சுக்ரீஸ்வரர் கோயில்



ராஜகோபுர தரிசனம்!

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் 2,000 ஆண்டுகள் பழமையானது. 
ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. 

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயில் சமயக்குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாக இருக்கலாம் என்று கூறப்படும் இத்தலம் பிரமிக்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரேதா யுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதா யுகத்தில் சுக்ரீவனாலும், 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபர யுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும் வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோயில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோயிலில் உள்ளதாக கூறப்படுகிறது. 

வழக்கமாக, சிவன் கோயில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோயிலில், தெற்கு, வடக்குப் பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோயில்களை போல் மூலவரை நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வேறு வழி இல்லை.

தொல்லியல் துறை 1952ம் ஆண்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மீண்டும் புனரமைக்கும் வகையில், கோயில் கற்களை பிரித்த போது, மேலே உள்ள ஆலயம் போலவே பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோயில் அமைந்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர். 

அக்கோயில் பூமிக்கடியில் இறங்காமல், கட்டிய போது இருந்த அதே நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். கோயிலில் 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோயிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், மூலவரை தரிசித்து வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகள் கொண்ட கருவறை கோபுரம் என பல அம்சங்களுடன் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு இரண்டு நந்திகள் உள்ளன. அதில் ஒரு நந்திக்கு கொம்பு, காது இருக்காது. ஒருநாள் கோயில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு மேய சென்றுள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியால் அதன் காது மற்றும் கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோயிலுக்கு வந்த விவசாயி அங்கு கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்து, தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு பிராயச்சித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, பிரதிஷ்டை செய்துள்ளார். 

அப்போது பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாததால், அப்படியே விட்டுவிட்டனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. ஆனால், கருவறை மேல் மூன்று தள அமைப்பில் சிறிய கோபுரம் உள்ளது. அதே போல் முகமண்டப நுழைவாயில் மேல் கற்பக கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 1012ம் நூற்றாண்டு காலம் வரை சிறிய ஊர்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களில் உயர்ந்த ராஜகோபுரம் இருந்ததே இல்லை. கருவறை மேல் உள்ள விமானம்தான் கோயிலின் கோபுரமாக கருதப்பட்டது. அதே மரபு இத்தலத்திலும் பின்பற்றப்படுகிறது. 

இக்கோயிலின் சிறப்பு சிவலிங்கத்துக்கு கீழே சதுர வடிவ ஆவுடையார் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சோழர் மற்றும் பாண்டியர் கால கட்டிடக் கலையின் செழுமையை வெளிப்படுத்தும் நுணுக்கமான கல் செதுக்கல்கள் இக்கோயிலில் காணக்கிடைக்கின்றன. ஐந்து சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

திலகவதி