நட்புங்கிறது ஒரு குழந்தை மாதிரி!



செம்புலப் பெயல் நீர் போல-1

மானஸா விக்ராந்த் - ரஜினி விஷ்ணு


இவர்களின் பின்பாதிப் பெயரே, இவர்களுக்கு அறிமுகம் சொல்லும்.மானஸா... நடிகர் விக்ராந்தின் மனைவி... ரஜினி... நடிகர் விஷ்ணுவின் மனைவி...சக நடிகர்களின் மனைவிகள் நட்பாக இருப்பதில் ஆச்சரியமில்லைதான். என்றாலும், இவர்களது நட்பு அதையும் தாண்டி ஆழமானது!

10 வருஷம் கழிச்சு ஒரு
ஃப்ரெண்டை பார்த்தாலும்,
கடைசியா பார்த்தப்ப பேசி
நிறுத்தின இடத்துலேருந்து அந்த நட்பைத் தொடர முடியணும்.
அதைவிட்டுட்டு, ‘ஏன் போன்
பண்ணலை... ஏன் மெசேஜ்
அனுப்பலை’னு சண்டையில
ஆரம்பிக்கக் கூடாது!

‘‘நாலரை வருஷமாதான் நாங்க ஃப்ரெண்ட்ஸ். ஆனாலும், நாற்பது வருஷம் பழகின மாதிரி எங்களுக்குள்ள ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கையும் அட்ஜஸ்ட்மென்ட்டையும் பார்க்கலாம். அதுதான் எங்க ஃப்ரெண்ட்ஷிப் சீக்ரெட்...’’ - தோழியின் சார்பாகவும் தானே நட்பின் பெருமை பேசுகிறார் மானஸா.

‘‘விக்ராந்தும் விஷ்ணுவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். இன்னும் சொல்லப் போனா ரஜினியும் என் ஹஸ்பெண்டும் காலேஜ்மேட்ஸ். காலேஜ்ல சேர்ந்ததுமே என் ஹஸ்பெண்ட் நடிக்க வந்துட்டதால, அப்ப அவங்களுக்குள்ள பெரிய ஃப்ரெண்ட்ஷிப் இல்லை. விஷ்ணுவோட கல்யாண டைம்லதான் ரஜினியை பார்த்தேன்.

சிசிஎல்தான் எல்லாத்துக்கும் காரணமா அமைஞ்சது. விக்ராந்தும் விஷ்ணுவும் சிசிஎல் ஆடப் போனப்ப, நானும் ரஜினியும் அங்கே மீட் பண்ணிப்போம். பிராக்டீஸ், மேட்ச்னு அடிக்கடி மீட் பண்ணினாலும், ‘ஹாய், பை’ சொல்றதோட சரி... அதிகமா பேசிக்கவே மாட்டோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சோம்.

 கொஞ்ச நாள்லயே பயங்கர க்ளோஸ் ஆயிட்டோம். இந்த உலகத்துல எல்லாராலயும் எல்லார்கிட்டயும் பேச முடியாத எந்த விஷயத்தையும் என்னால ரஜினிகிட்ட பேச முடியும். மனசுல தோணறதை எல்லார்கிட்டயும், எப்போதும் ஷேர் பண்ணிக்க முடியாது. ஆனா, ரஜினிகிட்ட என்னால எதையும் ஷேர் பண்ணிக்க முடியும். அதுதான் என்னை அவகிட்ட அட்ராக்ட் பண்ணின விஷயமா இருக்கும்னு நினைக்கிறேன்.

ரெண்டு பேருமே அவங்கவங்க வேலைகள்ல பிஸி. அவ சினிமாவுல பிஸி. நான் என் பையனோட பயங்கர பிஸி. ஆனாலும், எங்க ஃப்ரெண்ட்ஷிப்புக்கு இதெல்லாம் ஒரு தடையாவே இருந்ததில்லை. வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் இருக்கிறதால, நாங்க எப்போதும் பக்கத்துப் பக்கத்துலயே இருக்கிற மாதிரிதான் ஃபீல் பண்ணுவோம். எங்களோட ஃபேவரைட் மீட்டிங் ஸ்பாட்னா எங்க வீடுதான். என் பையனுக்குத் தெரிஞ்ச, ரொம்பப் பிடிச்ச ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் ரஜினி ஆன்ட்டியும் விஷ்ணு அங்கிளும். அவன் லெவலுக்கு இறங்கி, அவன் வயசு ஃப்ரெண்ட் மாதிரி அவனுக்கு கம்பெனி கொடுத்து விளையாடுவா ரஜினி.

எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச பொதுவான இன்னொரு விஷயம் ஷாப்பிங். நாங்க ஷாப்பிங் கிளம்பினாலே, விக்ராந்தும் விஷ்ணுவும் ஜூட் விட்ருவாங்க. வாய் ஓயாம பேசிக்கிட்டு, உலகத்தை மறந்து சுத்துவோம். விக்ராந்தும் விஷ்ணுவும் சேர்ந்துட்டாங்கன்னா, கிரிக்கெட்... அதைவிட்டா சினிமானு இந்த ரெண்டையும் தவிர வேற எதைப் பத்தியும் பேச மாட்டாங்க. எங்க ரெண்டு பேருக்கும் செம போர் அடிக்கும்.

