ததும்பி வழியும் மௌனம்



வேடிக்கை  மனிதர்கள்

ஒருமுறை கோவா சென்றிருந்தோம். கோவாவில் சில விஷயங்கள் இன்றும் அபூர்வம்... புடவை கட்டிய பெண்கள்... புகையும் மதுவும் அற்ற உணவகம்... கோவாவின் மக்கள் இன்றும் தங்களை போர்ச்சுக்கீசிய பண்பாட்டின் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொள்ளவில்லை.


கோவாவின் எல்லா வயதுப் பெண்களும் மிக அழகாக முட்டிக்கு மேல் நிற்கும் மேற்கத்திய ஸ்கர்ட் போன்ற கவுன் ஒன்றை அணிந்து காணப்படுகிறார்கள். மிகக் கம்பீரமாகப் பெண்களைப் பார்க்க முடிந்ததில் பெருமகிழ்ச்சியாகவும் இருந்தது.   எல்லா உணவகங்களிலும் குடும்பம் குடும்பமாகத்தான் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். ஆணும் பெண்ணும் அவர்களுக்கு வேண்டிய மதுவகைகளோடு, குழந்தைகள் தங்களுக்கான குளிர்பானங்களோடு விதவிதமான அசைவ உணவை ருசிக்கிறார்கள். குழந்தைகளுடன் உட்கார்ந்து அவர்கள் அளவான மது குடிப்பது வியக்க வைக்கிறது. இதில் நமக்கு சகித்துக் கொள்ள முடியாத விஷயம்... அவர்கள் வளையம் வளையமாக ஊதிவிடும் புகையைத்தான்... சாப்பிடாமலேயே பசியடங்கி வெளியேற  வேண்டியதுதான்.

புகை, மதுவின் நெடியற்ற, சுவையான தென்னிந்திய உணவும் கிடைக்கக்கூடிய உணவகத்தில் ஒரு மதிய வேளையில் சாப்பிடச் சென்றோம். நிறைய கூட்டமில்லாமல் காலியான இருக்கைகளைப் பார்த்து, ‘அப்பாடா’ என்று பாதி மயக்கமும் பசியுமாக இருந்த நாங்கள் இருக்கைகளில் விழுந்தோம் என்று சொல்லலாம்.

குழந்தைகள் தங்களின் பேச்சொலியோடு பெரும் சிரிப்புமாக இடத்தை நிறைத்துக் கொண்டிருந்தார்கள். தென்னிந்திய உணவுக்கான ஏக்கத்துடன், ‘எப்போது சாப்பாடு வருமோ’ என்று அடிக்கடி சாப்பாடு வரப்போகும் வழியைத் திரும்பிப் பார்த்துக்  கொண்டிருந்தோம்.

அப்போதுதான் கவனித்தேன். தூரத்தில் ஓர் இளவயதுப் பெண்... கல்லூரி மாணவியைப் போன்ற தோற்றம் கொண்ட பெண். சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் எதனாலும் ஈர்க்கப்படாமல் ஒரு குறிப்பு நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருந்தார்.  அந்தப் பெண்ணின் முன்னால் வைக்கப்பட்டிருந்த உணவு பாதி குளிர்ந்திருந்தது. அதைப் பற்றிய சிந்தனையோ,  கவனமோ அவரிடம் இருப்பதாக உணர முடியவில்லை. கணந்தோறும் ஒவ்வொரு சித்திரங்களை அழித்தழித்து எழுதிக் கொண்டிருக்கும் கடற்கரையோர உணவகத்தில் காலத்தின் அழியா ஓவியம் போல் அமர்ந்திருந்த அந்தப் பெண் என் மனதில் அப்படியே பதிந்து போனாள். அவள் தனக்கென்று படைத்துக் கொண்டிருந்த உலகினை கட்டுப்படுத்தும் முழுத்திறனை அந்தச் சிறு பெண் அவ்வளவு லாவகமாக அறிந்திருந்தாள்... செயல்படுத்தியிருந்தாள்.

