ஸ்டார் தோழி



பள்ளியும் ஆசிரியர்களும் திருநெல்வேலி செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி. ஆயிரக்கணக்கான மாணவியரைச் செதுக்கியக் கோயில். சென்ற நூற்றாண்டின் எழுபது, எண்பதுகளில் எனது பள்ளிக்காலம்... Virtue is our strongest shield பள்ளியின் motto. அதை சின்னச் சின்ன விஷயங்களிலும் கடைப்பிடிக்கவைத்து, தவறும் போது தண்டித்து நெறிப்படுத்திய விதம் அன்றைய நாளில் கசப்பாக இருந்தது நிஜம்.

அப்படிக் கற்பிக்கப்பட்ட பண்புகள் இன்று எங்கள் இயல்பாக மாறி இருக்கிறதென்றால் அத்தனை ஆசிரியர்களுமே காரணம். எத்தனைக் கண்டிப்பு காட்டி னாலும் ஊக்கமும் உற்சாகமும் தரவேண்டிய நேரத்தில் தந்து உலகை எதிர்கொள்ள எங்களைத் தயார் செய்தார்கள். அதுமட்டுமின்றி எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் எல்லாத் தரப்பு மாணவியரும் சேர்ந்து படித்த அந்த நல்ல கல்வி முறை இப்போது அபூர்வமாகி விட்டது.

ஆரம்பப் பள்ளியான லொயோலாவில் மிக இயல்பாக எங்களுக்குத் தமிழை உச்சரிக்கவும் எழுதவும் பழக்கி விட்டார்கள்.  எழுதும் போதும் கூட சிலருக்கு ல-ள-ழ, ர-ற, ன-ண தடுமாற்றம் இருப்பதைக் கண்டு சரி செய்தபோது, எங்கள் தமிழாசிரியர்களின் மதிப்பு மனதில் உயர்ந்து நிற்கிறது. இக்னேஷியஸில் தமிழை நேசிக்க வைத்தவர் இயேசுடையாள். சமூக விஷயங்களில் அக்கறை காட்ட வேண்டுமென்பதை மனதில் விதைத்தவர் கோதை ஆண்டாள். 9வது முதல் +2 வரை தொடர்ந்து 4 வருடங்கள் எனக்கு வகுப்பாசிரியையாக இருந்த ஃபாத்திமா முக்கிய பொறுப்புகள் தந்து, தடுமாறும் போது குட்டியும்  நன்றாகச் செய்கையில் தட்டியும் தந்தவர். தலைமை ஆசிரியை சிஸ்டர் ரோஸ் ஆன் அவர்களின் கனிவையும் மறக்க முடியாது.

சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் நானும் தங்கைகளும் ஊருக்குப் போயிருக்கையில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பள்ளியைப் பார்க்கச் சென்றிருந்தோம். வகுப்பறைகளையும் கட்டிடங்களையும் மைதானங்களையும் சுற்றி வந்த போது எங்களை உருவாக்கிய ஒவ்வொரு ஆசிரியைகளும் நினைவுக்கு வந்தனர். அமர்ந்து கதை பேசிய மரத்தடிகள், மாடிப்படிகள், நடனம், நாடகம் என அசத்திய மேடை என எந்த இடத்தையும் விட்டு வைக்கவில்லை. படங்களும் எடுத்தேன், எனக்காக மட்டுமின்றி அத்தனை பழைய மாணவிகளுக்காகவும். பார்க்கும் மற்றவருக்கு அவை வெறும் கல், கட்டிடம், மண், மைதானமே. அங்கு படித்த எங்களுக்கு அது தாய்வீடு!

வசிக்கும் ஊர்

பெங்களூர். இயற்கையை ரசிக்க ஏராளமான ஏரிகளையும் பறவைகளையும் தோட்டங்களையும் மலர்களையும் தந்ததோடு என் ஒளிப்படக் கலை ஆர்வத்துக்குப் பயிற்சிக் களமாகவும் இருக்கிற ஊர். அதே நேரம் நூற்றாண்டு கால மரங்கள் நகர வளர்ச்சிக்காக வெட்டிச் சாய்க்கப்பட்டது வருத்தத்தையும் இயற்கையோடு எதற்காகவும் காம்ப்ரமைஸ் கூடாது என்கிற பாடத்தையும்
தந்திருக்கிறது.

