இந்த வளர்ச்சி எங்கே கொண்டு செல்லும்?



டாலர் தேசத்திலிருந்து ஒரு குரல்!


அமெரிக்காவிலுள்ள ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூஷனில் பொறுப்பாளர் டாக்டர் மசும் மொமாயா  (Masum Momaya) ...  மனித உரிமை, பெண்ணுரிமை, இனப்பாகுபாடு களைதல், சமூக நீதி போன்ற சமூகப் பணிகளில் 20 ஆண்டுகளாக தீவிரமாக இயங்கி வருபவர். ‘நியூயார்க் டைம்ஸ்’, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ உள்ளிட்ட பிரபல நாளிதழ்களில் அதிர்வுகளைக் கிளப்பும் எண்ணற்ற கட்டுரைகளை எழுதியிருப்பவர். இவர் சமீபத்தில் நடத்திய கண்காட்சி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் கண்கொள்ளாக் காட்சி!


‘பாலிவுட்டுக்கு அப்பால்: தேசத்தை வடிவமைக்கும் அமெரிக்க இந்தியர்கள்’ (Beyond Bollywood: Indian Americans Shape the Nation) என்ற தலைப்பில் மசும் மொமாயா அமைத்திருக்கும் கண்காட்சி, அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள பிணைப்பை பறைசாற்றுகிறது. இந்தியர்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எப்படி உதவினார்கள், உதவிக் கொண்டிருக்கிறார்கள், எந்தெந்தத் துறைகளில் அவர்களின் பங்களிப்பு இருக்கிறது, அவர்களில் முக்கியமானவர்கள் என்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு உருவாகி உள்ளது இந்தக் கண்காட்சி. 200க்கும் அதிகமான வரலாற்று மற்றும் சமகாலத்திய புகைப்படங்கள், 3 டஜன் ஓவியங்கள், கலைப் பொருட்கள்... ஒவ்வொன்றுக்கும் அருமையான விளக்கம்! சமீபத்தில் சென்னை வந்திருந்த மசும் மொமாயாவை ‘குங்குமம் தோழி’க்காக சந்தித்தோம்.

அமெரிக்காவுக்கு, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் புலம் பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பு என்ன? அது ஆக்கபூர்வமானதாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? ‘‘அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த இந்தியர்களும் அமெரிக்க வாழ் இந்தியர்களும் ஆற்றியிருக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. தொழில், வர்த்தகம், பொறியியல், மருத்துவம், அரசியல், கல்விக் கட்டுமானம் என பல்துறைகளில் அவர்களின் பங்களிப்பு சிறப்பானது. சமையல்கலைஞர், இசையமைப்பாளர், திரைப்பட இயக்குநர், நடனக் கலைஞர் என அவர்களின் செயல்பாடு அமெரிக்காவுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.

இந்தியப் பாரம்பரியமும் கலாசாரமும் அமெரிக்காவிலிருந்து மிகவும் வேறுபட்டது. அப்படி இருந்தும் கூட, அமெரிக்கா இன்றைய நிலைமைக்கு வர பல இந்தியர்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!’’அமெரிக்காவில் அரசியல் வெளியில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க வாழ்  இந்தியர்களின் செயல்பாடு மிகக்குறைவாகவே உள்ளது. ஏன் அப்படி?

‘‘சமீப காலமாக அரசியலிலும் மாற்றங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ‘யுனைட்டட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ்’ எனப்படும் அமெரிக்க சட்ட மன்றத்தின் உறுப்பினர் பதவிக்கு, 1950ல்தான் முதல் அமெரிக்க இந்தியர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது இரண்டு பேர் கூடுதல் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கிறார்கள். சர்விங் மெம்பராக யு.எஸ். காங்கிரஸில் ஒருவர் இருக்கிறார். இப்போது கவர்னர் பதவியில் பல இந்தியர்கள் இருக்கிறார்கள்.

