மனம் இருந்தால் மலர முடியும்!



நம்பிக்கை விதைகள்

-நந்தினி

வாழ்க்கையை வரமாகப் பார்ப்பதும் சாபமாகப் பார்ப்பதும் அவரவர் மனம் சம்பந்தப்பட்டது. சபிக்கப்பட்ட வாழ்க்கையை வரமாக மாற்றிக் கொள்ளத் தெரிந்தவர் பெங்களூருவை சேர்ந்த இளம் தொழில்முனைவோர் நந்தினி. தேடலும் தன்னம்பிக்கையும் இருந்தால், பூஜ்ஜியத்திலிருந்தும் ராஜ்ஜியம் அமைக்கலாம் என்பதற்கு இவரே மிகச் சிறந்த உதாரணம். Uber என்கிற டிராவல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, Uber Dost என்கிற அடையாளத்துடன் கலக்கிக் கொண்டிருக்கிற நந்தினியின், கடந்த கால வாழ்க்கை கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடு பாதை!



இனி ஓவர் டூ நந்தினி!
பெங்களூருல பிறந்து வளர்ந்தேன். அம்மா, அப்பா, நான், ஒரு தங்கைனு சின்ன குடும்பம். அப்பா கோயில்ல பூஜை பண்ணிட்டிருந்தார். அந்த வருமானத்துலதான் குடும்பம் ஓடிக்கிட்டிருந்தது. ரொம்ப சின்ன வயசுலேருந்தே எனக்கு டாக்டராகணும்னு ஆசை. அப்பாவுக்கு வசதி இல்லை. கவர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். பியூசிக்கு மேல படிக்க குடும்ப சூழல் இடம் கொடுக்கலை. டாக்டர் கனவு, நிஜமாவே கனவா போச்சு.

பியூசி முடிச்சதுமே கல்யாணம். கல்யாணமான ஒரு வருஷத்துல அப்பா தவறிட்டார். அம்மாவையும் தங்கையையும் பார்த்துக்கற பொறுப்பு எனக்கு வந்தது. பிரெக்னன்ட் ஆனேன். குடும்பப் பொறுப்பு களும் சுமைகளும்தான் நாளுக்கு நாள் அதிகமானதே தவிர, வாழ்க்கைத்தரம் உயரவே இல்லை. என் கணவர் ஸ்ரீநாத் சாஸ்திரியும் கோயில்ல பூஜை பண்றவர். அவரோட வருமானத்துலதான் நாங்க இத்தனை பேரும் வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைமை... வயசான அம்மா...

கல்யாண வயசுல தங்கை, கைக்குழந்தை, குடும்பம்னு எல்லாத்தையும் நான் தனிமனுஷியா சமாளிச்சாகணும்... யார்கிட்டயும் கை கட்டி வேலை பார்க்கறதுல ஆரம்பத்துலேருந்தே எனக்கு விருப்பம் இல்லை. அதனால வேலை தேடலை. குடும்பக் கஷ்டங்களை சமாளிக்க, என் பங்குக்கு நான் ஏதாவது செய்தே ஆகணும்கிற உந்துதல் மட்டும் இருந்தது.. என்ன செய்யறதுனுதான் தெரியலை...’’ என்கிற  நந்தினி, டிராவல் ஏஜென்சி நடத்துவதில் தொடங்கி, இன்டீரியர் டிசைனிங் செய்வது வரை சின்னச் சின்னதாக பல பிசினஸ்களை முயற்சி செய்திருக்கிறார். எதிலும் எதிர்பார்த்த வருமானம் இல்லை.

``பில்டிங் கான்ட்ராக்ட்ல நல்ல லாபம் வரும்னு யாரோ சொன்னதை நம்பி ட்ரை பண்ணினேன். இன்டீரியர் டிசைனிங்ல எனக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டுங்கிற அடிப்படையில அதைச் செய்தேன். பிசினஸ்ல எந்தப் பின்னணியும் அனுபவமும் இல்லாததால எனக்கு எதுவும் சரியா வரலை. இதுக்கிடையில கடன் வாங்கி, என் தங்கைக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். கடன் கொடுத்தவங்க எல்லாம் திருப்பிக் கேட்க ஆரம்பிச்சாங்க.

