அமெரிக்காவில் படிக்க 5 ஸ்டெப்ஸ்!



வெளிநாட்டில் படிக்க விரும்புகிற மாணவர்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பார்க்கலாம்... ‘நீங்கள் எந்த நாட்டில் படிக்க விரும்புகிறீர்கள்?’ நூற்றுக்கு 95 பேர் விரல் நீட்டி சுட்டிக் காட்டும் நாடு அமெரிக்கா. வேறு எந்த நாட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தாலும், அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

 காரணங்கள் இல்லாமல் இல்லை. அமெரிக்காவின் சிறந்த கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தங்கள் வாசலை விரியத் திறந்து மாணவர்களை வரவேற்கக் காத்திருக்கின்றன என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம்... ‘டாலர் தேசம்’ என அழைக்கப்படும் அமெரிக்காவின் வசீகரம்!

அமெரிக்காவில் படித்தால் எதிர்காலம் எப்படி இருக்கும்? கல்விக் கட்டணம் அதிகமா? படிக்க ஸ்காலர்ஷிப் கிடைக்குமா? படித்து முடித்ததும் அங்கேயே வேலை கிடைக்குமா? விசா எப்படிப் பெறுவது? கணக்கற்று நீள்கின்றன கேள்விகள்! அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காகவே செயல்படுகிறது ‘எஜுகேஷன் யு.எஸ்.ஏ.’

 அதைப் பற்றி விவரிக்கிறார் சென்னையிலிருக்கும் அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனத்தின் (United States India Educational Foundation   USIEF)  மண்டல அதிகாரி மாயா சுந்தர்ராஜன்... ‘‘‘எஜுகேஷன் யு.எஸ்.ஏ.’ங்கிறது யு.எஸ். டிபார்ட்மென்ட் ஆஃப் ஸ்டேட் வழிநடத்தும், உலக அளவில் செயல்படும் ஓர் ஆலோசனை மையம்.

இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் போய் படிக்கணும்னா என்ன செய்யணும், அப்ளிகேஷன் எப்படி அனுப்பணும், என்ன கோர்ஸ் படிக்கலாம், எந்த காலேஜ்ல சேரலாம்னு பல வகை ஆலோசனைகளைச் சொல்றது எங்களோட வேலை. சென்னையில அமெரிக்க துணை தூதரகத்துக்குள்ளேயே எங்க அலுவலகம் இருக்கு’’ என்கிற மாயா,

‘‘இப்போ அமெரிக்காவில் படிக்கும்   இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சம்’’ என்கிற ஆச்சரியத் தகவலையும் தருகிறார்! 2012-13ம் கல்வியாண்டில் உலகம் முழுக்க இருந்து அமெரிக்காவுக்குச் சென்று படித்த மாணவர்களின் எண்ணிக்கை 8,19,644. அதே கல்வியாண்டில், அமெரிக்காவில் படித்த இந்திய மாணவர்கள் 96,754. அதாவது, அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 12 சதவிகிதம்!

‘‘அமெரிக்காவில் படிக்க வேண்டுமா? 5 எளிய படிக்கட்டுகளில் ஏறினால் போதும்...’’ என்று
சொல்கிறார் மாயா. அவை...

1. உங்களுடைய விருப்பத் தேர்வு குறித்து ஆராயவும் (Research Your Options). அதாவது, அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன, எந்தக் கல்லூரியில் படிக்கலாம், என்ன கோர்ஸ் படிக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இணையதளத்திலேயே அந்தத் தகவல்களைத் திரட்டலாம்.
2. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும் (Complete Your Application).
3. படிப்புக்குத் தேவையான பணத்தை தயார் செய்யவும் (Finance Your Studies).
4. மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கவும் (Apply for Your Student Visa). விசா கிடைத்தால்தான் அமெரிக்காவில் படிக்க முடியும்.
5. பயணத்துக்குத் தயாராகவும் (Prepare for Your Departure).

