காற்றினிலே வரும் வாசம்!



கீதா அஷோக்

மருத்துவத்துக்கு அடுத்த படியாக அதிக பணம்  பார்க்கிற துறை அழகுக்கலை. தொட்டாலே பணம் பார்க்கக்கூடிய அழகுக் கலையைப் படித்து முடித்தும் அதில் மனம் லயிக்க  முடியாமல், விதிவிலக்காக யோசித்திருக்கிறார் கீதா அஷோக். அழகுக் கலையை ஆரோக்கியக் கலையாக மாற்றி யோசித்த கீதா, அதன் தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுத்தது அரோமாதெரபி என்கிற வாசனை சிகிச்சையை! Nothing is impossibleஎன்பதே அரோமாதெரபியின் தாரக மந்திரம். அதையே தனக்கான மந்திரமாகவும் கொண்டு இயங்குகிறார் கீதா. எப்பேர்பட்ட மன அழுத்தமும் கீதா அஷோக்கின் அறையில் அரை மணி நேரம் அமர்ந்திருந்தால் மாயமாகிறது. அறையில் அலையும் வாசனையில் மனது லேசாகிறது.‘‘பூர்வீகம் திண்டுக்கல். எம்.காம்.

முடிச்சிருக்கேன். இயல்புலேயே எனக்கு இயற்கை மேல, இயற்கையான ஆரோக்கியத்தின் மேல அக்கறையும் ஆர்வமும் உண்டு. அழகுக்கலை படிக்கணும்னு விரும்பினேன். எங்க ஊர்ல அதுக்கான வாய்ப்புகள் இல்லாததால சென்னையில ஒரு பிரபல அழகுக்கலைப் பயிற்சிப் பள்ளியில படிச்சேன். அங்கே நான் பார்த்த, கத்துக்கிட்ட விஷயங்கள் சங்கடத்தைக் கொடுத்தது. பெரும்பாலான சிகிச்சைகள் கெமிக்கல் கலப்புதான் பிரதானமா இருந்தது. அந்த மாதிரி சிகிச்சைகளை தொடர்றதுல எனக்கு உடன்பாடில்லை. இயற்கையோட இணைஞ்ச, ஆரோக்கியமான அழகு சிகிச்சை சாத்தியமாங்கிற என் தேடல் தொடங்கினது.

அரோமாதெரபி பத்திக் கேள்விப்பட்டேன். அரோமான்னா வாசனை. ஒரு தாவரத்தோட அத்தனை பாகங்கள்லேருந்தும் எடுக்கப்படற எண்ணெய்களை வச்சு செய்யப்படற அழகு மற்றும் ஆரோக்கிய சிகிச்சை. பொய்யான வாக்குறுதிகளுக்கு இதுல இடமில்லை. இதெல்லாம் அரோமாதெரபி மேல என் ஆர்வத்தை அதிகமாக்கினது. ஆஸ்திரேலியாவுல உள்ள ‘டெரிக் ஓ ப்ரியன் இன்ஸ்டிடியூட்’ உள்பட 6 இடங்கள்ல முறைப்படி அரோமாதெரபி படிச்சேன்.
எந்தவித கெமிக்கல் சிகிச்சைகளுக்கும் இடமில்லாத, அரோமாதெரபி அடிப்படையில மட்டுமே சிகிச்சை கொடுக்கிற நோக்கத்துல பார்லர் ஆரம்பிச்சேன்.

‘ஸ்ட்ரெயிட்டனிங்  பண்ணுவீங்களா? பெர்மிங் பண்ணுவீங்களா, கலரிங் செய்வீங்களா?’னு கேட்டு வந்த வாடிக்கையாளர்கள், அதெல்லாம் பண்ற இடமில்லைனு சொன்னா, ஏற, இறங்க பார்த்துட்டு திரும்பிப் போவாங்க. ஒத்தை ரூபா வருமானம் இல்லாம பல மாசங்கள் வெறுமனே பார்லரை திறந்து வச்சிட்டிருந்திருக்கேன். ‘வருமானம் இல்லாட்டாலும் என்னோட கொள்கையிலேருந்து விலகறதில்லை’ங்கிற உறுதியோட காத்திருந்தேன். வர்றவங்களுக்கு அரோமாதெரபியோட மகிமையைப் பத்திப் பாடம் எடுப்பேன். 90 சதவிகித வாடிக்கையாளர்கள் காது கொடுத்துக் கேட்கத் தயாரா இல்லை. 100 பேர்ல 5 பேர் ஆர்வமா கேட்பாங்க. அவங்களுக்கு நான் கொடுக்கிற ட்ரீட்மென்ட் சக்ஸஸ் ஆகி, அவங்க மூலமா வாய்வழி விளம்பரம் பரவி, ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க. இன்னிக்கு அரோமாதெரபி மூலமா குணப்படுத்த முடியாத பிரச்னைகளே இல்லைங்கிறதை மக்களுக்குப் புரிய வச்சிட்டேன்...’’

