குறை இல்லை... திறன் உண்டு!



திருச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தி மாணவர்களிடத்திலே நம்பிக்கை ஒளி பாய்ச்சி வருகிறார் கலையரசி. உயரம் குறைவான மாற்றுத்திறனாளியாகவும், கால்சியம் குறைபாட்டால் பலவீனமான எலும்புகளுடன் போராடும் நிலையிலும் கூட, தனது முயற்சி மற்றும் சமூகப் பங்களிப்பை அவர் விவரிக்கையில், அதன் பின் விரிந்திருக்கிற தன்னம்பிக்கை, கேட்போரைச் சிலிர்க்க வைக்கிறது!


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கொளக்குடியில் ‘பூர்ணோதயா’ தொண்டு நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கென தொழிற் பயிற்சிகள் தந்து, மனநலம் குன்றிய மாணவர்களுக்கு சிறப்புப் பள்ளியும் நடத்தி  வருகிறார் கலையரசி.  “மாற்றுத்திறனாளிங்கிற சொல்லே சொல்லும்... எங்களது குறைகளுக்கு மாற்றா வேறு ஒரு திறன் இருக்குன்னு. எங்களுக்குன்னு ஒரு தளம் கிடைச்சா போதும்... யாருடைய தயவுமின்றி தன்னிச்சையா வாழுறதுக்கான திராணி எங்ககிட்ட இருக்கு” - எடுத்த எடுப்பிலேயே பொட்டில் அடித்தது போல பட்டென பேசுகிறார்.

“பிறந்தது, வளர்ந்ததுன்னு எல்லாமே கொளக் குடிங்கிற இந்த குக்கிராமத்தில்தான். எனக்கு ரெண்டு அக்கா, நாலு அண்ணன்... கடைசிக் குழந்தையா பிறந்தேன். எல்லார் வீட்டிலேயும் கடைசிக் குழந்தைக்கு செல்லம் அதிகமா கொடுப்பாங்க... எனக்கும் அப்படித்தான். எங்கப்பா இந்த ஊர் முன்சீஃப்பா இருந்தார். அரசாங்க வேலை பார்த்ததால எங்க குடும்பத்துல பொருளாதாரச் சிக்கல் எதுவுமே இல்லை.

என்ன கேட்டாலும் கிடைக்கும்கிற அளவுக்கு மகிழ்ச்சியா இருந்ததால, எனக்கு இப்படி ஒரு குறை இருக்குங்கிறதே தோணாது. என் பிரச்னையை சரி பண்ணணும்கிறதுக்காக பல ஊர் மருத்துவமனைகளுக்கு அழைச்சிட்டுப் போய் லட்சக்கணக்குல செலவு பண்ணியிருக்காங்க. எந்த சிகிச்சையும் பலன் அளிக்கலை. அதுக்காக ஒடுங்கிப் போய் மூலையில உட்கார்ந்துற முடியுமா?

பள்ளிப் படிப்பு முடிச்சிட்டு திருச்சிப் பக்கம் மேலாப்புதூரில் மூன்றாண்டு காலம் தையல் பயிற்சியில் சேர்ந்தேன். நாம என்ன பண்ணப் போறோம்னே தெரியாம வாழ்க்கை போயிட்டிருந்தப்ப, அங்கதான் எனக்கான பாதை எதுன்னு தெரிஞ்சுது. நான் தையல் படிச்சது ஒரு கிறித்துவக் கல்லூரி... இங்குள்ள கன்னியாஸ்திரிகள் ஞாயிற்றுக்கிழமைகள்ல மக்கள் குறைகளைக் கேட்டு, அதை நிவர்த்தி பண்றதுக்காக வேலை செய்வாங்க. நானும் அவங்களோட சேர்ந்து சமூகப் பணியில் ஈடுபட்டப்பதான், ஒரு வட்டத்துக்குள்ள சுருங்கியிருந்த என்னோட உலகம் பெரிசாச்சு. எத்தனையோ மனிதர்களைப் பார்க்க முடிஞ்சுது...

