வீடு கட்டி ஆதரவற்றோர்களை பார்த்துக் கொள்ள வேண்டும்!
‘‘உன்னால் மற்றவர்களுக்கு நல்லது பண்ண முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், தீங்கினை விளைவிக்கக் கூடாது. அந்த எண்ணம் உன்னையே அழித்துவிடும். இந்த அறிவுரையை தான் பின்பற்றுவது மட்டுமில்லாமல், மற்றவர்களுக்கும் உணர்த்தி, ஆதரவற்றோருக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார் சுப்புலட்சுமி.
 தேனி மாவட்டம், போடியில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார் சுப்புலட்சுமி. காக்கிச் சட்டை போட்டுக் கொண்டால் விறைப்பாகவும் கண்டிப்பாகவும் நடந்து கொள்பவர்கள் மத்தியில் கனிவாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்பவர்களில் ஒருவராக இருக்கிறார். மலை கிராமங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாக சென்று வழங்கி வருகிறார். இவர் திருவாசகத்தின் 658 பாடல்கள் முழுதும் தொடர்ந்து 23 மணி நேரம் எழுதி உலக சாதனை படைத்திருக்கிறார். இந்தாண்டு அரசு அலுவலர்களுக்கான 1500 மீட்டர் மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், பளுதூக்குதல் போட்டிகளிலும் பல பதக்கங்களை பெற்றுள்ளார். தற்போது சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  ‘‘எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம். 2008ல் திருப்பூரில் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தேன், 2010ல் காவலர் பணிக்கு தேர்வாகி காஞ்சிபுரத்தில் பயிற்சி பெற்றேன். 2012ல் திருமணம் நடைபெற்றது. சிறுவயதிலிருந்தே ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறேன்.
என் பக்கத்து வீட்டில் உள்ள அண்ணன்தான் என்னை காவல்துறைப் பணிக்கு விண்ணப்பிக்க சொன்னார். அதில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு தேர்வானேன். திருமணத்திற்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளில் நான் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. அந்த ஏக்கத்தினை என் மகன்தான் நீக்கினான். என் மகன் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள அவனுடன் நானும் அதில் கலந்து கொண்டேன்.
அதில் வெற்றியும் பெற்றேன். அதன் பிறகு அனைத்து மாரத்தான் போட்டியிலும் பங்கு பெற ஆரம்பித்தேன். தொடர்ந்து காவல்துறையில் நடந்த பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்று திருச்சி கமிஷனர் அமல்ராஜிடம் பரிசும், சான்றிதழும் பெற்றேன். விளையாட்டு மீது ஆர்வமும் அதிக ஈடுபாடும் உண்டு.
ஓட்டப்பந்தயம் மற்றும் பளு தூக்கும் போட்டி குறித்து தெரிந்து கொண்டு அதில் கலந்து கொள்வேன். விளையாட்டு எனக்குப் பிடித்திருந்தாலும் அது என் பணியினை பாதிக்காமல் பார்த்துக் கொள்வேன்’’ என்றவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
‘‘காவல் பணியில் உடலும் மனதும் ரொம்ப முக்கியம். உடற்பயிற்சி செய்யும் போது உடல் வலுவடையும், மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அதே சமயம் எனக்கு ஆன்மீகத்திலும் நம்பிக்கையுண்டு. திருவாசகம் எனக்கு சின்ன வயசில் இருந்தே பிடித்தமானது. திருச்சிற்றம்பலம் எழுதவும் செய்வேன்.
பாடல்களை பாடவும் செய்வேன். கோயில்களிலும் பாடி இருக்கிறேன். இந்த வருடம் எனது தோழி மூலமாக திருவாசகம் முற்றோத்தல் எழுதுதல் போட்டி நடைபெறுவது பற்றி கேள்விப்பட்டேன். இரண்டு நாட்களில் என்னை தயார் செய்து கொண்டு அதில் பங்கு பெற்றேன். என்னால் முடிக்க முடியுமா என்று தயக்கத்துடன் எழுத ஆரம்பித்தேன். 15 நபர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள். அதில் நான் முதலிடம் பெற்றேன்.
விளையாட்டு, ஆன்மீகத்தில் எவ்வாறு ஈடுபாடு இருக்கிறதோ அதே போல் எனக்கு சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு உண்டு. கொரோனா காலத்தில் ஆதரவற்றோர்களுக்கு என் கணவரின் உதவியோடு உணவு வழங்கினோம்.
2013ல் திருச்சி ஜிஹெச் காவல் நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு வந்தது. அங்கு பலதரப்பட்ட ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைக்கு உதவி செய்தேன். மேலும், இவர்களின் பிரச்னைக்கு சட்ட ரீதியாக எவ்வாறு அணுகுவது என்று எடுத்துக்கூறி உதவியும் செய்து வந்தேன்.
ஏழைக் குழந்தைகளுக்கு அரசாங்க வேலையில் சேர்வதற்கு வழிகாட்டுவது, புத்தகம் வாங்கிக் கொடுப்பது, காவல் துறை பணியில் சேர்வதற்கு ஒரு வழிகாட்டியாகவும் செயல்பட்டேன். சங்க இலக்கிய நூல்கள் மேல் எனக்கு தனிப்பட்ட ஈர்ப்புண்டு. அவற்றை படிக்க வேண்டும். அதற்கான தேடலும் இருந்து கொண்டிருக்கிறது.
மேலும், அதனை வருங்கால சந்ததியினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட ஒரு வீடு கட்டி ஆதரவற்றோர்களை அங்கு தங்க வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்கால லட்சியம். 2023ல் இடமும் வாங்கி விட்டேன். வருங்காலத்தில் கண்டிப்பாக ஒரு வீடும் கட்டிவிடுவேன் என்ற நம்பிக்கைஉள்ளது’’ என்றார் சுப்புலட்சுமி.
மதுரை ஆர்.கணேசன்
|