அன்புதான் அந்த ரகசியம்!



செம்புலப் பெயல் நீர் போல-2


அபர்ணா வெங்கடேஷ் - சுபத்ரா

இப்படியும் ஒரு நட்பு சாத்தியமா என வியக்க வைக்கிறார்கள் அபர்ணாவும் சுபத்ராவும். சென்னையில் உள்ள ஈடன் ரெஸ்டாரன்டின் எஜமானிகளான இவர்களது நட்புக்கு 30 வயது.
பிசினஸ் பார்ட்னர்ஸ், பல வருடத் தோழிகள் என்பதை எல்லாம் தாண்டி, இவர்களை இத்தனை வருடங்களாகக் கட்டிப் போட்டிருக்கிற அந்த ரகசியம் கேட்டால், ‘அன்புதான்... வேற என்ன?’ எனச் சிரிக்கிறார்கள் இருவரும்!

‘‘நான், வெங்கடேஷ், சுபா மூணு பேரும் கேட்டரிங் காலேஜ்ல ஒண்ணா படிச்சவங்க. வெங்கடேஷ் எங்களுக்கு ரெண்டு வருஷ சீனியர். படிப்பை முடிச்சதும் நானும் வெங்கடேஷும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

நானும் சுபாவும் கொஞ்ச நாள் ஒண்ணா ஒர்க் பண்ணினோம். அப்புறம் நாங்க மூணு பேரும் சேர்ந்து ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிறதைப் பத்தி யோசிச்சோம். அந்த டைம்ல வெஜிடேரியன் ரெஸ்டாரன்ட்டுகளோட எண்ணிக்கை கம்மி. ‘சரியா வருமா... சக்சஸ் பண்ண முடியுமா’னு நான் தயங்கினப்ப, சுபாதான் தைரியம் கொடுத்தா. எந்த விஷயத்துலயும் ரொம்ப யோசிக்காம சட்டுனு முடிவெடுக்கிறவ நான். சுபாவோ சின்ன விஷயமானாலும் பொறுமையா யோசிச்சு முடிவெடுக்கணும்னு நினைப்பா.

இன்னிக்கு பிரபலமான, தரமான வெஜிடேரியன் ரெஸ்டாரன்ட்ஸ்ல ஈடனையும் பேச வச்சதுல சுபாவோட இந்த அணுகுமுறைதான் காரணம்னு நான் நம்பறேன். எங்களோட ஸ்பெஷாலிட்டியே வித்தியாசமான மெனுதான். ஆரம்பத்துல ஈஸியாகவும் சீக்கிரமாகவும் செய்யக்கூடிய மாதிரி மெனுவை பிளான் பண்ணலாம்னு நான் சொன்னேன். சுபாவுக்கு அதுல உடன்பாடில்லை.

ஒவ்வொரு ரெசிபியையும் யோசிச்சு, வாடிக்கையாளருக்குப் பிடிக்கிற வகையில பிளான் பண்ணினா. ‘சரியா வருமா’னு யோசிச்ச ரெஸ்டாரன்ட்டை இன்னிக்கு ரெண்டு பிராஞ்ச்சோட சக்சஸ்ஃபுல்லா நடத்தறோம்னா அது சுபா இல்லாம சாத்தியமாயிருக்காது...’’ - மூச்சுக்கு முன்னூறு முறை தோழியின் புகழ் பாடுகிற அபர்ணா அடுத்து சொன்ன விஷயம் ஆச்சரியம்!

‘‘வெளி உலகத்துக்குத்தான் சுபாவும் நானும் ஃப்ரெண்ட்ஸ். என்னைப் பொறுத்த வரை அவ என்கூடப் பிறக்காத சகோதரி. வேற யாருக்கும் இது சாத்தியமானு தெரியலை. சுபாவுக்கு பூர்வீகம் ஹைதராபாத். அவங்க பேரன்ட்ஸ், சொந்தக்காரங்க எல்லாம் அங்கே இருக்காங்க. ஆனா, சுபா என்னோட கல்யாணத்துக்கு முன்னாடிலேருந்தே எங்க வீட்லதான் தங்கியிருக்காங்க.

எங்கம்மா-அப்பாவைக் கேட்டா சுபாவையும் சேர்த்து எங்களுக்கு நாலு பசங்கனு தான் சொல்வாங்க. சுபா கல்யாணமே பண்ணிக்கலை. என்னோட கல்யாண வாழ்க்கையும் எங்க நட்புக்கு எந்த வகையிலயும் பிரச்னையா இல்லை. எங்கேயோ பிறந்து, வளர்ந்த ரெண்டு பேர், எப்படியோ அறிமுகமாகி, இன்னிக்கு ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஒரே குடும்பமா வாழறதை அதிசயம்னுதான் சொல்லணும்.

எங்க வீட்ல என்ன ஃபங்ஷன் நடந்தாலும் எல்லாரும் சுபாவை முன்னிறுத்திப் பார்க்கவே ஆசைப்படுவோம். எனக்கு ஃப்ரெண்டான சுபாவை, ஒட்டுமொத்த குடும்பமும் ஏத்துக்கவும், அவங்கள்ல ஒருத்தியா பார்க்கவும் சுபாவோட நல்ல மனசு மட்டும்தான் காரணம்.

என்னதான் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸா இருந்தாலும் பிசினஸ்னு வரும்போது பல பேரோட வாழ்க்கையில அந்த நட்பு காணாமப் போயிடுது. பணமும், நீயா, நானாங்கிற ஈகோவும் பெரிசாயிடுது. எங்க வாழ்க்கையில அப்படி நடக்காததை இன்னொரு அதிசயம்னுதான் சொல்லணும். ‘நான் இவ்வளவு நேரம் உழைச்சேன்... பிசினஸோட வளர்ச்சியில என் பங்குதான் பெரிசு’ங்கிற மாதிரி ரெண்டு பேரும் யோசிச்சதே இல்லை.

 இந்த அண்டர்ஸ்டாண்டிங்கும் அன்யோன்யமும் கடைசி வரைக்கும் இப்படியே தொடரணுங்கிறது மட்டும்தான் என் பிரார்த்தனை...’’ - ஆனந்தக் கண்ணீருடன் அபர்ணா நிறுத்த, ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக தன் தரப்பைச் சொல்கிறார் சுபா.‘‘இந்த நட்பு எப்படி சாத்தியம்? எப்படி வளர்ந்தது? எது வளர்த்ததுனு எந்தக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை.

 ஒரு நல்ல நட்பு பூக்கிறது எப்படி இயல்பான விஷயமோ, அதோட வளர்ச்சியும் அப்படிப்பட்டதுதான். அத்தனைக்கும் காரணம் அபர்ணாவோட புரிதல், பாசிட்டிவ் மனப்பான்மை... அப்புறம் அதையெல்லாம் மிஞ்சற அதீத அன்பு. வேற என்ன சொல்ல?’’ என்கிறார்.உண்மைதான்... அன்பு எதையும் சாதிக்குமல்லவா?

‘‘ஒரு நல்ல நட்பு பூக்கிறது எப்படி இயல்பான விஷயமோ, அதோட வளர்ச்சியும் அப்படிப்பட்டதுதான்!’’
- சுபா

‘‘எங்கேயோ பிறந்து, வளர்ந்த ரெண்டு பேர், எப்படியோ அறிமுகமாகி, இன்னிக்கு ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஒரே குடும்பமா வாழறதை அதிசயம்னுதான் சொல்லணும்!’’

- அபர்ணா