என்ன பண்றது, எப்படி மீள்றதுனு தெரியாத நிலையிலதான் ஒரு சொந்தக்காரங்க ஒரு காரை வாங்கி, மஞ்சள் போர்டு போட்டு டிராவல்ஸுக்கு விடச் சொன்னாங்க. அது கொஞ்சம் நல்ல ஐடியாவா தெரிஞ்சது. இருந்த நகையெல்லாம் அடகு வச்சு, இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி, டோயாட்டோ எடியோஸ் வண்டி வாங்கினேன். அது வாங்கின நேரம் எனக்கு Uber கம்பெனி பத்தி தெரிய வந்தது. நான் வாங்கின வண்டியை அந்த கம்பெனிக்கே ஓட விட்டேன்.

அதே கம்பெனியில Uber Dost  Platformனு ஒரு விஷயம் இருக்கிறதையும் கேள்விப்பட்டேன். அதாவது, நமக்குத் தெரிஞ்ச டிரைவர்களை கூட்டிட்டுப் போய் அவங்களோட இணைச்சு விட்டா, அதுக்காக நமக்கு பணம் தருவாங்க. Uber Dost appஐ டவுன்லோடு பண்ணிட்டு, நமக்குத் தெரிஞ்ச டிரைவர்களை அவங்களுக்கு ரெஃபர் பண்ணணும். நாம ரெஃபர் பண்ற டிரைவர் அந்தக் கம்பெனியில சேர்ந்து குறிப்பிட்ட முறைகள் வண்டியை ஓட்டணும்.  நாம ரெஃபர் பண்ற ஒவ்வொரு டிரைவரும் அப்படி இலக்கை முடிக்கிறப்ப ஒவ்வொருத்தர் சார்பாகவும் நமக்கு பணம் வரும்.

முதல்ல இதைக் கேள்விப்படறபோது ‘இதென்ன பிரமாதம்... ரொம்ப ஈஸியா செஞ்சிடலாம்’னு தான் தோணினது. நடைமுறையில அது எவ்வளவு சவாலானதுனு ஃபீல்டுல இறங்கி வேலை பார்க்க ஆரம்பிச்சதும்தான் தெரிஞ்சது...’’ என்கிற நந்தினி, அவற்றையும் தயங்காமல் சொல்கிறார். முதல்ல Uber ஆபீஸ்ல பேசினேன். என்னோட நிலைமையை எடுத்துச் சொல்லி, நான் இந்த வேலையை செய்ய முடிவெடுத்திருக்கிறதாகவும், ஆனா, என்னால எந்தளவுக்கு இதை வெற்றிகரமா பண்ண முடியும்னு தெரியலைன்னும் சொன்னேன்.

உங்களோட ஆர்வமே உங்களால இதைச் செய்ய முடியும்னு காட்டுது. தைரியமா பண்ணுங்க. நாங்க சப்போர்ட் பண்றோம்’னு சொன்னாங்க. அடுத்த நாளே என் கஸினோட களம் இறங்கினேன். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, ஐடி கம்பெனினு எல்லா இடங்களுக்கும் அலைஞ்சேன். எங்கெல்லாம் மஞ்சள் போர்டு போட்ட வண்டிகள் நிக்குதுனு பார்த்து, அதை ஓட்டற டிரைவர்கள்கிட்ட போய் Uber பத்தி எடுத்துச் சொன்னேன்.

சில பேர் ஒழுங்கா பேசுவாங்க. சிலர் அநாகரிகமா பேசுவாங்க. அதையெல்லாம் பொருட்படுத்தினா வேலை பார்க்க முடியாதுனு சகிச்சுக்கிட்டேன். இது சும்மா ஆட்களை சேர்த்து விடற வேலை இல்லை. நான் ரெஃபர் பண்ற டிரைவர்களோட பின்னணி சரியா இருக்கணும். அது பயணிகளோட பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுங்கிறதால ரொம்ப கவனமாதான் அவங்களைத் தேடிப் பிடிச்சுப் பேசி கன்வின்ஸ் பண்ண வேண்டியிருந்தது.

எனக்குத் தெரிஞ்ச ஏரியாக்கள்ல போஸ்டர் ஒட்டியும் டிரைவர்களை தேடினேன். நான் ரெஃபர் பண்ற டிரைவர்களோட பின்னணியை  அப்புறம் கம்பெனியிலயும் சரிபார்ப்பாங்க. தப்பான ஆட்களை காட்டிட்டாங்கன்ற கெட்ட பேர் வந்துடக்கூடா தேங்கிற பயத்தோட தேடினேன். என் உழைப்பு வீண் போகலை. இதோ இன்னி தேதிக்கு 700 டிரைவர்கள் வரைக்கும் ரெஃபர் பண்ணிட்டேன். எனக்குனு ஒரு சின்ன ஆபீஸ், வேலைக்கு நாலு ஆட்கள்னு சின்ன வளர்ச்சியையும் பார்க்கறேன்.

