விவாதம்



வீட்டுப் பாடம்... குழந்தைகள் மீது  திணிக்கப்படும்  வன்முறையா?

விடிந்தும் விடியாத அதிகாலை. ஈரம் தோய்ந்த பருவநிலை. விடியல் நேர உறக்கம் உன்னதமாகத்தான் இருக்கிறது. இழுத்துப் போர்த்திக்கொண்டு இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க மாட்டோமா என்றிருக்கிறது. ஆனால், இந்த உன்னதத்தை அனுபவிக்க குழந்தைகளுக்கு உரிமையில்லை. உலுக்கி உறக்கம் தொலைத்து, எந்திர கதியில் பல் துலக்கி, குளித்து முடித்து, உணவென்ற பெயரில் ஏதோ ஒன்றை வயிற்றில் திணித்து, புத்தகப்பையை முதுகிலே தூக்கி வைத்து வீதியில் இறக்கிவிடும்போது குழந்தையின் முகத்தில் பாதி தூக்கம் அப்பியிருக்கிறது. பள்ளி வளாகத்துக்குள் வரும் எந்த குழந்தையின் முகத்திலும் புன்னகையோ, மகிழ்ச்சியோ இல்லை. மிரட்சியும் அலுப்புமே தென்படுகிறது.

வகுப்புக்குள் நுழைந்து விட்டால் படிப்பு, பாடம், எழுத்து.... ஏழெட்டு மணி நேரம் அதற்குள் உழன்று கசங்கிப்போய் வீடு திரும்பும் குழந்தை யின் முகத்தில் படர்ந்திருக்கும் அசாதாரணமான களைப்பை உணர்ந்து கொள்ள எந்தப் பெற்றோருக்கும் நேரமில்லை. அடுத்தடுத்த தண்டனைகளை தயாராக வைத்திருக்கிறார்கள். வீட்டுப்பாடம், டியூஷன்... அதிகாலையில் தென்பட்ட அதே அவசரத்தோடு உடை களைந்து, முகம் கழுவி, திரும்பவும் புத்தகம், நோட்டு, படிப்பு...

10ம் வகுப்புக்கு மேற்பட்ட பிள்ளைகளை விடுங்கள். எல்.கே.ஜி., யு.கே.ஜி, ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளை இப்படி வதைப்பது நியாயமா...? எவ்விதத்திலும் முதிராத அக்குழந்தையின் இதயத்தையும் மூளையையும் இப்படி கத்தியால் கீறுவது போல் புத்தகங்களால் கீறி கல்வியைத் திணிப்பது சரிதானா..?

எந்தப் பெற்றோரும் யோசிப்பதில்லை. வீட்டுப் பாடம் கொடுத்தால்தான் அது நல்ல பள்ளி. வீட்டுப் பாடம் தராவிட்டால் ஆசிரியர்கள் பள்ளியில் வேலையே செய்யவில்லை என்று நினைத்து சண்டைக்குப் போகிறார்கள் பெற்றோர்கள்.

அண்மையில் வீட்டுப் பாடம் செய்யாத 7ம் வகுப்பு மாணவனின் கன்னத்தைக் கிள்ளி, ரத்தக்காயம் ஏற்படுத்திய ஒரு பள்ளி ஆசிரியைக்கு உயர் நீதிமன்றம் 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களின் கண்டிப்பும் பெற்றோரின் எதிர்பார்ப்பும் குழந்தைகளின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. 

வீட்டுப் பாடம் என்பது குழந்தையின் மீதான வன்கொடுமைச் செயல் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்களும் கல்வியாளர்களும். குழந்தை, தனக்காக ஒரு நேரத்தை ஒதுக்கிக்கொள்ள எந்த பெற்றோரும் அனுமதிப்பதில்லை என்ற யதார்த்தத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

“குழந்தைகளின் மனம் விருப்பு வெறுப்பற்ற சுதந்திரத்தையே விரும்புகிறது. அவர்களின் நேரத்தை யாருமே தீர்மானிக்க முடியாது. நம் கல்விக்கூடங்கள் குழந்தைகள் மீதான அக்கறையை விட பெற்றோரின் எதிர்பார்ப்புகள் மீதுதான் அதிக அக்கறை காட்டுகின்றன. காரணம், கல்வி வணிகமானதுதான்.

