ட்வின்ஸ்!



மாதவிலக்கு தள்ளிப் போவது...
வாந்தி... தலைசுற்றல்... மயக்கம்...
காட்டிக் கொடுக்கிற நாடித் துடிப்பு...
பாசிட்டிவ் எனக் காட்டுகிற சிறுநீர் பரிசோதனை...
கர்ப்பத்தை உறுதிப்படுத்துகிற இந்த எல்லாவற்றையும்விட ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பூரிப்பையும் புளகாங்கிதத்தையும் கொடுக்கும் விஷயம் ஒன்று உண்டு.

அதுதான் உயிருக்குள் உயிரான கருவின் முதல் துடிப்பு. பட்டாம்பூச்சி பறப்பது போல, மயிலிறகால் வருடுவது போல அதி மென்மையான அழகான உணர்வு அது. குழந்தை தன் இருப்பை உணர்த்துகிற அந்த உதைக்காக ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நொடியும் எதிர்நோக்கிக் காத்திருப்பாள்.

 தனது பசி, தூக்கம், விளையாட்டு, ஏக்கம், எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் கருவிலிருக்கும் உயிரானது  தாய்க்குத் தன் துடிப்புகளின் மூலமே தெரியப்படுத்தும். முதல் முறை தன் குழந்தையின் துடிப்பை உணர்ந்த தாய், அதை உணராத ஒவ்வொரு நிமிடமும் தவித்துதான் போவாள். இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் தாய்க்கு இந்தத் தவிப்பும் இரு மடங்கு அதிகமாகவே இருக்கும். பின்னே... இருவரில் ஒருவர் உள்ளே சும்மா இருந்தாலும், காரணம் தெரியாமல் தவித்துப் போகாதா அவள் மனது?

‘‘ஒரு குழந்தையைக் கருவில் சுமக்கும் பெண் குழந்தையின் துடிப்பை இயல்பாக உணர்கிற மாதிரி, ஒன்றுக்கு மேலான கருவைச் சுமக்கும் பெண்ணால் உணர முடியாது. அதிலும் நாம்
ஏற்கனவே பார்த்தபடி, ஒரு முட்டையும் ஒரு உயிரணுவும் இணைந்து கருவாகி, சமமாகப் பிரிந்து, இரண்டு தனித்தனி கருக்களாக வளர்வதால் உருவாகும் ‘மோனோஸைகோடிக் ட்வின்ஸா’க இருக்கும் பட்சத்தில், இரண்டு குழந்தைகளின் அசைவுகளையும் தனித்தனியே உணர்வதென்பது அந்தத் தாய்க்கு சாத்தியமாகாதது...

மாறாக இரண்டு முட்டைகளும் 2 உயிரணுக்களும் சேர்ந்து, இரண்டு தனித்தனி கருக்களாக உருவாகும் போது, ஒன்று வலப் பக்கத்திலும் இன்னொன்று இடப் பக்கத்திலும் இருக்கலாம். அந்த நிலையில் 2 குழந்தைகளின் அசைவுகளையும் அந்தத் தாய் ஓரளவுக்கு பிரித்துணர்வாள்...” இரட்டைக் குழந்தை களைச் சுமக்கும் பெண்களுக்கான அவசிய தகவலுடன் ஆரம்பிக்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன்.

‘‘குழந்தையின் முதல் அசைவு என்பது கர்ப்பத்தின் 20வது வாரத்தில் ஆரம்பமாகும். ஆனாலும், 24 வாரங்களில்தான் அதை முழுமையாக உணர முடியும். இரட்டைக் குழந்தைகளை சுமக்கும் தாயானவள், குழந்தைகளின் அசைவுகளை உணர்வதில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனாலேயே இவர்களுக்கு 20 வாரம் தொடங்கி, மாதந்தோறும் ஒரு ஸ்கேன் செய்து பார்க்க வலியுறுத்தப் படுகிறது. 20 வாரங்களில் அசைவுகளை உணராத கர்ப்பிணிகளுக்கு இது ரொம்பவே முக்கியம்.

ஸ்கேன் மூலம் ‘அம்னியாட்டிக் ஃப்ளூயிட் இன்டக்ஸ்’ (Amniotic fluid index  AFI)  அளவையும், ரத்தத்தில் கண்டறியும் ‘யூட்ரோ ப்ளாசென்ட்டல் பிளட் ஃப்ளோ’ (Uteroplacental blood flow) அளவையும் அடிக்கடி சரிபார்க்க வேண்டியது அவசியம். இந்தச் சோதனைகளில் இரண்டு குழந்தைகளுக்குமோ அல்லது ஒரு குழந்தைக்கோ பிரச்னைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தக்க தருணத்தில் சிகிச்சைகள் அளித்துக் காப்பாற்ற முடியும். இயல்பிலேயே மிகவும் அதிக உடல் பருமன்   கொண்ட பெண்களுக்கும் குழந்தைகளின் துடிப்பை உணர்வதில் மந்தத் தன்மை இருக்கலாம். அவர்களுக்கும் மேற்சொன்ன மாதாந்திர சோதனைகள் அவசியம்” என்கிறார் டாக்டர் மகாலட்சுமி.   ரத்த பந்தம்... உறவை வளர்க்குமா? உயிரைப் பறிக்குமா?

மகிழ்ச்சியின்  உச்சம் தொட்டேன்!