என்கிறவர், இப்போதும் தனது பார்லரில் பிளீச்சிங் உள்ளிட்ட எந்தவித கெமிக்கல் அழகு சிகிச்சைகளையும் அனுமதிப்பதில்லை. ‘‘சாதாரண அழகு சிகிச்சைகள்ல இன்னாருக்கு இன்ன ட்ரீட்மென்ட்டுங்கிற மாதிரி எதுவும் கிடையாது. அரோமா தெரபியை அப்படி பொத்தாம் பொதுவா எல்லாருக்கும் கொடுக்க முடியாது. உதாரணத்துக்கு முடி உதிர்வுப் பிரச்னைன்னே எடுத்துப்போமே... அதுக்கான காரணம் ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும். முதல்ல மண்டைப் பகுதியை ஸ்கேன் பண்ணி, அவங்களோட பிரச்னைக்கான மூல காரணத்தைக் கண்டு பிடிச்சு, கூடவே அவங்க உடம்புல உள்ள சத்துக் குறைபாடுகளுக்கான சோதனைகளையும் செய்யச் சொல்லி, அதுக்குப் பிறகுதான் ட்ரீட்மென்ட்  ஆரம்பமாகும்.

கெமிக்கல் சிகிச்சைகள்ல எல்லா அழகுப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கலாம். அது எல்லாமே தற்காலிகம்தான். அரோமாதெரபியிலயோ ரிசல்ட் கொஞ்சம் லேட்டானாலும், தீர்வு நிரந்தரம்...’’ - நம்பிக்கையுடன் சொல்பவரின் சேவையைப் பாராட்டி, அகில இந்திய அளவிலான சிறந்த அரோமாதெரபிஸ்ட்டுக்கான ‘பிசினஸ் அண்ட் சர்வீஸ் எக்சலன்ஸ்’ விருது உள்பட ஏகப்பட்ட அங்கீகாரங்கள் தேடி வந்திருக்கின்றன.

‘‘இதையெல்லாம் விட பெரிய  அங்கீகாரம்னா அது என் வாடிக்கையாளர்களோட ஆனந்தக் கண்ணீர்தான். 20, 22 வயசுலயே தலை முழுக்க
முடியெல்லாம் கொட்டிப் போய், வேலையும் கிடைக்காம, சரியான வாழ்க்கையும் அமையாம எத்தனையோ பேர் ஏதாவது தீர்வு கிடைக்காதானு தேடி வராங்க. தலையாயப் பிரச்னையான முடிப் பிரச்னையை தீர்த்து வச்சு, திரும்ப அவங்களை தலையில முடியோடவும் மனசுல தன்னம்பிக்கையோடவும் அனுப்பி வைக்கிறப்ப மனசு நிறையும். சமீபத்துல வேலூர் சி.எம்.சி ஹாஸ்பிட்டல்லேருந்து ஒரு பெண் குழந்தையை என்கிட்ட சிகிச்சைக்கு அனுப்பி வச்சாங்க.

அந்தக் குழந்தை தவறுதலா சூடான எண்ணெய் சட்டிக்குள்ள விழுந்ததுல முகம், உடம்பு முழுக்க வெந்து உருகிப் போச்சு. அதுவரைக்கும் அரோமாதெரபியில தீக்காயத் தழும்புகளுக்குத் தீர்வு இருக்காங்கிறதைப் பத்தியே யோசிக்காத நான், அந்தக் குழந்தைக்காக தகவல் தேடினேன். தீர்வு இருக்கிறது தெரிஞ்சு, அரோமாதெரபியை ஆரம்பிச்சேன். 30 சதவிகிதத் தழும்புகள் சரியான நிலையில அந்தக் குழந்தையோட முகத்துல ஒரு
தெளிவைப் பார்க்கறேன்.

