பாரம்பரியம் மாறாமல் அனைத்துக் காலங்களிலும் அணியக்கூடிய நகைகளை வடிவமைக்கிறேன்!
மீனு சுப்பையா
உணவு சாப்பிடும் போது திகட்டாமல் இருக்கணும். அதே போல்தான் நாம் அணியும் நகைகளும் போர் அடிக்காமல் எல்லா விழாக்களுக்கும் அணியக்கூடியதாகவும் பாரம்பரியம் மாறாமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நகைகளை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார் மீனு. தன் தந்தையுடன் இணைந்து இந்தத் தொழிலை துவங்கியதால் மீனு சுப்பையா என்று தன் பெயருடன் தந்தையின் பெயரையும் இணைத்து அதனை ஒரு பிராண்டாக அமைத்துள்ளார். சென்னை தி.நகரில் பல பிரபல நகைக்கடைகளுக்கு மத்தியில் இவரின் கடை அமைந்திருந்தாலும், இவரின் தனிப்பட்ட டிசைன் மற்றும் வடிவமைப்பிற்கு என வாடிக்கையாளர்கள் வட்டத்தினை சம்பாதித்துள்ளார்.  ‘‘ஏழு வயசில் நகைக்கான மோகம் ஆரம்பமானது தான்னு சொல்லணும்’’ என்று பேச ஆரம்பித்தார் மீனு சுப்பையா. ‘‘எந்த ஒரு விழாவுக்கு போனாலும் நான் முதலில் பார்ப்பது அங்கு வந்திருப்பவர்கள் கழுத்தில், காதில் அணிந்திருக்கும் நகைகளைதான். எனக்கு நகைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாது. அவர்கள் போட்டிருக்கும் டிசைன்களில் என்ன மாற்றம் செய்தால் அதை மேலும் மெருகேற்றலாம்னு சிந்திப்பேன். நான் யோசித்ததை கிரேயான் கொண்டு வரைந்தும் பார்ப்பேன். நான் வரைவதைப் பார்த்த என் பெற்றோர் ரொம்பவே ஆச்சரியப்பட்டாங்க. ஆனால், அப்பாதான் அதில் மறைந்திருந்த என் திறமையை கவனித்தார். என் அப்பா கிரானைட் பிசினஸ் ெசய்து வந்தார். கிரானைட்டை உடைக்கும் போது அங்கு செமிபிரஷியஸ் கற்கள் கிடைக்கும். அவை அப்பாவின் நண்பரின் தொழிற்சாலையில் பாலீஷ் செய்யப்படும். நான் அங்கு போகும் போது எல்லாம் கற்களை உடைத்து பாலீஷ் செய்வேன். அப்படித்தான் எனக்கு நகை வடிவமைப்பதில் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. எங்க வீட்டில் அனைவரும் பொறியியல் பட்டதாரிகள். நான் அப்படியில்லை. என்னால் ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்ய முடியாது. கிரியேடிவ்வா சிந்திப்பேன்.
அதே சமயம் என்ன படிக்கணும்னு தெரியல. சொல்லப்போனா ஜெம்மாலஜின்னு ஒரு படிப்பு இருக்குன்னு கூட எனக்கு தெரியாது. ஒரு முறை ஜெம்மாலஜி குறித்த நிகழ்வுக்கு அப்பாவுடன் சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த ஜெம்மாலஜி நிபுணரிடம் கேட்ட கேள்வியை பார்த்து அவர் என் அப்பாவிடம் ‘18 வயதிற்குப் பிறகு உங்க மகளுக்கு ஜெம்மாலஜி குறித்து கற்றுத் தருகிறேன்’ என்று கூறினார். நானும் பள்ளிப் படிப்பு முடிச்ச பிறகு அவரிடம் படிக்கப் போவதாக சொன்னேன்.
ஆனால், வீட்டில் ஒரு டிகிரி வாங்கணும்னு சொல்லிட்டாங்க. மேலும், வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்றாலும் டிகிரி அவசியம் என்பதால் கல்லூரியில் சேர்ந்தேன். ஒரு வருடத்திற்குப் பிறகு அதை தொலைதொடர் கல்வியாக மாற்றிக் கொண்டு மும்பைக்கு ஜெம்மாலஜி படிக்க சென்றேன்’’ என்றவர் அதன் பிறகு அமெரிக்காவில் நகை வடிவமைப்பு குறித்தும் படித்துள்ளார்.