சாமு ஏஞ்சலின்

கடந்து போன கர்ப்ப காலமும் சரி, கையிலிருக்கிற நிகழ்காலமும் சரி, கடக்கவிருக்கிற எதிர்காலமும் சரி... சாமு ஏஞ்சலினுக்கு களிப்பு நிறைந்ததாகவே இருக்கிறது. காரணம், அவரது இரட்டை தேவதைகள் ஜெசிகாவும், ஜெனிகாவும். ‘‘எங்கக் குடும்பப் பின்னணியில ட்வின்ஸ் இருக்காங்க. அந்த வகையிலதான் எனக்கும் ட்வின்ஸ் வந்திருக்கணும். 2வது மாசம் ஸ்கேன் பண்ணினப்ப ட்வின்ஸ்னு சொன்னதும் மனசு முழுக்க சந்தோஷம். அந்த மாசக் கடைசியில அதுவரைக்கும் நான் கட்டி வச்சிருந்த மனக்கோட்டை சரியற மாதிரி எனக்கு திடீர்னு பிளீடிங் ஆச்சு.

அவ்வளவுதான்...னு நினைச்சு அழ ஆரம்பிச்சிட்டேன். ‘ஆனா, ட்வின்ஸை சுமக்கிறப்ப அப்படி பிளீடிங் ஆகறது சாதாரணம்தான்... அதை அபார்ஷனோட அறிகுறியா நினைச்சு பயப்படத் தேவையில்லை’னு டாக்டர்ஸ் சொன்னாங்க. என் குழந்தைங்களைக் காப்பாத்திக் கொடுத்தாங்க. ஆஸ்பத்திரியில இருந்தப்ப டாக்டர்ஸும் நர்ஸும் சொன்ன நம்பிக்கையான வார்த்தைகள் எனக்கொரு பாடமாவே இருந்தது. அன்னிலேருந்து டென்ஷனாகிறதையும் சின்ன விஷயங்களைப் பார்த்துப் பெரிசா பயப்படறதையும் விட்டுட்டேன்.

கர்ப்ப காலம் முழுக்க நான் ரொம்ப இயல்பா என்னோட எல்லா வேலைகளையும் பார்த்துக்கிட்டிருந்தேன். வலி வந்தது. ஒரு குழந்தை தலை கீழேயும் இன்னொரு குழந்தை கால் கீழேயும் இருந்தாங்க. ஆனாலும், நான் ரொம்ப ரிலாக்ஸ்டா நம்பிக்கையோட இருந்தேன். சுகப்பிரசவம் ஆச்சு. பிரசவ வலியை மீறி, சுகப்பிரசவம் ஆகுமாங்கிறதைத் தாண்டி, என் யோசனையெல்லாம் பிறக்கப் போற குழந்தைங்க ஆணா, பெண்ணா, யாரைப் போல இருக்கப் போறாங்கன்றதுலதான் இருந்தது. ரெண்டும் பெண் குழந்தைங்கனு தெரிஞ்சதும் இன்னும் சந்தோஷமா இருந்தது. முதல் 6 மாசம் சாப்பிடறதும், தூங்கறதுமா ரொம்ப சமர்த்தா இருந்தாங்க.

 அதுக்கப்புறம் நகர ஆரம்பிச்சதும் அவங்க சேட்டைகள் அதிகமாச்சு. ரெண்டு பேரும் ஒண்ணு போல இருப்பாங்க. பயங்கரமா சண்டையும் போட்டுக்குவாங்க. அடுத்த நிமிஷமே அதுக்கு நேரெதிரா ரெண்டு பேரும் அன்பாயிடுவாங்க. ரெண்டு பேருக்கும் ஒரே கலர்ல, ஒரே டிசைன்லதான் டிரெஸ் பண்ணிவிடுவேன். தோடு மட்டும்தான் வித்தியாசமா இருக்கும். ஒருவாட்டி, ஜெனிகா, ஜெசிகாவோட கிளாஸ்ல வம்படியா போய் உட்கார்ந்துக்கிட்டு, ‘நான்தான் ஜெசிகா’னு சொல்லியிருக்கா. அவ டீச்சருக்கு ஏதோ சந்தேகம் வரவே விசாரிச்ச பிறகு அவளோட விளையாட்டு தெரிஞ்சிருக்கு.

ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கிறதால இந்த மாதிரி கலாட்டா அடிக்கடி நடக்கும். மழலைப் பேச்சும் குறும்பும் எந்தத் தாய்க்கும் அலுக்காத விஷயங்கள். அம்மா, அப்பானு ஒவ்வொருத்தரையும் அவங்களோட பேரோட அடையாளம் சொல்லிக் கத்துக் கொடுத்திட்டிருந்தேன். ரெண்டு பேரும் சொல்லி வச்சது போல ‘சாமு...’னு என்னைக் கூப்பிட்ட அந்த நொடி மகிழ்ச்சியோட உச்சம் தொட்டேன்னு சொல்ல லாம். என்னோட உலகத்தை எப்போதும் சந்தோஷத்தால நிரப்பிட்டாங்க என் குழந்தைங்க...” என்கிறார் பாசக்கார அம்மா.

‘‘நல்ல சாப்பாடு... நிறைய ஓய்வு... இந்த ரெண்டையும் மிஸ் பண்ணக்கூடாது. கர்ப்பிணிகளுக்கு மாசம் கூடக்கூட வயிறு பெரிசாகிறதால, கீழே உட்கார்ந்து எழுந்திருக்கிறதோ, டாய்லெட்ல உட்கார்றதோ சிரமமாகும். அதனால நிறைய பேர் வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு மாறுவாங்க. என்னைப் பொறுத்தவரை, கஷ்டமா இருந்தாலும் இந்தியன் டாய்லெட்டை யூஸ் பண்ணிப் பழகறது, பிரசவ நேரத்துல இடுப்புத் தசைகள் விரிஞ்சு கொடுக்கவும் வலி தெரியாம இருக்கவும் பெரியளவுல ஹெல்ப் பண்ணும்”.

அடுத்த இதழில்!

ஆர்.வைதேகி
(காத்திருங்கள்!)
படங்கள்: ஆர்.கோபால்