ஓடு பெண்ணே ஓடு!



குங்குமம் டாக்டர்

எளிமையானது... செலவில்லாதது... உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை தரக்கூடியது ஓட்டப்பயிற்சி!



இதயத்துக்கு இதம்கொழுப்பு, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஓட்டப்பயிற்சி, உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரித்து, இதய தசைகளை வலுவாக்குகிறது. தொடர்ந்து மேற்கொள்ளும் ஓட்டப்பயிற்சியால், உடலிலுள்ள ரத்தத்தின் அளவு 10லிருந்து 15 சதவிகிதமாக அதிகரிக்கிறது.

ஓட்டம்... உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு என்றும் நண்பன்! மார்பகப் புற்றுநோய் ஆபத்து குறையும் நார்வே ட்ராம்சோ பல்கலைக்கழகம் 25 ஆயிரம் பெண்களிடத்தில் 10 ஆண்டுகாலம் மேற்கொண்ட ஆய்வில், வாரம் 4 மணி நேரம் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு, மற்ற பெண்களைக் காட்டிலும், புற்றுநோய் அபாயம் 37 சதவிகிதம்  குறைவதாக அறியப்பட்டுள்ளது.

இளமை செழிக்கும்
அமெரிக்காவின் ஸ்டாண்டர்டு பல்கலைக்கழகத்தின் 21 ஆண்டுகால ஆய்வில், முதுமைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஓட்டப்பயிற்சி பெரும் பங்கினை வகிப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு முன்கூட்டிய மரணம் பாதியாகக் குறைவதோடு, நீண்ட ஆயுளுடன் சுறுசுறுப்பாகஇருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆற்றலான மூளை அமையும்
வேகமான ஓட்டம் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் மற்றும்  பிராணவாயுவை அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல், மூளைத்திறன் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை ட்ரெட்மில்லில் ஓடச் செய்தபின், அவர்களுக்கு கொடுத்த வேலைகளை விரைவாகவும் திறம்படவும் செய்ததாகக் கூறுகின்றனர்.

உறவு சிறக்கும்
ஓட்டப்பயிற்சி இனப்பெருக்க உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு வழிவகுக்கிறது.

நல்ல மனநிலை உண்டாகும்
சீரான ஓட்டத்தை மேற்கொள்ளும்போது, மூளையில் உள்ள எண்டோர்பின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிப்பதால், மனஅழுத்தம் குறைந்து, மனநிலையின் போக்கிலும் நல்ல மாற்றம் ஏற்படும்.

ஆரோக்கிய பிரசவம் கிட்டும்
கருவுற்ற பெண்கள் நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால், நல்ல ஆற்றல் கிடைக்கிறது. இதனால் ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கும். கர்ப்பகால நீரிழிவு, வெரிகோஸ்-வெயின், குறைமாத பிரசவம், மலச்சிக்கல் மற்றும் செரிமானக்கோளாறுகள் குறைகின்றன. ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஏற்கனவே ஓட்டப் பயிற்சியை மேற்கொள்பவர்கள் மட்டுமே கர்ப்பகாலத்தில் தொடர வேண்டும். கருவுற்ற பெண்கள் முதன்முறையாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபடக்கூடாது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தும்
வாரம் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் ஓடும் பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சி நிற்கும் நிலையில் ஏற்படும் பிரச்னைகள் குறைவதாக Fertility and Sterility மருத்துவ இதழ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இப்பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வு போன்றவை உடற்பயிற்சி செய்வதால் குறைவதாக மற்றொரு அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உடலை கட்டுக்கோப்பாக வைக்கலாம்
மற்ற உடற்பயிற்சிகளைவிட, ஓட்டத்தில் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால் தொப்பை குறைந்து, அடி வயிற்றுத்தசைகள் இறுக்கமடைந்து ட்ரிம் ஆக முடியும். அரைமணி நேர ஓட்டப்பயிற்சியின் மூலம் 300 கலோரிகளை குறைக்க முடியும்.

ஒல்லி பெல்லி ஆகலாம்
ஓடுவதன் மூலம், தொடை, இடுப்பு மற்றும் கெண்டைக்கால் பகுதியிலுள்ள அதிகப்படியான கொழுப்புகளைக் குறைத்து சிம்ரன் இடுப்பையும், வாழைத்தண்டு கால்களையும் பெறலாம். அடிவயிற்றில் படிந்திருக்கும் கொழுப்பு களையும் ஓட்டம் கரைப்பதால் அழகான தட்டையான வயிற்றையும் பெறலாம்.

ஓடும்போது ரத்த ஓட்டம் அதிகரித்து, சருமப் பகுதிக்கு கிடைக்கும் அதிகப்படியான ஆக்ஸிஜனால் பொலிவான சருமத்தையும் பெற முடியும். ஓட்டத்தில் கைகளுக்கும் பயிற்சி கிடைப்பதால் மேற்புறக் கைப்பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் கரைகின்றன.

வெற்றியை எட்டலாம்
உடற்பயிற்சி உங்கள் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதால் கூட்டு முயற்சியை வளர்க்கிறது. சவாலான வேலைகளையும் எடுத்துச் செய்யும் மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள முடிவதால் எளிதில் வெற்றியாளராக முன்னேற முடியும். உடற்பயிற்சியை விரும்பிச் செய்யும் போது ஒரு சுதந்திர உணர்வை உணர முடிவதால், உங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும். வாழ்த்துகள்!