இயல்பை அப்படியே ஏற்றுக்கொள்வோம்!



செம்புலப் பெயல் நீர் போல-6

ஜெயந்தி சுரேஷ் - யசோதா பாலகிருஷ்ணன்

நட்புக்கு உதாரணமாகத் திகழ்பவர்களில் தவிர்க்க முடியாத இரட்டையர் எழுத்தாளர்கள் சுபா என்கிற சுரேஷ் - பாலகிருஷ் ணன். அந்த நட்பு பல வருடங்கள் கடந்தும் ஜீவனுடன் இருக்கக் காரணம், இந்த இரட்டையரின் திருமதிகள்!சுரேஷ்-பாலாவின் நட்பைப் பற்றிப் பேசப் புதிதாக ஒன்றுமில்லை.

சுரேஷின் மனைவி ஜெயந்திக்கும் பாலாவின் மனைவி யசோதாவுக்கும் இடையில் இருக்கிறது அழகான ஒரு நட்பு. நட்பு வாழ்க்கையின் 30வது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிற தருணத்தில் அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்கள் தோழிகள் இருவரும்!

‘‘84ம் வருஷம் ஜூன் 27ம் தேதி எனக்கும் சுரேஷுக்கும் கல்யாணமாச்சு.  85ம் வருஷம் ஜூன் 28ம் தேதி பாலாவுக்கும் யசோதாவுக்கும் கல்யாணம். பாலா பொண்ணு பார்த்துட்டு வந்ததும், நான் போய் யசோதாவைப் பார்த்தேன்.

ரெண்டு பேரும் அறிமுகப்படுத்திக்கிட்டோம். எங்கக்கா அனுராதா ரமணனோட எழுத்துகளை அவங்க நிறைய வாசிச்சிருக்காங்க. சுரேஷ்-பாலாவோட கதைகளையும் படிச்சிருக்காங்க. அனுராதா ரமணனோட தங்கையாகவும் சுரேஷோட மனைவியாகவும் அறிமுகமாகிப் பழக ஆரம்பிச்சேன்.

எங்கக் கல்யாண டைம்ல என் ஹஸ்பெண்ட் என்கிட்ட ஒரு பிராமிஸ் வாங்கிக்கிட்டார். ‘‘எந்தச் சூழல்லயும் ‘சுபா’வைப் பிரிக்கணும்னு நினைக்கக் கூடாது. எனக்கு எங்க நட்புதான் முதல்ல. அப்புறம்தான் குடும்பம்’னு சொன்னார். கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு வாசகியா எனக்கு அவங்க ரெண்டு பேரோட எழுத்தும் நட்பும் தெரியும். எழுத்தாளரோட மனைவியான பிறகு அவங்க நட்பை நல்லபடியா தொடரச் செய்யற கூடுதல் பொறுப்பு எனக்கு இருந்தது. எங்கக்காவும் அதைப் பத்தி எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணியிருந்தாங்க.

எங்களுக்கும், யசோதா-பாலாவுக்கும் அடுத்தடுத்த தேதியில கல்யாண நாள்... ரெண்டு குடும்பங்களும் சேர்ந்து 27ம் தேதியோ, 28ம் தேதியோ ரெண்டு பேரோட கல்யாண நாளையும் சேர்த்துக் கொண்டாடற அளவுக்கு நாங்க நெருங்கினோம்.

யசோதா ரொம்ப சைலன்ட். அமைதியா இருக்கிறதுகூட ஒருவகையான ஆயுதம்னு அவங்கக்கிட்டஇருந்துதான் நான் கத்துக்கிட்டேன். பேசாம இருக்கிறது மூலமா பல பிரச்னைகள்லேருந்து வெளியே வர முடியும்னு கத்துக்கிட்டேன். குழப்பமான தருணங்கள்ல என்னால முடிவெடுக்க முடியாதப்ப, அவங்கக்கிட்ட அபிப்ராயம் கேட்பேன். அவங்க சொல்றது பெரும்பாலும் சரியா இருக்கும்.