கேட்பதற்கு மிக எளிதாகத் தோன்றினாலும் கடகடவென்று ஏறிப் போய்விட முடியாத படிக்கட்டுகள் இவை. அதே நேரத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடச் சொல்லிவிடுகிறார் மாயா. ‘‘அமெரிக்காவுல போய் ஒருத்தர் படிக்கணும்னு நினைச்சா, அதுக்கு அவர் ஒன்றரை வருசத்துக்கு முன்னாடி இருந்தே பிளான் பண்ணணும். அது ரொம்ப முக்கியம்.

 நிறைய மாணவர்கள் கடைசி நேரத்துல வந்து ‘அமெரிக்காவுல படிக்கணும்’னு சொல்றாங்க. அது ரொம்ப கஷ்டம். கோர்ஸ்ல சேர அப்ளிகேஷன் போடுறது தொடங்கி மற்ற எல்லா நடைமுறைகளும் ஒன்றரை வருசத்துக்கு முன்னாடி இருந்தே ஆரம்பிச்சிடும். சாட் (SAT) எக்ஸாம்னு ஒண்ணு இருக்கு.

மாணவர்களின் தகுதியைத் தெரிந்து கொள்ள நடத்தப்படும் தேர்வு. ‘குவாலிட்டி ஆப்டிடியூட் டெஸ்ட்’னு சொல்லுவாங்க. அதை எழுதி பாஸ் பண்ணணும். அப்புறம் TOEFL டெஸ்ட். ஆங்கில மொழித் தேர்வு. அதுலயும்   பாஸாகணும். இது மாதிரி அமெரிக்காவுல இருக்குற ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின்   தன்மைக்கும் ஏற்ப பரீட்சை நடத்துவாங்க. அதுல வாங்குற மதிப்பெண் அடிப்படை யிலதான் சீட் கிடைக்கும்.

அமெரிக்காவுல 4,500க்கும் அதிக கல்லூரிகள் இருக்கு. ஒவ்வொரு   காலேஜும் ஒவ்வொரு விதத்துல தனித்துவம் படைச்சது. அறிவியல், கணிதம், நுண்கலைகள்னு எந்தத் துறையை வேண்டுமானாலும் படிக்கறதுக்கு அங்கே வாய்ப்புகள் இருக்கு. இந்தியாவுல இருந்து   போகிற மாணவர், தனக்கான பொருத்தமான கல்லூரியைத் தேர்ந்தெடுத்துக்கலாம்...’’

அமெரிக்க-இந்திய கல்வி நிறுவனத்தின் (USIEF)‘எஜுகேஷன் யு.எஸ்.ஏ.’ இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிக்க எப்படியெல்லாம் உதவுகிறது?

* இளங்கலை, முதுநிலைப் பட்டப் படிப்புகள், குறுகிய கால படிப்புகள், ஆய்வுப் படிப்புகள் தொடர்பான அனைத்து விரிவான தகவல்களையும் இவர்களின் இணையதளத்தில் பெறலாம்.

* டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பையில் இருக்கும் ‘எஜுகேஷன் யு.எஸ்.ஏ.’ அலுவலகங்களுக்கு நேரில் சென்று, அங்கிருக்கும் அலுவலரிடம் தகவல்களையும் ஆலோசனையையும் பெறலாம்.

* அமெரிக்காவில் படிப்பதற்கான வாய்ப்புகளைத் தெரிந்து கொள்ளவும் அதற்கான தரத் தேர்வுகளுக்குத் (Standardised Tests) தயாராகவும் இவர்களின் நூலகத்தையும் கம்ப்யூட்டர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு படிப்பில் சேருவதற்கான தேவைகள் என்னென்ன, விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், துறைகள், கல்வி உதவித் தொகை கிடைக்குமா என அனைத்துத் தகவல்களையும் பெறலாம்.