‘சிட்டி கான்ஃபரன்ஸ் மெம்பர்’, ‘அட்மைரல்’, ‘கோ போர்டு கமிஷனர்’ என உள்ளாட்சி அமைப்புகளிலும்  பல அமெரிக்க இந்தியர்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள். என்னுடைய தலைமுறையில்தான் இத்தகைய மாற்றம் அதிக அளவில் நிகழ்கிறது என கருதுகிறேன். அரசின் மிக முக்கியப் பதவிகளில் உள்ளூர் மற்றும் தேசிய அளவில் 30-40 வயதுக்குள்ளாகவே, பல அமெரிக்க இந்தியர்களின் பங்களிப்பு ஆரம்பமாகிவிடுகிறது. மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது!

இது இப்போது அதிகம் என்றாலும், பொதுவாக இந்தியர்களின் அரசியல் செயல்பாடு குறைவாக இருப்பதற்குக் காரணமும் உண்டு. 1960களில்தான் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து  அமெரிக்காவுக்கு வர ஆரம்பித்தார்கள். அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட கால அவகாசம் வேண்டுமில்லையா? படிக்க வேண்டும்... வேலை பார்த்து பணம் சம்பாதிக்க வேண்டும்... குடும்பத்தைப் பராமரிக்க வேண்டும்... அதற்குப் பிறகுதான் காலூன்றி நிற்க முடியும். மற்றொரு நாட்டுக்குப் புலம் பெயர்ந்த ஒரு குடும்பம் அங்கே தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவே 2-3 தலைமுறையாகி விடும். அதுதான் அமெரிக்காவில் நடக்கிறது. அதனால்தான் அரசியலில் அமெரிக்க இந்தியர்கள் அதிக அளவில் பங்கு பெற இவ்வளவு கால  அவகாசம் தேவைப்படுகிறது...’’

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்பவர்களை ஊக்கப்படுத்தி இடம் அளிக்கும் அளவுக்கு, அமெரிக்க அரசின் கொள்கைகள் முன்னேறியிருப்பதாகக் கருதுகிறீர்களா? “இது ஒரு சிக்கலான கேள்வி. 1960களில் அமெரிக்க அரசுக்கு தொழில்நுட்பத் திறமையுள்ள ஆட்கள் தேவைப்பட்டார்கள். அமெரிக்காவுக்கு வந்திருந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்கான திறமையுள்ளவர்கள்...

அதே போல மருத்துவப் பின்புலம் உள்ளவர்களும் தேவைப்பட்டார்கள். 1965ல், இந்த அடிப்படையில் இந்தியர்கள் சில பயிற்சிகளுக்காகவும் வேலைக்காகவும் புலம் பெயர்ந்து அமெரிக்காவுக்கு வர ஆரம்பித்தார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கும் பணி வழங்கும் நிறுவனங்களின் மூலமாக விசா வழங்கப்பட்டது. அப்படி வந்த இந்தியர்களே ஆரம்பத்தில் அதிகம்.

இப்போது பல்வேறு காரணங்களுக்காக வருகிறார்கள். அமெரிக்காவின் பொருளாதார நிலை அனுமதிக்கும் அளவுக்குத்தானே, புலம் பெயர்ந்து வருபவர்களை அரசால் அனுமதிக்க முடியும்? புதியவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய சவாலும் இருக்கிறது. 

இது இங்கு மட்டுமல்ல... பல நாடுகளிலும் இதே நிலைதான். வரலாற்றில் புலம் பெயர்ந்து வருகிறவர்களுக்கான மிக இக்கட்டான தருணம் இது...’’சமீபத்தில் ஒபாமா அரசு இந்தியாவுக்கு அவுட் சோர்சிங் பணிகளைக் கொடுப்பதைக் குறைத்திருக்கிறது. அது இங்கிருக்கும் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) பணியில் செயல்படும் இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலை மாறுமா?

