கல்விக் கடன்... மாணவர்களின் உரிமை!



கல்வி வேலை வழிகாட்டி

பொருளாதாரத்தால் ஏழை மாணவனுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாகி விடக்கூடாது என்கிற உயர்ந்த நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டம் கல்விக் கடன். இந்தியாவிலேயே இத்திட்டத்தை அதிகம் பயன்படுத்தியது கேரள, தமிழக மாணவர்கள்தான். கல்விக் கடன் என்பது மாணவர்களுக்கு வங்கிகள் காட்டும் சலுகையல்ல... மாணவர்களின் உரிமை. கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்பது எப்படி? யாருக்கெல்லாம் கடன் கிடைக்கும்? வங்கி அதிகாரிகள் அலையவிட்டால் யாரிடம் புகார் செய்வது?



அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் சேரும் எல்லா மாணவர்களுக்கும் கல்விக் கடன் கிடைக்கும். பொறியியல், மருத்துவம், கலை அறிவியல், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஐ.ஐ.டி., நர்சிங் உள்பட அனைத்துப் படிப்புகளுக்கும் கடன் உண்டு. பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., டி.டி.பி. போன்ற குறுகிய கால வொகேஷனல் கோர்ஸ் படிக்கும் மாணவர்களும் கடன் பெறலாம்.

அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட எந்த வங்கியையும் அணுகி கல்விக் கடன் விண்ணப்பம் பெறலாம். வங்கி மேலாளர் விண்ணப்பம் தர மறுத்தால், அந்த வங்கியின் இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொடுக்கலாம். விண்ணப்பத்தைக் கொடுக்கும்போது வங்கியிடம் இருந்து, அதற்கான ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். வங்கி அதிகாரிகள் விண்ணப்பத்தை பெற மறுத்தால், பதிவு அஞ்சலில் மேலாளருக்கு அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பத்தோடு, மாணவர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு போட்டோ 5, ரேஷன் கார்டு நகல் 2, மாணவர் மற்றும் பெற்றோரின் அடையாள அட்டை நகல், வருமானச் சான்றிதழ் (அசல்), இருப்பிடச் சான்றிதழ், 10ம் வகுப்பு, +2 மதிப்பெண் பட்டியல் நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட கட்டண விவரங்கள் (அசல்), பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட கவுன்சலிங் கடிதம் (நகல் எடுத்து வைத்துக்கொண்டு அசல் கொடுக்கவும்), சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், கல்லூரியில் கட்டணம் செலுத்தியிருந்தால் அதற்கான ரசீது, முதல் தலைமுறை பட்டதாரி எனில், அதற்கான சான்றிதழ், மாணவர், பெற்றோரின் பான்கார்டு நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

அனைத்து நகல்களிலும் கெஜடட் அதிகாரியின் சான்றொப்பமும் முத்திரையும் தேவை. இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் ரூ. 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் பெறலாம். வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ. 20 லட்சம் வரை கடன் பெற முடியும். கல்விக்கட்டணம், விடுதி வாடகை, சாப்பாட்டுச் செலவு, தேர்வுக் கட்டணம், நூலகக் கட்டணம், ஆய்வுக்கூடக் கட்டணம், சீருடை, புத்தகங்கள், கல்விக்கான கருவிகள் மற்றும் உபகரணங்கள், காஷன் டெபாசிட், திருப்பித் தரக்கூடிய டெபாசிட் உள்ளிட்ட ரசீது தரக்கூடிய கட்டணங்கள், பயணச் செலவு, கணினி, மடிக்கணினி வாங்க, கல்விச் சுற்றுலா, மாணவர் இன்சூரன்ஸ் பிரிமியம் ஆகியவை கல்விக்கடனில் அடங்கும்.

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 2 மாணவர்கள் விண்ணப்பித்தால் சில வங்கிகள் ஒருவரை தட்டிக் கழிக்கின்றன. ஒரு குடும்பத்தில் எத்தனை மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தாலும் வழங்க வேண்டும் என்பதே விதி. ரூ.4 லட்சம் வரை கல்விக் கடன் பெற எந்த முன்பணமும் கட்டத் தேவையில்லை. அதற்கு மேல் கடன் வாங்கினால் கடன் தொகையில் 5 சதவிகிதம் முன்பணமாக (மார்ஜின்) கட்ட வேண்டும்.

வெளிநாடாக இருந்தால் 15 சதவிகிதம். 4 லட்சம் வரை கடன் பெற உத்தரவாதம் அவசியமில்லை. 4 லட்சத்துக்கு மேல் ஏழரை லட்சத்துக்குள் கடன் தொகை இருக்குமானால் மூன்றாம் நபர் உத்தரவாதம் தேவை. ஏழரை லட்சத்துக்கு மேல் சொத்து உத்தரவாதம் அவசியம். வங்கிக்கு வங்கி வட்டியில் சற்று வேறுபாடு இருக்கலாம். 12 சதவிகிதத்தில் இருந்து அதிகபட்சம் 14 சதவிகிதம் வரையே வட்டி.

ஆண்டு வருவாய் நான்கரை லட்சத்துக்குக் குறைவாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அவர்கள் படிப்பு முடித்து, பணியில் சேர்ந்து கடன் கட்டத் தொடங்கும் காலம் வரை (அனுமதிக்கப்பட்ட அவகாசம் வரை) மத்திய அரசே வட்டித்தொகையை மானியமாக வழங்கி விடுகிறது. தாசில்தார் அளவுற்ற அதிகாரியிடம் இருந்து வருமானச் சான்றிதழ் பெற்று வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. அரசு ஒதுக்கீட்டில் (மெரிட்) தான் விரும்பிய கல்லூரி கிடைக்கவில்லை என்று நிரூபிக்க வேண்டும். படிப்பு முடிந்து ஓராண்டு அல்லது வேலைக்குப் போய் 6 மாதம்... எது முதலில் வருகிறதோ, அக்காலத்திலிருந்து கடனை கட்டத் தொடங்க வேண்டும். 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் கடனை கட்டி முடித்துவிட வேண்டும். உரிய காலத்தில் வேலை கிடைக்காத பட்சத்தில் வங்கி மேலாளரை அணுகி தெரிவிக்கலாம்.

அவகாசம் நீட்டிக்கப்படும். எப்படியாயினும் வங்கியோடு தொடர்பில் இருப்பது முக்கியம். விண்ணப்பம் வழங்கிய நாளிலிருந்து 15 முதல் 30 நாட்களுக்குள் வங்கியிலிருந்து பதில் வரும். வராத நிலையில் மண்டல மேலாளருக்கு புகார் செய்யலாம். தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேள்வி எழுப்பலாம். விண்ணப்பத்தில் குறைபாடுகள் இருந்தாலே ஒழிய கல்விக் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாது. நிராகரித்தாலும் எழுத்துப்பூர்வமாக, ‘ஏன் நிராகரிக்கப்பட்டது’ என்ற காரணம் தரவேண்டும். கல்விக் கடன் தர மறுத்தாலோ, அலைக்கழித்தாலோ, அலையவிட்டாலோ Reserve Bank of India, Fort Glacis, Chennai­-600001 (: 044­-25399170 / 25395963) என்ற முகவரியில் புகார் செய்யலாம்.

- வெ.நீலகண்டன்