மாதங்களில் இவள் மார்கழி!



இயற்கை 360°

மார்கழி என்றவுடன் அதிகாலையில் விழித்தெழுந்து, வாசல் தெளித்து, பூக்கோலமிட்டு, ஊடுருவும் குளிரில் குளித்து, பனிக்காற்றில் வேகநடை நடந்து, வழி முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களைப் பாடி, கோயிலுக்குச் சென்று, இறைவனை தரிசித்த பிறகு, துளசியுடன் கூடிய தீர்த்தப் பிரசாதத்துடன் இனிதே துவங்கும் காலைப் பொழுதுகள்தானே நமது நினைவில் தோன்றும்?

குளிர் மிகுந்த இந்த மார்கழியில், வெப்பம் தரும் சிறு மூலிகையான துளசி பற்றித்தான் இன்றைய இயற்கை 360°யில் தெரிந்துகொள்ள இருக்கிறோம்! ஆம்! குளிரில் ஒரு வெப்பம் இந்த துளசி.Ocimum tenuiflorum /Ocimum sanctum என்கிற தாவரப் பெயர் கொண்ட துளசி தோன்றிய இடம் இந்தியா. 

இதனை Holy Basil, Indian Basil, Sacred Basil என்று பலவாறு ஆங்கிலத்தில் வழங்குகின்றனர் என்றாலும், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி மற்றும் சமஸ்கிருதம் என அனைத்திலும் ‘துள்சி/துளசி’ என்றே வழங்கப்படுகிறது. திருமாலுக்கு உகந்தது என்பதாலும், மகாலட்சுமியின் மறு அவதாரம் என்பதாலும் திருத்துழாய், துழாய், துளவம், பிருந்தா, விருந்தாவனி, ஹரிப்பிரியா, விஷ்ணு வல்லபா, சுபஹா, சுபமஞ்சரி, விஷ்வபவனி என்ற பெயர்களிலும் வழங்கப்படுகிறது.

நமது இல்லங்களிலும் கோயில் நந்தவனங்களிலும் அடர்ந்து காணப்படும் குத்துச்செடியான துளசியில் நாம் நன்கறிந்த பச்சை நிற ராம துளசி, கருநீல நிற கிருஷ்ண துளசி தவிர வன துளசி மற்றும் கற்பூர துளசி ஆகியனவும் அடங்கும். உண்மையில் 18 வகையான துளசிச்செடிகள் காணப்படுகின்றன என்பதுடன் Thai Basil/ Sweet Basil எனும் நமது திருநீற்றுப் பச்சிலையும் பிற இடங்களில் காணப்படும் வியட்நாம் பேசில், லெமன் பேசில், அமெரிக்கன் பேசில், ஆப்ரிக்கன் ப்ளூ பேசில் ஆகியனவும் வழியில் புதர்களாகக் காணப்படும் நாய் துளசியும் இதன் குடும்பத்தைச் சார்ந்ததுதான்.

இதில் நமது அன்றாட பச்சை மற்றும் கரும்பச்சை நிற துளசியை, ‘இயற்கையின் மருத்துவத் தாய்’ என்றும் ‘மூலிகைகளின் ராணி’ என்றும், ‘ஒப்பிலா இயற்கை வளம்’ என்றும் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முறைகள் கொண்டாடுகின்றன. துளசியின் இலை, பூ, விதை, தண்டு, வேர் என அனைத்து பாகங்களிலுமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்றாலும், நாம் அன்றாடம் உபயோகிக்கும் துளசியின் இலைகளின் மருத்துவ குணங்களை அறிவது அவசியமாகிறது.

நல்ல வாசனையுடன் காரத்தன்மை மற்றும் கசப்புடன் சற்றே இனிப்புச் சுவையும் கொண்ட இந்த இலைகளில் யூஜினால் (Eugenol), கார்வகால் (Carvacol), காரியோஃபில்லைன் (Caryophylline), லினலூல் (Linalool), டானின்கள் மற்றும் ஃப்ளாவனாயிட்களும், வாசனை தரும் கற்பூரம் (Camphor), யூகலிப்டால் (Eucalyptol), பிஸபோலின் (Bisabolene) ஆகியனவும் காணப்படுகின்றன. இந்த தாவரச்சத்துகள் பொதுவாக வெப்பத்தைக் கூட்டி, சளி மற்றும் கோழையை நீக்கும் சளி நிவாரணியாக, வலி நிவாரணியாக, காய்ச்சல் மற்றும் வாந்தியைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

குழந்தைகளின் காய்ச்சல், சளிக்கு, வீட்டு மருத்துவம் அல்லது பாட்டி வைத்தியமாக, துளசி இலை நமது இல்லங்களில் முதன்மை மருந்தாக விளங்குகிறது. பருகும் நீரில் உள்ள நச்சுகளைப் போக்குகிறது என்பதாலேயே துளசித் தீர்த்தமாக கோயில்களில் இது வழங்கப்படுகிறது.இந்த எளிய உபயோகம் தவிர, இதன் ஆன்டி ஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்களை கட்டுக்குள் வைத்திருக்கவும், ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. 

