மறுபக்கம்



நான் இப்போ  கேக் பொண்ணு!


‘ஐஷுஸ் கிச்சன்’ மற்றும் ‘பிளிஸ்ஃபுல் பேக்கிங்’கின் உரிமையாளர்  என்கிற புதிய அடையாளத்துடன் ‘ஹலோ’ சொல்கிறார் நடிகை ஐஸ்வர்யா.

‘உங்களுக்குத்தான் இது புதுசு. சமையலும் பேக்கிங்கும் சின்ன வயசுலயே எனக்கு அறிமுகமான, பழகின விஷயங்கள்...’’ என்கிறவர், மேக்கப் போடாத நேரங்களில் பேக்கிங்கில் பிஸி!


‘‘எங்கம்மா கேக் பண்ணுவாங்க. அவங்களைப் பார்த்து 6 வயசுலயே நானும் பண்ணியிருக்கேன். என் பொண்ணு அனைனாவுக்கு அடிக்கடி பண்ணிக் கொடுப்பேன். சில வருஷங்களுக்கு முன்னாடி அவ, அவங்கப்பா குடும்பத்தோட ஜப்பான் போயிட்டு வந்தா. அங்கே ஃபான்டன்ட் கேக்ஸ் ரொம்பப்  பிரபலம். ஃபான்டன்ட் கேக்ல டெகரேஷன், ஸ்மூத் ஃபினிஷிங்னு எல்லாமே ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். அதையெல்லாம் பார்த்துட்டு, என் பொண்ணு, அவ பர்த்டேவுக்கு ஃபான்டன்ட் கேக் வேணும்னு கேட்டா. நெல்சன் மாணிக்கம் ரோடுல மாணிக்கம் முதலியாரோட மருமகள் வீணா வீட்டுக்குக் கீழேதான் நாங்க குடியிருந்தோம். அவங்க பேக்கிங்ல எக்ஸ்பர்ட். என் பொண்ணோட 16வது பர்த்டேவுக்கு அவங்கதான் அருமையான ஃபான்டன்ட் கேக் பண்ணிக் கொடுத்தாங்க.

எனக்கு ஸ்டெயின்ட் கிளாஸ் பெயின்ட்டிங்லயும் இன்ட்ரஸ்ட் உண்டு. அது தெரிஞ்சு என் பொண்ணோட ஃப்ரெண்ட், என் பர்த்டேவுக்கு ஃபான்டன்ட் கப் கேக்ஸ்ல எனக்குப் பிடிச்ச ஸ்டெயின்ட் கிளாஸ் பெயின்ட்டிங், என்னோட கார், கிளாப் போர்ட்னு எல்லாத்தோட மினியேச்சரும் பண்ணி அனுப்பினா. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க என்னோட ஃபான்டன்ட் கேக் ஆர்வம் வளர்ந்துட்டே இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். அதுக்கான பொருட்கள் கிடைக்கற இடங்களை விசாரிச்சுத் தேடிப் போய் வாங்கினேன். எங்கம்மா எனக்கு சொல்லிக் கொடுத்த கிளாசிக் வெனிலா கேக் மிக்ஸர்தான் அடிப்படை. அதை வச்சு, யுடியூப்ல கத்துக்கிட்டு, என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டு விசேஷங்களுக்கெல்லாம் என் கைப்பட கேக் பண்ணிக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு வாட்டியும், ‘நிச்சயமா இதை நீதான் பண்ணியா’ங்கிற வியப்போடவே எல்லாரும் பாராட்டுவாங்க.

இன்னொரு பக்கம் சமையல்லயும் என் ஆர்வம் அதிகரிச்சிட்டே இருந்தது. எங்க பாட்டி உயிரோட இருந்த வரை நான் கிச்சன் பக்கமே போனதில்லை. அவங்க போனதும் என் பொண்ணுக்கு எல்லாமே நான்தான் பண்ண வேண்டிய கட்டாயம். தேடித் தேடி புதுசு புதுசா சமைக்கக் கத்துக்கிட்டேன். இங்கிலீஷ் சேனல்ஸ்ல வர்ற குக்கரி ஷோஸ் பார்த்தும் என் ஆர்வத்தை வளர்த்துக்கிட்டேன். சமையல்ங்கிறது முடிவில்லாத ஒரு மாரத்தான் ரேஸ் மாதிரி. இன்னிக்கோ பெரும்பாலான அம்மாக்கள், தயிர் சாதத்தையோ, ரெடிமேட் சாப்பாட்டையோ குழந்தைங்களுக்கு லஞ்ச் பாக்ஸ்ல வச்சுக் கொடுத்தனுப்பறாங்க. பசங்களும் சரியா சாப்பிடறதில்லை. பேக்கரி அயிட்டங்கள்ல கமர்ஷியலா நிறைய கெமிக்கல் சேர்க்கிறாங்க. அதெல்லாம் உடம்புக்கு நல்லதில்லை. இப்படி பல விஷயங்களை யோசிச்சிட்டிருந்தேன்.