கட்டணத்தை செலுத்தப்போவது பெற்றோர். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதைக் கூடுதலாகவே கொடுக்க முயல்கின்றன கல்விக்கூடங்கள். கல்விக்கூடத்துக்கும் பெற்றோருக்குமான இந்த வணிகத்துக்கு இடையே குழந்தை என்ற மென்மையான உயிர் மாட்டிக்கொண்டிருப்பதை எவரும் கவனிப்பதே இல்லை.

குழந்தைகள் ஒவ்வொரு செயல்பாட்டின் மூலமும் கற்றுக் கொள்கி றார்கள். கற்றலை ஒரு வரையறைக்கு உட்படுத்துவதே கல்விக்கூடத்தின் வேலை. ஆனால், அங்கே வலுக்கட்டாயமாக குழந்தைகளின் இயல்பான தேடலைத் திசை திருப்பி கற்றல் திணிக்கப்படுகிறது. பெற்றோருக்கு குழந்தைகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும்தான்.

இன்றைக்கும் டி.ஆர்.டி. தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் குழந்தைகளை நிற்க வைத்து, 'இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கிறேன்... இப்படி மார்க் வாங்கிட்டு வந்து நிக்குறியே...’ என்று அடிக்கும் தந்தைகள் இருக்கிறார்கள்.

'கற்றலை மதிப்பெண்களை வைத்துத் தீர்மானிக்க முடியாது...' என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருந்தும் பொதுப்புத்தியில் மதிப்பெண்கள்தான் பிரதானமாக இருக்கின்றன. ஆழ்ந்த அறிவும் உளவியல் தெளிவும், குழந்தைமை பற்றிய புரிதலும் கொண்ட தேர்ந்த நிபுணர் குழுதான் இந்திய கல்வித் திட்டத்தை வடிவமைத்திருக்கிறது. அக்குழுவின் முடிவுப்படி, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளே சுயமாக புரிந்து கற்றுக்கொள்ளும் பக்குவத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் மத்திய, மாநில அரசுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் குழந்தைகள் இணைய 5 வயது இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஆனால், தனியார் பள்ளிகள் இரண்டரை வயதுக் குழந்தையை ப்ரீ.கே.ஜி.யில் சேர்க்கின்றன. கால் நிமிர நடந்து, ஓடி, ஆடி, பாடி, மாமா, அத்தை என உறவினர்களோடு பழகி விளையாட வேண்டிய வயதில் ஓர் ஒழுங்குக்குள் அந்த குழந்தையை அடக்கி வைப்பதே உளவியல் ரீதியாக குழந்தைமையை பாதிக்கும்.

எல்.கே.ஜி, யு.கே.ஜியிலேயே வீட்டுப் பாடங்களை கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் பெற்றோரின் மொபைலுக்கு வீட்டில் என்னென்ன பாடங்களைப் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்பது பற்றி நீளமாக எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கிறார்கள்.

வீட்டுப் பாடம் என்பது குழந்தைகளின் செயல்பாட்டை தூண்டுவதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், யதார்த்தம் அப்படியல்ல. புத்தகத்தில் இருப்பதை 4 தடவை எழுது, 8 தடவை எழுது என்கிறார்கள்.

எப்படியும் முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் 'கன்னத்தைக் கிள்ளுவார்கள்' என்ற அச்சத்தில் குழந்தைகள் எழுத முற்படுகிறார்கள். டி.வி. பார்த்துக்கொண்டோ, விளையாடிக் கொண்டோ எழுதி முடிக்கிறார்கள். சில வீடுகளில் அண்ணனிடமோ, அக்காவிடமோ, அம்மாவிடமோ கொடுத்து எழுதச் சொல்வதும் நடக்கிறது.

இதனால் என்ன லாபம்..?' என்று கேள்வி எழுப்புகிறார் குழந்தை உரிமை மற்றும் முன்னேற்ற மையத்தின் பயிற்சியாளர் செல்வம். ஒரு பள்ளியில் முதல்வராகப் பணியாற்றிய அனுபவம் உள்ள செல்வம் தற்போது குழந்தைகள் உரிமை, உளவியல் தன்மை தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.

“காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை சுமார் 7 மணி நேரம் குழந்தைகள் வகுப்பறையில் இருக்கிறார்கள். வாகனங்களில் கசங்கி அவர்கள் வீடு வந்து சேர 5 மணியாகி விடுகிறது.

5 முதல் 7 மணி வரை ஹோம் ஒர்க். சிலர் டியூஷனில் தள்ளுகிறார்கள் என்றால் அக்குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த ஒரு செயலை எப்போது செய்வார்கள்..? ஒரு குழந்தைக்கு ஓடியாடி விளையாடப் பிடிக்கும். ஒரு குழந்தைக்கு ஓவியம் வரைய பிடிக்கும். சில குழந்தைகளுக்கு ஒரு கதைப் புத்தகம் படிக்கப் பிடிக்கும். சில குழந்தைகள் டி.வி. பார்ப்பார்கள்.

ஆனால், அவர்களின் எந்த விருப்பத்துக்கும் இடம் கொடுக்காமல் பாடப் புத்தகங்களைப் போட்டு நெரிப்பது சரியல்ல... சில வீடுகளில் பெரியவர்கள் சீரியல் பார்ப்பார்கள். ஆனால், குழந்தைகளை வீட்டுப் பாடம் செய்யச் சொல்வார்கள்.

பள்ளிகள் எவ்வளவோ பாடங்களைப் படித்துவிட்டன. ஆனால், இன்னும் மாறவேயில்லை. மதிப்பெண்களை இலக்காக வைத்து குழந்தைகளை வதைப்பதும் தண்டிப்பதும் குறையவேயில்லை. வீட்டுப் பாடம் செய்யாத குழந்தைகளை வெளியில் நிறுத்துவது, பெஞ்ச் மேல் நிறுத்துவது, மீண்டும் மீண்டும் இம்போசிசன் தந்து கொடுமைப்படுத்துவது, அடிப்பது என எல்லாக் கொடுமைகளும் அறங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன...' என்று வருந்துகிறார் செல்வம். வீட்டுப் பாடம் ஒரு கொடுமை என்றால் தனியார் பள்ளிகள் தரும் ப்ராஜெக்ட்கள் இன்னொரு கொடுமை.

‘வனம் செய்து வா’, ‘வானம் செய்து வா’ என்று டைரியில் எழுதிக் கொடுத்து விடுவார்கள். இதை பள்ளியில், ஆசிரியைகள் செய்து காட்டினால் ஓ.கே. பெற்றோர் தலையில் கட்டுவதன் நோக்கம் என்ன..? அதன் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் என்கிறார்கள்.

ஆனால், பெரும்பாலான பெற்றோர் விலை கொடுத்து வாங்கி பிள்ளைகளுக்குக் கொடுத்தனுப்புகிறார்கள். “குழந்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், எப்படி என்பதுதான் கேள்வி. ரூஸோ சொல்வார்... ‘நேரத்தை மிச்சப்படுத்தாதே... செலவழி' என்று. நேரத்தை செலவழிப்பது அவரவர் வசதிக்கும் உரிமைக்கும் உரித்தானது.

ஆனால், குழந்தைகளின் நேரம் மட்டும் அவர்களிடம் இல்லை. முன்பெல்லாம் நகரங்களில் மட்டுமே இந்த நிலை இருந்தது. இப்போது தனியார் பள்ளிகள் கிராமங்களையும் மையம் கொண்டு விட்டதால் அங்கும் குழந்தைகளின் இயல்பு தொலைந்து விட்டது. நம் கல்வி முறை குழந்தைகளை சுயமாக சிந்திக்கவே விடுவதில்லை என்பது பெரும் சோகம். இந்த விஷயத்தில் மகாகவியே கேள்விக்கு உள்ளாகிறார்.

'காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுதும் விளையாட்டு' என்று குழந்தைகளுக்கு வகுத்துக் கொடுப்பதே நியாயமில்லை. குழந்தைகள் பாடப் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ள ஒன்றுமில்லை.