‘‘என் மாமா அமெரிக்காவில் இருந்ததால், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நகை வடிவமைப்பு குறித்து படித்தேன். அதைத் தொடர்ந்து வைரங்கள் குறித்தும் முழுமையாக கற்றுக் கொண்டேன். படிப்பு முடிச்ச கையோடு பிசினஸ் துவங்க முடிவு செய்தேன். நானும் அப்பாவும் இணைந்து ‘மீனு சுப்பையா’ பிராண்டினை அறிமுகம் செய்தோம். வீட்டில் சிறிய அளவில்தான் துவங்கினோம்.
நாங்க முழுக்க முழுக்க வைர நகைகள் விற்பனை செய்து வந்தோம். அப்போது, தங்க நகைகளைதான் மக்கள் வாங்கி வந்தார்கள். வைரம் தோஷம் என்று கருதி அதனை வாங்க மாட்டார்கள். நகைக் கடைகளிலும் வைர நகைகள் அதிகமாக இருக்காது. வைரம் குறித்த புரிதல் மக்கள் மத்தியில் இல்லை. நான் வரைம் குறித்து படிச்சிருந்ததால் நான் விற்பனை செய்யும் வைரங்களுக்கு நிறம் மற்றும் தெளிவு குறித்து சான்றிதழ் கொடுத்தேன். வைரம் விற்பனையை தொடர்ந்து அதில் நகைகளையும் வடிவமைக்க ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அவர்களின் உருவத்திற்கு எந்த நகைகள் பொருந்தும் என்றும் வடிவமைத்துக் ெகாடுத்தேன். கடையில் வாங்கும் எல்லா நகைகளும் எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. சிலர் குண்டா இருப்பாங்க. அவங்களுக்கான டிசைன் எப்படி இருக்கணும் என்று நான் தனிப்பட்ட முறையில் வடிவமைத்ததால் பலரும் என்னை நாடி வரத்துவங்கினார்கள்.
சொல்லப்போனால் டிசைனர்கள் இல்லாத காலத்திலேயே நான் நகைகளை வடிவமைக்க ஆரம்பித்தேன். திருமணத்திற்குப் பிறகு என் கணவரும் என்னுடைய தொழிலில் இணைந்தார். அதன் பிறகு பிசினஸை விரிவுப்படுத்தினோம். நகைக் கடைகளுக்கு சான்றிதழுடன் வைரங்களை விற்பனை செய்தோம்.
காரைக்குடி, கோவையில் கிளைகளை துவங்கினோம். வெளிநாடுகளில் நடைபெறும் நகைக் கண்காட்சிகளில் பங்கு பெற ஆரம்பித்தோம். முப்பது வருடங்களுக்கு முன்பு வைரங்களை எப்படி வாங்கணும்னு பலருக்கு தெரியாது. அதற்கான ஆலோசனையும் வழங்கினோம்’’ என்றவர், தான் அணியும் நகைகள் எப்போதும் திகட்டாமல் காலத்திற்கும் நிலைத்திருக்கும் டிசைனாக இருக்க வேண்டும் என்பதில் இன்று வரை உறுதியாக இருந்து வருகிறார். ‘‘இன்று எல்லோரும் டிரெண்டிங் டிரெண்டிங் என்கிறார்கள். டிரெண்டிங் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தான் நிலைத்திருக்கும். அதன் பிறகு வேறு டிரெண்டாகும். அதற்கு மாறிவிடுவோம். ஆனால், நகையினை பொறுத்தவரை ஒரு டிசைன் அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே டிரெண்டாக இருப்பதை விட எந்தக் காலத்திற்கும் அணியக்கூடியதாக இருக்க வேண்டும். அதை மனதில் கொண்டுதான் விலாசம், வம்சம், மெனயா என்ற மூன்று பிராண்டுகளை அறிமுகம் செய்திருக்கிறோம்.
விலாசம் முழுக்க முழுக்க செட்டிநாடு நகைகள். 200 வருஷத்திற்கு முன் டிசைன் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், இக்காலத்திலும் எந்த உடைக்கும் அணிய முடியும். அதாவது, கொசுவம் வச்ச புடவைகளுக்கு மட்டுமில்லாமல் பலாசோ போன்ற உடைகளுக்கும் அந்த நகை பொருந்தும். அப்படிப்பட்ட நகைகளை செட்டிநாடு டிசைனில் அறிமுகம் செய்திருக்கிறோம். வைரம், எமரால்ட், ரூபி போன்ற கற்கள் பொறிக்கப்பட்டு முழுக்க முழுக்க ஆசாரியால் கைகளால் வடிவமைக்கப்பட்டது.