பன்மொழி பேசும், பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் மக்கள். இந்த ஊருக்கு வந்த புதிதில் கிடைத்த சில நல்ல தோழமைகள் பிரதிபலன் பாராமல் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் முன்வந்து உதவிய விதம் மனதைத் தொட்ட ஒன்று. முடிந்தவரையில் நானும் கடைப்பிடிக்கும் ஒன்று.

இயற்கை

ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு நம்மையும் புதுப்பிக்கும் அதிசயம். அந்தியிலும் அதிகாலையிலும் வானம் பூசிக்கொள்ளும் வண்ணங்கள், நீலவானில் மேகங்கள், நிலவு, நட்சத்திரங்கள் இவற்றோடு செடி, கொடி, மரம் மற்றும் குறிப்பாக மலர்கள். எனது ஃப்ளிக்கர் பக்கத்தில் பதிந்திருக்கும் 1,500க்கு அதிகமான படங்களில் பூக்களின் எண்ணிக்கை கணிசமானவை. இயற்கை பல்லாயிரக்கணக்கான நிறங்களில், வடிவங்களில் அல்லவா மலர்களைப் படைத்து வைத்திருக்கிறது! வீட்டுத் தோட்டம் தவிர்த்து வெளியிடங்களில் காண நேரும் பூக்களை ஓரிரு நொடிகளுக்கு மேல் நின்று ரசித்திட நேரமிருப்பதில்லை. படைப்பின் அழகிய நுட்பங்களை எவ்வளவு தவற விடுகிறோம் என அவற்றைத் தீவிரமாகப் படமாக்க ஆரம்பித்த பின்னரே உணர்ந்தேன்.

மனிதர்கள்

குறையில்லாத மனிதர் இல்லை. நம்மிடமும் எத்தனையோ குறைகள்.  சிலரது நடவடிக்கைகள், பேச்சுகள் வருத்தம் அளித்தாலும் மனித இயல்புகளில் ஒன்றாக ஒதுக்கிக் கடந்து விடுகிறேன். வாழ்க்கை குறுகியது. நிறைகளை எடுத்துக் கொண்டு நேசிக்கப் பழகுவோம்.

கடந்து வந்த பாதை

பக்குவம் என்பது வாழ்க்கையின் இறுதி வரை மனிதன் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டிய ஒன்று என்றுதான் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும். மனிதர்களைப் புரிந்து கொள்வதில் ஆகட்டும், பிரச்னைகளை எதிர்கொள்வதில் ஆகட்டும், கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு ஐந்து வருடங்களிலுமாய் என்னுள் ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன்.

எழுதியதில் பிடித்தது

தவிப்பு
அழகுச் சிப்பியொன்றைக்
கரையில் ஒதுக்கிய அலை
மெல்லத் தழுவிச் சென்ற
மணல் தளம் பளிங்கு போல.
அதில் தன் சின்னஞ்சிறு கால்களைப் பதித்து
சிப்பியைக் கைப்பற்றியக் குழந்தை
குதூகலமாய்க் குதித்தோடி
மணிகள் பல ஆன பின்னும்
பதிந்த பாதச் சுவடை
அழித்திட மனமின்றி
அழிந்திடுமோ எனப் பதறி
அலைக்கழிந்து கொண்டிருந்தது
பொழிந்த பால்நிலவில்
கலக்கத்துடன் கடல்!   

 அழகென்பது

ஆரோக்கியம். மனதை லேசாக வைத்துக் கொள்வது.

வீடு

பெரிய வெண்கல விளக்குகள், பித்தளை மணிகள், தஞ்சாவூர் ஓவியம், ரவிவர்மா ஓவியம், மரச் சிற்பங்கள் எனப் பாரம்பரியமாகவே இருக்கும். நான் எடுத்த கோயில் கோபுரப் புகைப்படங்களும் சுவர்களை அலங்கரிக்கின்றன. நவீனமோ, பாரம்பரியமோ எந்த வகை அலங்காரங்களானாலும் தொடர்ச்சியான பராமரிப்பும்
சுத்தமுமே வீட்டுக்கு அழகு.

வாழ்க்கை

No regrets! அதன் போக்கில் வாழ்கிறேன். எதற்கும் தளர்ந்துவிடக் கூடாதென்பது
அம்மாவிடம் கற்றது.

 விரிவாக இணையத்தில் வாசிக்க...
kungumamthozhi.wordpress.com

ராமலஷ்மி ராஜன்
எழுத்தாளர் / புகைப்படக்கலைஞர்
tamilamudam.blogspot.com
www.flickr.com/photos/ramalakshmi_rajan