வெறும் எழுத்துக்களை வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம். பெற்றோரிடமிருந்து, உறவுகளிடம் இருந்து, நண்பர்களிடம் இருந்து, சமூகத்திடம் இருந்துதான் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பையே உருவாக்கிக் கொடுக்காமல் நம் கல்வித் திட்டம் பாடப் புத்தகங்களுக்குள் முடக்குகிறது.

குதிப்பது, ஓடுவது, ஆடுவது... இதெல்லாம் தான் குழந்தைகளின் இயல்பு. ஆனால், பெற்றோர்பார்வையில் இதெல்லாம் உருப்படாத வேலை. புத்தகத்தை எடுத்து வைத்துப் படிப்பது மட்டும்தான் நல்ல வேலை... குழந்தைத்தனம், சிரிப்பு, சந்தோஷம் எல்லாவற்றையும் பாடப் புத்தகம் பலிவாங்கி விடுகிறது.

5 வயதுக்கு மேல்தான் குழந்தைக்கு கற்றுக்கொள்ளும் பக்குவம் வருகிறது என்று ஏகப்பட்ட ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், அதுவரை யாருக்கும் இங்கே பொறுமையில்லை. பள்ளிகளும், 'குழந்தைகளை அள்ளி வாருங்கள்... அள்ளி வாருங்கள்' என்று அழைக்கின்றன.

பெற்றோரும் அள்ளிக்கொண்டு ஓடுகிறார்கள். உண்மையில் கலாப்ரியா சொல்வதுதான் பொருத்தமாக இருக்கிறது... இன்றைய குழந்தைகள் 'மரமாகிப்போன செடி...' குழந்தைகளை யோசிக்க வைத்து, கேள்விகள் கேட்க வைத்து, பதிலை தேடிக் கண்டறியும் திறனை உருவாக்குவதுதான் உண்மைக் கல்வி.

அப்படி அல்லாத, குழந்தைகளின் விருப்பத்துக்கு மாறான, அவர்களை வதைத்து அவர்கள் மூளையில் திணிக்கப்படும் எதுவும் கல்வியாகாது...' என்கிறார் பேராசிரியர் ச.மாடசாமி. 'இம்போசிசன்' எனப்படும் கொடுமை இன்னும் கூட பல பள்ளிகளில் இருக்கிறது.

அது குழந்தையின் உடம்பைத் தாக்குவதைக் காட்டிலும் கொடூரம். உடலை வதைத்தால் வெளித்தெரிந்துவிடும். இம்போசிசன் உள்ளத்தை வதைப்பது. 'இம்போசிசன் எழுதுவதால் மனதில் பதியும், கையெழுத்து அழகாகும்' என்று ஆசிரியர்கள் சொல்வார்களே ஆனால், அந்த ஆசிரியர்களுக்கு குழந்தைகளைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

தானே விரும்பி 1 பக்கம் எழுதுவதால் ஏற்படும் விளைவில் கால்பாகம் கூட, விரும்பாமல் 100 பக்கம் எழுதுவதால் ஏற்படப்போவதில்லை. குழந்தைகளுக்கு கிரியேட்டிவிட்டியை கற்றுக்கொடுக்கிறோமா? எழுத்துப் பயிற்சி யை வழங்குகிறோமா என்பதை நம் கல்வித்திட்ட ஆளுமைகள் ஆய்வு செய்ய வேண்டும்.

செயல்வழிக் கற்றல் முறையில் எழுத்துக்கான தேவை குறைவு. கற்றலை குழந்தைகளின் விருப்பத்துக்கு உரிய செயலாக்குகிற பயிற்றுவிப்பு முறை இது. ஆனால், இதை பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்க்கிறார்கள். காரணம், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இணையாக அமர வேண்டும்.

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அரியணையில் அமர்ந்து குழந்தைகள் மீது ஆட்சி செலுத்திய, கேள்வி கேட்பது தம் பிறப்புரிமை என்ற மனநிலையில் இருக்கிற ஆசிரியர்கள் கீழே இறங்க மறுக்கிறார்கள். சமச்சீர் கல்வி புரிந்து கொள்ளும் திட்டமிடலோடு உருவாக்கப்பட்டது.