எந்த நாட்டுப் பெண்ணாக இருக்க முடியும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. 20 வயதைத் தொட்டிருக்கும் அப்பெண், எங்கோ ஒரு பிரதேசத்துக்கு வந்து முன்பின் அறிமுகமில்லாத ஓர் உணவகத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் மொழியறியா மனிதர்களுக்கு இடையே இருக்கும் பதற்றமில்லை. பழக்கமற்ற மண்ணில் இருக்கும் அச்சமில்லை. பாதுகாப்புக்கு யாருமில்லாமல் தனியாக வந்திருக்கும் தனிமை கொடுக்கும் அச்சுறுத்தல் இல்லை. யாராவது தன்னை கவனிக்கிறார்களோ என்று வினாடிக்கு ஒருமுறை தன்னையும் சுற்றியுள்ளவர்களையும் பார்த்துக் கொள்ளும் கவலை இல்லை. அப்பெண் அவள் தேடி வந்த ஏதோ ஓர் ஆய்வு உலகத்துக்குள் மூழ்கிக் கிடந்தாள்.

மெலிந்த கால்களை இன்னும் மெலிந்தவையாகக் காட்டும் படு லூசான கால்சராயில் அந்த ஒல்லிக்குச்சுப் பெண் புற உலகத்தின் கவலைகள் அற்று அமர்ந்திருப்பதைப் பார்த்தவுடன் எனக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது. இடது கையினால் தன்னுடைய தோள்பையில் இருந்து எடுத்த சின்னஞ் சிறிய குறிப்புப் புத்தகத்தில் அப்பெண் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். எழுதியதைப் படித்துப் பார்த்தாள். படித்துவிட்டு தன் பைக்குள் வைத்துக் கொண்டாள். அப்புறம் தன் முன்னால் முழுமையாக குளிர்ந்துப் போயிருந்த உணவை அருகில் நகர்த்தி வைத்துக் கொண்டாள். உணவை ஸ்பூனால் அள்ளி வாய்க்குள் எடுத்து வைத்துக் கொண்டே தீவிர யோசனையில் இருந்தாள்.

சாப்பிட்டு முடிக்கும் வரை அவளின் குனிந்த தலை நிமிரவேயில்லை. சீரான வேகத்தில் உணவை விழுங்கி முடித்த பிறகு மீண்டும் தன் பைக்குள் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்து  எழுதத் தொடங்கினாள். தீவிர சிந்தனையில் இருந்த அந்தப் பெண்ணை பிள்ளைகளுக்குக் காட்டினேன். அவளைப் பார்த்தும் எதையோ சொல்லி சிரித்துவிட்டு வேறுவேறு பேச்சுகளுக்குச் சென்று விட்டார்கள்.கோவாவில் எவ்வளவோ இடங்களைப் பார்த்தோம். தபஸ்வினி போல் கண்முன் விஸ்வரூபம் எடுத்து நின்ற அந்தச் சிறு பெண்ணின் முகமே இன்றும் கோவாவின் நினைவாக மனதுக்குள் எஞ்சியிருக்கிறது.

பெயர் தெரியா தேசத்தின், பெயர் தெரியா பெண்ணின் முகம் இவ்வளவு நாட்களாக ஏன் மனதில் இருக்க வேண்டும்? அப்படி அந்தப் பெண் செய்த வியத்தற்குரிய செயல் என்ன? நுணுகிப் பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லைதான். அவள் என்ன எழுதினாள், ஏதேனும் ஆய்வு செய்கிறாளா, அவள் கவனிப்பு எது குறித்து என்றெல்லாம் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெண் ஏதேனும் விளையாட்டொன்றைக்கூட விளையாடியிருக்கலாம். அல்லது தேசம் கடந்து வந்த பிறகு தன் தந்தைக்கோ, தாய்க்கோ, காதலனுக்கோகூட கடிதம் எழுதியிருக்கலாம். ஆனாலும், அதை செய்தவிதம் மிக முக்கியமானதாக இருந்தது.

