உறவுகள் இல்லாமல் யாரும் இல்லை!
உன்னத உறவுகள்
பூமியில் பிறந்த உடனே நம் உறவுகள்தான் ஒவ்வொரு குழந்தையையும் ஆசீர்வதித்து, அரவணைத்து ஆளாக்குகிறார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டிய பாரம்பரிய சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் உறவினர்களாலேயே நடத்தப்படுகின்றன. குறிப்பாக தாத்தா-பாட்டிகள் முன்னின்று சிறப்பித்தனர். ஆனால், இன்று அவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர்களின் துணை இல்லாமல் நம்மால் இன்று சகல வசதிகளோடு வாழ்ந்திருக்க முடியாது.
 ஒரு குடும்பத்தில் 13 பிள்ளைகளுடன் வசித்தார்கள், இன்று பிள்ளைகள் மட்டுமே காணப்படுகிறார்கள். பத்து ஆட்கள் வேலை செய்த குடும்பத்தில் இன்று வாரிசுகள் இல்லாமல் சிதைந்து விடுகிறது. சீரும் சிறப்புமாக வீடும், தோட்டமும் இருந்த சொந்த ஊரை விட்டு இன்று சிகிச்சைக்காக டவுனில் வசித்துக் கொண்டு தினமும் பல பேதனைகளை சந்திக்கிறார் ஒரு பெண்மணி. சில நாட்கள் ஆரோக்கியக் குறை ஏற்பட்டால் உதவிக்கு ஆட்கள் வந்து பார்த்துக் கொள்வார்கள்.
ஆனால், வருடக் கணக்கில் படுத்த படுக்கையாக இருந்தால், எத்தனை நாள் யார் வந்து செய்வார்கள் என்பது கேள்விக்குறி? வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளையும் குறை சொல்ல முடியாது. இந்தப் பிரச்னைக்கான காரணம் உறவுகளின் நெருக்கம் குறைந்ததுதான். சுதந்திரமாக வாழ்வது நல்லதுதான். அதற்காக உறவுகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. காலத்தின் மாற்றங்கள் அனைத்து சுகங்களையும் கொடுத்துள்ளது. ஆனால், பாச பந்தத்தை குறைத்துவிட்டது.
அத்தகைய பாச பந்தத்தை கட்டிக் காத்து, அடுத்த தலை முறைக்கு எடுத்துச் சொல்லுவதுதான் இன்று நாம் அவர்களுக்குச் செய்யும் தலையாய கடமை. நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். ஆனால், நம் கலாச்சாரங்கள் என்றும் அழியாமல் பரம்பரை மூலம் எடுத்துச் செல்வது முக்கியம்.
உலகம் முழுவதும் நம் கலாச்சார திருவிழாக்கள் அங்கங்கே அரங்கேற்றப்படுகின்றன. மதம், ஜாதி, இனம் எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு திருவிழாக்கள், பண்டிகைகள் அர்த்தத்தோடு அனுசரிக்கப்பட்டவை. இவற்றையெல்லாம் அழிக்க முடியாத ஏட்டில் நமக்கு வடித்து தந்தவர்கள்தான் நம் முன்னோர்கள். குடும்பம் என்றாலே ‘கூடி மகிழ்தல்’ என்று நிரூபித்தார்கள். பாசப்பிணைப்பும், பந்தமும் அறுகாமல் அரவணைப்போடு கூடிய ஆனந்தத்தை அள்ளித் தந்தார்கள். ஆனால், இன்று அவை குறைந்து போகும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. நமக்கு சம்பந்தமில்லாதவர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் அவர்கள் என்ன செய்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், பூர்வீகம் என்ன என்பதை அடுத்த சந்ததியினருக்கு விளக்க தவறுகிறோம்.
கலாச்சாரத்தில் எத்தனையோ முன்னேற்றங்களை கண்டுவிட்டோம். ஆனால், பரம்பரையில் உள்ள எத்தனை உறவினர்களை தொடர்பில் வைத்துள்ளோம். பந்த பாசத்தினை பிரிவின் போதுதான் உணர்கிறோம். வெயிலின் கொடுமை நிழலில் தெரியும் என்பார்கள். நமக்கு எந்த பாதிப்பும், சங்கடங்களும் ஏற்படாதவரை பிறரின் அரவணைப்பும், உறுதுணையும் தெரியாது. தனிமையில் தவிக்கும் போதுதான் யாரிடமாவது மனம் விட்டு பேசமாட்டோமா என்று நினைக்கத் தோன்றும்.
