சுற்றுலா - ஆலய தரிசனம்



காலுக்கு அடியில் கடல் போல!

சமீபத்தில் 3 நாள் பயணமாக, கர்நாடகாவின் புகழ் பெற்ற ஆன்மிகத் தலங்களான சிருங்கேரி, கொல்லூர் மற்றும் முருதேஸ்வர் சென்றிருந்தோம்.

அரபிக் கடலின் அலைகள்  ஆர்ப்பரிக்கும் கரையோரத்தில்,  123 அடி உயர, அமர்ந்த  நிலையில் இருக்கும் சிவனாரின்  அற்புத சிலை... என்ன ஒரு பிரமாண்ட அழகு!

முதலில், நாங்கள் சென்ற தலம், சிருங்கேரி சாரதா பீடம். ஸஹயத்ரி மலைத் தொடரில், துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்த சிற்றூர். ‘சிருங்க கிரி’ என்பது மருவி சிருங்கேரி என்று அழைக்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து, தும்கூர், சிக்மகளூர் வழியாக 325 கி.மீ. பயணம். ஸ்பீக்கரில், சுதா ரகுநாதனின் ‘கணநாதா ஓம் கணநாதா’வைக் கசிய விட்டபடியே வண்டியைக் கிளப்பினோம். சிக்மகளூர் தொடங்கி முழுவதுமே மலைப் பாதை... குறுகிய சாலை... கொண்டை ஊசி வளைவுகள்... திடீர் திடீரென பெய்யும் மழை... இப்படி சில சவால்கள் இருந்தாலும், வழி முழுக்க பச்சைக் கம்பளம் போர்த்தியது போல பசுமையோ பசுமை.

அழகிய இயற்கைக் காட்சிகளை கண்டு களித்தவாறே, அந்தி சாயும் நேரத்தில் சிருங்கேரியை அடைந்தோம். விடாத அடை மழை... 7 மணிக்கே இருட்டு வேறு. எனினும் பால் போன்ற நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்த சிருங்கேரி கோயிலின் கோபுர அழகை கண்களால் பருகிவிட்டு, உள்ளே சென்றோம். அனைத்துக் கலைகளின் அதிபதி சரஸ்வதி தேவியின் அம்சமான சாரதாம்பாளை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தோம். ‘பாரதி தீர்த்த சுவாமிகள் இருந்தால் பார்க்கலாமே’ என்று என் அம்மா கேட்டார். ‘அவர் குரு நிவாஸ் மண்டபத்துக்கு பூஜைக்கு வருவார்.

இந்த பாலத்தைத் தாண்டி கோயிலின் மறுபக்கம் செல்லுங்கள்’ என்று விவரம் தெரிந்த சிலர் கூறினர். சரியென அந்தப் பக்கம் திரும்பிய நாங்கள், அப்படியே மூச்சடைத்து நின்று விட்டோம். கண்ணெதிரே மிகப்பெரிய வெட்டவெளி... ஒன்றும் புரியவில்லை... சட்டென என் அம்மா, ‘அடியே துங்கபத்திரா நதி’ என்று கூவினார். ஆம்... காலுக்கு அடியில் கடல் போன்ற துங்கபத்திரை ஆரவாரமாகத் தளும்பி நுரைத்து ஓடிக் கொண்டிருந்தது. தரிசனம் முடித்து, விடுதிக்குச் சென்ற பின்பும், துங்கபத்திரை கொடுத்த வியப்பு அடங்கவில்லை!  

மறுநாள் காலை 7 மணிக்கு கொல்லூர் கிளம்ப வேண்டும். பகல் வெளிச்சத்தில் ஒரு முறை துங்கபத்திரையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைக் கணவரிடம் வெளியிட்டேன். இப்போது கோயில் வாசலில் இருந்தே நதி தெளிவாகத் தெரிந்தது. அதன் அழகும் விஸ்தீரணமும் என் மனதைக் கொள்ளை கொண்டன. ஆசை தீர ரசித்து விட்டு கொல்லூர் நோக்கி பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.

சிருங்கேரி - கொல்லூர் வழியும் மலைப் பாதைதான். மேகம் தவழும் மலை முகடுகள், வெள்ளிக் கீற்றாகச் சலசலத்துப் போகும் ஓடைகள், மரகதப் பச்சை வயல்கள் என கண்ணுக்கு விருந்தாக பல காட்சிகள். ரசித்துக் கொண்டே கொல்லூரை அடைந்த போது, உச்சிகால பூஜை நேரம். அன்னையின் ஆலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், சௌபர்னிகா நதி தீரத்தில் அமைந்துள்ளது. கேரள பாணியில் கட்டப்பட்ட அழகிய திருக்கோயில். சுயம்பு ரூபமான, தங்க ரேகையுடன் கூடிய அன்னை மூகாம்பிகையின் தரிசனம் கண்ட மாத்திரத்தில் மெய் சிலிர்த்தது.

அழகான கோயில், இதமான சூழல், நிறைவான தரிசனம். அன்னையின் சக்தியையும் ஸாந்நித்தியத்தையும் மனதில் ஆராதித்து, முருதேஸ்வர் நோக்கி கிளம்பினோம் வடக்கு கர்நாடகாவில், (கர்நாடகா - மஹாராஷ்டிரா - கோவா எல்லை), பத்கால் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ள தலம் முருதேஸ்வர். அரபிக் கடலின் அலைகள் ஆர்ப்பரிக்கும் கரையோரத்தில், 123 அடி உயர, அமர்ந்த நிலையில் இருக்கும் சிவனாரின் அற்புத சிலை... என்ன ஒரு பிரமாண்ட அழகு! கோயிலின் ராஜ கோபுரமும் விசேஷமான அமைப்புடையது.

உலகின் 2வது உயரமான சிவன் சிலை இது. இந்த சிலை முன் நாம் நிற்கும்போது, ‘நான்’ என்ற அகங்காரம் கரைந்து, எல்லாம் வல்ல இறையிடம் மனம் சரண் அடைவது திண்ணம். கோயிலுக்குள் ஒவ்வொரு அங்குலமும் மிகவும் நேர்த்தி யாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. சிவலிங்கத்துக்கு, முகம் போன்ற கவசம் சாற்றி வழிபடுகிறார்கள். ‘ராவணன், சிவனிடம் இருந்து பெற்ற ஆத்ம லிங்கத்தை, இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் மடக்கி, இங்கேயே விநாயகப் பெருமான் நிலை கொள்ளச் செய்தார்’ என்பது தல வரலாறு.

இந்த நிகழ்வை விளக்கும் அழகிய சுதை சிற்பங்களைக் கோயிலின் மேற்பகுதியில் காணலாம்.  கண்ணுக்குள் நிரப்பிக் கொள்ள இயலாத பிரமாண்டத்தை, எளிய - ஆனால், சத்தியமான பக்தியின் மூலம் மனதில் நிரப்பிக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டோம். ஜோக் ஃபால்ஸ் வழியாக வர நேர்ந்தது. பார்வையெங்கும் ஒரே மூடுபனி, நீர்வீழ்ச்சிகள், நம்மையே உற்று உற்றுப் பார்க்கும் சிங்கவால் குரங்குகள் என்று பலவற்றையும் ரசித்துவிட்டு, பெங்களூரு வந்தடைந்தோம், அடுத்த  பயணத்துக்கான கனவுகளோடு!