குறிப்பாக, இதன் கார்வகாலில் (Carvacol) காணப்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு, இதனை விஷக்காய்ச்சலுக்கான மருந்தாகவும், இதன் யூஜினால் (Eugenol) உடலின் COX (Cyclo oxygenase) நொதியின் அளவைக் கட்டுப்படுத்துவதால், அழற்சி நோய்களான சரவாங்கி, எலும்புப்புரை, கௌட், கல்லீரல் நோய்கள், பெருங்குடல் அழற்சி ஆகியவற்றிலும் துளசி நன்கு பயனளிக்கிறது.

ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய்கள், செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, குடல் புழுக்கள், மலேரியா நோய், கண் மற்றும் காது நோய்களுக்கும், மேற்பூச்சாக பூச்சிக்கடி, சிரங்கு உள்ளிட்ட தோல் நோய்களுக்கும், தேள்-பூரான் கடிகளுக்கு விஷ முறிவாகவும் துளசி இலைகள் பயனளிக்கின்றன.

கதிரியக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கும் இதன் பண்புகளும் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளும் ஆய்வில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்திற்கும் மேலாக துளசியை, ‘adaptogen’ அதாவது, மனம் சார்ந்த நிலைத் தன்மையை பராமரிக்க உதவும் தாவரமாக மேற்கத்திய நாடுகள் கொண்டாடுகின்றன.

என்றாலும் அதிக அளவில் இதனைப் பயன்படுத்தும் போது, கருத்தரிப்பிற்கு எதிரான பண்புகள் (antifertility effects) குறிப்பாக விந்தணு எண்ணிக்கை குறைவு மற்றும் நச்சுத்தன்மை (toxicity) போன்றவை துளசியை அன்றாடத் தாவரமாகவும் உணவாகவும் பயன்படுத்த இயலாத சூழலை ஏற்படுத்துகிறது. 

அதேபோல கர்ப்பகாலம் மற்றும் பேறுகாலத்தில் துளசியின் பயன்பாட்டை குறைக்கவும் வலியுறுத்தப்படுகிறது.இந்தியா, நேபாளம், இலங்கை, கிழக்கு ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு பசிபிக் நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த மூலிகைச் செடி, தாய்லாந்து உணவுகளில் இறைச்சி மற்றும் அரிசியுடன் துளசி சேர்த்த ‘ஃபட் கப்ரோ’ உணவும், இந்தோனேசியா மற்றும் சுமத்ரா தீவுகளில் கடல் உணவுகளுடன் துளசி சேர்த்த குலாய் உணவுகளும் பிரசித்திப் பெற்றவை. அதேபோல துளசி சேர்த்த மூலிகைத் தேநீர் க்ரீன் டீ வகைகளில் பிரபலமானதாகும்.

துளசி செடி, விதைகள் அல்லது தண்டுகள் மூலம் தானாகவே வளர்வதுடன், வருடம் முழுவதும் செழித்துப் பூக்கும் தாவரமாக, செம்மண், வண்டல் மண், களிமண் என அனைத்து நிலங்களிலும் வளர்ந்து கற்பூர மணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் தருகிறது.கிருமி நாசினியாய் விளங்கும் காய்ந்த துளசி இலைகள், வீட்டு உபயோகத்திற்கான, உணவு தானியங்களை புழு பூச்சிகளிடமிருந்து பாதுகாத்து சேமிக்க உதவுகிறது என்றால், தொழிற்சாலைகளில் இதன் பச்சிலை சாறு நானோ சில்வர் (nano silver) தயாரிக்கவும், மேல்பூச்சாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணிகள் (Flurbiprofen gel) தயாரிக்கவும் பயன்படுகிறது. 

துளசியின் விதைகளிலிருந்து அரோமோ சிகிச்சைக்குப் பயன்படும் வாசனை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.கார்த்திகை மாதத்தில் மேற்கொள்ளப்படும் துளசி விவாகம் வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பிரபலம். பொதுவாக துளசி கொண்டு பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி, ஒற்றுமை, குடும்ப அமைதி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிட்டுவதுடன், துளசி இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகள் நெருங்காது என்பதும் நம்மிடையே காணப்படும் நம்பிக்கை. என்றாலும், அதனை தனது குணங்கள் மூலம் அறிவியல் பூர்வமாகவும் ஓரளவு பூர்த்தி செய்கிறது இந்த வெப்பம் தரும் மூலிகையான துளசி!

(இயற்கைப் பயணம் நீளும்!)