கடவுளால் தரப்படும் மாபெரும் பரிசு உறவினர்கள். பேச்சுத் துணைக்காவது அவசியம் உறவுகள் தேவை. நமக்கே தெரியாமல் செய்யும் தவறினை சுட்டிக் காட்ட உறவினர்கள் தேவைப்படுவார்கள். நல்லது, கெட்டதை எடுத்துச் சொல்லவும், குடும்ப பாரம்பரியத்தை புரிய வைக்கவும் மூத்த உறவினர்கள் நமக்குத் தேவைப்படுவார்கள். குடும்பத்தோடு பயணம் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள உறவினர்கள் தேவை. பக்குவமாய் எடுத்துச் சொல்லி, பாசம் காட்டுவதற்கும், அவசரம் என்றால் உடன் ஓடிவரவும் உறவினர்கள் அவசியம் தேவை.
இந்தக் காலத்தில் நல்லதை எடுத்துரைக்க பெரியவர்கள் இருந்தாலும், அவர்களின் ஆலோசனையை கேட்க யாருக்கும் பிடிப்பதில்லை. விஷயம் தெரிந்தவர்கள் கூட எப்படி இதில் தலையிடுவது என்று ஒதுங்கிவிடும் நிலைதான் காணப்படுகிறது. தலைமுறை இடைவெளி பிள்ளைகளை தனித்துவமாக செயல்பட தூண்டுகிறது. வயதிற்கு மிஞ்சிய முதிர்ச்சியை இன்றைய தலைமுறைகளில் காண முடிகிறது.
இன்று எழுபது வயதைக் கடந்தவர்கள் கல்லூரிக் காலங்களில் கூட அப்பாவிடம் அடி வாங்கி இருப்பார்கள். இன்று கண்டித்துப் பேசினால் கூட பயந்து தவறான முடிவினை எடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் தலைதூக்குகிறது. அம்மா பாலூட்டி, சீராட்டி வளர்த்தாலும் பண்பு, அடக்கம் இவற்றையும் கலந்து ஊட்டினார்கள். அப்பா தோளில் சுமந்து, பாசத்தைக் கொட்டினாலும், ஒழுக்கத்தை கண்டித்து ஊட்டினார். பல நல்ல பழக்கவழக்கங்களை பெரியவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டோம். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பது போல், உறவுகளோடு ஒன்றாக பிள்ளைகள் வளர்ந்த காலத்தில் அனைத்து நல்ல விஷயங்களும் நடைமுறையில் பார்த்துக் கற்றுக் கொண்டார்கள். ஆனால், இன்று வயதான உறவினர்களை பார்த்தாலே, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கருதப்படுகிறது. பழமையில் ஊறியவர்கள் இன்றைய நாகரீகம் புரியாதவர்கள் என்று நினைக்கிறார்கள். இது அவர்களுக்குள் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்துகிறது.
இந்த இடைவெளி குறைந்து, புரிதல் அதிகமானால் உறவுகளின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொண்டு, அந்தக்காலம் என்று சொல்லும் அறிவுரைகளை குறைத்துக் கொள்ளலாம். பெற்றோரும் தங்கள் உறவினர் பெருமைகளையும், மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லும் போது, இன்றைய தலைமுறைகள் குடும்ப வழி வந்த உறவுகளை மதித்து நடப்பார்கள். உறவுகளும் வலுப்பெறும். அதுதான் நம் சமூகத்திற்கும் தேவை.
அக்கம் பக்கத்தினர்கள் கூட உறவுமுறை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சில நாடுகளில் தெருவே ஒன்று கூடி பங்கிட்டு விருந்து உண்ணும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. நம் பிள்ளைகளுக்கும் உறவுமுறைகளை சொல்லி வளர்த்தால்தான் நாளைய தலைமுறைகள் தனித்து விடப்படமாட்டார்கள். உறவுகள் நிறைய இருந்தாலே நமக்கு பக்கபலம்தான். பணம் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம் ஆனால், உறவுகளே இல்லாது தனித்து வாழ்வது, உடலில் ஊனம் இருப்பதற்கு சமம்.
நண்பர்கள் சரியில்லை என்றால் ஒதுக்கிவிடலாம். ஆனால், உறவுகளை தவிர்க்க முடியாது. கடவுளால் நமக்கு ஏற்படுத்தித் தரும் கிளை வேர்கள்தான் உறவுகள். நாம் செய்யும் நல்ல காரியங்களை அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் பார்த்துக் கற்றுக்கொள்வார்கள். எந்த நாட்டிலிருந்தாலும், பிறந்த மண்ணையும், பிறந்த ஊரையும் மறக்காமல் ஒரு முறை சென்று உறவினர்களை சந்தித்து தொடர்பு கொள்வது அவசியம். உறவுகள்தான் மாறாதது, மாற்றிக் கொள்ள முடியாதது. நாம் பிள்ளைகளாக எப்படி வளர்ந்தோமோ அதே சூழலை அடுத்த சமூகத்திற்குத் தந்துவிட்டால் போதும். வசதி வாய்ப்புகளோடு சுற்றமும் உறவும் புடைசூழ நம் வாரிசுகள் வாழ்க்கை பிரகாசிக்கும்!
சரஸ்வதி ஸ்ரீநிவாசன்
|