எங்கக் குடும்பத்துல என்ன விசேஷம் நடந்தாலும் பாலா ஃபேமிலிக்கு முதலிடம் இருக்கும். அதே மாதிரி அவங்கக் குடும்பத்துல என்ன விசேஷம்னாலும் எங்கக் குடும்பம் முன்னால நிற்கும். எங்கேயாவது வெளியில போக வேண்டியிருக்கும். அப்பல்லாம் நான் சொல்லாமலேயே என் மாமியாரைப் பார்த்துப்பாங்க யசோதா. பொறுப்பான அந்த அன்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

 குடும்பத்துல ஒருத்தரா பழகினாலும், எங்கக் குடும்பத்து விஷயங்கள்ல அவங்களோ, அவங்க பர்சனல் விஷயங்கள்ல நானோ என்னிக்கும் தலையிட நினைக்க மாட்டோம். மரியாதையான அந்த இடைவெளியோட அவசியம் தெரிஞ்சா, எந்த நட்புலயும் விரிசல் வராது...’’ - நட்பைக் காக்கும் நல்ல அட்வைஸுடன் முடிக்கிறார் ஜெயந்தி.

கல்யாணமான புதுசுல நாலு வருஷம் ரெண்டு குடும்பங்களும் வேற வேற ஏரியாவுல இருந்தோம். அப்புறம் சேர்ந்து வீடு கட்டிக் குடி வந்தோம். அப்பலேருந்து இப்ப வரைக்கும் பக்கத்துப் பக்கத்துலயே இருக்கோம். ‘தூர இருந்தால் சேர உறவு’ங்கிற பழமொழியெல்லாம் எங்க விஷயத்துல தப்பாயிடுச்சு. ஆரம்பத்துல சுரேஷ்-பாலாவோட நட்புக்காக பழக ஆரம்பிச்ச நாங்க, ஒரு கட்டத்துல இன்னாரோட மனைவிங்கிறதை மறந்து நல்ல தோழிகளானோம். ஜெயந்தி கலகலப்பா பேசுவாங்க. நான் அவங்களுக்கு நேரெதிர்.

அவங்களோட பழக ஆரம்பிச்ச பிறகுதான் பேசவே கத்துக்கிட்டேன். எங்களுக்குள்ளயும் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்திருக்கு. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம, முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டு, பேசாம இருந்த நாட்களும் உண்டு. ஆனா, அது ரொம்ப நேரம் நீடிக்காது. ரெண்டு பேர்ல யார் தப்பு பண்ணியிருந்தாலும், தயங்காம ‘ஸாரி’ கேட்டுடுவோம். அத்தனை நேரம் மனசை உறுத்தின இறுக்கம் சட்டுனு காணாமப் போயிடும். 

நான் வீட்ல இல்லாத நேரத்துல வயசான என் மாமனாரை ரொம்பப் பொறுப்பா பார்த்துப்பாங்க ஜெயந்தி. பார்த்துக்கோங்கனு சொல்லிட்டுக்கூடப் போயிருக்க மாட்டேன். எல்லார்கிட்டயும் அந்த அன்பையும் அக்கறையையும் எதிர்பார்க்க முடியாது.நான் நானா இருக்கேன். அவங்க அவங்களா இருக்காங்க. நமக்குப் பிடிச்ச விதத்துல ஃப்ரெண்டும் வளைஞ்சு கொடுக்கணும், நமக்கேத்தபடி நடந்துக்கணும்னு எதிர்பார்க்கிற போதுதான் அனாவசிய மனக்கசப்பு வருது. அவங்கவங்க இயல்பை அப்படியே ஏத்துக்கப் பழகறது மட்டும்தான் நட்பைத் தக்க வச்சுக்க சிறந்த வழி...’’ - சீரியஸ் டிப்ஸ் சொல்லி முடிக்கிறார் யசோதா.            

‘‘யசோதா ரொம்ப சைலன்ட். அமைதியா இருக்கிறது கூட ஒருவகையான ஆயுதம்னு அவங்கக்கிட்டருந்துதான் நான்
கத்துக்கிட்டேன்!’’

- ஜெயந்தி  

‘‘நான் வீட்ல இல்லாத நேரத்துல வயசான என் மாமனாரை ரொம்பப் பொறுப்பா பார்த்துப்பாங்க ஜெயந்தி. பார்த்துக்கோங்கனு சொல்லிட்டுக்கூடப் போயிருக்க மாட்டேன். எல்லார்கிட்டயும் அந்த அன்பையும் அக்கறையையும் எதிர்பார்க்க முடியாது...’’

- யசோதா