வார்த்தைகள் கொடுக்கிற தைரியம் ரொம்பப் பெரிசு!



செம்புலப் பெயல் நீர் போல-4


நர்த்தகி நட்ராஜ் - சக்தி பாஸ்கர்

‘‘எங்களோட காயங்களைப் பத்தியும் வலிகளைப் பத்தியும் பேசி அழுத காலங்களைக் கடந்துட்டேன். வாழ்க்கையில நம்பிக்கை துளிர்க்க ஏதாவது கிடைக்காதானு ஏங்கின காலம் மாறி, இன்னிக்கு எதுவுமே இல்லாமலும் சந்தோஷமா, நிறைவா, நிம்மதியா வாழ முடியுங்கிற மனநிலைக்கு வந்திருக்கேன். இது எல்லாத்துக்கும் காரணம் என் சக்தி. அவ என்னோட இருக்கிற வரைக்கும் என்னை யாரும் இனி வீழ்த்தவோ, காயப்படுத்தவோ முடியாது...’’ உயிரினும் மேலான தோழியைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் உவகையில் மலர்கிறது நர்த்தகியின் முகம்!

‘‘எனக்கு அப்ப 6 வயசிருக்கும். மதுரையில அனுப்பானடியில உலகம் புரியாத குழந்தையா சுத்தித் திரிஞ்ச எனக்குள்ள திடீர்னு ஒரு மாற்றம். என்னோட பால்நிலையை உணரத் தெரியாத ஒரு குழப்பம். ‘கடவுள் என்னை எதுக்குப் படைச்சார்’னு கலங்கி நின்னப்ப, என்னைப் போலவே உணர்வுகள் கொண்ட சக்தியோட அறிமுகத்தை எனக்குக் கொடுத்தார் கடவுள்.

 என்னைப் பத்தி எனக்கே முழுமையா தெரியாத போது, என் திறமைகள் எனக்கே புரியாத போது, சக்திதான் எல்லாத்தையும் வெளியே கொண்டு வந்தா. என்னோட மகிழ்ச்சிதான் அவளுக்கு மகிழ்ச்சி. என்னோட எதிர்பார்ப்புகள்தான் அவளோட எதிர்பார்ப்புகளும். என்னோட வெற்றிதான் அவளுக்கும் வெற்றி. அவளுக்குத் தெரிஞ்ச ஒரே உலகம் நான்தான்.

‘உனக்குள்ள நாட்டியத் திறமை இருக்கு. அந்தத் திறமையை வளர்த்துக்கோ... நீ நிச்சயம் பெரிய உயரத்துக்குப் போகப் போறே...’னு எனக்கு முதல் ஊக்கம் கொடுத்தவ சக்தி. அவ கொடுத்த நம்பிக்கையும் தைரியமும்தான் என்னை ஆட வச்சது. கிராமத்துக் கோயில்கள்ல ஆட ஆரம்பிச்ச நான் இன்னிக்கு உலகம்  முழுக்க பிரபலமா இருக்கேன்னா அதுக்கு முழு முதற்காரணம் சக்திதான்.சக்தி நடனமாடறதில்லை. அதனால அவளுக்கோ, எனக்கோ குறைந்த மதிப்பீடு வந்ததில்லை.

சக்தி இல்லாம நர்த்தகி இல்லைங்கிறது இந்த உலகத்துக்கே தெரியும். எந்த இடத்துக்குப் போனாலும், நான் முதல்ல எதிர்கொள்றது சக்தியைப் பத்தின விசாரிப்புதான். அவளைப் பத்திக் கேட்டுட்டுத்தான் என்கிட்ட அடுத்த பேச்சையே தொடர்வாங்க. சக்தி இல்லாம இதுவரைக்கும் எந்த இடத்துக்கும் நான் தனியே பயணம் பண்ணினதில்லை. அவளைத் தவிர்க்கிறது தெரிஞ்சா, அது எத்தனை பெரிய வாய்ப்பா இருந்தாலும் எனக்குப் பெரிசில்லை.

நட்புக்கு இலக்கணமா வாழ்ந்து காட்டணும்னோ, எங்க நட்பைப் பத்தி ஊரே மெச்சணும்னோ நாங்க இப்படி இல்லை. இந்த நட்பு இயல்பா ஆரம்பிச்சு, வாழ்க்கையோட சுவாரஸ்யத்துல பயணப்பட்டு, புனிதமா எங்களை வழி நடத்திட்டிருக்கு. இந்த உலகம் இன்பமயமானது. உலகத்துல உள்ள அத்தனை இன்பங்களும் எனக்கானதுனு நினைக்கிறவ நான். சக்தி எனக்கு நேரெதிரானவள். அவளுக்குனு சில கொள்கைகள் உண்டு. சுயகவுரவம் அதிகம்.

நட்சத்திர ஓட்டலோட பிரமாண்டமோ, பளபளப்போ, படாடோபமோ அவளை மயக்காது. நடன நிகழ்ச்சி இல்லாட்டா ராத்திரி 7 மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடணும்னு நினைப்பா. என்னை அலங்காரம் பண்ணிப் பார்க்கிறதுல சக்திக்கு அலாதி ஆர்வம் உண்டு. தினசரி காலை 3:50க்கு அவளோட பொழுது விடியும். 4 மணிக்கு என்னை எழுப்புவா. அதுவும் எப்படி தெரியுமா? தினம் ஒரு நடிகையோட பெயரைச் சொல்லி, என்னைக் கொஞ்சி எழுப்புவா. ரொம்ப சின்ன வயசுலயே வீட்டை விட்டு வெளியே வந்துட்டதால எனக்கு அம்மா, அக்கா, தங்கை பாசமெல்லாம் கிடைச்சதில்லை. எனக்கு எல்லாமாகவும் இருக்கிறவ சக்திதான். அவளை நான் சக்திம்மானுதான் கூப்பிடுவேன்.

