தொடுதல் கற்போம்... கற்பிப்போம்!



மானே மரிக்கொழுந்தே
மருகில்லா மாணிக்கமே
தேனே திரவியமே
தெவிட்டாத தெள்ளமுதே
மாசி பிறையே
மங்காத மாங்கனியே
தேசப் பிறையே
தெவிட்டாத மாங்கனியே
உங்க குலம் மங்காம
எதிர் குலத்தார் ஏசாம
தங்கமலை பொக்கிஷத்தை
தானாள வந்த கண்ணே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு - என்
பொன்மணியே கண்ணுறங்கு 
(கிராமிய தாலாட்டுப் பாடல்)



குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள்... அவர்களை பேசவிட்டு கேளுங்கள்... தேவையற்ற கேள்விகளால் அவர்களை புண்படுத்தாது, அவர்களாகவே சொல்ல நேரம் கொடுங்கள்.இன்றைய வாழ்க்கையில் தினம் ஒரு முறையாவது ‘டென்ஷன்’ எனும் வார்த்தையை கேட் கிறோம். இவ்வார்த்தையை 4 வயது குழந்தை கூட சொல்லக் கேட்கலாம். டென்ஷன், மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவை மிகச் சாதாரண  வார்த்தைகளாகிவிட்டன. இந்தியாவில் சமீபகாலமாக மனச்சோர்வு / மன அழுத்தம் எனப்படும் டிப்ரஷன் மிக அதிகமாகி வருகிறது. குடும்பம், அதைச் சுற்றியுள்ள பொறுப்புகள் என்று பெண்கள் மிக அதிக அளவு மன அழுத்தத்துக்கு ஆளாவதும் இங்கு அதிகம்.

நம்புவதற்கு சிரமமாக இருந்தாலும் சில விஷயங்களை நாம் ஒப்புக்கொள்ளவே வேண்டும். இந்திய குழந்தை நல மருத்துவ அமைப்பின் ஆராய்ச்சி அறிக்கையின் படி, ‘வட இந்தியாவில் டிப்ரஷன் அதிகம்... தென்னிந்தியாவில் சற்று குறைவு’ என்றும் தெரிய வருகிறது. சராசரியாக 14 முதல் 20 வரையுள்ளோரே மன அழுத்தத்துக்கு அதிக அளவில் ஆளாகின்றனர்.

காரணங்கள்?


குடும்பச் சூழ்நிலை, குறிப்பாக பெற்றோரின் மாறுபடும் மனநிலை (திடீரென கோபம், சந்தேகம், கேள்விகளால் துளைப்பது, அதீத பாசம், அதிகக் கட்டுப்பாடு போன்றவை) குடும்பத்தில் ஏற்படும் இழப்பு, மரணம், விருப்பமானவரின் நோயுற்றல் பெற்றோருக்கு இடையில் ஏற்படும் விவாகரத்து பள்ளியில் அல்லது வெளியிடத்தில் ஏற்படும் மனரீதியிலான கொடுமைகள் Peer pressure எனப்படும் கட்டாயப்படுத்தும் செயல்கள் நண்பர்களுடனான கருத்து வேறுபாடு, பிரிதல், காதல் தோல்விகள் தேர்வுகளில், விளையாட்டில், போட்டிகளில் தோற்பது மற்றவர்களுடன் சகஜமாக பழக முடியாதது, உடல் குறைபாடுகள், கற்றல் குறைபாடு  பிறருடன் ஒப்பிடுதல், உருவ அமைப்பு பற்றிய எண்ணம், தன்னம்பிக்கை இல்லாதது.

மன அழுத்தத்தின் அறிகுறிகள்?

திடீரென உணர்வுகளின் வெளிப்பாடு, அதீத கோபம், கத்துதல் அவர்கள் குறித்து ஏதேனும் கருத்து தெரிவிக்கும் போது சட்டென கோபப்படுதல், அழுதல் தலைவலி, உடல் வலி என்று எதேனும் ஒன்றை சொல்லிக்கொண்டே இருப்பது உடல்நலம் சரியில்லை எனச் சொல்லி வகுப்புகளைத் தவிர்த்தல் பெற்றோர், நண்பர்களிடமிருந்து ஒதுங்கி இருத்தல்  வழக்கமான பணிகளில் விருப்பம் இல்லாது இருத்தல்  எப்போதும் சோர்வாக இருத்தல், சோகமாகவும் உற்சாகமின்றியும் இருத்தல் அடிக்கடி தனிமையை நாடுவது தூக்கமின்மை அல்லது அதிகமாக தூங்குவது உணவில் நாட்டமில்லாதது அல்லது அதிகமாக சாப்பிடுவது கவனக்குறைவு, முடிவெடுக்க இயலாதது பள்ளிப் பாடங்களை செய்யாதது, பள்ளிக்குப் போக விரும்பாதது.

பெண் குழந்தையா?