* அமெரிக்காவில் படிப்பது தொடர்பான   ஆலோசனைகளை தொலைபேசியில் பேசியும் தெரிந்து கொள்ளலாம். அதற்கான ‘எஜுகேஷன் யு.எஸ்.ஏ. ஹெல்ப் டெஸ்க்’ எண்: 1800-103-1231. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2:00 மணி முதல் 5:00 மணி வரை இந்தத் தொலைபேசி மூலமாகத் தகவல்கள் பெறலாம்.

* அமெரிக்க கல்வி தொடர்பாக அவ்வப்போது பல்வேறு தலைப்புகளில் நடத்தப்படும் சிறப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம். அமெரிக்க பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடலாம்.

* கல்வி உதவித் தொகை (Scholorship) வாய்ப்புள்ள தகவல்களை ஒவ்வொரு வாரமும் மின்னஞ்சலில் பெறலாம்.

* இவர்களின் முகநூல் பக்கத்தில் சேர்ந்து அவ்வப்போது தகவல்களைப் பெறலாம்.

* மிகச் சாதாரண கட்டணத்தில் உறுதிச் சான்றளிக்கப்பட்ட (Attested) உங்கள் மதிப்பெண் மற்றும் பிற சான்றிதழ்களைப் பெறலாம்.

* அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி யிடமிருந்து விசா பெறுவது தொடர்பான பாரபட்சமற்ற ஆலோசனையைப் பெறலாம் .

* வருடந்தோறும் நடைபெறும் ‘கிளம்புவதற்கு முன்பான தகவல் (Predeparture Orientation) நிகழ்’வில் கலந்து கொண்டு அமெரிக்க கல்வி வாழ்க்கையோடு எப்படி ஒத்துப் போவது என்று கற்றுக் கொள்ளலாம்.

* ‘எஜுகேஷன் யு.எஸ்.ஏ.’யின் சென்னை, டெல்லி, மும்பை அலுவலகங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை திறந்திருக்கும். கொல்கத்தா அலுவலகம் திங்கள் முதல் வெள்ளி வரையிலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை களிலும் திறந்திருக்கும்.

* இவர்களின் நூலகத்தை வாரத்துக்கு 20 மணி நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘எஜுகேஷன் யு.எஸ்.ஏ.’யில் உறுப்பினராகவும் ஆகலாம். அதற்கு உறுப்பினர் கட்டணமாக வருடத்துக்கு ரூ.6,000 வசூலிக்கிறார்கள். ஹிஷிமிணிதி  உறுப்பினர் ஆகலாம்!

* உறுப்பினரானவுடனே ‘வெல்கம் பேக்கேஜ்’ ஒன்றைத் தருகிறார்கள். அதில் அமெரிக்காவில் மேற்படிப்புப் படிப்பது தொடர்பான பொதுவான தகவல்கள்  இருக்கும். அதிலிருந்து ஆரம்பிக்கலாம்.

* அமெரிக்க மேற்படிப்புத் தொடர்பான இவர்களின் அனைத்து வளங்களையும் (Resources) தகவல்களையும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* விண்ணப்பங்கள்  எப்படி பரிசீலிக்கப் படுகின்றன, நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை இவர்கள் நடத்தும் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

* GRE, GMAT, TOEFL, SAT, PSAT, AP போன்ற தேர்வுகளுக்கான செயல்முறை புத்தகங்களைப் பெறலாம்.

* கல்லூரிகள் தொடர்பான தேடலுக்கு இவர்களுடைய இணையதள வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* மிகச் சிறப்பான பயிற்சி பெற்ற ஆலோசகர்களிடம் தனிப்பட்ட முறையில் கவுன்சலிங் பெறலாம்.

* உங்களுடைய கட்டுரைகளுக்கும் அறிக்கைகளுக்கும் மதிப்புரை பெறலாம்.