கடன்களை எல்லாம் அடைச்சிட்டேன். என் பொண்ணு ஷ்ரேயாவுக்கு 7 வயசாகுது. சாதாரண ஸ்கூல்ல படிச்சிட்டிருந்த அவளை இப்ப இன்டர்நேஷனல் ஸ்கூலுக்கு மாத்தியிருக்கேன். அவளுக்கு விண்வெளி வீராங்கனை ஆகணும்னு ஆசை. என்னோட டாக்டர் ஆசை கனவா போன மாதிரி அவளோட ஆசையையும் அப்படிப் போக விட மாட்டேன். அவ ஆசைப்படற எல்லாத்தையும் படிக்க வைக்கிற அளவுக்கு இன்னிக்கு எனக்கு தன்னம்பிக்கை இருக்கு...’’ என்கிறவர் தன் அம்மாவுக்கும் கணவருக்கும் நன்றிகளைச் சொல்கிறார்.

அம்மா என் குழந்தையைப் பார்த்துக்கிறதாலதான், என்னால ஹார்டு ஒர்க் பண்ண முடியுது. அதே போல என் கணவர் ஸ்ரீநாத். இப்பவும் கோயில்ல பூஜை பண்ற வேலையைத்தான் செய்திட்டிருக்கார். என்மேல நிறைய அன்பும் அதைவிட அதிகமான நம்பிக்கையும் வச்சிருக்கிறவர். முழுக்க முழுக்க ஆண்கள்கிட்ட பேசி, வளைய வர வேண்டிய வேலை எனக்கு. ஒருநாள்கூட சந்தேகமா பார்த்ததோ, தப்பா ஒரு வார்த்தையைப் பேசினதோ இல்லை.

பிசினஸ்ல ஜெயிக்கணும்னா வெறுமனே தொழில் தெரிஞ்சிருந்தா மட்டும் போதாது. இப்படியொரு குடும்ப சப்போர்ட்  முக்கியம்...’’ -  நெகிழ்கிற நந்தினிக்கு நெஞ்சம் நிறைய கனவுகள்! இப்பவும் நான் டூவீலர்ல தான் வேலைக்குப் போயிட்டு வந்திட்டிருக்கேன். எனக்குனு சொந்தமா ஒரு கார் வச்சுக்கிற அளவுக்கு இன்னும் வாழ்க்கைத்தரம் உயரணும். அது சீக்கிரமே நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.

நான் ரெஃபர் பண்ணின டிரைவர்கள்ல பாரதினு ஒரு லேடியும் இருக்காங்க. இன்னும் நிறைய லேடி டிரைவர்களை வெளியில கொண்டு வரணும்னு நினைக்கிறேன். கடைசியா எனக்கு வாழ்க்கையில நம்பிக்கையை விதைச்ச Uber கம்பெனியோட சி.இ.ஓ. டிராவிஸ் கலானிக்கை ஒரே ஒரு முறை நேர்ல சந்திச்சுப் பேசணும்!’’ நிச்சயம் நனவாகும் நந்தினி!

யார்கிட்டயும் கை கட்டி வேலை பார்க்கறதுல ஆரம்பத்துலஇருந்தே எனக்கு விருப்பம் இல்லை. அதனால வேலை தேடலை. குடும்பக் கஷ்டங்களை சமாளிக்க, என் பங்குக்கு நான் ஏதாவது செய்தே ஆகணும்கிற உந்துதல் மட்டும் இருந்தது... என்ன செய்யறதுனுதான் தெரியலை...

சாதாரண ஸ்கூல்ல படிச்சிட்டிருந்த என் பெண்ணை இப்ப இன்டர்நேஷனல் ஸ்கூலுக்கு மாத்தியிருக்கேன். அவளுக்கு விண்வெளி வீராங்கனை ஆகணும்னு ஆசை. அவ ஆசைப்படற எல்லாத்தையும் படிக்க வைக்கிற அளவுக்கு இன்னிக்கு எனக்கு தன்னம்பிக்கை இருக்கு...

நான் ரெஃபர் பண்ணின டிரைவர்கள்ல பாரதினு ஒரு லேடியும் இருக்காங்க. இன்னும் நிறைய லேடி டிரைவர்களை வெளியில கொண்டு  வரணும்னு நினைக்கிறேன்.