அவங்க கஷ்டங்களை கேட்க முடிஞ்சுது. அவங்களுக்காக வேலை செய்றதுல எனக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைச்சுது. தையல் பயிற்சி முடிச்சதும், ‘விடிவெள்ளி’ மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில் தையல் ஆசிரியரா சேர்ந்தேன்.

சாயங்காலம் நாலு மணிக்கெல்லாம் என் ஆசிரியப் பணி முடிஞ்சிடும். அதுக்குப் பிற்பாடு அங்க இருக்கிற குடிசைப்பகுதிகளுக்குப் போய், குழந்தைகளுக்கு டியூசன் எடுப்பேன்... பெண்களுக்கு ஒயர்கூடை பின்னுற பயிற்சி கொடுப்பேன்’’ என்கிற கலையரசி, கொளக்குடியில் தன் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில், பொருளாதாரச் சிக்கல்களையெல்லாம் தாண்டி, ‘பூர்ணோதயா’ தொண்டு நிறுவனத்துக்கான கட்டிடம் எழுப்பியிருக்கிறார்.

“விடிவெள்ளியில் 11 ஆண்டுகள் வேலை செஞ்சேன். ‘மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சேவகம் பண்ண பல நிறுவனங்கள் இருக்கு. மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக பெரிய தொண்டு நிறுவனங்கள் இல்லை’ன்னு தோணுச்சு. அதனால, 2006ல் பூர்ணோதயா தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். மாற்றுத்திறனாளிகளுக்கு யாருடைய அனுதாபங்களும் தேவை இல்லை.

வீட்டில் இருந்தபடியே அவங்க வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செஞ்சுக்கும்படியா தையல், கம்ப்யூட்டர் சாம்பிராணி, செயற்கை ஆபரணம் செய்தல், பினாயில், சானிட்டரி நாப்கின், கணினிப் பயிற்சிகள் கொடுத்துட்டு வர்றோம். பயிற்சி எடுத்துக்கிட்டா குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். வங்கிக் கடனும் வாங்கித் தர்றோம். இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானவங்க பயிற்சி எடுத்திருக்காங்க. பலர் சுயதொழில் செஞ்சு நல்ல நிலைமையில்  இருக்காங்க!”

கலையரசியின் இந்தப் பயிற்சிகள் மாற்றுத் திறனாளிகளோடு நின்று விடவில்லை. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள கல்லூரி மாணவிகளுக்கும் இப்பயிற்சிகளை அளித்து வருகிறார். சுயதொழில் மூலமாகவே கல்லூரிக் கட்டணம் செலுத்தும் அளவுக்கு இந்தப் பயிற்சிகள்உறுதுணையாக இருக்கின்றன!

“மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை  அதற்கான சிறப்புப் பள்ளிகள்ல சேர்க்கணும்கிற விழிப்புணர்வு கிராமத்துப் பெற்றோர்கள்கிட்ட இல்லை. இப்படியான சூழலில்தான், 2013ல், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக எங்க கட்டிடத்திலேயே சிறப்புப் பள்ளி ஆரம்பிச்சோம். இங்க படிக்கிற 27 குழந்தைகளுக்கும் சிறப்புப் பாடத்திட்டத்தோட, தொழிற்பயிற்சிகளும் கொடுத்துட்டு வர்றோம்” என்கிற கலையரசி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் சிறந்த சமூக சேவைக்கான விருது தொட்டு, பல விருதுகளுக்கும் இவர் சொந்தக்காரர்!

“மாற்றுத்திறனாளிகளும் சக மனிதர்கள்தான்கிற உணர்வு எல்லோருக்குள்ளும் வரணும்கிறது தான் எங்க எதிர்பார்ப்பே... மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தளம் கிடைச்சா அதில் வெற்றிகரமா பயணம் செய்வாங்க... அந்தத் தளத்தை அமைச்சுக் கொடுக்கிறதுதான் எங்க வேலை” - கலையரசியின் பேச்சில் வீரியம் மிகுந்திருக்கிறது!

- கி.ச.திலீபன்
படங்கள்: எஸ்.சுந்தர்