ஸ்டார் தோழி



ஒரு தோழி பல முகம்

-சுந்தரி செல்வராஜ்

நான்...
‘அன்பே சிவம்’, ‘இதுவும் கடந்து போகும்’ - இவற்றையே பெரிதும் நம்புபவள்.  எளிமை, இனிமை, புத்துணர்வு, புன்சிரிப்பே நான். சிறந்த தொழில் முனைவோராக அறியப்பட்டாலும், தாயாக, தாரமாக, மகளாக, தோழியாக, சகோதரியாக இருப்பதையே பெரிதும் விரும்பும் சாதாரண மனுஷி.



பள்ளி...
மாநிலத்தின் முதல் மாணவியாக வந்தவரைப் பயிற்றுவித்த, எந்த ஒரு கல்வித் தந்தைக்கும் சொந்தமில்லாத சிதம்பரம் அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியே நானும் படித்த பள்ளி. என்றும் மறக்க இயலாத ஆசிரியைகள், பெரிய தமிழ் அம்மா, சின்ன தமிழ் அம்மா கனகவல்லி டீச்சர். பெரிய கேம்ஸ் டீச்சர் திலகவதி. பயாலஜி மிஸ் பரிமளா டீச்சர் (அழியாத கோலங்கள் இந்து மிஸ் போல இவங்க எனக்கு எழுதிய கடிதம் இன்றும் பத்திரமாக உள்ளது), இங்கிலீஷ் மிஸ், மிஸஸ் சாம் டீச்சர்... பஞ்ச பாண்டவிகள் என்ற பட்டப்பெயருடன் படிப்பிலும் சோடை போகாத வால் பட்டாளம்... N.C.Cயில் 5 ஆண்டு பயிற்சியோடு பெஸ்ட் கேடட் (படுக்கை விரிப்பு மாற்றும் போதெல்லாம் பயிற்சி நினைவில்!), ‘ஸ்கூல் பீப்பிள் லீடர்’ என பலவிதத்திலும் என்னை, என் தகுதிகளை, திறமைகளை வளர்த்து விட்டதோடு, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வித்தை (விதை)
பள்ளியில்தான் விதைக்கப்பட்டது.

வசிப்பது...
பிரெஞ்சு+தமிழர் கலாசாரம் இணைந்து காணப்படும் புதுச்சேரி. கடல் உணவுகளோடு, வெளிநாட்டினரையும் கவரும் வீகன் உணவுக் கூடங்களும், இயற்கை உணவுக்கூடங்களும் பிரபலம். சித்தர் பலர் வாழ்ந்த ஊர். மணற்குள விநாயகர் கோயிலும், அரவிந்தர், அன்னை ஆசிரமமும், வில்லியனூர் மாதா கோயிலும் நூற்றாண்டுகள் கடந்த சர்ச்சுகளும், நேர் நேரான வீதிகளும், பசுமை பேசும் கட்டிடக்கலையும் கொண்ட சுற்றுலாத்தலம்.

பிடித்த புத்தகங்கள்
சுஜாதாவின் எப்போதும் பெண், கற்றதும் பெற்றதும், லா.சாரா.வின் சிந்தாநதி, ஜெயகாந்தனின் சில நேரத்தில் சில மனிதர்கள் மற்றும் சிறுகதைகள், கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பாலகுமாரனின் தாயுமானவன், கரையோர முதலைகள், சேவல் பண்ணை, பி.கே.பி.யின் திண்ணை வைத்த வீடு, தொட்டால் தொடரும் மற்றும் ஸ்டெல்லா புரூஸ், சுபா, எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணதாசன், சாவி, வித்யா சுப்ரமணியம், சிவசங்கரி, வாஸந்தி...  இப்படி என் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அழகிய சின்னஞ்சிறு கூடு கணவர் விற்பனை பிரிவில் பணிபுரிந்து, சுயமாக தொழில் புரிபவர். நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்றவர். 22 வருடங்களாக கட்டிடங்களின் மருத்துவர் என்றே அழைக்கப்படுகிறார். வாட்டர் ப்ரூஃபிங் துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர். நாங்கள் மாமா மகன், அத்தை பெண்... டாம் அண்ட் ஜெர்ரி ஆக நிமிடத்துக்கொரு சண்டை போட்டுக் கொண்டாலும், அடியோட்டமாக ஒரு புரிதலும் அன்பும் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரே மகள் ஐ.டி. இன்ஜினியரிங் படித்து பல்கலையில் தங்கம் வாங்கியவள். ஓவியத்தின் பால் தீராக் காதல். பால்ஸ்ரீ விருதுக்காக தென்னகத்திலிருந்து தேர்வாகி டெல்லி சென்று வந்தவள். 2 வருடம் ஐ.டி. வேலை பார்த்தவள், தன்னுடைய ஓவியத்திறமைக்கும் கிரியேட்டிவிட்டிக்காகவும் அந்த வேலையை விட்டு வந்தவள்...

