என் சமையலறையில்...



டிப்ஸ்...டிப்ஸ்...

* மதியம் அரைத்த மாவில் இரவே தோசை, இட்லி செய்ய வேண்டுமா? மாவை மூடி வெயிலில் வைத்து
விடலாம் அல்லது மாவு பாத்திரத்தை சூடான நீரிலும் வைக்கலாம். மாவு புளித்து தோசை, இட்லிக்கு தயாராகி விடும்.
- அமுதா அசோக்ராஜா, திருச்சி.



* மாவில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து தோசை ஊற்றினால் தோசை விறைத்துப் போகாமல் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
* சமையலறையில் பல்லிகளின் தொல்லை அதிகமாக இருந்தால், மதிலுக்குக் கீழே வெங்காயச் சருகுகளைப் போட்டால் பல்லி அண்டாது.
- ரெ.கயல்விழி, வடுகப்பட்டி, தேனி.

* உளுந்து வடைக்கு அரைக்கும் மாவு நீர்த்துப் போய் விட்டால், சிறிது அவல் சேர்த்து வடை தட்டினால் சாஃப்ட்டாகவும் இருக்கும். சுவையும் கூடும்.
- எம்.ஏ.நிவேதா, திருச்சி.

* வீட்டுக்கு புதிதாக பெயின்ட் அடித்து, அந்த பெயின்ட் வாடை அடித்தால் வீட்டின் மூலையில் சிறிதளவு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வைத்தால் அது நீங்கி விடும்.
* வறுத்தப் பட்டையை பொடி செய்து நீரில் கலந்து பெண் பிள்ளைகளுக்குக் கொடுத்து வந்தால் கர்ப்பப்பை பலம் பெறும்.
- ஆர்.அம்மணி, தேனி.

* தோசை மிளகாய் பொடி, ஊறுகாய்க்கான மிளகாய் பொடி ஆகியவற்றுக்கு காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் அரைக்கும் போது சரியாக அரைபடாது. முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். பிறகு அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து அரைக்கலாம்.
- எஸ்.பத்மாவதி, சிட்லபாக்கம், சென்னை-64.

* பாகற்காய் குழம்போ, கூட்டோ வைக்கும் போது கேரட்டை சிறுசிறு துண்டு களாக நறுக்கி அதில் போட்டால் பாகற்காயின் அதிக கசப்பு தெரியாது.
* சமையலில் தாளிக்கும் போது கடுகு போடுவதற்குப் பதிலாக ஓமத்தைப் பயன்படுத்தினால் நல்லது. செரிமானம் சுலபமாகும். வாய்வும்
உண்டாகாது.
- கே.ராஜேஸ்வரி, திருச்சி.

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்தால், டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
- மு.சுகாரா, தொண்டி.

* சீரகம், மிளகு, எள் இவற்றை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்து நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டுடன் சேர்த்து, காலை-மாலை சாப்பிட வயிறு உப்புசம், உடல் வலி, அஜீரணம், களைப்பு ஏற்படாது. இரும்புச்சத்து கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகும்.
- சு.கெளரிபாய், திருவள்ளூர்.

* சமையல் செய்யும் போது சூடுபட்டு விட்டால் உடனடியாகத் தேனை எடுத்துத் தடவி விட்டால் குணம் உடனே தெரியும்.
- ஹெச்.ராஜேஸ்வரி, மாங்காடு.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும் போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்து விடுவதோடு, சுவையாகவும் இருக்கும்.
-  கே.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.