அந்தப் பெண் என்னை வசீகரித்து என் நினைவடுக்குகளில் பதிந்து போனதற்கு இரண்டு  காரணங்கள். ஒன்று அவளின் நடவடிக்கை.  இரண்டாவது அவளின் சுதந்திரம்.  ஒரு செயலில் கவனச் சிதைவின்றி ஈடுபாடு கொள்வது என்பது நமக்குப் பழக்கத்திலேயே இல்லை. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போதே நான்கு வேலைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பது, குளிக்கும் போது சாப்பிடுவதைப் பற்றி நினைப்பது, சாப்பிடும் போது வெளியில் கிளம்புவது பற்றியோ, பிடிக்கப்போகும் பேருந்து பற்றியோ யோசித்துக் கொண்டிருப்பது என்பதையெல்லாம் கூட நாம் நேர மேலாண்மை என்று பெருமையாகக் கூறிக் கொள்ளலாம். உண்மையில், நாம் ஒருபோதும் அமைதியாக சுற்றியிருப்பவர்கள் பற்றிய நினைவுகள் அற்று நம்முடைய காரியங்களை  செய்வதேயில்லை.

நம்முடைய காதுகளை எப்போதும் அடுத்தவர்களின் பேச்சுகளுக்காக திறந்து வைத்திருக்கிறோம். நம்முடைய கண்கள் சூழலை கிரகிக்க எந்நேரமும் சுழன்றபடி உள்ளன. 10 நிமிடம் கூட மற்றவர்களுடன் பேசாமலும் யார் பேசுவதை கேட்காமலும் நம்மால் இருக்க முடியாது. நமக்குத் தூக்கம் கூட உடலுக்குத்தான்... மனதுக்கு இல்லை. இதுதான் நம்மில் பலரின் பழக்கம்.

வெயில் தேசத்திலிருக்கும் நாம் எந்நேரமும் பிறரின் அருகாமைக்கும் பேச்சுக்கும் ஆவலாகத்தான் இருப்போம். நமக்கு வீட்டின் உள்பகுதியை விட வீட்டின் திண்ணையே எப்பொழுதும் வாழ்விடமாக இருந்தது. இன்று திண்ணைகள் இல்லாவிட்டாலும் எல்லோருடைய முதுகிலும் கண்ணிலும் பல திண்ணைகள் உள்ளன. மற்றவர்கள் நம்மை கவனிக்கிறார்களா,  நம்மைப் பற்றி பேசுகிறார்களா, மற்றவர்களுக்கு நாம் சரியாக இருக்கிறோமா என்ற ஆர்வமும் கவலையும் நம்மை அறியாமல் எப்போதும் நம்முடன் இருக்கின்றன. பெண்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

அந்தச் சிறு பெண்ணை அதிகம் பிடித்துப் போனதற்குக் காரணம், அந்தப் பெண்ணின் நடவடிக்கையில் பெண் என்ற பதற்றம் இல்லாமல் இருந்தது தான். நம் ஊரின் 20 வயதுப் பெண் ஒருத்தி ஓர் உணவகத்தில் தனியாக அமர்ந்து தன்னுடைய ஆய்வு பற்றியோ, தனக்குப் பிடித்த கலைச் செயல்பாடுகள் பற்றியோ யோசித்துக் கொண்டிருக்க முடியாது.

இன்று எத்தனையோ பெண்கள்  நள்ளிரவில் கூட தனியாக சாப்பிடப் போகிறார்கள், வருகிறார்கள் என்று கருத்துச் சொல்லக்கூடும். ஆனால், அந்தப் பெண்கள் தங்களால் முடியும் என்பதற்காக செய்து கொண்டிருப்பார்களே தவிர, அப்படி தனியாக வந்திருக்கிறோம் என்ற உணர்வே பதற்றமாகி ஒவ்வொரு வினாடியிலும் அந்தப் பெண்ணை விரட்டிக் கொண்டிருக்கும்.

