எங்களுக்குள்ள ஏதோ ஒரு மேஜிக் இருக்கு!



செம்புலப் பெயல் நீர் போல -3

ஹர்ஷா திவ்யா

‘லைஃப் இஸ் கலர்ஃபுல்’ என்கிறார்கள் ஹர்ஷாவும் திவ்யாவும். கல்லூரியில் ஆரம்பித்த இவர்களது நட்பு, படிப்பை முடித்த பிறகு பிசினஸிலும் தொடர்கிறது. ‘மிங்க் அக்ஸஸரிஸ் அண்ட் ஃபுட்வேர்’ என்கிற பெயரில் டிசைனர் செருப்பு களுக்கான ஆன்லைன் பிசினஸை நடத்துகிறார்கள்!

‘‘திவ்யாவும் நானும் எம்.ஓ.பி.வைஷ்ணவா காலேஜ்ல கிளாஸ்மேட்ஸ். எங்க காலேஜ்ல வருஷா வருஷம் எம்.ஓ.பி. பஜார்னு ஒரு சேல்ஸ் எக்ஸ்போ நடத்துவாங்க. ‘வித்தியாசமா ஏதாவது பண்ணணுமே’னு யோசிச்சோம்.

ரெண்டு பேருக்குமே விதம் விதமா, ஸ்டைலிஷா செருப்பு போடறது பிடிக்கும். அந்த பஜார்ல ஃபுட்வேர் டிசைனிங் பண்ணினா என்னனு தோணினது. எங்க வீட்டுக்குப் பக்கத்துல செருப்பு தைக்கிற கடைக்காரர் ஒருத்தர் இருந்தார்.

அவரைக் கூட்டிட்டு வந்து ஸ்டால்ல உட்கார வச்சோம். கடைக்கு வர்ற கஸ்டமருக்கு அவங்களுக்குப் பிடிச்ச கலர் மற்றும் டிசைன்ல ஆன் தி ஸ்பாட்ல டிசைன் பண்ணி, அங்கேயே ஃபுட்வேர் தச்சுக் கொடுக்கிற அந்தப் புதுமையான முயற்சிக்கு பயங்கர வரவேற்பு இருந்தது. அதுதான் எல்லாத்துக்கும் ஆரம்பம்...’’ - ஹர்ஷா நிறுத்த, திவ்யா தொடர்கிறார்.

‘‘காலேஜ் முடிச்ச பிறகும் எங்க ஃப்ரெண்ட்ஷிப் தொடர்ந்தது. காலேஜ் இவென்ட்டுக்காக ஆரம்பிச்ச எங்களோட ஃபுட்வேர் டிசைனிங்கும் அப்புறமும் தொடர்ந்தது. தலைக்கு வச்சுக்கிற கிளிப்லேருந்து, ஸ்கார்ஃப் வரைக்கும் எல்லாத்தையும் செருப்புல வச்சு டிசைன் பண்ணிப் பார்க்கிறது எங்களோட விருப்பமான பொழுதுபோக்கு. எங்க கிரியேட்டிவிட்டியை பார்த்துட்டு ஃப்ரெண்ட்ஸ், தெரிஞ்சவங்க எல்லாரும் ஃபுட்வேருக்கு ஆர்டர் கொடுத்தாங்க.

பலூன் செப்பல், பூக்கள் வச்ச செப்பல்னு எங்களோட டிசைன்ஸுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சின்ன அளவுல பண்ணிக் கொடுத்திட்டிருந்தோம். அப்பதான் இதையே வெளியில மார்க்கெட் பண்ணினா என்னனு யோசிச்சோம். ஃபேஸ்புக் மூலமா எங்களோட டிசைன்ஸை மக்கள்கிட்ட கொண்டு போனோம்.

