிவங்கள் வைத்தால், பர்ஃபெக்ட் இன்டீரியராக இருக்கும். ஒரு பித்தளை அல்லது டெரகோட்டா பேசனில் நீர் நிரப்பி பூக்களை அடுக்கி பெர்ஃபியூம் லேசாகத் தெளித்து விட்டால், நமக்கே நம் வீட்டை விட்டு வெளியே போக மனசு வராது.

இதே, மாடர்ன் தீம் என்றால் அதற்கேற்ற பெயின்டுகள், சுவரில் ஒரு மாடர்ன் ஆர்ட், சிறிய நீர்வீழ்ச்சி (மினி ஃபவுன்டெயின் என்று கடைகளில் கிடைக்கும்) போன்றவற்றை தேவையான இடங்களில் வைத்து அழகுப்படுத்தலாம். சுவரில் மாட்டக்கூடிய ஷோ கேஸ்கள், ஷெல்ப்புகள் விதம் விதமான டிசைனில் அழகிய நிறத் தேர்வுகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி மாட்டுவதும் சிறிய ஹால் / லிவிங் ரூமை அழகாகக் காட்டும்.

திரைச்சீலை 2-3 செட்கள் அழகிய டிசைனில் தைத்து வைத்துக் கொள்ளுங்கள். மாதம் ஒருமுறை மாற்றினால், வீடு பொலிவாக இருக்கும். சோஃபா திண்டுகளின் உறைகளை அவ்வப்போது புதிதாக மாற்றுங்கள்.

கிச்சன்
கிச்சனில், இப்போது எல்லா ஃப்ளாட்டிலும் உள்ளது போல மாடுலர் கிச்சன் மாற்றுவது, பயன்பாட்டுக்கு இலகுவானது மற்றும் பார்ப்பதற்கு அழகானது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடுலர் கிச்சன் கூட வந்து விட்டது. நம் பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல ஆர்டர் செய்து சமையலறையின் அழகையும் இட வசதியையும் மேனேஜ் செய்யலாம்.

கிட்ஸ் ரூம்
குழந்தைகள் ரூமுக்கு ஏற்ற ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய பங்க் பெட் அமைத்து, அழகிய கார்ட்டூன் வடிவ ஸ்டிக்கர்கள் போன்றவை ஒட்டி அழகுப்படுத்தலாம். புத்தகம் வைக்கும் ஷெல்ஃப், நிறைய ஹேங்கர்களுடன் கூடிய வார்ட்ரோப் போன்றவை சிறிய இடத்தில் அதிக பயன்பாடுகளுக்கு உதவும்.

பூஜை அறை
பூஜை ரூமுக்கென பல வித வடிவங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கும் கார்வ்ட் டோர்கள் பயன்படுத்தலாம். அழகிய லுக் கிடைக்கும். ஏகப்பட்ட சுவாமி படங்களை கன்னாபின்னா என்று மாட்டாமல், வடிவமைப்பு மற்றும் அளவுக்கு ஏற்றவாறு சரியான வரிசையில் அமைப்பது, அழகிய சிறிய ஷெல்ஃப்புகளில், விளக்கேற்றும் எண்ணெய், திரி, சூடம், ஊதுபத்தி போன்றவற்றை வைப்பது ஆகியவை பூஜை அறையின் பயன்பாட்டை எளிதாக்கும்.
 
பாத்ரூம்
இப்போது அழகிய குளியலறை என்பது சுத்தத்தின் பிரதிபலிப்பு மட்டுமே அல்ல... ஸ்டேட்டஸ் சிம்பல் என்றும் ஆகி விட்டது. இட அமைப்புக்கு ஏற்றவாறு அழகிய பைப் ஃபிட்டிங்குகள் மற்றும் ஸ்டோரேஜ் ராக்குகளை உபயோகப் படுத்தலாம். வெள்ளை அல்லது வெளிர் நிற பெயின்டுகளே பெரும்பாலும் பாத்ரூமுக்கு பயன்படுத்துகின்றனர். ஏனென்றால், எந்த வித பாத்ரூமுக்கும் ஆடம்பர அல்லது நவீன தோற்றத்தைக் கொடுக்கும் நிறமாக உள்ளவை அவையே.

சுவரில் பதிக்கப்படும் ஷவர்கள், பாத் டப், ஃபாஸெட்ஸ் எனப்படும் ஹேண்ட் ஷவர்கள் போன்றவற்றை இட வசதிக்கும் பண வசதிக்கும் தகுந்தாற்போல அமைத்துக் கொள்ளலாம். சிறிய பாத்ரூமுக்கு ஸ்லைடிங் டோர் வைப்பது பொருத்தமாக இருக்கும். குளியலறையில் சிறிய அழகிய ஒரு மாடர்ன் ஆர்ட் மாட்டி வைப்பது கிராண்ட் லுக் கொடுக்கும். இடம் இருப்பின், ஒன்று அல்லது இரண்டு இண்டோர் தாவரங்களை (சிறிய தொட்டியுடன் கூடியது) பாத்ரூமில் வைக்கலாம். இது குளியலறையை மிக உயிரோட்டத்துடன் மாற்றும் எளிய வழியாகும்.

கவனத்தில் கொள்க...
மொத்தமாக வீட்டு ஃப்ளோரிங்க்குக்காக அதிகம் செலவழிக்க இயலவில்லை எனில், ஆங்காங்கு புதிதாக கார்பெட்டுகளைப் போடலாம். ஹாலில், சீலிங்கில் குறைந்த செலவில் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் எனும் Pop வேலை செய்து புதுப்பொலிவைக் கூட்டலாம். படுக்கை அறை போன்ற உள் அறைகளில் Rugs, Mats, மற்றும்  Window Curtains புதிதாக மாற்றுவதால், அறைகளின் தோற்றம் மாறி நமக்கும் நல்ல ஃபீல் கொடுக்கும். இனிய இல்லப் புதுப்பித்தலுக்கு வாழ்த்துகள். Happy Renovating!   

நம் கற்பனைக் குதிைரயைத் தட்டி எழுப்பினால் போதும்... நிறைய ஐடியாக்கள் தோணும். நம் இல்லத்தை நம் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி அமைப்பதைக் காட்டிலும் மகிழ்ச்சி என்ன இருக்கப் போகிறது?