வெளி தேசத்தில் அல்ல... சொந்த தேசத்திலேயே ஒரு பெண் பொதுவெளியை தன்னுடைய இடமாக, சுதந்திர வெளியாக அனுபவிக்க முடியாது. வீட்டை விட்டு வெளியே என்றாலே பெண்ணுக்கு அந்நிய தேசம்தான்... பயம்தான்... பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற பதற்றம்தான்... உடனடியாக வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும் என்ற கட்டுப்பாடுதான். இந்தியச் சூழலில் பெண் எந்நேரமும் கண்காணிக்கப் படுவாள். உணவகத்தில் தனியாக அமர்ந்து சாப்பிடுவதும் அல்லது கடற்கரையோரம் உட்கார்ந்து தன்னுடைய  விருப்பமான ஒரு செயலை செய்வது என்பதும் இந்திய சமூகத்தால் ஜீரணிக்கவே முடியாத செயல்கள்.

முக்கியமாக ஓர் ஆணின் துணையற்று. பெண் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரலாம். படிக்க, வேலைக்குச் செல்ல, காய்கறி வாங்க, திரைப்படத்துக்குப் போக, திருவிழா உள்ளிட்ட விசேஷங்களுக்குப் போக. எல்லாம் குடும்பம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக.. அவையும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள். அதைத் தாண்டியும் பெண் வெளியே இருக்க நேர்ந்தால் அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வேறுவிதமாக இருக்கும்.

மனரீதியாக இதைவிட பெண் அதிக ஊசலாட்டங்களுடன்தான் இருக்கிறாள். சமூகத்தின் வெளி என்பது எப்போதும்  அவளின் இருப்பைப் பற்றிய கேள்விகளுக்கு அவளை பதில் சொல்ல சொல்லிக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

முழுமையாக மறைக்கப்பட்ட கலாசார ஆடையை அணிந்திருக்கிறாயா? அது கொஞ்சமும் விலகாமல் இருக்கிறதா? யாராவது வேடிக்கை பார்க்கிறார்களா? அய்யய்யோ... வேடிக்கை பார்க்கப்படுகிறோம் என்றால் தன்னுடைய தவறென்ன என்று தன்னை தலை முதல் பாதம் வரை ஒருமுறை பார்த்துக் கொள்ளுதல், எல்லோரும் தன்னைப் பார்த்தாலும் தான் யாரையும் பார்க்காமல் செல்லுதல்... இப்படி புறச்சூழலில் பெண் ஒவ்வொரு வினாடியும் பாதுகாப்பற்ற உணர்விலோ கண்காணிப்புக்கு உட்பட்ட அசௌகரியத்திலோதான் நேரத்தைக் கடத்த வேண்டியிருக்கும். இதில் எங்கு கலை, கத்தரிக்காய்?

குடும்பம் எதிர்பார்க்கும் கடமைகளைத் தாண்டி, பெண் தன் சுய விருப்பத்துக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இங்கு பெரும் போராட்டமே. குடும்பம் அனுமதிக்கும் விதத்தில் அனுமதிக்கும் வரை ஈடுபடலாம். ஏதோ ஒரு காரணத்துக்காக குடும்பம் அந்தக் கலை நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று சொன்னால் பெண் நிறுத்தியே ஆக வேண்டும். மறு பேச்சின்றி. அப்போதுதான் அவள் குடும்பத்துக்குள் அமைதியாக வாழ முடியும். சிக்கல்கள் இன்றி வாழ்வைத் தொடர முடியும்.