சமையலை மறந்த பெண்களை மறுபடி  கிச்சனுக்குள்ள வரவழைக்கிற முயற்சியா, ‘ஐஷுஸ் கிச்சன்’னு ஒரு குக்கரி ஷோ பிளான் பண்ணினேன். எந்த சேனல்லயும் ஸ்லாட் கிடைக்கலை. அதுக்கான மார்க்கெட்டிங் பண்ணிட்டிருந்த டைம்ல பிரபல கேமராமேன் மார்க்கஸ் பார்ட்லியோட மருமகள் சாராவை சந்திச்சேன். அவங்களோட சொந்தக் காரங்க கல்யாணத்துக்காக வெட்டிங் கேக் பண்ணித் தர முடியுமானு கேட்டாங்க. என்னோட முதல் வெட்டிங் கேக் ஆர்டர் அது... ரொம்பக் கஷ்டப்பட்டு ட்ரை பண்ணி, ஒருவழியா சக்சஸ்ஃபுல்லா பண்ணிக் கொடுத்தேன்.

அதுக்குப் பிறகு பார்க்கிறவங்க  எல்லாம் ஆர்டர் எடுப்பீங்களானு கேட்க ஆரம்பிச்சாங்க. இன்னும் நிறைய கத்துக்கணும்னு தோணினது. ரெண்டு, மூணு புரொபஷனல் கோர்ஸுக்கு போனேன். இன்டர்நேஷனல் சர்ட்டிஃபிகேட் வாங்கினேன். ‘ஐஷுஸ் கிச்சன்’ வெப்சைட் தொடங்கினேன். அதுவரைக்கும் ஹாபியா பண்ணிட்டிருந்ததை அடுத்த லெவலுக்கு கொண்டு போகலாம்னு தோணினது. சாய்பாபா கோயிலுக்கு பிரசாதமா 50 எக்லெஸ் கப் கேக் வேணும்னு என் ஃப்ரெண்ட் கொடுத்த முதல் ஆர்டரே சென்டிமென்ட்டலா நல்ல விஷயமா பட்டது. சத்யபாமா யுனிவர்சிட்டியில ஈஸ்டர் செலிப்ரேஷனுக்காக ஆர்டர் வந்தது. அதுக்கும் நிறைய பாராட்டு.

நடிகை த்ரிஷாவும் நானும் ‘அபியும் நானும்’ பண்ணின டைம்லேருந்தே நல்ல ஃப்ரெண்ட்ஸ். ஒருமுறை த்ரிஷாகிட்ட பேசிக்கிட்டிருந்தப்ப, அவங்க பர்த்டேவுக்கு தீம் கேக் பண்ணலாமானு கேட்டேன். அவங்களுக்கு ரொம்பப் பிடிச்ச அவங்களோட நாய்க்குட்டிகளோட உருவங்களை வச்ச மாதிரியான தீம் கேக் பண்ணிக் கொடுத்தேன். இடையில  எப்பல்லாம் முடியுமோ, அப்பல்லாம் பேக்கிங் தொடர்பா யார்கிட்டயாவது, ஏதாவது விஷயங்களைப் படிச்சிட்டே இருக்கேன். சினிமாவுல  எத்தனையோ படங்கள் பண்ணின பிறகும் எனக்குக் கிடைக்காத பாராட்டும் அங்கீகாரமும் இந்தத் துறையில கிடைச்சிருக்கு. இன்டர்நேஷனல் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டேன். கிளாஸ் எடுக்கறேன்.

ஆர்டர்ஸ் எடுத்துப் பண்ணிக் கொடுக்கறேன். இன்னொரு பக்கம் சினிமாவுலயும் அடுத்த ரவுண்டுக்கு கிளம்பிட்டேன். ‘பூஜை’க்கு அடுத்து விஷாலோட ‘ஆம்பிளை’, ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி’ பண்ணிட்டிருக்கேன். ‘கழுகு’ பட டைரக்டரோட அடுத்த படத்துல ஒரு குத்து சாங் பண்ணியிருக்கேன். மொத்தத்துல இப்ப என் லைஃப் ரொம்ப பிஸியாகவும்  பிளிஸ்ஃபுல்லாகவும் இருக்கு...’’ - ஐசிங் சிரிப்பில் அசத்துகிறார் ஐஷு!


‘‘சினிமாவுல எத்தனையோ படங்கள் பண்ணின பிறகும் எனக்குக் கிடைக்காத பாராட்டும் அங்கீகாரமும் இந்தத் துறையில கிடைச்சிருக்கு!’’