என்ன எடை அழகே...



பத்திரிகை உலகின் முதல் ரியாலிட்டி தொடர் இது!

வாரத்தின் 6 நாட்கள் டயட் சாப்பாடு... 1 நாள் மட்டும் ‘சீட்டிங் டே’ (cheating   day) வுக்கு அனுமதி... அந்த ஒரு நாள் மட்டும் வாய்க்கு ருசியான, வழக்கமான உணவு களை கொஞ்சமாக சாப்பிடலாம்! எடை குறைப்பு சிகிச்சைக்கு வருவோருக்கு ‘தி பாடி ஃபோகஸ்’ உரிமை யாளரும், டயட்டீஷியனுமான அம்பிகா சேகர் சொல்கிற பொதுவான அட்வைஸ் இது!

‘குங்குமம் தோழி’ மூலம் எடைகுறைப்புக்குத் தேர்வாகி, வியக்கத் தக்க வகையில் எடையை குறைத்து, முன்னேறிக் கொண்டிருக்கிற சந்திரகவிதா, ஜெயந்தி, பிரதீபா மற்றும் ஜீவிதா நால்வரும், வாரத்தில் 7 நாட்களுமே டயட் உணவைப் பின்பற்றுகிறார்கள். எப்படியும் ஐடியல் எடையை எட்டிப் பிடித்தே தீர்வோம் என்கிற வெறியே காரணம்!

அனைவரது உணவுக் கட்டுப்பாடும் சரியானதாக, ஆரோக்கியமானதாக இருக்கிறதா என சரிபார்க்க நினைத்த அம்பிகா, அத்தனை பேரையும், அவர்களது பிரதான, பெரும்பாலான நாட்களில் எடுத்துக் கொள்கிற ஒரு விருப்ப உணவை செய்து எடுத்து வரச் சொன்னார்.

ஜெயந்தி ஓட்ஸ் வெண் பொங்கலும், மல்ட்டி கிரெயின் சுண்டலும் கொண்டு வந்தார். டாக்டர் பிரதீபா வீட் பிரெட் சாண்ட்விச்சும், வெஜிடபுள்-ஃப்ரூட் சாலட்டும் எடுத்து வர, ஜீவிதா கொண்டு வந்ததோ டயட் தோசை. ஒவ்வொருவரின் சமையலையும் ருசித்துப் பார்த்து, குறை, நிறைகள் சொன்ன அம்பிகா, தனது ட்ரீட்டாக அவர்களுக்கு டயட் பீட்ரூட் அல்வாவும் அடைப் பிரதமனும் செய்து பரிமாறினார்.

டயட் முறையில் செய்யப்பட்டது என்பதே தெரியாத அளவுக்கு இரண்டும் அத்தனை ருசியாக இருந்ததில் அத்தனை பேருக்கும் ஆச்சரியம்! ‘‘டயட் சாப்பாடுன்னா ருசியா பண்ண முடியாதுனு யார் சொன்னது? ஆரம்ப நாளன்னிக்கே சொன்னேனே’’ என்றார் அம்பிகா.அடைப் பிரதமன் முதல் அனைவரது டயட் உணவுகளின் செய்முறைகளும் இதோ உங்களுக்காக...

ஜீவிதாவின் கைவண்ணத்தில் டயட் தோசை


கோதுமை, பச்சைப் பயறு, வறுத்த கொள்ளு, சம்பா கோதுமை, சீரகம், பெருங்காயம் இவை அனைத்தையும் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவையான போது, சிறிது மாவை தண்ணீரிலோ, மோரிலோ கலந்து, உப்பு சேர்த்து தோசைகளாக வார்க்கவும்.

அடைப் பிரதமன்


கோதுமை மாவை சப்பாத்திக்குப் பிசைந்து கொள்வது போலப் பிசைந்து மெலிதாக இட்டு, டயமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளவும். சிறிது குங்குமப் பூவை பாலில் ஊற வைக்கவும். கொழுப்பு நீக்கிய பாலை சுண்டக் காய்ச்சி, ஊற வைத்த குங்குமப்பூ சேர்க்கவும். 3 டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் டயமண்ட் வடிவ கோதுமை மாவுத் துண்டுகளை பத்து,
பத்தாகப் போட்டுக் கொதிக்க விடவும். அது மேலே வருவதுதான் பதம். பிறகு அதை எடுத்து பாலில் சேர்த்து, செயற்கை சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

ஜெயந்தியின் கைவண்ணத்தில் ஓட்ஸ் வெண் பொங்கல்


என்னென்ன தேவை?

ஓட்ஸ் - 2 கப், பாசிப் பயறு - 1/2 கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 ஈர்க்கு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன். முந்திரி, பாதாம் - தலா 4.

எப்படிச் செய்வது? 

ஓட்ஸை 4 கப் தண்ணீரில் வேகவிடவும். 1 கப் தண்ணீரில் பாசிப் பயறை வேகவிடவும். இரண்டும் குழைந்து வெந்ததும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி, பாதாம் தாளித்து எடுத்து பொங்கலில் விட்டு நன்றாகக் கலந்து விட்டு பரிமாறவும்.

ஆரம்ப எடையும்

இப்போதைய எடையும்!

சந்திர கவிதா

ஆரம்ப எடை - 73.5 கிலோ
இப்போதைய எடை- 64.5 கிலோ

ஜெயந்தி

ஆரம்ப எடை - 81.7 கிலோ
இப்போதைய எடை- 74.5 கிலோ

பிரதீபா

ஆரம்ப எடை - 92.4 கிலோ
இப்போதைய எடை- 88.4 கிலோ

ஜீவிதா

ஆரம்ப எடை - 76.9 கிலோ
இப்போதைய எடை - 72.6 கிலோ

பீட்ரூட் அல்வா


என்னென்ன தேவை?
பீட்ரூட் - அரை கிலோ, வாழைப்பழம் - 10, தேங்காய் - 1, வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய் - 5 கிராம், முந்திரி - 25 கிராம், திராட்சை - 50 கிராம், பாதாம் - 10.
எப்படிச் செய்வது?
பீட்ரூட்டை தோல் நீக்கித் துருவிக் கொள்ளவும். தேங்காயை பல் பல்லாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தைக் கட்டிகள் இல்லாமல் பொடித்துக் கொள்ளவும். வாழைப்பழத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பீட்ரூட் துருவல், வாழைப்பழம், வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் நன்றாகக் கலந்து கொள்ளவும். அத்துடன் பொடித்த முந்திரி, பாதாம், திராட்சை கலந்து, ஏலக்காய் தூள் சேர்த்துக் குளிர வைத்துப்
பரிமாறவும்.

டயட் முறையில் செய்யப்பட்டது என்பதே தெரியாத அளவுக்கு இரண்டும் அத்தனை ருசியாக இருந்ததில் அத்தனை பேருக்கும் ஆச்சரியம்!

பிரதீபாவின் கைவண்ணத்தில் வீட் பிரெட் சாண்ட்விச்

பிரெட் ஓரங்களை வெட்டவும். புதினா, புளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த சட்னியை பிரெட்டின் ஒரு புறத்திலும், இன்னொரு புறத்தில் தேன் அல்லது கொழுப்பு குறைந்த வெண்ணெயும் தடவிப் பரிமாறவும்.

உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமளிக்கும் யோகா பயிற்சிகள் அடுத்த இதழில்...

படங்கள்: ஆர்.கோபால்