முழுக்க சரியாகிடும்கிற நம்பிக்கையில சிகிச்சை தொடர்ந் திட்டிருக்கு. அதே போல ஆட்டிசம் பாதிச்ச குழந்தைங்க, வயசானவங்களோட வலி, மரண பயம், புதுசா கல்யாணமான பெண்களோட படபடப்பு, வலியில்லாத பிரசவத்துக்கு, பாம்புக்கடியில விஷம் ஏறாம இருக்க, கொழுப்பைக் குறைக்கனு எல்லாத்தையும்
சரியாக்க அரோமாதெரபியில தீர்வுகள் உண்டு.

தூக்கமின்மைங்கிற பிரச்னை  இன்னிக்கு விஸ்வரூபம் எடுத்திட்டிருக்கு. அதை சரி செய்ய அரோமாதெரபியில அருமையான தீர்வுகள் உண்டு. அரோமாதெரபிங்கிறது கொஞ்சம் காஸ்ட்லியானது. ஆனாலும், தூக்கமின்மையால தவிக்கிறவங்களுக்கு அந்த சிகிச்சையை நான் இலவசமா செய்யறதை லட்சியமா வச்சிருக்கேன்.

பக்க விளைவுகள் இல்லாத இந்த சிகிச்சையோட பலன் எல்லாரையும் போய் சேரணும். சமீப காலமா பல பெரிய ஹாஸ்பிட்டல்ஸ்ல ஆபரேஷன் தியேட்டர்ல, ஆபரேஷன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, பேஷன்ட்டோட படபடப்பையும் பயத்தையும் போக்க, அரோமாதெரபி ஆயில்களை ஸ்பிரே பண்ற ட்ரெண்ட் வந்திருக்கு. சென்னையில சில பெரிய கார்பரேட் ஹாஸ்பிட்டல்ஸ்ல இதைச்  செய்யறாங்க.

ஜப்பான் மாதிரி சில நாடுகள்ல பேங்க், அலுவலகங்கள்ல குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு ஒரு முறை அரோமா ஆயில் ஸ்பிரே பண்றது மூலமா ஊழியர்களை மனசளவுலயும் உடலளவுலயும் புத்துணர்வா வச்சிருக்காங்க. அரோமா ஆயில்களோட வாசனையை நுகர்ந்தபடி இருக்கிறவங்களுக்கு சோர்வுங்கறதே இருக்காதுங்கிறதுக்கு என்கிட்ட வேலை செய்யற பெண்களே உதாரணம். எப்போதும் ஃப்ரெஷ்ஷா இருப்பாங்க. இந்த அனுபவத்தை எல்லாரும் ட்ரை பண்ணணும்கிறதுதான் என் ஆசை. ஹவுஸ் ஒயிஃப்ஸ் அரோமாதெரபியை கத்துக்கிறது மூலமா அடம் பிடிக்கிற குழந்தைகளை சமாளிக்கலாம்.

படிப்புல கவன மில்லாத குழந்தைகளை படிக்க வைக்கலாம். மரண பயத்துல உள்ள பெரியவங்களுக்கு தைரியம்  வரவழைக்கலாம். தவிர, அரோமாதெரபியை
படிக்கிறது மூலமா உலகத்துல எந்த மூலையிலயும் பிழைப்புக்கான வழியைத் தேடிக்கலாம். அழகுக்கலையில உபயோகிக்கிற க்ரீம் உள்ளிட்ட பொருட்கள் இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு வேறுபடும். அரோமாதெரபிக்கான ஆயில்கள் உலகம் முழுக்க ஒண்ணுதான். வாழ்க்கையோட ஆதாரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவற அரோமாதெரபியோட பலன்களை அத்தனை பேரும் அனுபவிக்கணும்...’’ - ஆசையைச் சொல்லி முடிக்கிறார் கீதா.

- வி.லஷ்மி