பிறந்த ஊர்
பிறந்தது சென்னை இசபெல்லாவில் என்றாலும் பூர்வீகம் தஞ்சை, நாகை மாவட்டம்தான். சொந்தங்கள் எல்லோரும் அங்குதான். அப்பா விவசாயக் குடும்பத்திலிருந்து வந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து, அங்கேயே வாழ்ந்ததால், வளர்ந்ததெல்லாம் நடராஜர் நடனமாடும் சிதம்பரத்தில்தான். எப்ேபாதும் படிப்பதற்காகவும், பல்கலைக்கழகத்தில் சேரவும், செமினார் வகுப்புகளில் கலந்துகொள்ளவும் என வீடு முழுக்க உறவினர், நண்பர் கூட்டமாக ஜே ஜே என்றே இருக்கும். அப்பா மறைந்தாலும் தங்கை அவர் விட்ட இடத்தை நிரப்புகிறாள்.

சமையல்
அம்மா, ஆத்தா கை பக்குவம் இப்போது என் கைகளிலும் வந்துவிட்டது என வீட்டினர் சொல்வதுண்டு. கடனே என சமைக்காமல் மனம் விரும்பி சமைப்பேன். எங்கு சாப்பிட்டாலும் நன்றாக இருந்ததை உடனடியாக மனதார பாராட்டி, புது வகையாக இருந்தால் ெசய்முறையும் கேட்டு வருவேன். சென்னையில் மகளுடன் தங்கியிருந்தபோது ‘குங்குமம் தோழி’யில் பார்த்து ‘ஹோம்மேட் சாக்லெட்ஸ்’ செய்ய கற்றுக் கொண்டேன். எனது கண்டுபிடிப்பால் புதுப் புது ரகங்கள் உருவாக்கினேன். சாக்லெட் பொக்கேகள் செய்து விற்பனையும் செய்கிறேன்.

குழந்தைகளுக்கான பாரம்பரிய சத்துணவு போட்டியில் (ஜாம், சாஸ் சேர்க்காமல்) புழுங்கல் அரிசி இடியாப்பம் பலவகை ருசிகளில் செய்து அக்கார்டு சீஃப் செஃப் கிருஷ்ணகுமார் கரங்களில் முதல் பரிசு வென்றதும், புதுவை சுற்றுலாத்துறையும் அஷோக் ஹோட்டலும் இணைந்து நடத்திய போட்டியில் தஞ்சை, காரைக்கால் மாவட்ட தேங்காய் திரட்டுப்பால் செய்து முதல் பரிசை வென்றதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும், என் மகள் என் அம்மாவிடம், ‘பாட்டி நீங்க செய்யற மாதிரி ஒரு பருப்பு கூட கெட்டியா ஒழுங்கா செய்ய தெரியவில்லை உங்க பொண்ணுக்கு’ என்ற பாராட்டுப் பத்திரமும் உண்டு!

பிடித்த சினிமா
இருகோடுகள், தில்லானா மோகனாம்பாள், 16 வயதினிலே, அழியாத கோலங்கள், புதுமைப்பெண், மௌன ராகம், நினைத்தாலே இனிக்கும், அவள் ஒரு தொடர்கதை, சலங்கை ஒலி, பேசும் படம், முதல் மரியாதை, அக்னி சாட்சி, தப்புத் தாளங்கள், அன்பே சிவம், அபியும் நானும், 36 வயதினிலே, டூயட், இருவர்...

பிடித்த பெண்கள்    
வீட்டில்... ஆத்தா மதனாம்பாள் காவேரி என்கிற செல்லம்மா பாட்டி.வெளியில்... டாக்டர் சாந்தாம்மா, இளவரசி டயானா, நடிகை ஸ்ரீதேவி...

காமெடி கலாட்டா
* நானும் சின்ன தம்பியும் சேர்ந்து வீட்டிலேயே சாக்லெட் செய்கிறோம் என்று 2 டின் மில்க்மெய்டை கொட்டி, முந்திரிப் பருப்புகள் போட்டு, அதிக வெண்ணெய் சேர்த்தால் அதிகம் ருசிக்கும் என சேர்த்து கோகோ பவுடரையும் கொட்டி உருக்கி ஊற்றி வைத்தால் உறையவே இல்லை. பாயசம் போல தட்டிலும் கப்பிலும் மாற்றி மாற்றி ஊற்றிப் பார்த்தும் சரிவராததால், காகமும் நரியும் போல ஸ்பூனால் எடுத்து குடித்தோம். இன்றைய சில்க் சாக்லெட்டின் முன்னோடி அதுதான். காப்புரிமை வாங்கி வைக்காமல் விட்டு விட்டோம்!
* ஜாம் செய்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க, அது கத்தி வைத்தும், கரண்டியால் சுரண்டியும் வரவில்லை. பாட்டிலை உடைத்ததுதான் மிச்சம்!
* கேக் செய்து ஆசையாகக் கொடுத்தால் எல்லோருமாக ‘பிரெட் சூப்பர்’ என வெறுப்பேத்தினார்கள்.

உடலும் மனமும்
மகள் பிறந்த 9ம் மாதத்தில் தொடங்கி யோகா செய்கிறேன். சில வருடங்களுக்கு முன் யோகாவில் ஆசிரியப்பயிற்சி பட்டயப் படிப்பும் முதல் வகுப்பில் முடித்தேன்.  ஹைபோ தைராய்டு இருந்தும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள  யோகாவும் தியானமுமே உதவுகிறது. அதோடு, காலை மாலை அரை மணி நேரம்  வீட்டினுள்ளே 8 நடைப்
பயிற்சி செய்கிறேன். மிகுந்த பலன்!

விரிவாகப் படிக்க...  kungumamthozhi.wordpress.com