‘‘இதுவும் சிக்கலான கேள்விதான்... அமெரிக்க பொருளாதார நிலையை சீராக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்போது பொருளாதார நிலை நன்றாக இல்லை. அமெரிக்கா முழுக்க இருக்கும் அமெரிக்கர்களுக்கு வேலைகளை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கு அவுட் சோர்சிங் பணி கொடுப்பது குறைக்கப்பட்டிருக்கிறது.

அவுட் சோர்சிங் குறைப்பு என்பது ஐ.டி.யில் மட்டுமல்ல... மற்ற துறைகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை மாறலாம். அதற்கு சில காலம் ஆகலாம். குறிப்பாக இத்தனை மாதங்களுக்குள் அல்லது வருடங்களுக்குள் மாறும் என்று காலக்கணக்கு சொல்ல முடியாது. நிலைமை மாறுவதற்கு அமெரிக்க பொருளாதாரம் படிப்படியாக முன்னேறியாக வேண்டும்!’’
 
அமெரிக்க-இந்திய உறவு பலப்பட என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? ‘‘சமீபத்தில் இந்திய பிரதமர் அமெரிக்கா வந்தபோது அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்றவர்கள் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மட்டுமல்ல...

ஒபாமா உள்பட பல அமெரிக்கர்களும் இந்தியர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இந்திய-அமெரிக்க உறவு நன்றாக இருக்கிறது... தனிப்பட்ட உறவு மட்டுமல்ல... தொழில், வர்த்தகம் என அனைத்து விதங்களிலும் சிறப்பாக இருக்கிறது... இரண்டு நாடுகளுக்கு இடையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்கிற புரிதலும் உள்ளது. இருதரப்பு உறவின் மீது, மற்ற   நாடுகளின் கவனமும் திரும்பும் அளவுக்குச் சிறப்பாக இருக்கிறது. புதிதாகச் செய்வதற்கு ஒன்றும் இல்லை!’’

இன்றைய உலகமயமாக்கலின் தாக்கத்தை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்? ஒரு வளர்ந்த நாட்டுக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டுக்கும் இடையிலான உறவு பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடியது என்று நினைக்கிறீர்களா? இந்த நிலையை முன்னேற்ற தேவைப்படுவது என்ன? ‘‘உலகமயமாக்கல் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு வழிமுறை... அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ‘வளர்ந்த நாட்டுக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டுக்கும்...’ - எதிர்காலத்தில் இந்த வேறுபாடு ஒருவேளை தேவைப்படலாம்.

ஆனால், இப்போது ஒரு நாடு வளர்ந்தது, இன்னொரு நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்வது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்புடையதாக இல்லை... குறிப்பாக இந்தியாவை. இது என் சொந்த மண். இந்தியா பலவிதங்களில் முன்னேறியிருக்கிறது என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

இந்தியாவில் இருக்கும் பள்ளிக் கல்விமுறை சிறப்பானது. நாடு முழுக்க பொதுக் கல்வித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. எல்லா நாடுகளுமே பல பிரச்னைகளை எதிர்கொண்டபடிதான் இருக்கின்றன... நிகழ்வுகளை வைத்து ஒரு நாடு இன்னொரு நாட்டிடம் இருந்து கற்றுக் கொள்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்!’’

இனிமேலும் வெகு காலத்துக்கு ‘உலக நாட்டாமை’ என்கிற பாத்திரத்தை அமெரிக்கா வகிக்க முடியாது என்று பலரும் கருதுகிறார்கள். அதற்கேற்ப அரசியல் நிலவரமும் இப்போது கணிசமாக மாறியிருக்கிறது. இந்த அலை ஆசிய நாடுகளுக்கு சாதகமாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா, குறிப்பாக சீனாவுக்கு? ‘‘அமெரிக்காவில் இருக்கும் பலரும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார வளங்கள் இல்லாத காரணத்தால் அந்தப் பாத்திரத்தில் அமெரிக்காவால் வெகு காலத்துக்கு நீடிக்க முடியாது. உலக அளவில் பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் அமெரிக்காவின் ஈகோ அதற்கு மிகப்பெரிய தடை. அனைத்து நாடுகளுமே மக்களின் உரிமைகளுக்கும் சமத்துவத்துக்கும் உத்தரவாதம் அளிக்கக் கடமைப்பட்டவை.