அதுவே நானும் ரஜினியும் சேர்ந்துட்டோம்னா, சினிமாலேருந்து சகலத்தையும் பேசிப் பேசி டயர்டாயிடுவோம். அஃப் கோர்ஸ்... நிறைய காஸிப் பண்ணுவோம்! எங்க ரெண்டு பேருக்கும் சினிமாவுல பொதுவான ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க. எங்க ஹஸ்பெண்ட்ஸ் கூட சேர்ந்து நடிக்கிறதால ஹீரோயின்ஸை பத்தியும் காஸிப் பண்ண மாட்டோம். சினிமாவை தவிர்த்த மத்த ஆட்களைப் பத்தி நிறைய பேசிக் கலாய்ப்போம்.

எனக்கு குக்கிங்ல பயங்கர இன்ட்ரஸ்ட் உண்டு. அதை ரஜினி நல்லா என்கரேஜ் பண்ணுவா. புதுசு புதுசா எதையாவது சமைச்சுப் பார்ப்பேன். என் ஹஸ்பெண்டும் பையனும் டேஸ்ட் பண்ணிட்டு நல்லாருக்குனு சொன்னா, அப்புறம் ரஜினிக்கு கொடுப்பேன். ‘உன்னைவிட சூப்பரா சமைக்கக் கத்துக்கறேன் பாரு’னு சொல்லிட்டே சாப்பிடுவா.

முகஸ்துதிக்காக பேசறதோ, பழகறதோ எங்க ரெண்டு பேருக்குமே தெரியாது. நான் தப்பு பண்ணினா, முகத்துக்கு நேரா பிடிக்கலைனு சொல்ற தைரியம் அவளுக்கும், அதே மாதிரி அவளைக் கண்டிக்கிற தைரியம் எனக்கும் உண்டு.  எங்களுக்குள்ள ஈகோங்கிற பேச்சே கிடையாது. அதனால சண்டையும் வந்ததில்லை.சினிமா இண்டஸ்ட்ரியில இப்படி ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப் அமையறது ரொம்பக் கஷ்டம். னிமாக்காரங்களோட லைஃப் ஸ்டைல் சாதாரண ஆட்களுக்குப் புரியாது. நாம எது பண்ணினாலும் தப்பா தெரியும். சினிமாவுக்குள்ளேயே இருக்கிற ஆட்களா இருந்தாலும், இவ்ளோ ஷார்ட் டைம்ல ஒருத்தரோட இத்தனை நெருக்கமான ஒரு நட்பை வளர்க்க முடியுமாங்கிறது சந்தேகம்தான்.

என்னை என்னைவிட அதிகமா புரிஞ்சுக்கிட்ட ஒரு ஃப்ரெண்டா ரஜினி இருக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அவ எனக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள்ல எத்தனையோ கிஃப்ட்ஸ் கொடுத்திருக்கா. அத்தனையிலும் பெஸ்ட்டுனு சொன்னா அது அவளோட ஃப்ரெண்ட்ஷிப்!‘அடிக்கடி மீட் பண்றதில்லை... ஒரு போன்கூட இல்லை’னு சொல்லிக்கிட்டு, எத்தனையோ ஃப்ரெண்ட்ஷிப் முறிஞ்சு போறதைப் பார்க்கறோம். உண்மையான ஃப்ரெண்ட்ஷிப்ல எந்த எதிர்பார்ப்பு களும் இருக்கக்கூடாது.

எத்தனையோ கணவன்-மனைவி ஆளுக்கொரு ஊர்ல இருந்துட்டு அன்யோன்யமா வாழறப்ப, ஃப்ரெண்ட்ஸ் ஆளுக்கொரு இடத்துல இருந்தா அன்பு காணாமப் போயிடுமா என்ன? என்னைப் பொறுத்தவரைக்கும் 10 வருஷம் கழிச்சு ஒரு ஃப்ரெண்டை பார்த்தாலும், கடைசியா பார்த்தப்ப பேசி நிறுத்தின இடத்துலேருந்து அந்த நட்பைத் தொடர முடியணும். நேத்துதான் சந்திச்ச மாதிரி உணரணும். அதைவிட்டுட்டு, ‘ஏன் போன் பண்ணலை... ஏன் மெசேஜ் அனுப்பலை’னு சண்டையில ஆரம்பிக்கக்கூடாது.

நட்புங்கிறது ரொம்ப அழகான விஷயம். அது ஒரு குழந்தை மாதிரி. தினசரி கொஞ்சம் கொஞ்சமா வளரணும். பக்குவப்படணும். நட்பைத் தக்க வச்சுக்க ஒரே ஒரு ரூல்தான் முக்கியம். என்னதான் நெருங்கின ஃப்ரெண்டா இருந்தாலும் அவங்க பர்சனல் விஷயங்கள்ல மூக்கை நுழைக்கவே கூடாது. ஃப்ரெண்ட்ஸுக்கு இடையிலான ஸ்பேஸை மதிச்சு நடந்துக்கிட்டா, அந்த நட்பு எத்தனை காலமானாலும் நம்ம கூடவே இருக்கும்...’’ - மூழ்காத ஃப்ரெண்ட்ஷிப்புக்கு முத்தான ஐடியா சொல்லி முடிக்கிறார்

மானஸா!                                    

பக்கம் 18 முதல் 31 வரை நட்புக்கு இலக்கணமாகத் திகழும் அன்பு நெஞ்சங்களை அறிமுகப்படுத்துகிறார்

ஆர்.வைதேகி 
படங்கள்: ஆர்.கோபால், மாதவன்