உயிர் சுத்தம்



களத்தில் தோழிகள்

-திவ்யா

மனிதக்கழிவை மனிதர்களைக் கொண்டே அகற்றுவது என்பது மனிதத்துக்கே இழுக்கானது. சாதியப் படிநிலையில் தாழ்த்தப்பட்ட மக்களே இத்துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ‘கழிவுநீர் தொட்டி / பாதாளச் சாக்கடையை துப்புரவு மேற்கொள்ளும்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இறப்பு’ என்கிற செய்தியை நாம் அதிகம் காண்கிறோம். எல்லாச் செய்திகளையும் போல இதுவும் ஒரு செய்தி எனக் கடந்து விடுகிறோம்.



இறந்து போன தொழிலாளியின் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்தான கேள்விகள் நமக்குள் எழுவதில்லை. நாற்று நடுவதற்கும், நெல் அறுவடைக்கும் இயந்திரங்கள் களமிறங்கியிருக்கும் நிலையில், துப்புரவுப் பணியில் மட்டும் மனிதர்கள் ஏன்? இந்தக் கேள்வியோடு அரசு மற்றும் மக்களின் மனசாட்சியின் மீது கேள்வி எழுப்பும் விதமாக ஆவணப்படம் ஒன்றினை இயக்கியிருக்கிறார் திவ்யா.

மதுரையில் வசித்து வரும் இவர், தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர். கழிவுநீர் தொட்டி / பாதாளச் சாக்கடை துப்புரவுப் பணியின் காரணமாக உயிரிழந்தவர்களை மையமாக வைத்து இவர் இயக்கியிருக்கும் ஆவணப்படம் பற்றிப் பேசுகிறார்.

‘‘கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மதுரை மாநகராட்சியில் பணி புரிந்து வந்த இரண்டு துப்புரவுப் பணியாளர்கள், துப்புரவுப் பணியின்போது விஷவாயுத் தாக்குதலுக்கு ஆளாகி இறந்தனர். 2013ம் ஆண்டு மனிதக்கழிவை மனிதரே அகற்றுவதற்கு தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அச்சட்டத்தின்படி இது குற்றமாகும்.



இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறி இடதுசாரி அமைப்பின் சார்பில் மதுரை அரசு மருத்துவமனையின் பிணவறையின் முன்பு போராட்டம் நடத்தினோம். மூன்று நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு அரசு அதிகாரிகள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர்.

2013ம் ஆண்டு மனிதக் கழிவை மனிதர்களைக் கொண்டு அகற்றுவதற்குத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அதற்கு முரணாக 2014ம் ஆண்டு கழிவுநீர் தொட்டி / பாதாளச் சாக்கடை துப்புரவின் போது விஷவாயு தாக்கி இறப்பவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்கிற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. அதன் படி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இருந்தாலும் முதல் தகவல் அறிக்கையில் விஷவாயுத் தாக்கி இறந்ததாக பதிவு செய்யாமல் சந்தேக மரணம் என்றே பதிவு செய்திருக்கின்றனர். இப்போராட்டத்துக்குப் பின்னர்தான் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. துப்புரவுத் தொழிலாளி களின் இறப்பு இந்தச் சமூகத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்துவதில்லை என்பது வேதனைக்குரியது.

நான் ஆய்வைத் தொடங்கிய 2015 மே மாதம் முதல் 2016 பிப்ரவரி மாதத்துக்குள் தமிழகத்தில் விஷவாயுத் தாக்குதலின் காரணமாக 8 தொழிலாளர்கள் மரணமடைந்தனர். இந்த மரணங்கள் மற்றும் அதன் காரணமாக பாதிக்கப்பட்ட அவர்களின் குடும்பம் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்த வேண்டும் என நினைத்ததன் செயல் வடிவம்தான் இந்தப் படம்’’ என்கிறார் திவ்யா.

திவ்யா ஆவணப்படத்துக்கான பணியைத் தொடங்கிய போது 8 பேராக இருந்த துப்புரவுத் தொழிலாளிகளின் மரணம், சமீபத்தில் நடந்த காரப்பாக்கம் உணவகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்திகரிக்கும்போது இறந்த 2 தொழிலாளர்களோடு சேர்த்து 15 பேராக உயர்ந்திருக்கிறது. ‘‘இந்த 15 தொழிலாளர்களில் பலர் திருமணமானவர்கள். சராசரியாக 2-3 குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணமாகி சில மாதங்களே ஆனவர்களும், காதலித்துக் கொண்டிருப்பவர்களும் இதனுள் அடக்கம்.