சீனா பந்தயத்தில் நிற்கிறது. அது முன்னேறி வருகிறது என்பதற்கான ஆதாரங்களாக புது கட்டிடங்களையும், அதன் உள்கட்டமைப்பு வசதி களையும், புதிய போக்குவரத்து வசதிகளையும் சொல்லலாம். அதே நேரம் சுற்றுச்சூழல் மாசு, மனிதர்களை மனரீதியாக வதைத்தல், தொழிலாளர்களுக்கு இன்னல், மனித உரிமை மீறல் என பல பிரச்னைகள் அங்கே நிலவுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி எது என்று பார்க்க வேண்டும். அது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல... முன்னணி நாடாக இந்தியா வளருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்...’’

வறுமை, பொருளாதார சமத்துவமின்மை, பெண்கள் பாதுகாப்பின்மை - இவை மிகப்பெரிய சவால்களை உலகம் முழுக்க ஏற்படுத்தியுள்ளன. ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போன்ற மிகப்பெரிய போராட்டங்கள் உலகம் முழுக்க உள்ள உழைக்கும் மக்கள் மத்தியில் அதிருப்தி வளர்ந்து வருவதை குறிப்பாக உணர்த்துகிறது. முதலாளித்துவமும் கட்டற்ற சந்தை முறையும் (Free market system) செயலிழந்துவிட்டன என்பதையும், அவற்றுக்கான மாற்றுத் திட்டங்கள் நமக்கு தேவைப்படுகின்றன என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அப்படியென்றால் அவை என்னென்ன?

‘‘கட்டற்ற சந்தை முறையை ஒட்டுமொத்தமாக கைவிடுவது கடினம் என்றே எனக்குத் தோன்றுகிறது. பல பேருக்கு பல வாய்ப்புகளை கட்டற்ற சந்தை முறை உருவாக்கித் தந்திருக்கிறது. அது தேவையா, இல்லையா என்பது மிக நீண்ட விவாதத்துக்குரியது. அரசுதான் நாட்டின் நிலையை ஆராய்ந்து மனிதர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். சில இடங்களில் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு இது போன்ற சேவைகளை வழங்கி வருகின்றன. அதற்கு இந்தியா சிறந்த உதாரணம். சில பிரச்னைகளுக்கு இவற்றின் மூலமாகத் தீர்வும் காணலாம்...’’

 நம் வாழ்க்கையில் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. சமூக ஊடகங்களும் சிட்டிசன் ஜர்னலிசமும் வேகமாக முன்னேறி வருகின்றன. சில நிகழ்வுகளில் மிகப்பெரிய கார்ப்பரேட் ஊடகங்களையும் அவை தாண்டி விடுகின்றன. இந்த பரிணாம வளர்ச்சி நம்மை எங்கே கொண்டு செல்லும்? ‘‘உங்களுடைய யூகம்தான் என்னுடையதும். உலகம் முழுக்க பெரு நிறுவனங்கள்தான் ஊடகங்களில் ஆட்சி செலுத்தி வருகின்றன.

சமூக ஊடகங்களையும் சிட்டிசன் ஜர்னலிசத்தையும் ஊக்குவிக்க வேண்டியது இன்றைய தேவை. இவை இளைய தலைமுறையிடம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. பல்வேறு வழிகளில் மனிதர்களை தொடர்பு கொள்ளவும் ஒருங்கிணைக்கவும் இவை உதவுகின்றன. இந்த வளர்ச்சி எங்கே கொண்டு செல்லும்? எனக்குத் தெரியாது... நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்... அவ்வளவுதான்!’’மற்றொரு நாட்டுக்குப் புலம் பெயர்ந்த ஒரு குடும்பம்அங்கே தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவே இரண்டு மூன்றுதலைமுறையாகிவிடும்...

- பாலு சத்யா
படங்கள்: ஆர்.கோபால்