ஆன்லைன்லயே எங்களோட டிசைன்ஸ் போட்டோஸ் இருக்கும். அதைப் பார்த்துட்டு, கஸ்டமர்ஸ் அவங்களுக்கு விருப்பமான கலர், டிசைன், சைஸை ஆர்டர் பண்ணலாம். விலை 350 ரூபாய்லேருந்து ஆரம்பம். வெட்டிங் ஷூஸ்னா சில ஆயிரங்கள் வரைக்கும் போகும்’’ என்கிறார்.

பிசினஸ், நட்பு என எல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளி வைக்கிற திருமணம் இவர்கள் விஷயத்தில் தன் வேலையைக் காட்டாதது ஆச்சரியம். தோழிகளில் ஒருவரான ஹர்ஷாவுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையிலும், இவர்களது நட்பும் பிசினஸும் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.‘‘எல்லாத்துக்கும் காரணம் எங்களோட புரிதல்தான். ஆரம்பத்துல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஃபுட்வேர் டிசைனிங் பண்ணப் போறோம்னு சொன்னப்ப, எங்க ரெண்டு பேர் வீட்லயும் அத்தனை சீக்கிரம் சம்மதிக்கலை.

எங்களோட வளர்ச்சியைப் பார்த்துட்டு, ஒரு கட்டத்துல எங்களையும் எங்களோட ஆர்வத்தையும் புரிஞ்சுக்கிட்டாங்க. இவ்வளவு சின்ன வயசுல பிசினஸ் பண்றதுங்கிறதுல நிறைய சவால்கள் இருக்கு.

வெற்றியைத் தொடற வரைக்கும் நேரம், காலம் பார்த்தெல்லாம் உழைக்க முடியாது. அதுலயும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்து பிசினஸ் பண்ணும் போது, ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான மன அலைவரிசை இருந்தாத்தான் இது சாத்தியம். சின்னதா, எங்கேயோ ஒரு மூலையில ஈகோ எட்டிப் பார்த்தாலும், பிசினஸ் அவுட்...’’ - வெற்றி ரகசியம் பகிர்கிறார் திவ்யா.

‘‘எங்களோட ஃப்ரெண்ட்ஷிப்புக்குள்ள ஏதோ ஒரு மேஜிக் இருக்குனுதான் சொல்லணும். சும்மா பொழுதுபோக்கா ஃபுட்வேர் டிசைனிங் ஆரம்பிச்சதுல தொடங்கி, இன்னிக்கு அதை ஒரு சக்சஸ்ஃபுல் பிசினஸா பண்ணிட்டிருக்கோம்னா ரெண்டு பேரோட மனசுதான் காரணம். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான விருப்பு, வெறுப்புகள். சின்ன விஷயமா இருந்தாலும் அதை ரெண்டு பேரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தாதான் சரியா இருக்கும்னு நினைப்போம்.

எவ்ளோ பிசியான டைம்லயும், ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கிறதையோ, பேசறதையோ மிஸ் பண்ண மாட்டோம். என்னைவிட திவ்யாவுக்குத்தான் நிறைய தெரியும்னு நானும், தன்னைவிட எனக்குத்தான் அதிகம் தெரியும்னு திவ்யாவும் நம்பறோம். இந்த எல்லாம்தான் எங்க ஃப்ரெண்ட்ஷிப்பையும் பிசினஸையும் நாளுக்கு நாள் உறுதியாக்கிட்டிருக்கு...’’ நட்பிலக்கணம் சொல்கிற தோழியை அகம் மகிழ ஆமோதிக்கிறார் ஹர்ஷா.                              

‘‘ரெண்டு

ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்து பிசினஸ் பண்ணும் போது, ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான மன அலைவரிசை இருந்தாத்தான் வெற்றி சாத்தி யம். சின்னதா, எங்கேயோ ஒரு மூலையில ஈகோ எட்டிப் பார்த்தாலும் பிசினஸ் அவுட்...’’

- திவ்யா

‘‘சின்ன விஷயமா இருந்தாலும் அதை ரெண்டு பேரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தாதான் சரியா இருக்கும்னு நினைப்போம்...’’

- ஹர்ஷா