வம்சம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள பாரம்பரிய தங்க நகைகளை ரீஇன்வென்ட் செய்திருக்கிறேன். இதில் நகாஸ் டிசைன்களையும் சேர்த்திருக்கிறேன். மெனயா, இன்றைய மாடர்ன் பெண்களுக்கானது. வெஸ்டர்ன், தினசரி மற்றும் அனைத்து நிகழ்வுக்கும் அணியக்கூடியவை. லைட் வெயிட், 3டி எலிவேஷன் என நிறைய தொழில்நுட்பத்தினை புகுத்தி வடிவமைத்திருக்கிறோம். மனதில் நினைக்கும் டிசைன்களை இதில் வடிவமைக்க முடியும்’’ என்றவர், நகைக்கான ஒரு அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார்.
‘‘பெட்டகம்... இது என்னுடைய டிரீம் பிராஜக்ட். முழுக்க முழுக்க செட்டிநாடு நகைகள் குறித்து ஆய்வுகள் செய்து அதை ஒரு அருங்காட்சியகமாக அமைத்திருக்கிறேன். நான் சின்ன வயசில் அப்பத்தா, அம்மா, அத்தை எல்லோரும் நகைகள் போட்டு பார்த்திருக்கேன். அந்த நகைகள் எல்லாம் தொய்வா இருக்கும்.
ஒட்டியாணம் கூட துணி போல் லேசாக இருக்கும். அவங்க திருமாங்கல்யம் வித்தியாசமா இருக்கும். அதை கழுத்துருன்னு சொல்வாங்க. அதில் 34 உருப்படிகள் இருக்கும். ஒவ்வொரு உருப்படிக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதில் கை மாதிரி இருக்கும். முதலில் தாலி என்பதால் இருவரின் கையை இணைப்பது என்று நினைத்தேன். ஆனால், ஆய்வில்தான் புரிந்தது அது நண்டு என்று. செட்டியார்கள் பல இடங்களுக்கு கடல் வழியாக வணிகம் செய்தார்கள். பொதுவாக ஆமையைதான் பின்பற்றி செல்வது வழக்கம். ஆனால், இவங்க நண்டின் பாதையை பின்பற்றி வெற்றியும் பெற்றார்கள். நண்டுக்கு நன்றி செலுத்த அதனை தங்களின் தாலியில் இணைத்துள்ளார்கள். தாலியின் நடுவில் கோவில் அமைப்பில் லட்சுமி இருப்பாங்க. இவங்க வாழ்க்கை முழுக்க முழுக்க கோயிலை சுற்றித்தான் இருக்கும்.
ஒரே கோயிலை சேர்ந்தவங்க திருமணம் செய்யமாட்டாங்க. அதேபோல் அனைத்து திசையிலும் வணிகம் செய்ததால், திசையை குறிப்பிட்டும் கழுத்துருவில் உருப்படிகளை சேர்த்திருப்பாங்க. நகை மட்டுமில்லாமல் சாப்பாடு, வீட்டின் அமைப்பு, உடைகள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வாங்க. இதை புரிந்து கொள்ள எனக்கு 20 வருடமானது. அதனால்தான் அந்த பாரம்பரிய நகை குறித்து ஒரு அருங்காட்சியகம் அமைத்தேன். மேலும், அங்குள்ள டிசைன்களை பார்த்து அவர்கள் ஆர்டர் கொடுத்தால் அதை வடிவமைத்தும் தருகிறோம்.
என்னைப் பொறுத்தவரை ஒரு நகையாக இருந்தாலும் அது காலத்துக்கும் நிலைத்திருக்கணும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் பாரம்பரியம் மாறாமல் அதே சமயம் எல்லா காலங்களிலும் அணியக்கூடிய நகைகளை வடிவமைத்து தருகிறேன். என் மகளும் இந்த துறைக்குள் நுழைந்துள்ளார்.
அவரும் தனிப்பட்ட பிராண்ட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். வம்சம், விலாசம், மெனயாவினை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும். இதில் மேலும் பல பாரம்பரிய நகைகளை அறிமுகம் செய்ய வேண்டும்’’ என்றார் மீனு சுப்பையா.
ஷம்ரிதி
|