மருத்துவம் படித்த பெண்ணும் நல்ல வசதியான வீட்டில் வாழ்க்கைப் பட்ட பிறகு, குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று தான் படித்த படிப்பையே மறந்துவிட்டு வீட்டில் இருக்க வேண்டும். உயர்கல்வி  பெற்று முதல் நிலையில் தேர்ச்சியடைந்த எத்தனையோ பெண்கள் தங்களின் குடும்ப பராமரிப்புக்காக தான் படித்தப் படிப்பினை மறந்துவிட்டோ, செய்யும் வேலையைத்  துறந்துவிட்டோ குடும்ப வாழ்வில் ஈடுபடுகிறார்கள். அடிப்படையான கல்விக்கே இந்த நிலை என்றால் மற்ற செயல்பாடுகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்களும் கலைத்துறையில் ஈடுபடும் பெண்களும் தங்கள் குடும்பத்தின் தேவைகளை எதிர்பார்ப்புகளை  இரண்டாவதாகக் கொள்வதால்தான், அவர்களால் குடும்ப வாழ்வில் நீடிக்க முடிவதில்லை. அல்லது குடும்ப வாழ்க்கை வேண்டாம் என்ற முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள். குடும்ப வாழ்வைத் துறந்தால் மட்டுமே அவர்கள் நினைத்த பொது வாழ்க்கை அமையும் என்பது இந்தியச் சமூகத்தில் பெண்களின் மேல் உள்ள விமோசனமற்ற சாபமாக இருக்கிறது.

அந்தக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரக்கணக்கான பெண்களையும் திராவிட இயக்க செயல்பாடுகளில் ஈடுபட்ட பெண்களையும் உதாரணமாகக் கூறுவார்கள். ஆனால், அந்தப் பெண்களின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களின் வழிகாட்டுதலிலும் ஆர்வத்தினாலுமே இந்தப் பெண்களில் பலர் இப்போராட்டங்களில் ஈடுபடத் தூண்டப்பட்டார்கள்.

இந்த இயக்கத்தில் இருந்த ஆண்களுக்கு தங்களை முற்போக்குவாதிகளாக, பெண்களை சமமாக நடத்தும் ஜனநாயகவாதிகளாகக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் இருந்தது. தங்களின்  பெருமையை நிலைநாட்டிக் கொள்வதற்காகவே, உண்மையில் அவர்களின் வீட்டுப் பெண்கள் பொதுவாழ்வுக்கு அனுமதிக்கப்பட்டார்கள். அந்தத் தேவை நிறைவேறியவுடன் அந்தப் பெண்கள்  மீண்டும் வீடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

பெண்கள் உண்மையான அக்கறையுடனும் புரிதலுடனும் பொது வாழ்க்கைக்கு அனுப்பப்பட்டிருந்தால் இன்றைக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு அரசியல் கட்சிகள் பெண்களை வலைபோட்டுத் தேட வேண்டியதில்லை. ஆண்களின் பினாமிகளை தேர்தலில் நிறுத்த வேண்டியதில்லை. பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் சிறு எண்ணிக்கையிலான பெண்களும் தனித்து வாழவேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்காது. இந்தியாவில் பெண்களுக்கு சுதந்திரம் போன்ற ஒன்றை கொடுக்கவே அனைவரும் விரும்புகிறார்கள். உண்மையான சுதந்திரத்தை அல்ல. இந்தப் பின்னணியில் தன் அக உலகை புற உலகாக்கி யோகினியாக அமர்ந்திருந்தப் பெண் நம்மை ஈர்க்கமாட்டாளா என்ன?  
 
வீட்டை விட்டு வெளியே என்றாலே பெண்ணுக்கு அந்நிய தேசம்தான்... பயம்தான்... பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற பதற்றம்தான்... உடனடியாக வீட்டுக்குள் சென்றுவிட வேண்டும் என்ற கட்டுப்பாடுதான்.குடும்பம் எதிர்பார்க்கும் கடமைகளைத் தாண்டி, பெண் தன் சுய விருப்பத்துக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இங்கு பெரும் போராட்டமே.

(நிறைய பேசுவோம்...
நிறைவாகப் பேசுவோம்!)