உங்கள் குழந்தை பெண் குழந்தை எனில் மன அழுத்தத்துக்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெண்குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் உடல் இளைக்க முயற்சிக்கிறீர்களா? இது பள்ளியில் அல்லது தோழிகள் மத்தியில் நடந்த ஒப்பீடு, உருவம் குறித்த சுய ஒப்பீடு, தன்னம்பிக்கை இழத்தல், உணவில் மாறுதல் செய்வது என மன அழுத்தங்களால் ஏற்படுவதே. இந்த மன அழுத்தம் குழந்தைகளின் எதிர்கால வாழ்வை பாழாக்குவதுடன், அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் அமைகிறது. தேவையற்ற பழக்கவழக்கங்களான போதை மருந்து உபயோகித்தல், மதுக்கு அடிமையாதல், பேட் டச் சார்ந்த விஷயங்களிலும் கொண்டுவிடும்.

எப்படிக் கையாளுவது?

மனம் விட்டுப் பேசுதலே எல்லாவற்றுக்கும் தீர்வு. பல முதியோர் இல்லங்களில் உள்ள  வயதானவர்களின் மிகப்பெரிய ஆசையே மனம் விட்டுப் பேசுவதாகவே இருக்கும். குழந்தைகளும் அப்படியே. ஒரு சிறிய பாராட்டும், ஒரு சிறிய அணைப்பும், ஒரு அன்பு முத்தமும் எல்லாவற்றையும் நம்மிடம் பகிர செய்யும் மாயாஜாலங்கள். குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள்... அவர்களை பேசவிட்டு கேளுங்கள்... தேவையற்ற கேள்விகளால் அவர்களை புண்படுத்தாது, அவர்களாகவே சொல்ல நேரம் கொடுங்கள்.

‘ரெண்டுங்கெட்டான் வயது’ எனக் கூறப்படும் டீன் ஏஜ் குழந்தைகள், உங்களை மதிக்காமல் பேச மறுத்தாலும், கோபம் வேண்டாம்... பொறுமையுடன் காத்திருங்கள். அவர்களுக்கும் உங்களைவிட்டால் யாருமில்லை... அவர்களுக்கான நேரத்துக்கும், அவர்களின் தனிமைக்கும், சுயத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். இலவச அறிவுரைகளை தவிர்க்க வேண்டும். என்ன செய்வது என்று உங்களிடம் கேள்வி வரும்போதும் கூட, தேவையற்ற லெக்சர்களை தவிர்த்து  அவசியமானதைக் கூறினாலே போதும்.

அவர்களுடைய பிரச்னைகள் உங்களுக்கு மிகமிக சாதாரணமாக - சில நேரம் நகைப்புக்கு உரியதாகக் கூட தோன்றும். யோசித்து பாருங்கள்.... அந்த வயதில் இப்போது இருக்கும்  குழந்தைகள் அளவு கூட நமக்கு ஒரு அறிவு முதிர்ச்சி இல்லாததுதானே உண்மை? உங்கள் முகபாவனைகள் மாறாமல், அவர்கள் சொல்வதைக் கேட்பது அவசியம். ஒரு ஏளன புன்னகையோ, ஒரு கோப புருவ நெறிப்போ அவர்கள் உணர்வுக்குத் தடையாகி விடும். பேசுங்கள்... அன்பாக, அமைதியாக  எப்போதும். பிரச்னையென்று வந்தபின் பேசுவதை விட, எப்போதும் அவர்களை தோழர்களாக  நடத்தினால், பிற்பாடு தனியாக அமர்ந்து அவர்கள் பேச காத்திருக்க வேண்டிய அவசியம்  இல்லையே!

அவசியம் தேவைப்பட்டால், மனநல மருத்துவரின் ஆலோசனை பெறுவதில் தவறில்லை. ரகசியம் காப்பது இங்கும் அவசியமாகிறது. குழந்தைகள் தங்களை நோயாளிகளாக யாரும் பார்ப்பதை விரும்புவதில்லை. அதிலும் மனநலம் என்பது கண்ணாடிப் பாத்திரத்தைவிட கவனமாக கையாள வேண்டிய விஷயம். குழந்தைக்கும் உங்களுக்கும் மட்டுமே தெரிய வேண்டியது. அடுத்தவர் அறிந்தால் அதன் முடிவுகள் விபரீதமானவை. சமீபத்தில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் ஒரு 19 வயது பெண் தற்கொலை செய்து கொண்டதை அவள் தாயார் சொன்ன போது, அதன் பின்னணி அந்த குழந்தை டிபி நோய்க்கு மருந்து எடுத்தது வெளியில் தெரிந்ததால்தான். விபரீத முடிவெடுக்க கணநேர தைரியம் போதும் யாருக்கும். எனவே குழந்தையின் ரகசியம் மிகவும் பத்திரம்!

(பாதுகாப்போம்!)