இவர்களின் இறப்பு அவர்களின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையே சிதைத்திருக்கிறது. குழந்தைகள் படிப்பை நிறுத்தி விட்டு குடும்ப பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க கூலி வேலைக்குச் சென்று விட்டனர். எதனால் இவர்கள் இறந்தார்களோ, அதே பணியைத்தான் மனைவிகளுக்கும்  வழங்குகிறார்கள். இறந்து போன 15 பேரில் 13 பேரது குடும்பங்களைச் சந்தித்து மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் நேர்காணல் புரிந்திருக்கிறேன்.

திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவனை இழந்த இளம் விதவை கை நடுக்கத்துடன் தங்களது திருமண ஆல்பத்தைப் புரட்டிக் காட்டிய காட்சியை என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை. 15 பேரில் 2 பேர் வட இந்தியர் என்பதால் அவர்களுடைய குடும்பத்தைப் பதிவில் வைக்க இயலவில்லை’’ என்கிறார். துப்புரவுப் பணியாளர்களின் நிலை இன்று எப்படி இருக்கிறது?

‘‘1991ம் ஆண்டு தனியார் மயமாக்கம் அமல்படுத்தப்பட்ட போது துப்புரவுத் தொழில்தான் முதலில் தனியார்மயமாக்கப்பட்டது. 90 சதவிகித துப்புரவுத் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில்தான் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சராசரியாக 5 ஆயிரம் ரூபாய்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. அந்தக் குறைந்த ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துவது என்பதே பெருந்துயர். தொழிலாளர்களுக்கான எந்த உரிமையும் இவர்களுக்கு இல்லை.

இப்பணியில் 80-90 சதவிகிதம் பெண்கள்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெண்கள்தான் கூலி அதிகமாகக் கேட்க மாட்டார்கள், அதிக நேரம் வேலை வாங்கலாம் என அவர்களின் அறியாமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேஸ்திரி, மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரால் பெண் துப்புரவுத் தொழிலாளர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் கூட பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இரவு நேரங்களில் இப்பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை’’ என துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை குறித்து விவரித்தார் திவ்யா.

துப்புரவுப் பணி மற்றும் அது சார் மரணங்கள் பெரிதாகக் கண்டு கொள்ளப்படாததற்கு முக்கியக் காரணம் சாதிய அமைப்புதான் என்கிறார் திவ்யா. ‘‘பெரும்பான்மையாக அருந்ததியர்... மேலும் குறவர், ஒட்டர், பறையர், போயர் என தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படும் மக்களே இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். துப்புரவுப் பணிக்கென பல இயந்திரங்கள் வந்த பிற்பாடும் இங்கு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பதற்கான காரணம் சாதிய ரீதியில் விளிம்புநிலை மக்களை இழிநிலையிலேயே வைத்திருப்பதற்காகத்தான்.

இச்சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் கூட தீண்டாமைக்கு ஆளாகிறார்கள். ஆசிரியர்களே கூட அவர்களைத்தான் பள்ளிக்கூடத்தின் கழிவறையை சுத்தம் செய்ய வைக்கின்றனர். இது போன்ற தீண்டாமை கொடுமை காரணமாகவே அவர்கள் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர். துப்புரவுப் பணியை குறிப்பிட்ட சமூகத்தினருக்கான பணி என்கிற கட்டமைப்பை உடைத்து, அதை
அத்தியாவசியப் பணியாக மாற்ற வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சமூக மதிப்பும், நியாயமான ஊதியமும் வழங்கப்பட வேண்டும்.

துப்புரவுப் பணியை முழுவதும் நவீனமயப்படுத்தும்போதுதான் இது போன்ற விஷவாயு தாக்குதலுக்குள்ளான மரணங்களைத் தவிர்க்க முடியும். இவற்றைத்தான் இந்த ஆவணப்படத்தின் வழியே கூற விழைகிறேன். திருமாவளவன், அதியமான், ஜக்கையன், நாகை திருவள்ளுவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாமுவேல்ராஜா போன்ற அரசியல் தலைவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்காக இயங்கும் அமைப்பு ரீதியானவர்களிடம் நேர்காணல் புரிந்திருக்கிறேன்’’ என்கிறார்.

ஆவணப்படம் எடுப்பதற்கான செலவு முழுவதையும் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தைக் கொண்டுதான் (Crowd funding) எடுத்திருக்கிறார். இதற்கு முகநூல் தனக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது எனக் கூறுகிறார். ‘‘ஆவணப்படம் எடுக்க முடிவு செய்ததுமே அது குறித்த அறிவிப்பை எனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தேன். பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து தங்களால் இயன்ற தொகையைக் கொடுத்து உதவினர். அவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் நேர்மையாக துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்’’ என்கிறார் திவ்யா.

திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவனை இழந்த இளம் விதவை கை நடுக்கத்துடன் தங்களது திருமண ஆல்பத்தைப் புரட்டிக்காட்டிய காட்சியை என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை.

- கி.ச.திலீபன்
படங்கள்: டி.ஏ.அருள்ராஜ்