‘எஜுகேஷன் யு.எஸ்.ஏ.’ அமெரிக் காவில் இருக்கும் எந்தப் பல்கலைக்கழகத்தையும் வழிமொழிவதோ, தரவரிசைப் படுத்துவதோ இல்லை. அதே போல மாணவர்கள் எழுதும் தேர்வுகள், வேலை, மொழிப் பயிற்சி மற்றும் விசா விவகாரங்களில் தலையிடுவதில்லை. ‘‘அமெரிக்காவில் இளங்கலைப் படிப்பை 4 வருடங்கள் படிக்க வேண்டும்.

ஆனால், கம்யூனிட்டி காலேஜில் 2 வருடம் படித்தால் மேலும் இரண்டே இரண்டு வருடங்கள் மட்டும் படித்து பட்டம் வாங்கிவிடலாம் ’’ என்கிறார் அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் தகவல் அதிகாரி ஹீரா காம்போஜ். ‘‘கம்யூனிட்டி காலேஜ் என்பது அமெரிக்காவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் ஒருவகை கல்வி நிறுவனம். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1,200 பொது மற்றும் தனியார் கம்யூனிட்டி காலேஜ்கள் இருக்கின்றன. இவற்றை   ‘ஜூனியர் காலேஜ்’ என்றும் அழைப்பார்கள்...’’

அமெரிக்காவில் மேற்படிப்புப் படிக்க கம்யூனிட்டி காலேஜ்கள் நுழைவுவாசல். அதற்கான காரணங்கள் சில... * குறைந்த செலவு... கம்யூனிட்டி காலேஜில் படிக்க கல்வி மற்றும் இதர கட்டணங்கள் சேர்த்து வருடத்துக்கு சுமார் 6,500 டாலர்கள்தான் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் 3,92,000 ரூபாய். இது, நான்கு வருடங்கள் அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் படிக்க   ஆகும் செலவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிகக் குறைவு.

* பிரமாதமான மாற்று வாய்ப்புகள்... கம்யூனிட்டி காலேஜ்கள் சில பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும். ‘எங்களிடம் படிக்கும் மாணவர்கள் 2 வருடங்கள் கழித்து உங்களிடம் வருவார்கள். அவர்களை மேலும் 2 வருடங்கள் படிக்க வைத்து உரிய இளங்கலைப் படிப்புக்கான சான்றிதழ் தந்துவிட வேண்டும்’ என்று. அந்த வகையில் மாறிக் கொள்ளலாம்.

* TOEFL போன்ற தேர்வுகளுக்கு, அதிகப்படியான ஆங்கிலப் புலமை வேண்டும் என்கிறவர்களுக்கு கம்யூனிட்டி காலேஜில் அதற்கான பயிற்சி கிடைக்கும்.

* கற்றுத்தருதலிலும் மாணவர் வெற்றியிலும் காட்டும் அக்கறை... சிறந்த பேராசிரியர்களின் துணையோடு மாணவர்களின் படிப்பில் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்தப்படும். * சிறிய வகுப்பறை... ஒரு வகுப்பில் 15லிருந்து 20 மாணவர்களே இருப்பார்கள். அதனால், ஆசிரியர்களால் மாணவர்களிடம் தனிப்பட்ட கவனம் செலுத்த முடியும்

* கூடுதல் செயல்முறை பயிற்சி செய்வதற்கான வாய்ப்பு... நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தலாம்... அமெரிக்க பண்பாட்டை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும்.

இவ்வளவு ஏன்... அமெரிக்க நடிகர்கள் ஆர்னால்ட் ஸ்க்வாஷ்னகர், டாம் ஹேங்க்ஸ் மற்றும் ‘நாசா ஸ்பேஸ் ஷட்டில்’ கமாண்டர் எய்லின் காலின்ஸ் ஆகியோர் கம்யூனிட்டி காலேஜில் படித்தவர்களே!

அமெரிக்காவில் ஸ்காலர்ஷிப், அதிகம் படிக்கும் படிப்பு, மாணவர்களுக்கான விசா... மேலும் பல விவரங்கள் அடுத்த இதழில்! இப்போது அமெரிக்காவில் உள்ள 4,500க்கும் அதிக கல்லூரிகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சம்!

- பாலு சத்யா