ஆறேழு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு முறை சக்திக்கு நிமோனியா வந்து படுத்த படுக்கையாயிட்டா. நான் கலங்கிப் போய், ‘என் சக்தியை எனக்கு நல்லபடியா திருப்பிக் கொடுத்துடு’னு கடவுள்கிட்ட மடிப்பிச்சை கேட்டேன். இன்னும் 500 வருஷங்களுக்குப் பிறகும்கூட எங்களோட கல்லறைகளைக் கடந்து போறவங்க, ‘இப்படி ரெண்டு புனித ஆத்மாக்கள் இருந்ததாம்’னு பெருமையா பேசிட்டுப் போகணும்.பால்நிலை தெரியாமக் குழம்பி நின்னபோது, வீடும் உறவுகளும் என்னை ஏத்துக்க மறுத்தபோது, எனக்கு முன்னாடி ரெண்டே சாய்ஸ்தான் இருந்தது. ஒண்ணு...

எல்லாத்தையும் தாண்டின வெற்றி அல்லது ஒண்ணுமே இல்லாத வீழ்ச்சி. எதிர்காலம் எப்படி இருக்கப் போகுதுங்கிற எந்த அனுமானமும் இல்லாத நிலை... தன்னோட செல்வச் செழிப்பான குடும்பப் பின்னணியைத் தூக்கிப் போட்டுட்டு, எனக்காக வீட்டை விட்டு வெளியே வந்தாள் சக்தி. அப்படியொரு களங்கமில்லாத மனசை சக்திகிட்ட மட்டும்தான் பார்க்க முடியும்.

சுனாமி வந்தப்ப, வீடுகளை விட்டு வெளியேறி, எல்லாக் குடும்பங்களும் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பா வந்து நின்னப்ப, சக்தி மட்டும் வீட்டுக்குள்ளேயே இருந்தா. ‘உனக்கு பயமா இல்லையா’னு கேட்டப்ப, ‘வீட்டுக்குள்ள வர்ற ஆபத்து, பத்தடி தள்ளியிருக்கிற வெளிப்பகுதிக்கு வராதா என்ன’னு அலட்சியமா கேட்டு எல்லாரையும் ஆச்சரியப்பட வச்சா. அதுதான் சக்தி.

எங்களுக்கும் ஆசைகள் உண்டு... காதல் உண்டு. இந்த உணர்வுகளைக் காயப்படுத்தற சம்பவங்கள் நிறைய நடக்கும். நான் குழம்பிப் போய் நிற்கறப்ப, அந்தச் சூழல்லேருந்து ஒரு நொடியில என்னை வெளியில கொண்டு வந்துடும் சக்தியோட ஆறுதல் வார்த்தைகள். அந்த வார்த்தைகள் கொடுக்கிற தைரியம் ரொம்பப் பெரிசு.

எனக்கொரு பட்டுப்புடவை வாங்கினா, சக்திக்கும் ஒண்ணு... எனக்கொரு வைரத்தோடுன்னா, அவளுக்கும் ஒண்ணு... இப்படி எப்போதும் அவளுக்காகவும் சேர்த்தே யோசிப்பேன். ஆனா, அவளுக்கு அது எதுவும் பெரிசில்லை.

தனக்குனு என்ன இருக்குனுகூடத் தெரியாது. கேட்கவும் மாட்டா. இப்ப எங்களோட வாழ்க்கையில  எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மதுரையோட வயல்வெளிகள்லயும் மீனாட்சியம்மன் கோயில் பிரகாரங்கள்லயும் கவலைகள் இல்லாம சுத்தித் திரிஞ்ச சுதந்திரக் காற்றா, சுகந்தமான தென்றலா தொடங்கின இடத்துக்கே வந்திருக்கோம். இனி எங்களை யாரும் காயப்படுத்தவோ, வீழ்த்தவோ முடியாது...’’ - நன்றியிலும் நன்னம்பிக்கையிலும் விரிகிற விழிகளுடன் நிறுத்துகிறார் நர்த்தகி.

நர்த்தகியின் நட்பையும் பாசத்தையும் தவிர உலகில் வேறு சிறந்த விஷயங்கள் எதுவும் இருக்காது என்கிற சக்தியின் வார்த்தைகளில் அப்பட்டமாகத் தெரிகிறது அரிதாரமற்ற அவரது அன்பு.

‘‘மதுரையோட வயல்வெளிகள்லயும் மீனாட்சியம்மன் கோயில் பிரகாரங்கள்லயும் கவலைகள் இல்லாம சுத்தித் திரிஞ்ச சுதந்திரக் காற்றா, சுகந்தமான தென்றலா தொடங்கின இடத்துக்கே வந்திருக்கோம். இனி எங்களை யாரும் காயப்படுத்தவோ, வீழ்த்தவோ முடியாது...