ஆனால், அதை தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. 5 கிலோ வைக்கிற பையில், 50 கிலோவைத் திணித்தால் தாங்காது என்ற யதார்த்தம் இங்கே எடுபடவில்லை. 5 பெரிதா... 50 பெரிதா... என்ற கேள்விதான் மதிப்புப் பெற்று நிற்கிறது.

வீட்டுப் பாடம் அவசியமா..? வீட்டுப் பாடம் கொடுக்காமல் ஒரு குழந்தையின் கற்றலை மேம்படுத்த முடியாதா..? வீட்டுப் பாடத்தை குழந்தைகள் மீதான வதை என்கிறார்களே..? தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சென்னை மாவட்டச் செயலாளர் மணிமேகலை செல்வராஜிடம் கேட்டோம். “வீட்டுப் பாடம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அது அவசியமுமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. படித்த பெற்றோர் தங்கள் பங்குக்கு வீட்டில் சொல்லிக் கொடுக்க விரும்புகிறார்கள். அதற்கு ஏதுவாகவே வீட்டுப்பாடங்கள் தரப்படுகின்றன.

விளையாடுவதுதான் குழந்தைகளின் இயல்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், எத்தனை குழந்தைகள் விளையாடுகின்றன..? வீடியோ கேம், டி.வி. என்றுதான் இருக்கிறார்கள். அதில் இருந்து அவர்களை மீட்க வீட்டுப் பாடம் உதவக்கூடும். பள்ளிகள் மேல் வைக்கப்படுகிற குற்றச்சாட்டு, வகுப்பறைகளில் குழந்தைகள் இருண்மையாக இருக்கிறார்கள் என்பது. இன்று கற்பித்தல் முறை வெகுவாக மாறிவிட்டது. விளையாட்டு, கதை சொல்லல் என குழந்தைகளின் இயல்பு குலையாமல்தான் கற்பித்தல் நடக்கிறது.

விஷுவல் கிளாஸ், ஆக்டிவிட்டி கிளாஸ் எல்லாம் பள்ளிகளில் இருக்கின்றன. பள்ளிக்கூடங்களை சிறைகளைப் போல சித்தரிப்பது தவறு. வீட்டுப்பாடத்தைப் பொறுத்தவரை பெற்றோரே விரும்புகிறார்கள்.

ஆனாலும், அது எல்லை மீறாமல் இருக்க வேண்டும். ஆசிரியர்களும் பள்ளிகளும் அதில் கவனம் செலுத்த வேண்டும்...' என்கிறார் மணிமேகலை செல்வராஜ். குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க நினைக்கிற நாம் குழந்தைகளிடம் கற்றுக்கொள்வதே இல்லை. அவர்களின் உலகத்தைப் புரிந்து கொள்வதே இல்லை.

குதூகலமும், வேடிக்கையும், வினோதங்களும் நிறைந்தது அவர்களின் உலகம். அவற்றைக் குலைக்காமல், அந்த உலகத்துக்குள் நுழைந்து பயிற்றுவிப்பவரே நல்லாசிரியர். அவ்விதம் கற்றுக்கொள்ளும் கல்வியே நற்கல்வி. அதை விடுத்து கனத்த புத்தகங்களை அவர்களின் முதுகிலே ஏற்றி, வகுப்பறையிலும் வீட்டிலும் மாறி மாறி அவர்களின் மூளைக்குள் அவற்றை அள்ளிச் சொருகுவது உண்மையில் வன்முறைதான். குழந்தைகளானால் மட்டுமே குழந்தைகளின் வலியைப் புரிந்து கொள்ள முடியும்.

‘‘வீட்டுப் பாடம் என்பது குழந்தைகளின் செயல்பாட்டை தூண்டுவதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். யதார்த்தம் அப்படியல்ல!’’

அரியணையில் அமர்ந்து குழந்தைகள் மீது ஆட்சி செலுத்திய, கேள்வி கேட்பது தம் பிறப்புரிமை என்ற மனநிலையில் இருக்கிற ஆசிரியர்கள் கீழே இறங்க மறுக்கிறார்கள். செயல் வழி கற்றல் திட்டத்தை உலகமே வரவேற்கிறது. நம் ஆசிரியர்களோ எதிர்க்கிறார்கள்.

- வெ.நீலகண்டன்