இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்!



ஹேர் கலரிங் சீக்ரெட்ஸ்

நரைத்த கூந்தலுக்கு சாயம் பூசிய காலம் மாறி, இன்று கருத்த கூந்தலைக் கூட கலர் கலராக மாற்றிக் கொள்வதே ஃபேஷன் என்றாகிவிட்டது. இது ஒரு பக்கமிருக்க, 10 வயதுப் பிள்ளைகளுக்குக் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக நரை எட்டிப் பார்ப்பதும் சகஜமாகி விட்டது. நரையை எப்படித் தவிர்ப்பது என்பதைவிட, அதை எப்படி மறைப்பது என்பதுதான் எல்லோரின் கவலையும்.

எட்டிப் பார்க்கிற ஒன்றிரண்டு வெள்ளை முடிகளை மறைக்க டை அடிக்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் டை அடிக்காமல் வெளியே தலையே காட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கூந்தலைக் கருப்பாக்குகிற வேலையுடன் சேர்த்து, கூடுதலாக அலர்ஜி முதல் புற்றுநோய் வரை பல பயங்கரங்களையும் போனஸாக கொடுக்கத் தவறுவதில்லை இந்தச் சாயங்கள். எந்த ஹேர் கலர் நல்லது? ஆபத்தில்லாதது? இயற்கையான முறையில் நரையை மறைக்க என்ன செய்யலாம்? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி.

‘‘அரைகுறை விழிப்புணர் வின் காரணமாக, சமீப காலமாக அமோனியா ஃப்ரீ எனக் குறிப்பிடப்பட்ட ஹேர் டைதான் சிறந்தது என நினைத்து அதைத் தேடி வாங்கி உபயோகிக்கிறார்கள் மக்கள். ஹேர் கலர்களில் உள்ள அமோனியா மட்டும் ஆபத்தானதல்ல.. அதைவிட பயங்கரமான சோடியம் கார்பனேட் ஹைட்ர ஜன் பெராக்சைடு, பெட்ரோலியம் ஜெல்லி, மெதைல் பினால், நெஃப்தால் போன்ற ரசாயனங்களும் அவற்றில் உள்ளன. இவற்றை உபயோகிப்பதால் ரத்த புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்று நோய், தோல் எரிச்சல், ஒவ்வாமை, முடி உடைதல், சரும நிறமாற்றம், ஆஸ்துமா, நுரையீரல் வீக்கம் போன்ற பிரச்னைகள் வரலாம்!

எப்படித் தேர்ந்தெடுப்பது?

மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணரிடம் உங்கள் கூந்தல் மற்றும் மண்டைப் பகுதி யின் தன்மைக்கேற்ற சரியான ஹேர் கலரிங்கை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஹெர்பல் டை அல்லது ஹேர் கலர் என்கிற விளம்பரத்துடன் விற்பனையாகிற அனைத்தும் முழுக்க முழுக்க மூலிகைகள் கலப்பால் தயாரிக்கப்பட்டவை அல்ல, அவற்றிலும் ஆபத்தான கெமிக்கல்களின் கலப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தற்காலிக ஹேர் கலர், நிரந்தர ஹேர் கலர், அரை நிரந்தர ஹேர் கலர் என கலரிங்கில் பல வகை உண்டு. தற்காலிக ஹேர் கலர் என்பது 15 முதல் 20 நாட்கள் வரை இருக்கும். செமி பர்மனென்ட் எனப்படுகிற அரை நிரந்தர கலர்கள் அதைவிட இன்னும் சில வாரங்கள் கூடுதலாக இருக்கும். நிரந்தர ஹேர் கலர் என்பதால் அதை ஒரு முறை போட்டுக் கொண்டால் பிறகு காலத்துக்கும் அப்படியே இருக்கும் என நினைக்க வேண்டாம். இது வேர்க்கால்கள் வரை  சென்றா லும் 20-28 ஷாம்பு வாஷ் கொடுத்ததும் போய்விடும்.

ஹேர் கலரிங் செய்வதற்கு முன்... அலர்ஜி வருமா? இல்லையா என்பதை முதலில் பரிசோதனை செய்ய வேண்டும். ஹேர் கலர் கொஞ்சம் எடுத்து டெவலப்பருடன் சேர்த்துக் கலக்குங்கள். காது ஓரத்தில் கொஞ்சம் முடிக்கு மட்டும் அப்ளை செய்து வாஷ் பண்ணுங்கள். 48 மணி நேரத்துக்குப் பிறகு அந்த இடத்தில் எரிச்சல், தடிப்பு, அலர்ஜி எதுவும் இல்லை என்றால் உபயோகிக்கலாம்.

ஹேர் கலர் உபயோகிப்பதற்கு முன்பு ஹேர் வாஷ் அவசியம். நீண்ட நேரம் ஹேர் கலரை தலையில் வைக்கக் கூடாது. ரசாயனப் பொருட்கள் உடலினுள் இறங்கும் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் கூந்தலை அலசி விட வேண்டும்.

ஹேர் கலரிங் செய்து 3 நாட்கள் ஆன பிறகு எண்ணெய் உபயோகிக்கலாம். கண் புருவத்தின் மேல் கலரிங்கை உபயோகிக்கக் கூடாது.

ஹென்னா உபயோகிக்கலாமா?

பச்சை மருதாணியை அரைத்து அப்படியே தலையில் பூசுவது, கருப்பு ஹென்னா என்கிற பெயரில் வருகிற கலர்களை உபயோகிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். தரமான மருதாணிப் பொடியுடன், கூந்தலை வறண்டு போகாமல் காக்கும் கண்டிஷனர்களும் சேர்த்துக் கலந்தே உபயோகிக்க வேண்டும். மருதாணிப் பொடி ஒரு கப், தேயிலை நீர், எலுமிச்சைச் சாறு இவற்றை முதல் நாளே கலந்து வைத்து 1 மணி நேரம் தலையில் ஊறவைத்து குளிக்க வேண்டும்.

வேறு என்ன செய்யலாம்?

* வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து
  தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும்.
* மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை முன்றையும் பொடி
  செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்
  படுவதுடன் முடி நன்றாக கருப்பாக வளரும்.
* மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி
  நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி
 கருப்பாகும்.
* ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம
  அளவு கலந்து தடவலாம்.
* கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்
  காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்தி பூ,
 திரிபலா சூரணம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும்.

ரசாயனங்கள் கலந்த ஹேர் டை உபயோகிப்பதால் ரத்த புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்று நோய், தோல் எரிச்சல்,
ஒவ்வாமை, முடி உடைதல், சரும நிறமாற்றம், ஆஸ்துமா, நுரையீரல் வீக்கம் போன்ற பிரச்னைகள் வரலாம்!

- அதிதி
படங்கள்: ஆர்.கோபால், மாடல்: வந்தனா, ப்ரியா